கதுவா வழக்கில் மறந்த கதை ஒன்று உண்டு: அது விட்டுச் செல்லும் செய்தி என்ன?

கதுவா பாலியல் வழக்கில் தீர்ப்பு வெளியானதன் மூலம், அந்த சிறுமிக்கு நீதி கிடைத்துவிட்டது என்று பேசி வரும் இதே சூழலில், இந்த சம்பவத்துக்கான முழுமையான நீதி கிடைத்துவிட்டதா என்பதையும் கவனிக்க வேண்டும். 
கதுவா வழக்கில் மறந்த கதை ஒன்று உண்டு: அது விட்டுச் செல்லும் செய்தி என்ன?


கதுவா பாலியல் வழக்கில் தீர்ப்பு வெளியானதன் மூலம், குற்றத்திற்கான தண்டனை கிடைத்துவிட்டது, அந்த சிறுமிக்கு நீதி கிடைத்துவிட்டது என்று பேசி வரும் இதே சூழலில், இந்த சம்பவத்துக்கான முழுமையான நீதி கிடைத்துவிட்டதா என்பதையும் கவனிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.  

சம்பவமும் தீர்ப்பும்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், கதுவா மாவட்டம் ராசானா கிராமத்திலுள்ள பகர்வால் பழங்குடியின பிரிவைச் சேர்ந்த 8 வயது சிறுமி, கடந்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி காணாமல் போனார். இதையடுத்து, அதே மாதம் 17-ஆம் தேதி, சிறுமி சடலமாக கண்டெடுக்கப்பட்டார். அவரது சடலம் பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டதில், சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது. 

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அருகில் உள்ள கோயிலுக்குள் அடைத்து சிறுமியை சிலர் 4 நாட்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்திருப்பது தெரிந்தது. இதன்பிறகு சுமார் ஒன்றரை ஆண்டுகள் நடைபெற்ற இந்த வழக்கில் பதான்கோட் நீதிமன்றம் கடந்த திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியது. 

இந்த சம்பவத்தில், கோயில் பொறுப்பாளர் சாஞ்சி ராம், சிறப்பு காவல்துறை அதிகாரி தீபக் கஜுரியா, கிராமவாசி பர்வேஷ் குமார், காவல்துறை துணை ஆய்வாளர் ஆனந்த் தத்தா, தலைமை காவலர் திலக் ராஜ், சிறப்பு காவல்துறை அதிகாரி சுரேந்தர் வர்மா ஆகிய 6 பேரையும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்தது. சாஞ்சி ராமின் மகன் விஷாலுக்கு எதிரான குற்றச்சாட்டை நிரூபிக்கத் தேவையான ஆதாரம் தாக்கல் செய்யப்படாததால், சந்தேகத்தின் பலனை அவருக்கு வழங்கி நீதிமன்றம் விடுவித்தது.

தண்டனை விவரம்:

இதில், சாஞ்சி ராம், தீபக் கஜுரியா மற்றும் பர்வேஷ் குமார் ஆகிய மூன்று முக்கியக் குற்றவாளிகளுக்கு குற்றச் சதி, கொலை, கடத்தல், கூட்டு பாலியல் வன்கொடுமை, தடயங்களை அழித்தல் உள்ளிட்ட குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தடயங்களை அழித்த குற்றத்துக்காக ஆனந்த் தத்தா, திலக் ராஜ், சுரேந்தர் வர்மா ஆகியோருக்கு தலா 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமிக்கு நீதி வேண்டும் என்று நாடு முழுவதும் ஆதரவு கோஷங்கள் எழுந்த நிலையில், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டது. இதில், உயிரிழந்த சிறுமிக்கு நீதி கிடைத்துவிட்டது. ஆனால், இந்தக் குற்றப் பின்னணியின் நோக்கம் மற்றும் வழக்கின் சாராம்சத்தை உணர்ந்தால் இந்த சம்பவத்துக்கான முழுமையான நீதி கிடைத்ததா என்பதற்கான விடை கிடைக்கும். 

