சிறப்புக் கட்டுரைகள்

அயோத்தி விவகார மத்தியஸ்தர் குழு: நடுநிலையாக செயல்படுவாரா ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்?

8th Mar 2019 07:19 PM

ADVERTISEMENT


அயோத்தி விவகாரத்தில் அலாகாபாத் உயர்நீதிமன்றம் கடந்த 2010-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. அதில் நிர்மோஹி அகாரா, ராம் லாலா, சன்னி வக்பு வாரியம் ஆகியன பிரச்னைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை தங்களுக்குள் சரிசமமாக பங்கீட்டு கொள்ளும்படி உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் 14 பேர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இன்று (வெள்ளிக்கிழமை) மத்தியஸ்தர் மூலம் தீர்வு காண பரிந்துரை செய்துள்ளது.

இந்த சமரசப் பேச்சுவார்த்தை உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் மிக ரகசியமாக நடக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
மத்தியஸ்தம் தொடர்பான பேச்சுவார்த்தை ஒரு வாரத்தில் தொடங்கி 8 வாரத்தில் நடந்து முடிய வேண்டும். அயோத்தி சமரச பேச்சுவார்த்தை தொடர்பான விவரங்களை ஊடகங்கள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இதன்மூலம் மத்தியஸ்தர் குழுவில் ஓய்வுபெற்ற நீதிபதி கலிஃபுல்லா தலைமையில் மூவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் இடம்பெற்றிருப்பவர்கள், உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ஃபக்கிர் மொகம்மது இப்ராஹிம் கலிஃபுல்லா, வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் மற்றும் மூத்த வழக்குரைஞரும், நடுநிலையாளராகவும் திகழும் ஸ்ரீராம் பஞ்சு ஆவர்.

இந்த மத்தியஸ்தர் குழுவில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இடம்பெற்றிருப்பது அவருடைய பழைய பேட்டி ஒன்றை தற்போது நினைவுபடுத்துகிறது. கடந்த ஆண்டு இந்தியா டுடேக்கு அளித்த பேட்டி ஒன்றில், அயோத்தி விவகாரத்தில் இஸ்லாமியர்கள் நல்லெண்ண அடிப்படையில் விட்டுக்கொடுக்க வேண்டும் என்கிற கருத்தை பதிவுசெய்திருந்தார்.  

ADVERTISEMENT

அயோத்தி விவகாரம் தொடர்பாக இந்த தீர்ப்பு வரும் முன் கடந்த ஆண்டு அவர் இந்தியா டுடேக்கு அளித்த பேட்டியின் சில அம்சங்கள், 

"நீண்ட காலமாக இருந்து வரும் இந்த பிரச்னைக்கு இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதே இறுதி தீர்வாக இருக்கும். இருதரப்பு பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் முடிவு தான் இருதரப்பினருக்கும் வெற்றியை தரும். 

உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு யார் பக்கம் இருந்தாலும், எங்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுவிட்டது என்கிற உணர்வு ஒரு தரப்பினரிடம் இருந்துகொண்டே தான் இருக்கும். அமைதியின்மையான சூழல் ஏற்படும். இந்த வழக்கின் தீர்ப்பு தோல்வியடைந்தவர்களை பிரிவினைவாதத்துக்கு நோக்கிய ஒரு உந்துதலை ஏற்படுத்தும். இதன்மூலம், இரண்டு தரப்பினரிடமும் பிரிவு ஏற்பட்டு சிரியா போன்ற சூழ்நிலை உருவாகும். உள்நாட்டு போர் போன்ற நிகழ்வுகள் ஏற்படலாம். 

இந்த வழக்கில் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பை எந்தவொரு அரசாலும் செயல்படுத்த முடியாததாக தான் இருக்கும். இந்த விவகாரம் தொடர்பான கொதிப்பு நிலை இதயத்தில் தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். உச்சநீதிமன்றமே தெரிவித்தாலும், ராமர் சிலையை தற்போது இருக்கும் இடத்தில் இருந்து எந்த அரசாலும் அகற்ற முடியுமா? இது செயல்படுத்த முடியாத காரியம். 

