சனிக்கிழமை 24 ஆகஸ்ட் 2019

மாணவர்களின் 'பட்டாக்கத்தி' கலாசாரம், சென்சார் போர்டும் காரணமா?

By வழக்கறிஞர் சி.பி. சரவணன்| Published: 31st July 2019 01:38 PM

 

கடந்த 2017, அக்டோபர் மாதம் 9 ஆம் தேதி இதேபோல நெமிலிச்சேரி ரயில்நிலையத்தில் ரயில்தினம் கொண்டாடுவதாக பச்சைப்பன் கல்லூரி மாணவர்கள் சென்னை புறநகர் மெட்ரோ ரயிலில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களுடன் பயணம் செய்தனர். மேலும் ஆவடி ரயில் நிலையத்தை அடுத்து உள்ள நெமிலிச்சேரி ரயில் நிலையத்திற்கு செல்லும்போது மாணவர்கள் சிலர் ஆயுதங்களை தரையில் தேய்த்துச் சத்தம் எழுப்பியும், கூச்சலிட்டும் பயணிகளுக்கும், பெண்களுக்கும் இடையூறு ஏற்படுத்தினர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவந்தது.

பின் 2018, ஜனவரி, 30 அன்று சென்னை சென்ட்ரலிலிருந்து திருவள்ளூர் நோக்கி புறநகர் ரயில் ஒன்று பிற்பகலில் சென்றுகொண்டிருந்தது. ரயிலில் பொதுமக்கள், மாணவர்கள் எனக் கூட்டம் நிரம்பி வழிந்தது. பட்டரவாக்கம் ரயில் நிலையம் அருகே ரயில் வந்தபோது கையில் பட்டாக்கத்தி, அரிவாளுடன் மாணவர்கள் மோதிக்கொண்டனர். இதில் மூன்று மாணவர்களுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இந்தச் சம்பவத்தைப் பார்த்த பயணிகள் அலறி ஓட்டம் பிடித்தனர். அவர்கள் மீதும் மாணவர்கள் கற்களைக் கொண்டு தாக்கினர்.

பின், 2019, ஜூலை 23ஆம் தேதியன்று சென்னை பெரம்பூரிலிருந்து திருவேற்காடு நோக்கிச் சென்ற பேருந்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பலர் பயணம் செய்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள அரும்பாக்கம் அருகே பேருந்து வந்துகொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த சிலர் அந்தப் பேருந்தை மறித்து நின்றனர். பேருந்து நின்றவுடன் இரு சக்கர வாகனத்தில் வந்தவர்கள் பட்டாக்கத்திகளுடன் பேருந்தில் ஏறினர். அந்தப் பேருந்திற்குள் இருந்த பச்சையப்பன் கல்லூரி மாணவர்களை அந்தக் கத்தியால் தாக்க ஆரம்பித்தனர். பல மாணவர்கள் பேருந்தில் இருந்து இறங்கி ஓடினர். அவர்களையும் துரத்தித் துரத்தி ஒரு கும்பல் வெட்டியது.

இவ்வேளையில், பேருந்தில் பயணிக்கும் சென்னைக் கல்லூரி மாணவர்களில் 'ரூட்டு தல' என்ற பெயரில் அட்டகாசம் செய்யும் 90 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாக சென்னை மாநகரக் காவல்துறை தெரிவித்திருக்கிறது.

நாள்: 2019, ஜூலை 22

சென்னை, புழல் அருகே உள்ள இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்த மக்கள் வசித்துவரும் குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் உமாசங்கர் (32 வயது), ரோஷன் (34 வயது) ஆகியோர் வசித்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2019, ஜூலை 22 அன்று உமாசங்கர் மற்றும் ரோஷன் ஆகியோர் பேசிக்கொண்டிருந்த போது அஜித் ரசிகரான உமாசங்கர் விஜய் குறித்து தரக்குறைவாகப் பேசியதாகத் தெரிகிறது. இதனால், உமாசங்கர் மற்றும் ரோஷன் இடையே வாக்குவாதம் முற்றியதில், கடும் கோபமடைந்த ரோஷன் வீட்டிற்கு சென்று கத்தியை எடுத்துவந்து உமாசங்கர் தலை, கழுத்து மற்றும் நெஞ்சில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

நாள்: 2019, ஜூலை 23 

திருச்சி பிராட்டியூரில் ஆக்ஸ்போர்டு என்ஜினீயரிங் கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் கல்லூரி வளாகத்தில் உள்ள இருக்கையில் அமர்ந்து கொண்டு மாணவிகளை கேலி, கிண்டல் செய்துள்ளனர். இதை அதே பிரிவில் 4-ம் ஆண்டு படிக்கும் மாணவர்கள் சிலர் தட்டிக்கேட்டு, மாணவிகளை கிண்டல் செய்ய வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். இந்த நிலையில் கல்லூரியில்  அப்துல்கலாம் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாணவ - மாணவிகள் அஞ்சலி செலுத்திய பின் வகுப்பறைக்குச் சென்றனர். அப்போது மூன்றாம் ஆண்டு மாணவர்கள் சிலர் அதே வளாகத்தில் மாணவிகளை கேலி கிண்டல் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் அம்மாணவர்களை 4-ம் ஆண்டு மாணவர்கள் எச்சரித்தனர். பின்னர் அவர்கள் கிரிக்கெட் விளையாட மைதானத்திற்குச் சென்றுவிட்டனர்.

 அங்கு சென்ற 3-ம் ஆண்டு மாணவர்கள் சிலர், 4-ம் ஆண்டு மாணவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அவர்கள் ஒருவருக்கொருவர் கட்டைகளாலும், பீர் பாட்டிலாலும் தாக்கிக்கொண்டனர். இந்த மோதல் கல்லூரி வளாகத்தில் தொடங்கி சாலையின் வெளியே வரை நடந்தது. இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் எடமலைப்பட்டிபுதூர் போலீசார் விரைந்து சென்று மோதலில் ஈடுபட்ட இருதரப்பை சேர்ந்த 28 மாணவர்களை பிடித்து போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். 

நாள்: 2019, ஜூலை 30 

சென்னையைப் போலவே, மதுரையிலும் அரசுப்பேருந்தில் கத்தியுடன் வலம் வந்த மாணவர்கள், டிக்கெட் கேட்டதற்காக நடத்துனரை கடுமையாகத் தாக்கியுள்ளனர். தனியார் பாலிடெக்னிக் கல்லூரியின் சீருடை அணிந்த இரண்டு மாணவர்கள், பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து ராஜக்கூர் வரை செல்லும் பேருந்தில் ஏறினர். அப்போது நடத்துனர் பயணச்சீட்டு எடுக்கச் சொன்னபோது, அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து பேருந்தானது கருப்பாயூரணி பகுதியில் வந்து கொண்டிருந்தபோது மாணவர்கள் 2 பேரும் பையில் மறைத்து வைத்திருந்த 2 பட்டாக்கத்தியை எடுத்து நடத்துனரை தாக்கியுள்ளனர்.

இதில் படுகாயமடைந்த நடத்துனர் கணேசன், ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து அண்ணாநகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அந்த 2 மாணவர்களையும் தேடி வருகின்றனர்.

நாள்: 2019, ஜூலை 28...

மாணவர்களைக் கத்தியெடுக்கத் தூண்டுவது சினிமாதான்! இயக்குநர் லெனின் பாரதி காட்டம்...

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் சிறந்த திரைப்படங்களுக்கான விருது விழா வழங்கும் 2019, ஜூலை,28 அன்று சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய இயக்குநர் லெனின் பாரதி, ‘மாணவர்கள் கத்தியோடு அலைவதற்கு சினிமாதான் காரணம். இளைஞர்களுக்கு வன்முறையை, கத்தி எடுக்கும் கலாச்சாரத்தை சினிமாதான் தூண்டிவிடுகிறது. இளைஞர்கள், கதாநாயகர்களை மானசீகமாக ஏற்றுக் கொண்டுள்ளனர். அவர்கள் (நடிகர்கள்) கத்தியை எடுக்கும்போது அதையே மாணவர்களும் உள்வாங்குகின்றனர்’ என்று கூறியுள்ளார்.
இவர் பேச்சை எளிதாக கடந்து செல்லமுடியாது.

