திமுக சங்கரமடம் இல்லை; ஆனால் பட்டத்து இளவரசர் ரெடி!

திமுகவின் இளைஞரணிச் செயலாளர் பதவி என்பது பட்டத்து இளவரசர் பதவிக்குச் சற்றும் சளைத்தது அல்ல என்பது சொல்லித் தெரிய வேண்டிய ரகசியமில்லை. ஏனெனில் அந்தப் பதவி உருவாக்கப்பட்டதே அதற்காகத் தான் என்பதை திமுக
திமுக சங்கரமடம் இல்லை; ஆனால் பட்டத்து இளவரசர் ரெடி!

ஒரு காலத்தில் திமுக ஒன்றும் சங்கர மடம் இல்லை என்றவர் மறைந்த முதல்வர் கருணாநிதி. அரசியல் கட்சிகளில் வாரிசுகள் பதவிக்கு வருவதை விமர்சித்து கருணாநிதி பதிவு செய்த கருத்து அது. ஆனால் பாருங்கள் சங்கர மடத்துச் சாமியார்கள் சந்நியாசிகள். அவர்களுக்கு திருமணம் ஏது? ஆகையால் அங்கே கூட வாரிசுகள் என்போர் குருதித் தொடர்பு இன்றி வெளியில் இருந்து தான் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால் இங்கே நம் அரசியல் தலைமைகளை எடுத்துக் கொள்ளுங்கள்.

நேருவுக்குப் பின் இந்திரா, இந்திராவுக்குப் பின் ராஜிவ், ராஜிவுக்குப் பின் சோனியா, சோனியாவுக்குப் பின் ராகுல்... இப்படிச் சென்று கொண்டிருக்கிறது திமுக இன்று கூட்டணி வைத்துக் கொண்டிருக்கும் காங்கிரஸ் வாரிசுப் பட்டியல்.

கட்சியின் தலைமைப் பதவிகளுக்கு வாரிசுகளைக் கொண்டு வரத் திட்டமிடுவதில் நேரு பரம்பரைக்கு சற்றும் சளைத்ததல்ல கருணாநிதி பரம்பரை...

திமுக வை அண்ணா தொடங்கினாலும், அண்ணாவுக்கு நேரடி வாரிசுகள் இல்லாத காரணத்தாலோ அல்லது அப்படி ஒரு நடைமுறையில் அவருக்கு நம்பிக்கை இல்லாத காரணத்தாலோ அடுத்தபடியாக திமுக வை கருணாநிதி தனதாக்கிக் கொண்டார். ஆக்கிக் கொண்டார் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் கருணாநிதியின் தலைமையை ஏற்க மறுத்தவர்களும் ஆரம்பத்தில் திமுகவில் இருந்தனர் என்பதற்கு திமுகவின் அரசியல் வரலாறே சாட்சி! இப்படிக் கையகப்படுத்திக் கொண்ட கட்சியில் தனது வாரிசுகளை நிலைநிறுத்த பிரம்ம பிரயத்தனம் செய்தவர் கருணாநிதி. இவர்களது குடும்பத்தில் அந்தப் பிரயத்தனத்தின் நீட்சியாக இதோ இன்று திமுக வின் இளைஞரணிச் செயலாளராக உதயமாகவிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். காலையில் இருந்து குறிப்பிட்ட இடைவெளியில் தனியார் செய்தி ஊடகமொன்று உதயநிதியின் புதிய அவதாரத்தை கூவிக் கூவி தமிழ்கூறும் நல்லுலகுக்கு அறிவித்துக் கொண்டிருக்கிறது.

சாதாரண தமிழ்நாட்டுப் பிரஜைகளாக நாம் எல்லோருமே இங்கே ஒரு கேள்வி கேட்டாக வேண்டுமே!

திமுக என்பது தமிழகத்தின் பிரதானக் கட்சிகளில் ஒன்று. சுமார் 2 கோடிக்கும் அதிகமான உறுப்பினர்கள் எண்ணிக்கை கொண்ட அந்தக் கட்சியில்... கட்சியின் ஆரம்பகாலம் தொட்டு அதன் வளர்ச்சிக்கும், மக்களிடையே அதன் நம்பகத் தன்மையை நிலைநிறுத்தும் பொருட்டும் கருத்தியல் ரீதியாகவும், உடலுழைப்பாகவும் உழைத்து உழைத்து ஓடாகத் தேய்ந்த தொண்டர்கள் பலர் உண்டு. அவர்களை எல்லாம் தலைமைப் பதவிக்கு அல்ல சுமாரான அதிகாரம் கொண்ட பதவியில் அமர வைத்துக் கூட அழகு பார்க்க விரும்பாத இந்தக் கட்சித் தலைமைகள்  தங்கள் வாரிசுகள் என்று வந்து விட்டால் மாத்திரம் அவர்களை அசகாய சூரர்களாக நினைத்து போட்டியேதுமின்றி கட்சியின் அதிகாரமிக்க பதவிகளில் உடனடியாக அமர வைத்து அழகு பார்க்க நினைப்பது ஏன்?

