மனசத் தொட்டுச் சொல்லுங்க தண்ணீர் பஞ்சத்துக்கு மழைதான் காரணமா? நாம இல்லையா??

இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னை தற்போது தண்ணீர் இல்லாத கேப்டவுன் நகரமாக உருமாறி வருகிறது.
மனசத் தொட்டுச் சொல்லுங்க தண்ணீர் பஞ்சத்துக்கு மழைதான் காரணமா? நாம இல்லையா??


இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னை தற்போது தண்ணீர் இல்லாத கேப்டவுன் நகரமாக உருமாறி வருகிறது.

ஆண்டுதோறும் கோடையின் இறுதியில் வழக்கமாக சென்னை சந்திக்கும் ஒரு வறட்சியைப் போல அல்லாமல் இந்த முறை, நிலத்தடி நீர் மட்டம் கடுமையான அளவில் சரிந்தது நகரத்தையே உலுக்கிப்போட்டுவிட்டது.

குடிக்க, குளிக்க, துவைக்க என எதற்கும் தண்ணீர் இன்றி சென்னைவாசிகள் படும்பாடு சொல்லில் மாளாதவை. தண்ணீர் இல்லாததால் மருத்துவமனைகள், உணவகங்கள் மற்றும் பல பொழுதுபோக்கு விடுதிகளில் கூட கழிவறைகள் மூடப்பட்டுள்ளன. உணவு சமைக்கப் போதிய தண்ணீர் இன்றி உணவகங்களும் மூடப்பட்டுவிட்டன.

தண்ணீர் இல்லை என்று கூறி வீட்டை பூட்டிவிட முடியுமா? முடியாதே, எங்கெல்லாம் தண்ணீர் கிடைக்கிறதோ அங்கெல்லாம் சென்று அல்லாடித் திரிந்து தண்ணீரை சேகரித்து வருகிறார்கள் சிங்காரச் சென்னை மக்கள்.

தற்போது ஏற்பட்டிருக்கும் தண்ணீர் பஞ்சத்துக்கு அரசியல்வாதிகளைப் போல மக்களும் கூறும் சாக்கு கடந்த ஆண்டு போதிய பருவ மழை இல்லாததே என்பதுதான். ஆனால், இதில் மனிதத் தவறுகள் இருப்பதை வசதியாக மறந்து விடுகிறோம். சென்னை நகரின் தண்ணீர் பற்றாக்குறை என்ற பிரச்னை முற்றிலும் மனிதனால் நடத்தப்பட்ட மிகப்பெரிய தாக்குதல் என்பதை மறக்க வேண்டாம்.

நீதி ஆயோக் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், அடுத்த ஆண்டு இந்தியாவின் தலைநகர் புது தில்லி, ஐ.டி. நகரமான பெங்களூரு உட்பட 21 நகரங்களில் நிலத்தடி நீர் என்பது கானல் நீராகிவிடும் என்கிறது. ஏற்கனவே ஆண்டுதோறும் இந்தியாவில் பல ஆயிரம் மக்கள் சுத்தமான குடிநீர் இல்லாமல் மரணம் அடைந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறது ஆய்வு. 

கடுமையான வறட்சியை சந்தித்துக் கொண்டிருக்கும் இதே சென்னைதான் 2015ல் கடும் வெள்ளத்தையும் சந்தித்தது. ஒரு வேளை அன்றைய மழை நீர் நிலத்துக்குச் சென்றிருந்தால், தற்போது பல ஏரி, குளங்களில் நிச்சயம் தண்ணீர் இருந்திருக்கும். வெள்ளத் தண்ணீர் முழுக்க நிலத்தை உரசியபடிச் சென்று கடலில் கலந்து விட்டது. 

சரி நமது வாதம் என்ன? போதுமான மழை இல்லாததே தண்ணீர் பஞ்சத்துக்குக் காரணம் என்பதுதானே, ஆனால், மத்திய நீர் ஆணையம் கூறுவது என்னவென்றால், இந்தியாவின் ஒட்டுமொத்த தேவை 3000 பில்லியன் சதுரகன அடி தண்ணீர் என்ற நிலையில், ஆண்டுக்கு மழையின் மூலம் கிடைக்கும் தண்ணீரின் அளவு 4000 பில்லியன் சதுர கன அடியாக இருக்கிறது என்பதுதான்.

