BKC டீல்: இந்தியாவில் சமீபத்தில் நிகழ்ந்துள்ள மிகப்பிரமாண்டமான சொத்துப் பரிவர்த்தனை இது என்கிறது இந்திய சொத்துச் சந்தை!

1975 ஆம் ஆண்டு வாக்கில் மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் ஒரு சதுர மீட்டர் மனையின் விலை 3000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று 2019 ல் அதே இடத்தில் ஒரு சதுர மீட்டர் மனையின் விலை ரூ 3 லட
BKC டீல்: இந்தியாவில் சமீபத்தில் நிகழ்ந்துள்ள மிகப்பிரமாண்டமான சொத்துப் பரிவர்த்தனை இது என்கிறது இந்திய சொத்துச் சந்தை!

சமீபகாலங்களில் இந்தியாவில் நிகழ்ந்துள்ள பிரமாண்டமான சொத்து பர்வர்த்தனை இதுவே!

ஜப்பானின் பிரபல வர்த்தக நிறுவனமான சுமிடொமோ, மகாராஷ்டிர மாநிலத்தின் மிகப்பிரமாண்டமான அசையாச் சொத்துக்களில் ஒன்றான BKC எனப்படும் பாந்த்ரா குர்லா காம்ளெக்ஸின் மூன்று ஏக்கர் மனையை சுமார் 2,238 கோடி ரூபாய்களுக்கு ஏலம் எடுத்துள்ளது. சுமார் 370 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்திருக்கும் இந்த காம்ளெக்ஸ் கட்டிடமானது மும்பையின் மிகப்பெரிய வியாபார கேந்திரங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருவது குறிப்பிடத் தக்கது. ஏக்கருக்கு 745 கோடி ரூபாய் எனும் அளவில் இது சமீப காலத்தில் நம் நாட்டில் நிகழ்ந்துள்ள மிகப்பிரமாண்டமான நில ஒப்பந்தங்களில் ஒன்றென இந்திய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கூறுகின்றன.

மும்பை ஜியோ கார்டன் உட்பட மேலும் இரு பகுதிகளை எல்லைகளாகக் கொண்ட இந்த மிகப்பெரிய கட்டிடத்துக்கான ஏலம் அறிவிக்கப்பட்டு சில மாதங்கள் ஆன நிலையிலும் கூட இந்தியாவில் தற்போது தேங்கி நிற்கும் சொத்து சந்தை (Property Market) நிலவரம் காரணமாக இதை வாங்கும் திறன் உள்ளூர் நிறுவனங்கள் எதற்கும் இல்லாத நிலையில் ஜப்பானிய வர்த்தக நிறுவனம் மட்டுமே தனித்து இந்த ஏலத்தில் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது என மும்பை மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையத்தின் மூத்த அதிகாரிகளில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இத்தனை அதீத விலை கொடுத்து ஜப்பானிய நிறுவனம் இந்தக் கட்டிட நிலத்தை ஏலத்தில் எடுத்ததற்கு காரணம் இல்லாமல் இல்லை. அவர்கள் இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையில் உலக வர்த்தக நிறுவனங்களைக் கவரும் வகையிலான பிரதான இடத்தைப் பிடிக்க விரும்பினார்கள். அதற்கான துவக்கம் தான் இது என்கிறார்கள் இந்திய சொத்து சந்தை நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணித்து வரும் நிபுணர்கள். தற்போது இங்கு சதுர மீட்டருக்கான இருப்பு விலையாக ரூ 3.44 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2010 ஆம் ஆண்டில் இதே போன்றதொரு மெகா பிரமாண்டமான சொத்து ஏல வர்த்தகம் இந்தியாவில் நிகழ்ந்தது. வடாலாவில் இருக்கும் மும்பை பெருநகர பிராந்திய மேம்பாட்டு ஆணையத்திற்குச் சொந்தமான 6.2 ஏக்கர் நிலத்தை ரூ 4,050 கோடி ரூபாய் கொடுத்து லோதா குழுமம் ஏலம் எடுத்தது. ஏக்கருக்கு ரூ 653 கோடி ரூபாய் எனும் அளவில் லோதா குழுமம் அந்தச் சொத்தை வாங்கியது. ஆனால், இதிலும் கூட மொத்த ஏலத்தொகையை தவணைகளாகப் பிரித்து ஐந்தாண்டு காலகட்டத்துக்குள்  MMRDA க்கு திருப்பிச் செலுத்தும் கால அவகாசம் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் சுமிடொமொ ஒரே தவணையில் BKC காம்ப்ளெக்ஸை ஏலத்தில் எடுத்திருப்பது அதிசயமாகக் கருதப்படுகிறது.

இந்த மெகா ஏலம் சரிந்து கிடக்கும் இந்தியச் சொத்து சந்தையை தூக்கி நிறுத்துமா?!