உதயநிதி ஸ்டாலின் என்பவர் ஸ்டாலினுக்கு மகனாகப் பிறந்தார், தமிழகத்தின் முதுபெரும் அரசியல் தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதிக்கு பேரனாகப் பிறந்தார் என்ற தகுதி மட்டுமே போதுமா கட்சியின் இளைஞரணிச் செயலாளராக ஆக்கப்படுவதற்கு. திமுக, சங்கர மடம் அல்ல என்று சொன்ன தலைமை இது குறித்து சிந்திக்க வேண்டுமில்லையா?

உதயநிதி ஸ்டாலின் திமுக அடிப்படைத் தொண்டராக இதுவரை கட்சிக்காக என்ன செய்திருக்கிறார். கட்சியின் பிரதான உரிமையாளராகத் தன்னை நினைத்துக் கொள்வதால் மட்டுமே ஒருவர் அக்கட்சியை வழிநடத்தத் தகுதி உடையவராக ஆகி விடுவாரா? 

ஸ்டாலின் தனது 14 வயதில் கோபாலபுரம் பகுதியில் இருக்கும் பள்ளி மாணவர்களை ஒருங்கிணைத்து அப்பகுதியில் இருக்கும் முடிதிருத்தும் கடையொன்றை மையமாகக் கொண்டு உருவாக்கியது தான் இன்றைய திமுக இளைஞரணி என்பதாக அதன் தோற்றத்துக்கு ஒரு  அர்த்தமுள்ள பிறர் ஏற்றுக்கொள்ளக்கூடியதொரு துவக்கம் உண்டு. அந்த வயதில் ஸ்டாலின் தொடங்கிய அமைப்பின் பெயர் ‘கோபாலபுரம் இளைஞர் திமுக’. அந்த அமைப்பின் மூலமாக அந்தப் பகுதியில் சமூகப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக திமுக இளைஞரணி வரலாறு கூறுகிறது. வெறுமே மாணவர் சங்கம் போன்ற ஒரு அமைப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருந்த கோபாலபுரம் இளைஞர் திமுக, கட்சி ரீதியாக பலப்பட்டது ஸ்டாலினை உலகறியச் செய்த மிசா சம்பவத்தின் பின்பு தான். அப்போது ஸ்டாலினுக்கு வயது 23.

மிசாவில் கைதாகி படாதபாடு பட்டு மறுஜென்மம் எடுத்தாற்போல் விடுதலை ஆகி வெளியில் வந்தார் ஸ்டாலின். ஸ்டாலின் வெளியில் வந்த போது நடந்து கொண்டிருந்தது திமுக ஆட்சி அல்ல. அன்று மட்டும் அல்ல அதைத்தொடர்ந்து 13 ஆண்டுகள் திமுக ஆட்சியில் இல்லை. அத்தகைய காலகட்டத்தில் தொடர்ந்து கட்சிப்பணியாற்றி, தொடர்ந்து சூறாவளிப் பயணமாக கழகத் தொண்டர்களைச் சந்தித்து திமுக இளைஞர் அணி என்ற ஒரு அமைப்பை உருவாக்க பாடுபட்டவர் ஸ்டாலின்.

அப்படித்தான் 1980 ஜூலை 20 ஆம் தேதி மதுரை,ஜான்சிராணி பூங்காவில் 'திமுக இளைஞரணி' தொடங்கப்பட்டது. இந்தியாவிலேயே மாநில கட்சியொன்றின் சார்பில் இளைஞர் அணி எனத் தனிப்பிரிவைத் தொடங்கிய முதல் இளைஞரணி திமுக  தான்.1982 மே மாதம் திருச்சியில் திமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கழக இளைஞரணி அமைப்பாளர்களில் ஒருவராக ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர்,1984 ல் இளைஞரணி செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது.

இதில் தனயனுக்கு அனுகூலமாக கலைஞர் பெரும்பங்காற்றியிருக்கக் கூடும்.  அந்த அனுகூலத்தின் மீதாகக் கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களும், முற்றிலுமாக அப்புறப்படுத்தப்பட்டவர்களுமான இரண்டாம் கட்டத் தலைவர்கள் கணிசமானோர் உண்டு.

இந்த இடத்தில் அவசியமாகவோ அவசியமன்றியோ வைகோ வின் நினைவு இடறுவதைத் தவிர்க்க முடியாது.  

ஆயினும் ஒரு முடிதிருத்தும் நிலையத்தில் உதயமான மாணவர் அமைப்பு கட்சியின் பிரதான அமைப்புகளில் ஒன்றாக உருமாற எடுத்துக் கொண்ட கால அவகாசத்தை கட்சியின் ஆரோக்யத்துக்கு உகந்தது என்றே எடுத்துக் கொள்ளலாம்.

அன்றிலிருந்து செயல் தலைவராக அறிவிக்கப்படுவதற்கு முன்பு வரை கட்சி அடிப்படையில் ஸ்டாலின் வகித்து வந்த பதவி இளைஞரணிச் செயலாளர் என்பதே!

இப்படி ஸ்டாலின் சிரமப்பட்டு அடைந்த ஒரு பதவியை உதயநிதி ஸ்டாலின் எனும் ஒரு தயாரிப்பாளர் கம் நடிகருக்கு உடனடியாகத் தாரை வார்க்கும் நிர்பந்தம் என்ன வந்தது திமுகவுக்கு.

அவருக்கு கட்சி ரீதியாகச் சாதிக்க கொஞ்சம் அவகாசம் வழங்குவதில் தவறேதும் இல்லையே!

உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய கட்சிப் பணிகள் என்றால் நீங்கள் எதைச் சொல்வீர்கள்?

ஊடகங்கள் உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கின்றன.

உதயநிதி ஸ்டாலின் கட்சியின் அதிகாரப் பூர்வ ஏடான முரசொலியின் நிர்வாக இயக்குனராகப் பணியாற்றிய அனுபவம் உண்டு உதயநிதி ஸ்டாலினுக்கு என்று, முரசொலியில் தனது அந்திமக் காலம் வரை தொடர்ந்து உடன்பிறப்புக்கு கடிதம் எழுதிக் கொண்டிருந்த தாத்தா  கலைஞர் வழியில் உடன்பிறப்புகளுக்கு உற்சாகமூட்ட உதயநிதி அவ்வப்போது நாட்டு நடப்புகளைப் பற்றி எதையாவது எழுதித் தீர்த்திருந்தாலும் கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கை கொண்டிருக்கலாம். அப்படி ஏதும் நிகழ்ந்ததாகத் தெரியவில்லை.

ஆகவே மீண்டும் கேட்கத் தோன்றுகிறது.

உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய கட்சிப் பணிகள், சமூகப் பணிகள்  என்றால் நீங்கள் எதைச் சொல்வீர்கள்?

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக வேட்பாளர்களுக்காக ஓட்டுக் கேட்டு பிரச்சாரம் மேற்கொண்டதையா? அதை திமுகவின் அடிமட்டத் தொண்டர்களில் இருந்து கட்சியின் மீது அபிமானம் கொண்ட ஒவ்வொருவரும் தானே செய்திருப்பார்கள். இதில் உதயநிதி மட்டும் என்ன ஸ்பெஷல்?

உடனடியாக உதயநிதி ஸ்டாலினை இளைஞரணிச் செயலாளராக ஆக்கிப் பார்க்கும் ஆசை ஸ்டாலினுக்கு வந்தால் அது அரசர் மனோபாவம் இல்லாமல் வேறென்ன?

அரசர்கள் தான் தான் மன்னராகப் பட்டமேற்ற உடன் தனக்குப் பிறகு பட்டமேற்கக் கூடிய தகுதி தன் பிள்ளைகளில் எவருக்கு உண்டு என உறுதி செய்ய பட்டத்து இளைவர்களை அறிவிப்பார்கள்.

திமுகவின் இளைஞரணிச் செயலாளர் பதவி என்பது பட்டத்து இளவரசர் பதவிக்குச் சற்றும் சளைத்தது அல்ல என்பது சொல்லித் தெரிய வேண்டிய ரகசியமில்லை.

ஏனெனில் அந்தப் பதவி உருவாக்கப்பட்டதே அதற்காகத் தான் என்பதை திமுக நன்கறியும்.

இப்போது பிரச்னை உதயநிதி ஸ்டாலின் பட்டத்து இளவரசராக அறிவிக்கப்பட்டதில் இல்லை. இத்தனை அவசரக்கோலத்தில் ஏன் என்பதில் தான்.

யாருடைய வளர்ச்சியை கட்டுப்படுத்த? என்பதை கலைஞரின் ஆன்மா மட்டுமே அறியக்கூடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com