டெல்லி குருகிராமை அதிரச் செய்த ‘பிரகாஷ் சிங் தற்கொலை மற்றும் 3 கொலை வழக்கு’ விவகாரம், குற்றம் நடந்தது என்ன?

திங்களன்று காலை 7 மணி அளவில் வீட்டு வேலைக்காரப் பெண்மணி வந்து தகவல் சொன்ன பிறகே அக்கம் பக்கத்து வீட்டாருக்கு நடந்த சம்பவம் தெரிய வந்திருக்கிறது
டெல்லி குருகிராமை அதிரச் செய்த ‘பிரகாஷ் சிங் தற்கொலை மற்றும் 3 கொலை வழக்கு’ விவகாரம், குற்றம் நடந்தது என்ன?

டெல்லி குருகிராமைச் சேர்ந்தவர் 50 வயது பிரகாஷ் சிங், கடந்த ஞாயிறு அன்று இரவு இவர் தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளைக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் அந்தப் பகுதி மக்களிடையே கடும் அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. தற்கொலை செய்து கொண்டவர் சாமான்ய மனிதர் அல்ல, சன் பார்மாசூட்டிகல் நிறுவனத்தின் R&D (Research & Development) துறைத் தலைவராகப் பணியில் இருந்தவர். 

மூன்று கொலைகள் மற்றும் ஒரு தற்கொலை நிகழும் சுவடுகள் ஏதுமின்றி குருகிராமில் பிரகாஷ் சிங் வசிக்கும் பகுதி திங்களன்று காலையில் படு அமைதியில் ஆழ்ந்திருந்தது... அப்பகுதியின் அமைதியைக் குலைக்கும் வண்ணம் தீடீரென வீட்டைச் சூழ்ந்து கொண்டன காவல்துறை மற்றும் ஆம்புலன்ஸ் வாகன சைரன் ஒலிகள். காலையில் வழக்கம் போல சிங் வீட்டுக்கு வேலைக்கு வரும் பெண்மணி, வீட்டு காலிங் பெல்லை அழுத்த வெகு நேரமாகியும் யாரும் வந்து கதவைத் திறக்கக் காணோம். அந்தப் பெண்மணி சொல்லித்தான் அக்கம்பக்கத்து வீடுகளுக்கு தகவல் சென்றிருக்கிறது. இவ்வளவு நேரம் கதவைத் திறக்காமலிருக்க வாய்ப்பில்லையே என்று கருதிய பக்கத்து வீட்டுக்காரர்கள் தகவல் அளித்த வேலைக்காரப் பெண்ணை ஜன்னல் வழியே குதித்து இறங்கி வீட்டுக்குள் பார்க்கச் சொல்லி அறிவுறுத்தவே, அந்தப் பெண் அவர்கள் சொன்னபடி செய்து வீட்டுக்குள் நுழைந்தார். அப்போது தான் தெரிய வந்திருக்கிறது உள்ளே நிகழ்ந்த அசம்பாவிதங்கள்.

வீட்டின் டைனிங் அறையில் நைலான் கயிறிட்டு சிங் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவரது சடலம் கூரையில் தொங்கிய வண்ணம் இருந்தது. வீட்டின் மூன்று படுக்கையறைகளில் ஒன்றில் பிரகாஷ் சிங்கின் மனைவி சோனு (48), மகள் அதிதி, மகன் ஆதித்யா மூவரும் கொலையுண்டு கிடந்தனர். அதிதியின் உடல் படுக்கையிலும், மற்ற இருவரின் உடல் தரைப்பகுதியிலும் கிடந்தது.

சிங் வீட்டின் கீழ்தளம் மற்றும் மேல்தளத்தில் இரு குடும்பங்கள் வசித்த போதும், முதல் நாள் இரவில் அவர்களுக்கு இப்படி ஒரு கொடூரக் கொலை நிகழ்ந்ததின் அறிகுறிகளோ, அவல ஓசைகளோ எதுவும் சென்றடைந்திருக்கவில்லை என்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

அது மட்டுமல்ல, இறந்தவர்களின் பிரேதப் பரிசோதனை அறிக்கையை அளித்த சிவில் மருத்துவமனை ஃபாரன்சிக் துறை தலைவரான டாக்டர் தீபக் மாத்தூர் தனது பரிசோதனை முடிவில் தெரிவித்திருப்பது என்னவென்றால், பிரகாஷ் சிங்கின் பரிசோதனை முடிவைப் பொருத்தவரை அவருடையது முற்றிலும் தற்கொலை தான். ஆனால், அவரது மனைவி மற்றும் குழந்தைகளின் பிரேதப் பரிசோதனை அறிக்கைகளின் படி பார்த்தால் அவர்கள் இறப்பதற்கு முன்பு கடுமையான தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது தெரிய வந்துள்ளதாகக் கூறுகிறார். அவர்களது உடலில் உள்ள ஆழமான காயங்களைப் பார்க்கும் போது அவர்கள் தாக்கப்பட்ட சில நிமிடங்களில் மரணித்திருப்பது தெரிய வருகிறது. அத்துடன் கொலைச்சம்பவம் நள்ளிரவு 12 மணி முதல் முற்பகல் 2 மணிக்குள் நிகழ்ந்திருக்க வேண்டும் என்றும் அவர் தனது அறிக்கையில் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
 
கொலையுண்டவர்களில் மகள் அதிதியின் உடலில் 12 ஆழமான காயங்களும், மகன் ஆதித்யாவின் உடலில் 8 ஆழமான காயங்களும், மனைவி சோனுவின் உடலில் 19 இடங்களில் ஆழமான காயங்களும் இருந்தது தெரிய வந்திருக்கிறது. இந்தக் காயங்களில் பெரும்பான்மையானவை அவர்களது தலைப்பகுதியில் இடம்பெற்றிருப்பது இந்தக் கொலையின் நூதனக் குறியீடாகக் கருதப்படுகிறது. பிரகாஷ் சிங் தனது மனைவி மற்றும் வாரிசுகளை தலையில் பல இடங்களில் பலமாகத் தாக்கி கொலை செய்திருப்பது தெரிய வந்திருக்கிறது.
பிரகாஷ் சிங் குடும்பத்தில் ஞாயிறு இரவு நடந்த கொடூர சம்பவத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் என்றால் அது அவர்கள் வீட்டில் வளர்க்கப்பட்ட 4 வளர்ப்பு நாய்கள் மட்டுமே என்று தான் சொல்ல வேண்டும். அக்கம்பக்கத்தார் பேச்சைக் கேட்டு வீட்டு வேலைக்காரப் பெண்மணி ஜன்னலின் நுழைந்து கஷ்டப்பட்டு தவழ்ந்து வீட்டினுள் நுழைந்து எட்டிப் பார்த்த போது இந்த 4 வளர்ப்பு நாய்களும் தங்களது எஜமானர்களின் உடலைச் சூழ்ந்து அமர்ந்து விடாமல் குலைத்துக் கொண்டிருந்ததைக் காண முடிந்தது என்கிறார்கள் அப்பகுதி மக்கள்.

பிரகாஷ் சிங்கின் வீட்டு மேல்தளத்தில் மேலும் இரண்டு வீடுகள் இருந்த போதிலும் அங்கு வசிப்பவர்களுக்கு இந்தச் சம்பவம் குறித்த அறிகுறிகளோ அல்லது துர் சமிஞ்சைகளோ எதுவும் தெரிந்திருக்கவில்லை. சிலர் நாய் குலைத்த சத்தத்தை கேட்டதாகப் காவல்துறை விசாரணையில் பதிவு செய்திருந்த போதும், அது சந்தேகத்திற்குரிய வகையில் எல்லாம் இல்லை என்றே கூறியிருக்கின்றனர்.

திங்களன்று காலை 7 மணி அளவில் வீட்டு வேலைக்காரப் பெண்மணி வந்து தகவல் சொன்ன பிறகே அக்கம் பக்கத்து வீட்டாருக்கு நடந்த சம்பவம் தெரிய வந்திருக்கிறது. வீட்டு வேலைக்காரப் பெண்மணி இறந்தவர்களின் சடலங்களைக் கண்டு அலறி அடித்துக் கொண்டு தகவல் தெரிவித்த பின்பே காவல்துறை ஸ்பாட்டுக்கு விரைந்துள்ளது.

இறந்து சடலமாகத் தொங்கிய பிரகாஷ் சிங்கின் பேண்ட் பாக்கெட்டில் மரணக்குறிப்பு ஒன்றைக் கைப்பற்றினார் டெபுடி கமிஷனர் ஆஃப் போலீஸ் சுலோசனா கஜ்ராஜ். அதில் பென்சிலில் எழுதப்பட்டிருந்த தற்கொலைக் குறிப்பில் ‘ என் குடும்பத்தினரை என்னுடன் அழைத்துச் செல்லும் பொறுப்பில் நான் முற்றிலுமாகத் தோல்வியுற்றேன். இதற்கு வேறு யாரும் காரணமல்ல, நான் மட்டுமே முழுப் பொறுப்பு’ என்று பிரகாஷ் பதிவு செய்திருந்தார்.

இறந்தவர்களின் உடலில் இருந்த காயங்கள் மற்றும் பிரகாஷ் சிங் விட்டுச் சென்றிருக்கும் தற்கொலைக் குறிப்பின் அடிப்படையில் பார்த்தால் பிரகாஷ் சிங் தன் மனைவி மற்றும் குழந்தைகளைக் கொலை செய்து விட்டு பிறகு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று காவல்துறை நம்புவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. இதில் மகள் அதிதி தூக்கத்தில் இருக்கையில் அவரது தலையில் சுத்தியலால் தாக்கி கொலை நிகழ்த்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. மற்ற இருவரும் கொலையை எதிர்த்து போராடியதற்கான காயங்கள் அவர்களது உடலில் கண்டறியப்பட்டுள்ளன. இத்தனையும் நிகழ்ந்தது ஞாயிறு அன்று நள்ளிரவிற்கு மேல் தான். அதற்கு முந்தைய வாரத்தில் பிரகாஷ் சிங் குடும்பத்தாரைக் காண அந்த வீட்டில் இப்படி ஒரு கோர சம்பவம் நிகழப்போவதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவே இல்லை என்கிறார் கொலை நிகழ்ந்ததற்கு இரு நாட்களுக்கு முன்பு தன் அக்கா சோனு வீட்டுக்குச் சென்று திரும்பிய அரோரா. இவர் பிரகாஷ் சிங் மனைவி சோனுவின் தங்கை. கொலை நடந்த அன்றும் கூட ஞாயிறு இரவு 11.30 மணி வரையில் அதிதி தன் அத்தை சீமா அரோராவுடன் வாட்ஸ் அப் சாட்டிங்கில் ஈடுபட்டிருந்திருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.  அது மட்டுமல்ல ஜமியா மிலியா இஸ்லாமியாவைச் சேர்ந்த பி ஃபார்ம் மாணவியொருவர் தான் புதிதாகத் தொடங்கியுள்ள ஹேண்ட் மேட் சோப் சாம்பிள்களை சோதனைக்காக பிரகாஷ் சிங்கிற்கு கூரியரில் அனுப்பி வைத்திருக்கிறார். அது பிரகாஷ் சிங்கை அடைந்தும் பிரிக்கப்படாத நிலையில் அவரது வீட்டில் கிடைத்திருக்கிறது. இப்படி பிரகாஷ் சிங் வீட்டில் கொலைக்கான எந்த அறிகுறிகளும் முன்னதாகத் தென்பட்டதாகத் தெரியவில்லை. வீடு அசாதாரண சூழலை அடைந்தது வேலைக்காரப் பெண்மணிக்கு விஷயம் தெரிந்த பிறகு மட்டுமே. அதுவரையில் அங்கு அப்படி ஒரு சம்பவம் நடக்கப் போவதாக ஒரு சின்ன அறிகுறி கூட தென்படவே இல்லை என்கிறார்கள் பிரகாஷ் சிங்கின் உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தார்.
தற்போது இந்த கொலை விவகாரத்தில் சோனுவின் தங்கை அரோரா சார்பில், ஐ பி சி செக்‌ஷன் 302 (கொலை)  கீழ் எஃப் ஐ ஆர் போடப்பட்டு குருகிராம் 50 வது செக்டார் காவல்நிலையத்தில் வழக்குப் பதியப்பட்டுள்ளது. 

கொலைக்கான விசாரணையில் ஈடுபட்டிருக்கும் விசாரணை அதிகாரிகள் அளித்த தகவலின்படி இந்த நிமிடம் வரை சிங் குடும்பத்தில் நிகழ்ந்துள்ள கொலைகளுக்கான உரிய காரணங்களை கண்டறிய முடியவில்லை என்பது தெளிவாகிறது. ஒருவேளை பிரகாஷ் சிங்குக்கு அலுவல் ரீதியான மன அழுத்தத்தின் காரணமாக இந்த கொலைகள் நிகழ்ந்திருக்கலாம் என்று சந்தேகித்தாலும் கூட அதற்கான தகுந்த ஆதாரங்கள் எதுவும் இதுவரை கிடைத்திராத பட்சத்தில் அப்படியும் முடிவுக்கு வர இயலாது ஏனெனில் பிரகாஷ் சிங் மன அழுத்தத்திற்கென்று சிகிச்சை எதுவும் மேற்கொண்டதாகத் தெரியவில்லை. என்ன காரணத்திற்காக இப்படி மூன்று கொடூரக் கொலைகளும் ஒரு தற்கொலையும் நிகழ்த்தப்பட்டிருக்கிறது என்பது புதிராகவே நீடிக்கிறது என்கிறார் விசாரணை அதிகாரிகளில் ஒருவரான ACP அமன் யாதவ்.

பிரகாஷ் சிங் வீட்டில் இருந்த 4 வளர்ப்பு நாய்களும் தற்போது RWA வசம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. கூடிய விரைவில் அவற்றுக்கொரு பாதுகாப்பான உறைவிடம் ஏற்பாடு செய்யப்படும் என காவல்துறை தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.

பிரகாஷ் சிங் தற்கொலை மற்றும் 3 கொலைகள் விவகாரத்தில் இப்போது கிடைத்துள்ள ஒரே துருப்புச் சீட்டு அவர் தன் கைப்பட எழுதி பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த மரணக்குறிப்பு மட்டுமே. அதில் தான் வாழ்வில் தோல்வி அடைந்து விட்டதாக பிரகாஷ் சிங் குறிப்பிடுவது எதனால் என்பதற்கான விடை கிடைத்தால் கொலைக்கான உண்மையான காரணம் கண்டறியப்படலாம்.

மனித மனம் மிகவும் விசித்திரமானது.

சமூகத்தில் சற்று உயர்ந்த நிலையில், அலுவல் ரீதியாகவும் மதிக்கத்தக்க பணியில் இருந்தவரான பிரகாஷ் சிங்... மரணக் குறிப்பு எழுதி வைத்து விட்டு தன் பாசத்திற்குரிய மனைவியையும் அன்புக்குரிய மகன், மகளையும் ஏன் கொலை செய்தார்? எது அவரை இப்படி ஒரு விபரீதச் செயலில் ஈடுபடத் தூண்டியது? 

ஒரே புதிராகத்தான் இருக்கிறது.

பிரகாஷ் சிங், ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட சன் பார்மசூட்டிகல் நிறுவனத்தில் உயரதிகாரியாகப் பணியாற்றியவர். ஆனால், கடந்த ஒரு மாதகாலமாக அவர் அந்த வேலையில் நீடித்திருக்கவில்லை என்று கூறப்படுகிறது. இவராக வேலையை ராஜினாமா செய்தாரா? அல்லது நிறுவனம் இவரை வேலையில் இருந்து நீக்கியதா என்பது குறித்து சரியான தகவல்கள் இல்லை. பிரகாஷ் சிங்கின் மனைவி சோனு நாட்டின் 4 வெவ்வேறு இடங்களில் குழந்தைகளுக்கான நர்ஸரி பள்ளிகளை நடத்தி வந்திருக்கிறார். மகள் அதிதி கல்லூரிப் பருவத்திலும் மகன் ஆதித்யா பள்ளிப்பருவத்திலும் இருந்தனர். வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு மிக அளவான நிம்மதியான குடும்பமாகக் காட்சியளித்தனர். பொதுவாக சிங் குடும்பத்தார் வெளியாரிடம் அதிகம் உறவு கொண்டாடுபவர்கள் இல்லை என்பது அக்கம் பக்கத்தார் மூலமாகத் தெரிய வந்த தகவல்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com