குற்றப் பின்னணி:

முகமது யூசுப் புஜ்வாலா, பகர்வால் பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர். இவரது தாய் மற்றும் இரண்டு குழந்தைகள் ஒரு விபத்தில் உயிரிழந்தனர். இதையடுத்து, மனைவி அளித்த அறிவுரையின் பெயரில் தனது உறவினர் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்தார். இவர்கள் குதிரை மற்றும் எருமைகளை மேய்க்கும் மக்கள். பகர்வால் பழங்குடியின மக்கள் ஜம்முவில் இடம்பெற விரும்பினர்.  

அதனால், இந்தப் பழங்குடியின மக்களை அச்சுறுத்தி, அவர்களை இந்தப் பகுதியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதுவே குற்றவாளிகளின் நோக்கமாக இருந்துள்ளது. இதற்கு மூளையாய் இருந்து செயல்பட்ட முக்கியக் குற்றவாளி தான் கோயில் பொறுப்பாளர் சாஞ்சி ராம் (ஓய்வு பெற்ற வருவாய்த் துறை அதிகாரி). இதற்கான சதித் திட்டமாகத் தான், அந்த சிறுமியை கொண்டு இந்த குற்றச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். 

இவை, போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையிலேயே குறிப்பிடப்பட்டுள்ளது. பகர்வால் பழங்குடியின மக்கள் அந்தப் பகுதியில் குடியேறுவது, சாஞ்சி ராமுக்கு விருப்பமில்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, மற்றுமொரு உதாரணத்தையும் போலீஸார் குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளனர். 

எனவே, இது வெறும் சிறுமியின் பாலியல் வன்கொடுமை வழக்கு மட்டுமல்ல என்பதை நாம் உணர வேண்டும். 

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்கும், கொலை செய்ததற்குமான தண்டனைகள் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது. ஆனால், குற்றத்தின் நோக்கத்திற்கான தண்டனை?

தண்டனை கிடைத்தாலும், குற்றவாளிகளின் திட்டம் நிறைவேறியது? 

முகமது யூசுப், தனது தாய் மற்றும் இரண்டு குழந்தைகளை அடக்கம் செய்த அதே இடத்திலேயே இந்த சிறுமியின் உடலையும் அடக்கம் செய்ய விரும்பினார். ஆனால், கிராம மக்களின் கடுமையான எதிர்ப்பு காரணமாக, அவரை 8 கிலோ மீட்டர் தொலைவில் வேறு ஒரு இடத்தில் அடக்கம் செய்தார் யூசுப். இது கடந்தாண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்றது. அப்போதே, இவர்கள் அந்தப் பகுதியில் இருந்து புறக்கணிக்கப்பட்டிருக்கிறார்கள். 

இந்த தீர்ப்பு வெளியானதற்குப் பிறகு, சிறுமியின் தாய் பேட்டியளிக்கையில், 

"ராசானா கிராமம் எங்களுக்கு பாதுகாப்பானது என்று நாங்கள் உணரவில்லை. அவளது உடலை அடக்கம் செய்வதற்கே அவர்கள் அனுமதிக்கவில்லை. காஷ்மீர் அல்லது கார்கிலுக்கு இடம்பெயர்வதற்கு முன் எங்கள் குடும்பம், சுமார் 6 மாதங்கள் வீட்டில் தான் வசிப்போம். இந்த முறை அச்சம் காரணமாக ராசானா கிராமத்தில் வெறும் இரண்டு மாத காலம் தான் வசித்தோம்" என்றார். 

ராசானா, கோடா, டாமியால் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள கடைகள் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் மற்றும் அவரது உறவினர்களுக்கு பொருட்களை விற்க மறுக்கின்றனர். 

பாதிக்கப்பட்ட சிறுமியின் சகோதரர் பேசுகையில், 

"கிராம மக்கள் எங்களை இழிவாக பேசுகின்றனர். அவர்களது மக்களை நாங்கள் தவறாக குற்றம்சாட்டியுள்ளதாக கூறுகின்றனர்" என்றார். 

