சிறப்புக் கட்டுரைகள்

மோடி அமைச்சரவையின் பெண் சக்திகள்!

1st Jun 2019 02:27 PM | கார்த்திகா வாசுதேவன்

ADVERTISEMENT

 

மோடி சர்க்கார் 2019 ல் இடம்பெறும் 57 அமைச்சர்களில் கேபினட் அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் மற்றும் இணை அமைச்சர் தனிப்பொறுப்பு உள்ளிட்ட பதவிகளில் இம்முறை 6 பெண்களுக்கு இடமளிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை 2014 ஆம் ஆண்டு மோடி சர்க்காரில் இடம்பெற்ற பெண் அமைச்சர்களோடு ஒப்பிடும் போது எண்ணிக்கையில் இம்முறை ஒன்று குறை தான். கடந்த முறை 7 பெண் அமைச்சர்கள் பங்கு வகித்தனர். 

மோடி சர்கார் 2014 பெண அமைச்சர்கள் லிஸ்ட்:

  1. சுஷ்மா சுவராஜ்: வெளியுறவுத்துறை அமைச்சர்
  2. உமா பாரதி: நீர்வள ஆதார அமைச்சர், நதி அபிவிருத்தி மற்றும் கங்கா புத்துணர்வு
  3. நஜ்மா கெப்துல்லா: சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைசசாஆஆஆஆஆஆஆ
  4. மேனகா காந்தி::பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை அமைச்சர்
  5. நிர்மலா சீதாராமன்: வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சர் தனிப் பொறுப்பு) மற்றும் நிதி நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர்
  6. ஸ்மிருதி இரானி: முதலில் மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்து பிறகு ஜவுளித்துறை அதிகாரியாக மாற்றப்பா
  7. ஹர்சிம்ரத் கெளர் பாதல்: உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சர் (தனிப்பொறுப்பு)

மேற்கண்ட 7 பெண் அமைச்சர்களில் இம்முறை சுஷ்மா சுவராஜ், நஜ்மா கெப்துல்லா, மேனகா காந்தி, உமா பாரதி உள்ளிட்டோர் பங்குபெறவில்லை. முதலிருவரும் உடல் நலனைக்காரணம் காட்டி அரசியல் பணிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துவிட்டனர். கடந்த முறை மோடி மத்திய அமைச்சரவை ஆட்சியில் பங்கு பெற்றவர்களில் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, ஹர்சிம்ரத் கெளர் பாதல், உள்ளிட்ட மூவருக்கு மட்டுமே இம்முறையும் மீண்டும் மத்திய அமைச்சர்களாகப் பங்கு வகிக்கும் பெருமை கிடைத்திருக்கிறது/

ADVERTISEMENT

மோடி சர்க்கார் 2019 6 பெண் அமைச்சர்கள் லிஸ்ட்!

1.

நிர்மலா சீதாராமன் - நிதி அமைச்சர்

முன்னாள் இந்தியப் பிரதமரான இந்திரா காந்திக்குப் பிறகு இந்தியாவின் இரண்டாவது பாதுகாப்புத்துறை அமைச்சரான பெண்மணி என்ற பெருமையோடு சேர்த்து தற்போது இந்திராவைப் போலவே இந்தியாவின் இரண்டாவது நிதி அமைச்சரான பெண்மணி என்ற பட்டமும் இந்திராவுக்கு அடுத்தபடியாக நிர்மலாவையே வந்தடைந்திருக்கிறது. இந்தியா சுதந்திரம் அடைந்து 72 ஆண்டுகளில் பெண் அமைச்சர்களை, நிதித்துறை மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்களாக்குவது என்பதை அதிசயத்திலும் அதிசயமானதாகவே பின்பற்றி வந்தார்கள். ஆனால், இந்திராவுக்குப் பிறகு அந்தத் தடைகளைத் தகர்த்து அத்தகைய வலிமை மிகுந்த பதவிகளுக்குப் பொருத்தமான பெண்மணியாக விளங்கும் பெருமை நிர்மலாவுக்கு உண்டு.

2.

ஸ்மிருதி இரானி - பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை மற்றும் ஜவுளித்துறை அமைச்சர்