அதிர்ஷ்டவசமாக இது இஸ்லாம் மதத்தினரின் புனித தலமாக ஏதும் இல்லை. இஸ்லாமியர்கள் அந்த இடத்துக்கு சென்று கட்டாயம் நமாஸ் செய்யவேண்டும் என்கிற கட்டாயம் அவர்களுக்கு இல்லை. அப்படி இருந்திருந்தால், இந்த விவகாரம், இன்னும் மிகப் பெரிய பிரச்னையை உண்டாக்கியிருக்கும்.  

இந்த இடத்தை கோயிலுக்கு தரமாட்டோம், மருத்துவமனைக்கு வேண்டுமானால் சம்மதம் தெரிவிப்போம் என்று ஒரு சிலர் கூறுவது அபத்தமானது. அறையில் அமர்ந்து கொண்டு மருத்துவமனை கட்டலாம் என்று சொல்லக்கூடாது. இது கோடிக்கணக்கான மக்களின் நம்பிக்கை மீது கேள்வி எழுப்புவதாகும். அதை சிதைத்துவிடமுடியாது. 

இந்த பிரச்னைக்கு உச்சநீதிமன்றத்தின் தீர்பபிலோ அல்லது அரசு சட்டம் இயற்றினாலோ நிரந்தர தீர்வை தராது. இருதரப்பினரின் பேச்சுவார்த்தை மூலமே, தீர்வு கிடைக்கும். இந்த விவகாரத்தில் இஸ்லாமியர்கள் தங்களது கோரிக்கையை விட்டுக்கொடுக்கலாம். இந்து மதத்தினருக்கு இந்த சர்ச்சைக்குரிய நிலம் கொடுப்பதால் இஸ்லாம் மதத்தினருக்கு எதுவும் கிடைக்காமல் போகப்போவதில்லை. அதற்கு மாற்றாக இஸ்லாமியர்களுக்கு அதன் அருகிலேயே 5 அல்லது 10 ஏக்கர் நிலம் ஒதுக்கப்படும். இஸ்லாமிய மதத்தின் விதிகளின்படி பிரச்னைக்குரிய இடத்தில் நமாஸ் செய்யக்கூடாது" என்றார்.

அதனால், தற்போது அயோத்தி விவகாரத்தில் மத்தியஸ்தருக்கான சரியான தேர்வாக ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இருப்பாரா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. 

உச்சநீதிமன்றம் நியமித்த மத்தியஸ்தர் குழுவில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் இடம்பெற்றது குறித்து ஏஐஎம்ஐஎம் தலைவர் ஓவைஸி இன்று தெரிவிக்கையில், 

"ரவிசங்கர் அயோத்தியா விவகாரம் தொடர்பாக நவம்பர் 4, 2018-இல் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார். மேலும், சர்ச்சைக்குரிய நில விவகாரத்தில் இஸ்லாமியர்கள் தங்களது கோரிக்கையை விட்டுக்கொடுக்கவில்லை என்றால் இந்தியா சிரியா போன்று மாறிவிடும் என்றார். இந்த விவகாரத்தில் நல்லெண்ண அடிப்படையில் இஸ்லாமியர்கள் விட்டுக்கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தான் எந்த தரப்புக்கு ஆதரவாக பேசுகிறேன் என்பதை அவர் தெளிவுபடுத்தியுள்ளார். நடுநிலையாக இல்லாத ஒருவரை உச்சநீதிமன்றம் நியமித்திருப்பது வருந்தத்தக்கதாக உள்ளது. 

ரவிசங்கர் தற்போது எதையும் மனதில் வைத்துக்கொள்ளாமல் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்று எதிர்பார்கிறேன்" என்றார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT