பகலில் கூலி வேலை, இரவில் இலக்கியப் பணி! எழுத்தாளர் ஷாஃபியின் வாழ்க்கை இதுதான்!

பன்னிரண்டு தமிழ் நாவல்கள், நான்கு சிறுகதை தொகுதிகள், கட்டுரைகளைத் தமிழிலிருந்து மலையாளத்தில் மொழிபெயர்த்து தமிழுக்கும் மலையாளத்திற்கும்,
பகலில் கூலி வேலை, இரவில் இலக்கியப் பணி! எழுத்தாளர் ஷாஃபியின் வாழ்க்கை இதுதான்!

பன்னிரண்டு தமிழ் நாவல்கள், நான்கு சிறுகதை தொகுதிகள், கட்டுரைகளைத் தமிழிலிருந்து மலையாளத்தில் மொழிபெயர்த்து தமிழுக்கும் மலையாளத்திற்கும், இலக்கியப் பாலமாக மாறியிருப்பவர் ஷாஃபி செருமாவிலாயி. 'மொழிபெயர்ப்பு' உலகெங்கும் இலக்கியத் களத்தில் நடந்து வருகிற அனிச்சை செயல். "மொழிபெயர்ப்புகள்' நிகழாத மொழிகள் இல்லை.  ஆனால், மொழிபெயர்ப்பாளர் ஷாஃபியை வித்தியாசப்படுத்துவது அவர் கேரளத்தில் பார்த்துவரும் பகல் நேர வேலை. தினக் கூலிக்கு அவர் செய்யும் கட்டட 'சிற்றாள்' வேலை. ஆம்..! பகலில் செங்கல்களைச் சுமப்பதும், சாந்து குழைத்துச் சட்டியில் கொத்தனார்களுக்குக் கொடுப்பதும்தான் ஷாஃபியின் வேலை. இரவில் எழுத்துப் பணி... இலக்கியப் பணி. இப்படித்தான் ஷாஃபி நாட்களை நகர்த்திவருகிறார். 

ஷாஃபி படித்தது பத்தாம் வகுப்பு. ஆனால் தன்னுடைய எழுத்துகளால் திருப்பூர் இலக்கிய விருது, நல்லி வழங்கும் திசை எட்டு விருது, கேரளத்தின் உள்ளூர் பரமேசுவர அய்யர் இலக்கிய விருதுகளைப் பெற்றவர். செங்கல்களைச் சுமக்கும் போதும், சாந்து குழைக்கும் போது, மனதில் தமிழ் சொற்களைக் கோர்க்கும் ஷாஃபி தனது இலக்கியப் பயணம் குறித்து மனம் திறக்கிறார்: "அப்பா சைக்கிளில் மீன்களை விற்பவர். அவரைச் சார்ந்திருந்த குடும்பம் சொற்ப வருமானத்தில் வறுமையில் மூழ்கியிருந்தது. தினமும் மூச்சைக் கூட அளவாக சுவாசித்தோம் என்று சொல்லலாம். அண்ணன்மார்கள் நான்காம் வகுப்புவரை படித்தார்கள் . எனக்கு பத்தாம் வகுப்பு வரை படிக்க வாய்ப்புக் கிடைத்தது . பத்தாம் வகுப்பு ஃபெயில் ஆனதும், குடும்பத்திற்குக் கூடுதல் வருமானத்திற்காக வேலைக்குச் சென்றேன். 

புனே நகரில் தேநீர் கடையில் சில ஆண்டுகள் வேலை பார்த்தேன். பிறகு அந்த வேலையை விட்டுவிட்டு வீடு திரும்பினேன். பிறகு பெங்களூரு சென்றேன். அங்கே விவேக் நகரில் உணவு விடுதியில் வேலைக்குச் சேர்ந்தேன். 