எனவே, தேவைக்கு ஏற்ப மழை நீரை சேமிக்கும் நீராதாரங்களை ஏற்படுத்தாததும், வீணாகக் கடலில் கலக்க விடுவதும்தான் முக்கியக் காரணம் என்பது நன்கு விளங்கியிருக்கும். பெய்யும் மழை நீரை போற்றிப் பாதுகாத்து கண்ணைப் போல காக்க மறந்து, பாவிகளாகி நிற்கும் சென்னைவாசிகள், போன வருடம் மழை பெய்யவில்லை என்று பருவ மழையைக் குறை சொல்லிக் கொண்டிருக்கிறோம். இப்படி ஒன்றா, இரண்டா நாம் செய்த தவறுகள். எல்லாவற்றையும் செய்துவிட்டு இன்று நிலத்தடி நீரின் புள்ளி விவரங்களைப் பார்த்து கதிகலங்கி நிற்கிறோம்.

காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரைப் பெற முடியவில்லை. அப்படியே கர்நாடக அரசு பெரிய மனது வைத்து காவிரியில் தண்ணீரை திறந்து விட்டாலும் அதனை சிந்தாமல் சிதறாமல் தேவைக்குப் பயன்படுத்தும் வகையில் தமிழக அரசு இதுவரை எந்த தடுப்பணைகளையும் கட்டி வைக்கவில்லை.

வேக வேகமாக நகரமயமாதல், இந்தியாவின் அதிகவேக வளர்ச்சி போன்றவை, நகரங்களை தண்ணீர் இல்லாத பாலைவனங்களாக மாற்றிக் கொண்டிருக்கின்றன. மழை நீர் சேகரிப்பு என்பது மிகவும் முக்கியமான விஷயமாக மாறியுள்ளது. நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்த வேறு எந்த பிரயத்தனமும் பயனளிக்காத நிலையில், வரவிருக்கும் மழை நீரை எப்படி பூமிக்குள் அனுப்புவது என்பதை மக்கள் சிந்திக்கும் நேரமிது. கொடை காலம் கொளுத்துகிறதோ, வாட்டுகிறதோ, குடிக்க தண்ணீர் வேண்டும்.

தண்ணீர் பயன்பாட்டைக் குறைக்கும் வகையில் தற்போது வடமேற்கு மாநிலங்களில் குறைந்த நீரின் பயன்பாட்டில் வளரும் பயிர்களை பயிரிடுகிறார்கள். அதுபோன்றதொரு முன் முயற்சிகளையும் நாம் மேற்கொள்ள வேண்டும். ஒரு பக்கம் தண்ணீர் சேமிப்பும், மறு பக்கம், பயன்பாட்டைக் குறைப்பதுமே இன்றைய நிலைமை நமக்கு உணர்த்தும் கடினமானப் பாடம்.

சரி இவ்வளவு பேசுகிறோமே.. நேற்று சென்னையில் பெய்த மழை நீர் முழுக்க நிலத்துக்குச் சென்றுவிட்டதா? நேற்று பெய்த மழை நீரைச் சேமிக்க ஏதாவது ஏற்பாடுகளை செய்திருக்கிறோமா? வெறும் காலிக் குடங்களோடு கன்னத்தில் கைவைத்துக் காத்திருந்தால் மட்டும் இனி தண்ணீர் கிடைக்காது. மழை நீரை பூமிக்குள் செல்ல விடாமல், பூமியை தாகத்தோடு தவிக்கவிட்டுவிட்டு, இன்று மழையைக் குறைச் சொல்லித் திரியும் மாந்தர்கள் மாற வேண்டும்.

எனவே பருவ மழையைக் குற்றம் சொல்வதை விட்டுவிட்டு, செய்த பாவத்துக்கு பரிகாரம் தேடும் நேரம் இது என்பதை உணருங்கள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com