இத்தனை பெரிய காம்பெளக்ஸை ஏலத்தில் எடுத்திருக்கும் பிரபல ஜப்பானிய வர்த்தக நிறுவனமான சுமிடோமொவிற்கு அவ்விடத்தில் கமர்சியல் ஆஃபீஸ் காம்ப்ளெக்ஸ் கட்டுவதே பிரதான நோக்கமாம். முன்னதாக இந்தியாவில் வெவ்வேறு பகுதிகளில் இயங்கி வரும் தனது வர்த்தக நிறுவனங்களை ஒருங்கிணைத்து இந்தக் கட்டிடத்துக்குள் கொண்டு வரும் திட்டமும் அவர்களுக்கு உண்டு. அத்துடன் இந்நுறுவனத்துக்கு இந்தியாவில் தொழில் செய்ய விரும்பும் பிற பன்னாட்டு நிறுவனங்களுக்கான அலுவலக யுனிட்டுகளை வாடகைக்கு விட்டு பெரும்பணம் சம்பாதிக்கும் வாடகை அலுவலகப் பூங்காக்களை உருவாக்கும் திட்டமும் இருக்கிறது. ஏனெனில், உலகளாவிய முதலீட்டாளர்களான பிளாக்ஸ்டோன், ப்ரூக்ஃபீல்டு, GIC ஆஃப் சிங்கப்பூர், கத்தார் இன்வெஸ்ட்மெண்ட் அத்தாரிட்டி உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்கள் மிகப்பெரிய வருமானத்தை ஈட்டித்தரும் அலுவலகப் பூங்காக்களின் (டெக்னோ பார்க், டைடல் பார்க் இத்யாதி வகையறாக்கள்) மீது பெரும்பணத்தை கொட்டத் தயாராக இருப்பதால் அந்நிறுவனங்களின் சேவைக்குத் தேவையான அலுவலகக் கட்டடங்களை வாடகைக்கு விடும் திட்டத்தில் இருக்கிறது ஜப்பானிய நிறுவனம். அதன் மூலமாக இந்திய பொருளாதாரச் சேவைகளின் ஊடாகத் தனது பயணத்தை தொடங்கவிருக்கிறது சுமிடொமொ என்கிறார்கள்.

இந்தியப் பிரதமர் மோடி மற்றும் ஜப்பானியப் பிரதமர் சின்ஸோ அபே சந்திப்பின் பின் நிகழ்ந்துள்ள மாற்றம் இது என்பதால் இதை இவர்களது காலத்தில் இந்தியாவில் நிகழ்ந்துள்ள பொருளாதார மற்றும் வர்த்தக வளர்ச்சிக்கான உறப்புப்பாலமாகவும் கருதலாம். ஏனெனில், சுமிடொமொ ஜப்பானின் பழமையான பாரம்பரிய வர்த்தக நிறுவனங்களில் முதன்மையானது என்பதோடு ஜப்பானிய அரசின் பெருகி வரும் வியாபாரத் தொடர்புகளை உறுதி செய்யும் நங்கூரமாகச் செயல்பட்டு நிறுவனங்களில் இந்நிறுவனமும் ஒன்று என்பதால்.

சுமிடொமொ மிட்சுபிஸி ஃபினான்ஸியல் க்ரூப், NEC கார்ப்பரேஷன் ஆஃப் நிப்பான் ஸ்டீல் உள்ளிட்ட தனது துணை நிறுவனங்கள் மூலமாக முன்பே இந்தியாவில் தனது கால்தடங்களைப் பதித்து விட்டது சுமிடொமொ. உலகளாவிய வர்த்தக நிறுவனமான மாஸ்தா மோட்டார்ஸ் கூட இவர்களுடையது தான்.

எது எப்படியோ... கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கொசுக்கள் நிறைந்த குட்டையாக இருந்த மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளெக்ஸ் பகுதிகளில் ஒன்று இன்று உலகளாவிய பன்னாட்டு நிறுவனங்களில் ஒன்றான சுமிடொமொவால் பெரும் விலை கொடுத்து ஏலத்தில் எடுக்கப்பட்டிருப்பது மும்பை பெருநகர பிராந்திய வளர்ச்சித் திட்டத்தின் வெற்றிகளில் ஒன்றா அல்லது இந்தியப் பொருளாதார வளர்ச்சியின் அடையாளமா என்ற குழப்பம் இருக்கத்தான் செய்கிறது.

1975 ஆம் ஆண்டு வாக்கில் மும்பை பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸில் ஒரு சதுர மீட்டர் மனையின் விலை 3000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று 2019 ல் அதே இடத்தில் ஒரு சதுர மீட்டர் மனையின் விலை ரூ 3 லட்சமாக உயர்ந்திருக்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com