ஸ்மிருதி இரானியைப் பொருத்தவரை இம்முறை அவர் பெற்றிருக்கும் வெற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்கது. 2003 ஆம் ஆண்டு பாஜகவில் இணைந்தவரான ஸ்மிருதி, குஜராத் மாநிலம் சார்பில் ராஜ்யசபா எம் பியாக பாராளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தார். 2014 ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய போதும் மத்திய மனிதவளத்துறை அமைச்சராக மோடி அமைச்சரவையில் அவருக்கு பதவியளிக்கப்பட்டது. ஆயினும் அவரது கல்வி குறித்து எழுந்த சர்ச்சைகள் காரணமாக ஸ்மிருதி, மனித வளத்துறையில் இருந்து மத்திய ஜவுளித்துறை அமைச்சராக இலாகா மாற்றம் பெற்றார். கடந்த முறை காங்கிரஸிடம் அடைந்த தோல்விக்கு ஈடுகட்டும் பொருட்டு இம்முறை தான் தோற்ற அதே அமேதியில், காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவரான ராகுல் காந்தியை எதிர்த்து நின்று தொகுதி முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வெற்றி வாகை சூடியிருக்கிறார். கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரஸின் கோட்டையாக இருந்த அமேதியில் பாஜக கொடியைப் பறக்க விட்டவர் என்ற முறையில் ஸ்மிருதி இரானியின் வெற்றி அசுரத்தனமானது. மிகப்பெரிய வெற்றியை ஈட்டித்தந்தவர் என்ற முறையில், இம்முறை மோடி அமைச்சரவையில் பெண்கள், குழந்தைகள் நல மேம்பாடு மற்றும் ஜவுளித்துறை என தன் கைவசம் இரு துறைகளைக் கையாளவிருக்கிறார்.

3.

ஹர்சிம்ரத் கெளர் பாதல்: உணவு பதப்படுத்தல் துறை அமைச்சர்

இவர் கடந்தமுறையும் அதாவது 2014 ஆம் ஆண்டு மோடி முதன்முறை இந்தியப் பிரதமராகப் பதவியேற்ற போதும் அவரது அமைச்சரவையில் கேபினட் அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். கடந்த ஆட்சியில் உணவு பதப்படுத்தல் துறை அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கெளர் பாதல் இம்முறையும் அதே பதவியை மீண்டும் வகிக்கவிருக்கிறார். சிரோமணி அகாலி தளம் கட்சியைச் சார்ந்த இவரது கணவர் சுக்பிர் சிங் பாதலும் நாடறிந்த அரசியல்வாதியே. தற்போது பஞ்சாப் துணை முதல்வராகப் பொறுப்பு வகித்து வருகிறார். 2009 ஆம் ஆண்டு தனது அரசியல் வாழ்வைத் துவக்கிய ஹர்சிம்ரத் கெளர் 2014 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாடிண்டாவில் வேட்பாளராகப் போட்டியிட்டு ஜெயித்து பாஜக வெற்றிக் கூட்டணிக் கட்சி உறுப்பினர்களுள் ஒருவராக மோடி அமைச்சரவையில் பங்கேற்றார். தற்போது அந்த வெற்றிக்கூட்டணி மீண்டும் கை கொடுத்து இம்முறையும் மோடி தர்பாரின் பெண் அமைச்சர்களுள் ஒருவராக மீண்டும் அதே துறையில் நீடிக்கிறார்.

4.

சாத்வி நிரஞ்சன் ஜோதி ( உத்தரப் பிரதேசம், ஃபதேபூர்): ஊரக மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர்

மோடி அரசில் 2014 ஆம் ஆண்டில் உணவுப்பதப்படுத்தல் துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராகப் பங்கேற்ற அனுபவம் கொண்ட சாத்வி நிரஞ்சன் ஜோதி இம்முறையும் மோடி அமைச்சரவையில் பங்கேற்கிறார். இவருக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறை குறித்த தகவல் இன்னமும் வெளியிடப்படவில்லை. ஆயினும் மோடியுடன் நேற்று பதவிப்பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் எடுத்துக் கொண்ட அமைச்சர்களில் இவரும் ஒருவர்.

5.

தேபஸ்ரீ செளத்ரி (மேற்கு வங்கம்): மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை இணை அமைச்சர்.

பாஜக உறுப்பினரான தேபஸ்ரீ செளத்ரி மேற்கு வங்க மாநிலம் ராய்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்டு வென்று மோடி அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார். முதல்முறை எம் பி யாகி பாராளுமன்றத்தில் நுழையவிருக்கும் புதிய அமைச்சர்களில் இவரும் ஒருவர்.

6.

ரேணுகா சிங் சருதா (சட்டீஸ்கர்): பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்

சட்டீஸ்கர் சட்டமன்ற உறுப்பினராக இருந்த ரேணுகா சிங் சருதா 2019 மக்களைவைத் தேர்தலின் போது தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் நின்று வெற்றி பெற்றுள்ளார். பாராளுமன்றத் தேர்தலிலும் வெற்றி வாகை சூடி முதல் வெற்றியிலேயே அமைச்சரவையிலும் இடம்பெற்று விட்டார். பழங்குடி மக்களின் பிரதிநிதியாக இம்முறை மோடி அமைச்சரவையில் பங்கேற்கிறார் ரேணுகா சிங் சருதா.

Tags : MODI SARKAR 2019 WOMEN MINISTERS LOKSABHA 2019 மோடி சர்கார் 2019 மோடியின் மந்திரி சபை மோடி சர்க்காரின் பெண் அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன் சாத்வி நிரஞ்சன் ஜோதி ரேணுகா சிங் சருதா தேபஸ்ரீ ஹர்சிம்ரத் கெளர் பாதல்
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT