செவ்வாய்க்கிழமை 16 ஜூலை 2019

நீட் தேர்வு எழுத எப்படி செல்ல வேண்டும்? கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

Published: 04th May 2019 01:32 PM


எம்.பி.பி.எஸ். படிப்புக்கான நீட் தேர்வில் பங்கேற்போர் வெளிர்நிற ஆடைகளை அணிய வேண்டும் என்பன உள்ளிட்ட சில விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 5 -ஆம் தேதி நடைபெற உள்ளது. நீட் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள், இணையதளத்தில் இருந்து தேர்வுக் கூட அனுமதிச் சீட்டை ஏப்ரல் 15ம் தேதி பதிவிறக்கம் செய்து கொண்டிருக்க வேண்டும்.

நாடு முழுவதும் ஒரே கட்டமாக மே 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரை சுமார் 3 மணி நேரம் இந்த தேர்வு நடைபெறும். நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை நடத்துகிறது. 

இந்தத் தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டில் மாணவர்கள் தேர்வின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளும் குறிப்பிடப்பட்டுள்ளன. 

முக்கியமாக ஆடைகள் குறித்த விதிமுறைகள் அளிக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு முறையான அறிவிப்பு இல்லாததால், முழுக்கை வைத்த சட்டை, சுடிதார் ஆகியவற்றை அணிந்தவர்களை தேர்வுக்கூடத்துக்குள் அனுமதிக்கவில்லை. மேலும், தேர்வுக்கூட வாயிலில் வைத்து பிளேட், கத்தி உள்ளிட்டவற்றைக் கொண்டு ஆடைகளைக் கிழித்தெடுத்தனர். இது மாணவர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
 

இதனால், மாணவர்களுக்கு முன்கூட்டியே என்னென்ன ஆடைகள் அணியலாம் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தற்போது வெளியிடப்பட்டுள்ள விதிமுறைகளில் மாணவர்கள் வெளிர் நிறத்திலான அரைக்கை வைத்த ஆடைகளை அணிய வேண்டும். 

பெண்கள் சுடிதார் அணியலாம். ஆடைகளில் பெரிய பொத்தான், பேட்ஜ், பூக்கள் போன்றவை இடம்பெறக் கூடாது. 

குறைந்த உயரத்திலான செருப்புகளையே அணிய வேண்டும். மேலும் கால்களை முழுவதுமாக மறைக்கும் செருப்புகள், ஷூக்களுக்கு அனுமதி கிடையாது.


 
பெல்ட், தொப்பி, கைக்கடிகாரம், பவர் அல்லாத கண்ணாடிகள் உள்ளிட்டவற்றுக்கும் அனுமதி இல்லை.

ப்ளூடூத், பென்டிரைவ், கைக்கடிகாரம், செல்லிடப்பேசி, காகிதங்கள், பிளாஸ்டிக் பை, கால்குலேட்டர், பேனா, அளவுகோல், தேர்வு அட்டை, ரப்பர் உள்ளிட்டவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மாணவர்களுக்கு தேர்வுக்கூடங்களிலேயே பேனாக்கள் வழங்கப்படும். 

கம்மல், மூக்குத்தி, மோதிரம், செயின், வளையல் போன்றவையும் அனுமதிக்கப்படாது.

மாணவ, மாணவிகள் பெரும்பாலும் தங்கள் உடல் மற்றும் ஆடையில் எந்த உலோகமும் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அதாவது ஊக்கு இல்லாத உள்ளாடைகளை மாணவிகளும், ஜீன்ஸ் பேன்ட்டில் உலோக பட்டன் இருப்பதால் அதனைத் தவிர்த்து சாதாரண நாடா வைத்த பேன்ட் போன்றவற்றை மாணவ, மாணவிகள் அணிவதும் சிறப்பு.

பெண்கள் தலையில் உலோகக் கிளிப்புகளையும் தவிர்க்க வேண்டும்.

உணவுப் பொருள்கள், தண்ணீர் பாட்டில் ஆகியவற்றையும் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுக் கூடங்கள் ஒன்றரை மணி நேரத்துக்கு முன்பாகவே திறக்கப்பட்டு, மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்படுவர் என்றும், தேர்வு 2 மணிக்குத் தொடங்குவதால், மதியம் 1.30 மணிக்கு மேல் தேர்வுக்கூடத்துக்குள் மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவ, மாணவிகளை சோதிக்கும் போது பரிசோதனை இயந்திரங்களில் உலோகங்களால் சத்தம் எழுந்தால், அந்த உலோகத்தை அதாவது அது ஆபரணமாக இருந்தாலும் சரி, ஆடையில் இருக்கும் பட்டனாக இருந்தாலும் சரி அதை அகற்றாமல் மாணவர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்பதில் அதிகாரிகள் உறுதியாக இருப்பார்கள் என்பதால் முன்கூட்டியே மாணவ, மாணவிகள் அதனை தவிர்ப்பது தேர்வு நேர இறுதியில் ஏற்படும் மன உளைச்சலைத் தடுக்கும்.

உடலில் அறுவை சிகிச்சை செய்து உலோகம் ஏதேனும் பொருத்தப்பட்டிருந்தால், அதற்கான சான்றிதழைக் கொண்டு செல்வது அவசியம்.
 

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

More from the section

மயிர்க்கூச்செறியும் திகில் அனுபவத்தில் சிக்கி உயிர் பிழைத்த அதிர்ஷ்டசாலிகளா நீங்கள்? தினமணியில் பகிருங்களேன் உங்கள் அனுபவங்களை!
இருபது ஆண்டுகளில் 10 முதல்வர்களைக் கண்ட கர்நாடகம்: தொடரும் சாபத்தின் பின்னணி
முன் மாதவிடாய் காலம் என்றால் என்ன?
மயான வேலையை மன தைரியத்துடன் மேற்கொள்ளும் பெண் இவர்!
இப்போதுதான் மன நிறைவாக இருக்கிறது. நாங்கள் சுதந்திரமாக இருக்கிறோம் உண்மை கதை