உயிர்க்கொல்லியாக மாறிய நெடுஞ்சாலைகள்: சாலை விபத்துகளால் ஜனவரியில் மட்டும் 993 மரணம்

வாகன  நெரிசல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் அகலமான சாலைகள் அமைக்க வேண்டியது அவசியம்தான். ஆனால், குறுகலான சாலைகளைவிட அகலமான சாலைகளில்தான் அதிக விபத்துகள் நேரிடுகின்றன 
உயிர்க்கொல்லியாக மாறிய நெடுஞ்சாலைகள்: சாலை விபத்துகளால் ஜனவரியில் மட்டும் 993 மரணம்


வாகன  நெரிசல் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் அகலமான சாலைகள் அமைக்க வேண்டியது அவசியம்தான். ஆனால், குறுகலான சாலைகளைவிட அகலமான சாலைகளில்தான் அதிக விபத்துகள் நேரிடுகின்றன என்று புள்ளி விவரங்கள் சொல்கின்றனவே.

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் நிகழ்ந்த சாலை விபத்தினால் நேரிட்ட உயிரிழப்பு எத்தனை தெரியுமா? 993 பேர் மரணித்திருக்கிறார்கள் என்கிறது புள்ளி விவரம்.

இதில் குறுகலான சாலைகளை விட, அகலமான சாலைகளில்தான் அதிக விபத்துகள் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரி 1 முதல் 31ம் தேதி வரை தமிழகத்தில் நடந்த சாலை விபத்துகளில் 70 சதவீதம் மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில்தான் நடந்துள்ளது. அதாவது ஜனவரி 2019ல் தமிழகத்தில் நடந்த 5,173 சாலை விபத்துகளில் 993 பேர் இறந்துள்ளனர். (இதே ஜனவரி மாதம் கடந்த ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துகளில் 1,189 பேர் உயிரிழந்தது வேறு கதை.)

993 பேரில் 360 பேர் தேசிய நெடுஞ்சாலையிலும், 332 பேர் மாநில நெடுஞ்சாலையிலும் நிகழ்ந்த சாலை விபத்துகளில் மரணித்தனர்.

அதாவது மற்ற சாலைகளை விட அதிக அகலமான 20 - 60 அடி அகலமுள்ள மாநில நெடுஞ்சாலைகளிலும், 60 - 200 அடி அகலமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளிலும் தான் சாலைவிபத்துகள் அதிகமாக நிகழ்ந்துள்ளன. சாதாரண உள்ளூர் சாலைகள் 10 - 30 அடி மட்டுமே.

இதற்கு அதிகாரிகள் கூறும் காரணம் என்னவென்றால், தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாததே என்கிறார்கள். பல்வேறு சாலை விதி மீறல்களும் இந்த விபத்துகளுக்கு பின்னணியில் இருந்தாலும், சாலையில் பாதுகாப்பு அம்சங்களை அதிகரிக்காமல், விபத்துகளினால் உயிரிழப்பைக் குறைப்பது இயலாது என்கிறார்கள்.

தேசிய நெடுஞ்சாலைகளின் இருபுறங்களிலும் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட வேண்டும் என்றும், பல இடங்களில் தடுப்பு இல்லாமல் திறந்திருப்பதால், உள்ளூர் மக்கள் அந்த சாலையைப் பயன்படுத்தும் போது இதுபோன்ற விபத்துகள் அதிகம் நிகழ்வதாகவும் கூறுகிறார்கள் அதிகாரிகள்.

கடந்த 20 ஆண்டுகளில் சாதாரண புறநகர்ச் சாலைகளாக இருந்த 2,500 கி.மீ. சாலைகள் மாநில நெடுஞ்சாலைகளாக தரம் உயர்த்தப்பட்டனவே தவிர, அவற்றுக்கு சாலை தடுப்புகளோ, இருபுற சாலை தடுப்புகளோக் கூட இல்லை என்பது முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்களாகும்.

மாநில நெடுஞ்சாலைகளில் நிகழ்ந்த சாலை விபத்துகள் குறித்து விசாரணை நடத்தும் போது கிடைக்கும் முதல் தகவல், அந்த சாலையில் சாலைத் தடுப்புகள் கூட இல்லாமல் இருக்கிறது என்ற விஷயமாகத்தான் இருக்கிறது. இது குறித்து மாநில அரசுக்குத் தெரிவித்திருப்பதாக நெடுஞ்சாலைத் துறை கூறுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com