இந்தப் பகுதியில் வாழ்ந்து வந்த இவர்கள் தற்போது ஸ்ரீநகரில் இருந்து தெற்கில் 175 கிலோ மீட்டர் தொலைவில் தற்காலிகமாக ஒரு வீடு அமைத்து அங்கு இடம்பெயர்ந்துவிட்டனர். 

இந்த சம்பவத்தில், குற்றவாளிகளின் நோக்கம் வெறும் பாலியல் வன்கொடுமையும், கொலையும் என்றால், அதற்கான தண்டனை வழங்கப்பட்டுவிட்டது. ஆனால் தற்போது, குற்றவாளிகளின் திட்டத்தின்படியே அவர்களது அச்சுறுத்தலுக்கு ஆளாகி இந்த குடும்பம் ராசானா கிராமத்தில் இருந்து வெளியேறியிருக்கிறது. இதற்கான தண்டனை வழங்கப்பட்டுவிட்டதா, அல்லது பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பம் அங்கிருந்து வெளியேறியதை தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டதா?

இந்த இரண்டு கேள்விகளுக்கும் பதில் இல்லை. அப்படி இருக்கையில், இந்த வழக்கிற்கு கிடைத்த முழுமையான தீர்ப்பாக எப்படி இது இருக்க முடியும். 

சட்டப்பிரிவு 370 காரணமாக, காஷ்மீரில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் செல்லுபடியாகாது. இல்லையெனில், இந்த சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தும், குற்றவாளிகளுக்கு இதற்கான தண்டனையும் சேர்த்து வழங்கப்படலாம். அதைவிட முக்கியமானது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் மற்றும் உரிய பாதுகாப்பையும், மறுவாழ்வையும் ஏற்படுத்தி தருவது காஷ்மீர் அரசின் கடமையாக இருந்திருக்கும். 

இதேபோல், மற்ற மாநிலங்களில் இருப்பது போல் வன உரிமைச் சட்டத்துக்கு நிகரான சட்டம் ஏதும் காஷ்மீரில் இல்லை. வன உரிமைச் சட்டம் இருந்திருந்தால், ஒருவேளை அந்த சிறுமி இந்த நிலைக்கு ஆளாகாமல் இருந்திருக்கலாம். காரணம், வன உரிமைச் சட்டம் மூலம் பழங்குடியினருக்கு நிலம் அவர்களது பெயருக்கு மாற்றப்படும், மேய்த்தலுக்கான உரிமை வழங்கப்படும்.

ஜம்மு-காஷ்மீரில் நீண்ட நாட்களாகவே, பழங்குடியின மக்கள் நலன் சார்ந்த சட்டங்கள் ஏதும் இல்லை என்று சமூக ஆர்வலர்கள், பழங்குடியின ஆய்வாளர்கள் என பலர் குரல் எழுப்பி வந்தனர். பழங்குடியின மக்களை வெளியேற்றப்படும் நிகழ்வுகள், அங்கு அரங்கேறியுள்ளதாக செய்திகள் உள்ளது. 

இதன்மூலம், இந்த சம்பவத்துக்குப் பிறகாவது இந்த பழங்குடியின மக்கள் பிரச்னைகள் அங்கு ஒலிக்கப்படவேண்டும். இதை வெறும் பாலியல் குற்றச் சம்பவமாக சுருக்கிவிடுவது, அம்மாநில பழங்குடியின மக்கள் பிரச்னையை ஒடுக்குவதற்கு நிகரானதாகும்.        

இதற்காக, இதுபோன்ற சட்டங்களை அந்த மாநிலத்திலும் நீட்டிப்பதற்காக சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ய வேண்டும் என்று அர்த்தமல்ல. இதற்கு நிகரான வலிமையான சட்டங்கள் காஷ்மீரிலும் பிறப்பிக்கப்பட வேண்டும் என்பது தான் வலியுறுத்தப்படுகிறது. குறைந்தபட்சம், இதுபோன்ற முக்கியச் சட்டங்களை காஷ்மீருக்கு நீட்டிக்கலாம். பாஜக ஆட்சியில், சரக்கு மற்றும் சேவை வரி காஷ்மீர் மாநிலத்துக்கு நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com