சமீப தமிழ்த் திரைப்படங்களில் வன்முறை...

மெட்ராஸ், வடசென்னை, சாமி-2 உட்பட இன்னும் பல திரைப்படங்களில் கொடூர ஆயுதங்களால் செய்யப்படும் கொலைக் காட்சிகள் அப்படியே சித்தரிக்கப்படுகின்றன, தன்னை காதலித்து மறந்த அல்லது காதலிக்க மறுத்த பெண்ணை கொடுரமாக நடு ரோட்டில் கொல்வது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருப்பதை நாம் அறிவோம். கருத்து சுதந்திரம் என்பது கொலைக் காட்சிகளில் இருக்கிறதா, இல்லை இவை வீரத்தை சித்தரிக்கின்றனவா? ரவுடித் தனத்தை வீரம் என்றும், காதலியை கொலை செய்வதை நியாயம் என்றும் கற்பிக்கும் காட்சிகள் இடம் பெறுவது சகஜமாகிவிட்டது. ஒரு காலத்தில் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் வில்லன்களாகத் தான் இருப்பார்கள். கதாநாயகர்களையே கேங் லீடர்களாகவும், பெரும் ரவுடிகளாகவும் கட்டும் அளவுக்கு திரை இயக்குனர்களின் சிந்தனை தாழ்ந்து விட்டது என்பதே உண்மை. அது சரி, திரைப்படங்களை கண்காணிக்கும் சென்சார் போர்டு இதற்கெல்லாம் சான்றிதழ் கொடுக்கிறதே எப்படி.?

மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் (Central Board of Film Certification / censor Board) சட்ட வழிமுறைகளைப் பின்பற்றுகிறதா ?

திரைப்படச் சட்டம், 1952 இன் பிரிவு 5 பி இன் உட்பிரிவு (2) ன் படி மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் திரைப்படத்திற்குச் சான்றிதழ் கொடுக்கும் முன் கீழ்க்கண்ட குறிக்கோள்களைப் பின்பற்றுவதில், மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் உறுதி செய்ய வேண்டும்.

1. வன்முறை போன்ற சமூக விரோத நடவடிக்கைகள் மிகைப்படுத்தப்படவோ அல்லது நியாயப்படுத்தப்படவோ கூடாது.

2. குற்றவாளிகள், பிற காட்சிகள் அல்லது எந்தவொரு குற்றத்தினை தூண்டக்கூடிய சொற்களை, செயல்முறை சித்தரிக்கப்படக்கூடாது

3. காட்சிகள்...

a. குழந்தைகள் வன்முறையில் ஈடுபட்டு பாதிப்படைவதை காண்பிப்பது அல்லது குழந்தைகளைக் குற்றவாளிகளாகவோ அல்லது வன்முறைக்கு கட்டாயப்படுத்தப்படுவதாகவோ காண்பித்தல், அல்லது எந்தவொரு குழந்தையையும் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக் காண்பித்தல்.
b. உடல் மற்றும் மன ஊனமுற்ற நபர்களை துஷ்பிரயோகம் அல்லது கேலி செய்வது; 
c. தேவையில்லாமல் விலங்குகள் கொடுமைக்குள்ளாக்குவதைப் போலக் காட்டுவது அல்லது துஷ்பிரயோகம் செய்வது போன்ற காட்சிகள் இடம்பெறக் கூடாது.