அந்தப் பகுதியில் தமிழர்கள் அதிகம் வாழ்ந்து வருகிறார்கள். அதனால் கடையில் தமிழ் செய்தித் தாள்கள் வாங்குவார்கள். பொழுதுபோக்காக தமிழ் வாசிக்க ஆரம்பித்தேன். சினிமா செய்திகளில் தொடங்கிய வாசிப்பு நாளடைவில் கடைக்கு வரும் சிலரிடம் இருக்கும் தமிழ் புதினங்களை வாசித்துப் புரிந்து கொள்ளும் அளவுக்கு முன்னேறினேன். தமிழ் நண்பர்களுடன் பேச வேண்டி வந்ததால் சீக்கிரமே தமிழில் பேச, எழுதவும் கற்றுக் கொண்டேன். 
1985-வாக்கில் தமிழில் ஏதோ ஒரு இதழில் ரஷ்ய சிறுகதை தமிழில் வெளிவந்திருந்தது. அதை வாசித்ததும், மலையாளத்தில் அதை மொழிபெயர்த்தால் என்ன எனத் தோன்றியது..... 

மொழிபெயர்ப்பு செய்து மலையாளப் பத்திரிகை ஒன்றிற்கு அனுப்ப.. அது பிரசுரமாகியது. அது தன்னம்பிக்கையை என்னுள் விதைத்தது. வறுமையுடன் நடந்து கொண்டிருந்த போராட்டத்தில் மேலே எழுத முடிவில்லை. வேலை தேடி வளைகுடா நாட்டிற்குச் சென்றேன். சில ஆண்டுகள் கழித்து மீண்டும் பெங்களூரு. இம்முறை ஒரு துணிக்கடையில் வேலை. 

"எனக்குத் திருப்பம் ஏற்பட்டது 2008-ஆம் ஆண்டு. எழுத்தாளர் தோப்பில் முகமது மீரான் குறித்த கட்டுரை ஒன்றினைத் தமிழில் வாசித்தேன். அந்தக் கட்டுரை இதயத்தைத் தொட்டது. தோப்பில் படைப்புகளை மலையாளத்தில் மொழிபெயர்க்க அனுமதி தர வேண்டும் என்று அனுமதி கேட்டுக் கடிதம் எழுதினேன். தோப்பில் இசைவு தந்தார். 

அவர் எழுதிய சிறுகதைகள் அடங்கிய "அனந்த சயனம் காலனி' என்ற தொகுப்பினை மொழிபெயர்த்தேன்.. அது மலையாளத்தில் வெளியாகியது. தோப்பில் மீரான் மலையாள மொழிக்கு அறிமுகமானார். மொழிபெயர்ப்புத் தரமாக அமைந்ததினால் எனக்கும் முகவரி கிடைத்தது. தமிழ் எழுத்தாளர்கள், மலையாள பதிப்பாளர்கள் என்னை அணுகத் தொடங்கினார்கள். 

2011-ஆம் ஆண்டு சாகித்ய அகாதெமி மொழிபெயர்ப்பில் பயிலரங்கம் ஒன்றை திருச்சியில் ஏற்பாடு செய்திருந்தது . அதில் கேரளத்தை பிரதிநிதித்துவம் செய்து கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 

"தமிழ் எழுத்தாளர்களின் புதினங்கள் மலையாளத்தில் மொழிபெயர்க்கும் பணி நிறைவடையாமல் இருக்கிறது.. "உங்களால் செய்ய முடியுமா' என்று சாகித்ய அகாதெமியைச் சேர்ந்தவர் ஒருவர் என்னிடம் கேட்டார். "பெரு மகிழ்ச்சியுடன் செய்கிறேன்' என்று நான் சொன்னதும் ஒப்பந்தத்தில் கையொப்பம் இட்டு மொழிபெயர்ப்பு வேலைகளைத் தொடங்கினேன். 

சா. கந்தசாமியின் "விசாரணை கமிஷன்' நாவலிலிருந்து எனது மொழிபெயர்ப்பு பணி மீண்டும் ஆரம்பமாகியது. தொடர்ந்து மொழிபெயர்ப்பு பொறுப்புகளை சாகித்ய அகாதெமி தொடர்ந்து தந்து வந்தது. திலகவதியின் "கல்மரம்', மேலாண்மை பொன்னுசாமியின் "மின்சாரப் பூ' போன்றவை எனது முக்கிய மொழிபெயர்ப்புகள். சென்ற ஆண்டு பெருமாள் முருகனின் "அர்த்தநாரி' நாவலை மலையாளப்படுத்தினேன். தற்சமயம் எம்.வி.வெங்கட்ராம் எழுதிய சிறுகதைகளுக்கு மலையாள வடிவம் தந்து கொண்டிருக்கிறேன். 

