'தெர்மக்கோல் விஞ்ஞானி' எல்லோருக்கும் தெரியும்; புதிதாக வந்திருக்கும் 'மேக விஞ்ஞானி' யார் தெரியுமா?  

பாலாகோட் தாக்குதல் தொடர்பான பிரதமர் மோடியின் தொலைக்காட்சி பேட்டி ஒன்றின் காரணமாக, அவரை சமூக வலைத்தளங்களில் 'மேக விஞ்ஞானி' என்னும் பொருள்பட கிண்டல் செய்து வருகின்றனர்.
'தெர்மக்கோல் விஞ்ஞானி' எல்லோருக்கும் தெரியும்; புதிதாக வந்திருக்கும் 'மேக விஞ்ஞானி' யார் தெரியுமா?  

புது தில்லி: பாலாகோட் தாக்குதல் தொடர்பான பிரதமர் மோடியின் தொலைக்காட்சி பேட்டி ஒன்றின் காரணமாக, அவரை சமூக வலைத்தளங்களில் 'மேக விஞ்ஞானி' என்னும் பொருள்பட கிண்டல் செய்து வருகின்றனர்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி பாதுகாப்பு படையினரை குறி வைத்து பயங்கரவாதி ஒருவர் வெடிபொருள் நிரம்பிய வாகனம் மூலம் நடத்திய தாக்குதலில், 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

அதற்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் முகாம் மீது கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி விமானப் படை மூலமாக இந்தியா தாக்குதல் நடத்தியது.

இந்நிலையில் பாலாகோட் தாக்குதல் தொடர்பான பிரதமர் மோடியின் தொலைக்காட்சி பேட்டி ஒன்றின் காரணமாக, அவரை சமூக வலைத்தளங்களில் 'மேக விஞ்ஞானி' என்னும் பொருள்பட கிண்டல் செய்து வருகின்றனர்.

சனிக்கிழமையன்று 'நியூஸ் நேஷன்' என்னும் ஆங்கில செய்தித் தொலைக்காட்சிக்கு பிரதமர் மோடி அளித்த பேட்டியில் கூறியதாவது:

பாலாகோட் தாக்குதல் சம்பவ நாளன்று காலநிலை திடீரென்று மோசமாக மாறியது..கரு மேகங்களுடன் மழை பெய்யத் துவங்கியது. எனவே இத்தகைய சூழ்நிலையில் மேகங்களின் ஊடாக விமானங்களைச் செலுத்தி தாக்குதல் நடத்தலாமா என்று சந்தேகம் தோன்றியது.

அதுதொடர்பான ஆய்வின் போது தாக்குதல் சம்பவத்தின் தேதியை மாற்றலாமா என்பதுதான் அங்கிருந்த நிபுணர்களின் கருத்தாக இருந்தது. எனது மனதில் இரண்டு பிரச்னைகள் இருந்தன. முதலாவது தாக்குதல் சம்பவம் தொடர்பான ரகசியத்தன்மை; இரண்டாவதாக...நான் அறிவியல் பெரிதாக தெரிந்திராதவன் என்று நான் அவர்களிடம் சொன்னேன். நிறைய மேகமும் மழையும் உள்ளது. அதன் மூலம் ஒரு லாபம் உள்ளது. மேகங்கள் மூலம் நமக்கு நன்மை கிடைக்குமென்று என் மூல அறிவு சொல்கிறது. நாம் ரேடாரின் கண்காணிப்பில் இருந்து இருந்து தப்பிக்கலாம். எல்லோரும் அங்கு குழம்பினார்கள். ஆனால், 'இப்போது மேகங்கள் இருக்கிறது.. நாம் தொடரலாம் என்று நான் கூறினேன்.

இவ்வாறு மோடி தனது பேட்டியில் தெரிவித்துள்ளார்.

அவரது இந்தக் கருத்துக்கு அரசியல் தலைவர்கள், முன்னாள் அதிகாரிகள், பாதுகாப்பு படை நிபுணர்கள்  மற்றும் சமூக வலைதள பயனாளர்கள் மத்தியில் கடும் விமர்சனம் எழுந்துள்ளது.   

பிரதமரது பேச்சின் எழுத்து வடிவமானது பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் முதலில் வெளியிடப்பட்டுள்ளது. அதை முன்வைத்து பல்வேறு விதமான கருத்துகள் பகிரப்பட்டு வந்தன. அதையடுத்து அந்த பதிவு நீக்கப்பட்டு, அவரது பேச்சு அடங்கிய சிறிய விடியோ ஒன்று மற்றும் பகிரப்பட்டது.

அதுகுறித்த விமர்சனங்களில், முக்கியமான சம்பவம் ஒன்றின் போது நிபுணர்களின் ஆலோசனை புறக்கணிப்பு, தேர்தலுக்கான அவசர கோல நடவடிக்கை மற்றும் மோடியின் வித்தியாசமான 'மேக கொள்கை' ஆகியவை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகின       

முக்கியமாக புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக தாக்குதல் நடத்துவதற்கான இடம் மற்றும் நேரம் ஆகியவற்றைத் தேர்வு செய்வதில், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் வழங்கப்பட்டதாக முன்பு அரசுத் தரப்பில் அடிக்கடி கூறப்பட்டத்தையும் சுட்டிக்காட்டி விமர்சித்தனர்.

பொதுவாக ரேடார் எனப்படும் வான்வழி கண்காணிப்பு கருவியானது எத்தனை மோசமான காலநிலையிலும், வானில் உள்ள பொருட்களை துல்லியமாக கண்டுபிடிக்கும் வல்லமை பெற்றது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com