4. பொழுதுபோக்குகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு அர்த்தமற்ற அல்லது தவிர்க்கக்கூடிய வன்முறை, கொடுமை மற்றும் திகில் காட்சிகள், மூலம் மக்களை உணர்ச்சிவசப்படுத்துதல் அல்லது மனிதநேயமற்ற விளைவைக் காட்டக்கூடிய காட்சிகள் கூடாது.

5. குடிப்பதை நியாயப்படுத்தும் அல்லது மகிமைப்படுத்தும் காட்சிகள் ;

6. போதைப்பொருளை ஊக்குவிக்க, நியாயப்படுத்த அல்லது கவர்ச்சியாகக் காட்டும் காட்சிகள் கூடாது.

a..புகையிலை அல்லது புகைப்பழக்கத்தை ஊக்குவிக்க, நியாயப்படுத்த அல்லது கவர்ச்சியாகக் காட்டும் காட்சிகள் கூடாது.

7. மனித உணர்வுகள் மோசமான, ஆபாசமான அல்லது மோசமான தன்மையால் புண்படுத்தப்படும் காட்சிகள் கூடாது.

8. அடிப்படை உள்ளுணர்வுகளை பூர்த்தி செய்யும் இரட்டை அர்த்த சொற்கள் கூடாது.

9. எந்த வகையிலும் பெண்களை தாழ்த்தும் அல்லது இழிவுபடுத்தும் காட்சிகள்;

10. பாலியல் வன்கொடுமை என்ற பெயரில் பாலியல் பலாத்கார முயற்சி, பாலியல் பலாத்காரம் அல்லது எந்தவொரு அல்லது ஒத்த இயல்புடைய காட்சிகள் போன்ற பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் சம்பந்தப்பட்ட காட்சிகள், மேலும் இதுபோன்ற ஏதேனும் சம்பவங்கள் கருப்பொருளுக்கு அடிப்படையாக இருந்தால், அவை குறைந்தபட்சமாகக் குறைக்கப்பட வேண்டும் மற்றும் விவரங்கள் எதுவும் காட்டக் கூடாது.

11. பாலியல் வக்கிரங்களைக் காட்டும் காட்சிகள் தவிர்க்கப்பட வேண்டும், மேலும் இதுபோன்ற விஷயங்கள் கருப்பொருளுக்கு அடிப்படையாக இருந்தால் அவை குறைந்தபட்சமாகக் குறைக்கப்பட வேண்டும் மற்றும் விவரங்கள் எதுவும் காட்டப்படக்கூடாது.

12. காட்சிகள் அல்லது வார்த்தைகள் இன, மத அல்லது பிற குழுக்களை அவமதிக்கும் வகையில் இருக்கக்கூடாது.

13. வகுப்புவாத, தெளிவற்ற, விஞ்ஞானத்திற்கு எதிரான மற்றும் தேச விரோத அணுகுமுறையை ஊக்குவிக்கும் காட்சிகளை அல்லது சொற்களை அனுமதிக்கக்கூடாது.

14. இந்தியாவின் இறையாண்மையும் ஒருமைப்பாடும் கேள்விக்குறியாக்கும் விவரங்களை அனுமதிக்கக்கூடாது;

15. மாநிலத்தின் பாதுகாப்பை அச்சுறுத்தும் அல்லது ஆபத்து விளைவிக்கும் காட்சிகள் கூடாது

16. அயல்நாடுகளுடனான நட்பு உறவுகளை வலுவிழக்கச் செய்யும் காட்சிகள் கூடாது;

17.பொது ஒழுங்கு ஆபத்து விளைவிக்கும் காட்சிகள் கூடாது.

18. ஒரு தனிநபரை அல்லது தனிநபர்களின் உடலை அவதூறு செய்வது அல்லது நீதிமன்ற அவமதிப்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் அல்லது வார்த்தைகள் கூடாது.