கட்டட வேலை, வாரத்தில் ஆறுநாள். ஒரு நாளைக்கு எழுநூற்றி ஐம்பது ரூபாய் கூலி. கட்டட வேலையில் உடல் உழைப்பு அதிகம் என்பதால், அசதியாக வீட்டிற்கு வருவேன். குளித்து விட்டு எழுதத் தொடங்குவேன். அதிக நேரம் இருந்து எழுத உடல் அனுமதிக்காது. சொந்தமாக வீடு இருக்கிறது. போக வர இருசக்கர வாகனமும் உண்டு. 

மொழிபெயர்ப்பு வேலைகள் நான் செய்து வந்தாலும் அதில் வரும் வருமானம் சொல்லிக் கொள்வது மாதிரியில்லை. ஒரு பக்கம் பொழிபெயர்க்க கிடைப்பது 80 ரூபாய். அதனால், எனது வாழ்க்கையும் வயிற்றுப் பிழைப்பும், கூலி வேலையிலிருந்து வரும் வருமானத்தைச் சார்ந்தே உள்ளது. அதனால் ஐம்பத்தாறு வயதிலும் கூலி வேலைக்குப் போவதை நிறுத்தவில்லை. மொழிபெயர்ப்பில் கிடைக்கும் அங்கீகாரம், ஆத்ம திருப்திக்காக மொழிபெயர்த்து வருகிறேன். 

எனது மொழிபெயர்ப்புகள் தமிழ் எழுத்தாளர்களுக்கு ஒரு வாசகர் வட்டத்தைக் கேரளத்தில் ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றன. அதனால் தமிழ் எழுத்தாளர்கள் எனக்கு விருது அளித்துக் கெளரவப்படுத்தியுள்ளார்கள். 

சல்மா, திலகவதி, சோ தர்மன், பாலபாரதி, ஆ.மாதவன், மேலாண்மை பொன்னுசாமி, சுப்ரபாரதிமணியன், போன்றவர்களின் படைப்புகளை மலையாளத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன். "அவன் அது அவள்' நாவலை மொழிபெயர்த்து அது ஆன்லைன்னில் நல்ல விற்பனை ஆகியது. 

முழு நேர எழுத்தாளராக வேண்டும் என்ற விருப்பம் உண்டு. ஆனால் போதிய வருமானம் கிடைக்குமா என்பதும் சந்தேகமாகவுள்ளது. தமிழில் சொல்வார்கள். "என்னதான் மண்ணை அள்ளி உடல் முழுக்கப் பலமுறை பூசிக் கொண்டாலும், மணல் பரப்பில் பல மணி நேரம் புரண்டு எழுந்தாலும், ஒட்டுகிற மண் தான் உடலில் ஒட்டும்.' அதனால் நகர்கிற நாட்கள் இப்படியே நகரட்டும்' என்று விட்டுவிட்டேன். 

"மொழிபெயர்ப்பின் போது சில சந்தேகங்கள் ஏற்படும். எழுத்தாளர் என்ன நினைத்து அந்த வரிகளை எழுதியிருப்பார் என்பதை உறுதி செய்ய எழுத்தாளர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை நிவர்த்திச் செய்து கொண்டு மொழிபெயர்ப்பைத் தொடருவேன். மொழிபெயர்ப்பில் எழுத்தாளரின் உணர்வுகளை அப்படியே பிரதிபலிக்க வேண்டும். மொழிபெயர்ப்பில் பொருள் மற்றும் உணர்வுகள் மாறிவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறேன்.

இந்தத் தொடர்பினால், தமிழக எழுத்தாளர்களுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. தோப்பில் முகமது மீரான் என் வீட்டிற்கு வருகை தந்துள்ளார். எனது மொழிபெயர்ப்புகளை வாசிக்கும் வாசகர்கள் பலர் என்னைத் தேடிவந்து கதை, நாவலாசிரியர், எனது மொழிபெயர்ப்பு குறித்துப் பேசுவார்கள்.. விவாதிப்பார்கள். அந்தத் தருணங்கள் மறக்க முடியாதவை." என்கிறார் ஷாஃபி.

-பிஸ்மி பரிணாமன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com