விளக்கம்: அவதூறு, அவமதிப்பு அல்லது விதிகளை புறக்கணித்தல் அல்லது நீதிமன்றத்தின் கௌரவத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் காட்சிகள் '' நீதிமன்ற அவமதிப்பு '' என்ற வார்த்தையின் கீழ் வரும்: 

19. சின்னங்கள் மற்றும் பெயர்கள் (முறையற்ற பயன்பாட்டைத் தடுக்கும்) சட்டம், 1950 (1950 ல் 12) ன் விதிகளின்படி தவிர வேறுவகையில் தேசிய சின்னங்கள் மற்றும் சின்னங்களைக் காட்டக்கூடாது..

இத்தனை விதிமுறைகள் இருந்த போதும் சென்சார் போர்டு இவற்றில் கடுமைகாட்டி கண்காணித்து தான் சான்றிதழ் வழங்குகிறதா? மேற்கண்ட வழிமுறைகளை எல்லாம் தவறாமல் கடைபிடிக்கிறதா என்பதை நாம் நன்கு அறிவோம்.

7 விதமான திரைச் சான்றிதழ்கள்...

மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் வழங்கிய 7 வெவ்வேறு வகையான திரைப்பட சான்றிதழ்கள் அவை U, UA, A, S, V/U, V/UA மற்றும் V/A.

  • U- சான்றிதழ், யுனிவர்சல், 4 வயதிலிருந்து எந்தவொரு வயதினருக்குமான படங்கள். இப்படங்களின் சமூக கருப்பொருள் லேசான வன்முறை மற்றும் மொழியையும் கொண்டிருக்கலாம்.
  • UA– சான்றிதழ் வகைத் திரைப்படத்தில் பாலியல் கருப்பொருள்கள் மற்றும் மட்டமான மொழியுடன் முதிர்ந்த உள்ளடக்கம் இருக்கும். பெற்றோர் உடன் இருக்க, எந்தவொரு வயதினரும் பார்க்கலாம், ஆனால் 12 வயதிற்குட்பட்ட குழந்தைகள் பெரியவர்களுடன் பார்க்கப் பரிந்துரைக்கப்படுகிறார்கள்.  
  • A- சான்றிதழ் வகை திரைப்படங்கள் வயது வந்தோர், 18 வயதிற்கு மேற்பட்ட பெரியவர்கள் மட்டுமே பார்க்கத் தகுதியானவை என சான்றிதழ் வழங்கப்படும்.
  • S- சான்றிதழ், வகை திரைப்படங்கள் ஸ்பெஷலிஸ்ட், பொறியாளர்கள், மருத்துவர்கள் போன்ற ஒரு துறையில் உள்ள நிபுணர்களுக்கு மட்டுமே.
  • V/U, V/UA மற்றும் V/A- ஆகியவை குறிப்பிட்ட சான்றிதழுடன் திரைப்படத்திலிருந்து வீடியோவாக வெளியிடப்பட்ட பகுதிகளுக்கு.

இவ்வாறு வன்முறைக் காட்சிகள் கொண்ட தற்காலத் திரைப்படங்களுக்கு எப்படி மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் “U,” சான்றிதழ் கொடுக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.

சென்சார் போர்டும், திரைஇயக்குனர்களும் உடனடியாக சிந்தித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!
Tags : Route thala culture censor board of tamilnadu tamilnadu college students தமிழ்நாடு கல்லூரி மாணவர்கள் ரூட் தலை கலாசாரம் சென்சார் போர்டு

More from the section

கூண்டில் நாம் அடைபட்டாலும், சுதந்திரம் அடைபடாது!
சென்னைக்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே சிறந்த கலெக்டர் இவர்: யார் என்று தெரிகிறதா?
கற்பித்தலுக்கு நேர்ந்த சவால்: ஆசிரியர் தகுதித் தேர்வில் அதிக தோல்வியும் ஆசிரியர்கள் தகுதியும்!
‘ஆப்ரேஷன் பனானா’ சிரிக்க அல்ல சிந்திக்க வைக்கும் போலீஸ் நடவடிக்கை!
சாலையில் பயமின்றி வாகனம் ஓட்டிச் செல்ல முடிகிறதா? இந்த ரூல் பிரேக்கர்களை என்ன செய்வது?