'என்ன கோணல்களா? முதல் புத்தகத்திற்கே இப்படியொரு பெயரா?’ எழுத்தாளர் சா.கந்தசாமி

1967-ஆம் ஆண்டில் "இலக்கியச் சங்கம்' சார்பில்  நா. கிருஷ்ணமூர்த்தி,  ம. இராஜராம்,  க்ரியா ராமகிருஷ்ணன் தலா மூன்று சிறுகதைகளோடு என்னுடைய மூன்று சிறுகதைகளையும் சேர்த்து பன்னிரண்டு சிறுகதைகள்
'என்ன கோணல்களா? முதல் புத்தகத்திற்கே இப்படியொரு பெயரா?’ எழுத்தாளர் சா.கந்தசாமி

1967-ஆம் ஆண்டில் ’இலக்கியச் சங்கம்' சார்பில்  நா. கிருஷ்ணமூர்த்தி,  ம. இராஜராம்,  க்ரியா ராமகிருஷ்ணன் தலா மூன்று சிறுகதைகளோடு என்னுடைய மூன்று சிறுகதைகளையும் சேர்த்து பன்னிரண்டு சிறுகதைகள் கொண்ட "கோணல்கள்" என்று சிறுகதைத் தொகுதியைக் கொண்டு வர முடிவும் செய்தோம். 

அது நமக்கான களத்தை நாமே உருவாக்கிக் கொள்வது என்பதுதான். புதிய தரமான சிறுகதைகளை வெகுஜன பத்திரிகைகள் வெளியிடாது என்று குறை சொல்லிக் கொண்டே இருக்கக் கூடாது. தமிழ் வாசகர்கள் தரமான சிறுகதைகள், நாவல்கள் படிக்க மாட்டார்கள். மூன்றாம் தரமான, நான்காம் தரமான படைப்புகளைப் படித்து புளகாங்கிதம் அடைகிறவர்கள் என்று சொல்லப்படுவது சரியில்லை. அவர்கள் உயர்ந்த படைப்புகள் கொண்டவர்கள். அவற்றைப் படித்து மகிழும் மரபில் வந்தவர்கள் என்பதை நவீன காலத்திற்குச் சொல்லும் படியாக-படிக்கிறவர்கள் ஏற்கும் படியாக ஒரு சிறுகதைத் தொகுப்பை கொண்டு வர வேண்டும் என்ற கருத்தோடே 'கோணல்கள்' வெளியீட்டு முயற்சியில் இறங்கினோம். 

நாங்களே ஆளுக்குக் கொஞ்சம் பணம் போட்டோம். நாரண-துரைக்கண்ணன் ஓர் அச்சுக்கூடத்தை ஏற்பாடு செய்து கொடுத்தார். முகப்போவியம் நவீன ஓவியர் பி.கிருஷ்ணமூர்த்தியால் உருவாக்கப்பட்டது. நவீன படைப்பிற்கு ஒரு முன்னுரை தேவையென்று கருதினோம். ஆனால் பிரபலங்கள் யாரிடமும் முன்னுரை, அணிந்துரை கேட்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம். எங்களின் இலக்கியச் சங்கக் கூட்டத்திற்கு ஆர். சுவாமிநாதன் என்ற இளைஞர் வந்து போய்க் கொண்டிருந்தார். அவர் பேச்சில் இருந்து நல்ல படிப்பாளி, விஷயம் தெரிந்தவர் என்று பட்டது. 'கோணல்கள்' சிறுகதைகள் அவருக்குப் பிடிபடலாம். பிடிபடாவிட்டாலும் பாதகமில்லை என்று அவரிடம் முன்னுரை கேட்டோம். அவர் எங்களையெல்லாம் விட வயதில் இளைஞர். அவர் எழுத்துக்கள் ஒன்று கூட பத்திரிகைகளில் வெளியானது இல்லை. அது நல்லது என்று பட்டது.  அவர் முன்னுரையோடு கோணல்கள் தயாராகிக் கொண்டிருந்தது. 

திருவல்லிக்கேணியில் உள்ள டி.யூ.சி.எஸ் அலுவலகத்தில் தமிழ் எழுத்தாளர்கள் கூட்டம் நடைபெற்றது. பி.எஸ். ராமையா, த.நா. குமாரசாமி, நாரண- துரைக்கண்ணன், சி.சு. செல்லப்பா, கண.முத்தையா, கு.அழகிரிசாமி உட்பட பலர் கூடியிருந்தார்கள். 

நா. கிருஷ்ணமூர்த்தியும், நானும். சி.சு.செல்லப்பா அருகில் அமர்ந்து எழுத்தாளர்கள் உரைகளைக் கேட்டுக் கொண்டிருந்தோம். நல்ல புத்தகங்களை வெளியிடுவதில் உள்ள பிரச்னைகள் பற்றியும், விற்பனையில் உள்ள சிரமங்கள் பற்றியும் பேசினார்கள். ஒரு கூட்டுறவு பதிப்பகம் தொடங்கினால் புதிய எழுத்தாளர்கள் படைப்புகளுக்கு முக்கியதுவம் கொடுத்து பிரசுரிக்கலாம் என்று யோசனையும் தெரிவிக்கப்பட்டது. 

நாங்கள் சி.சு செல்லப்பா படைப்பு எழுத்தாளர்,  தீவிரமான விமர்சகர், எதையும் அலசி  ஆராய்ந்து விமர்சனம் செய்யக் கூடியவர். அவரின் 'வாடிவாசல்', 'ஜீவனாம்சம்' நாவல்களையும், பல சிறுகதைகளையும் படித்திருந்தோம். சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றவர். சுதந்திர போராட்டத்தைக்  கதைக்குள் அவர் அப்பொழுது கொண்டு வரவில்லை.

1960-ஆம் ஆண்டில் விமர்சனத்திற்கு என்றே 'எழுத்து' என்ற சிற்றேட்டை ஆரம்பித்து நடத்தி வந்தார். வெங்கட் சாமிநாதன், ந. முத்துசாமி, தர்மு சிவராம் எல்லாம் அவர் சீடர்கள் போல கவிதைகள், விமர்சனங்கள் எழுதி வந்தார்கள். 
தேநீர் அருந்துவதற்காகக் கூட்டம் கலைந்தது. செல்லப்பாவோடு கொஞ்சம் பழக்கம் இருந்தது. எனவே அவரோடு தேநீர் அருந்தச் சென்றோம். அவர் எப்பொழுதும் கறாராகப் பேசுவார். 

'நீங்கள் எழுத்துப் பத்திரிகைப் பார்த்து இருக்கிறீர்களா? படிப்பது உண்டா?'’என்று கேட்டார்.

'சில இதழ்கள் படித்திருக்கிறோம்’

'எழுத்துக்குச் சந்தா கட்டி வாங்கிப் படியுங்கள். அது எப்படி விமர்சனம் எழுதுவது, புதுக்கவிதை எழுதுவது என்பதையெல்லாம் புரிய வைக்கும். எழுத்துப் படித்து விமர்சனம் எழுதுவதற்குப் பயிற்சி பெறலாம்’ என்றார்.

'கதை எழுதலாம் என்று இருக்கிறேன்’ என்றேன்.

'இப்ப என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள்'

'கோணல்கள் என்று ஒரு சிறுகதைத் தொகுப்பு கொண்டு வர போகிறோம்'

'அதற்குள் புத்தகம் போட என்ன அவசரம். புத்தகம் போட நிறைய வயது இருக்கிறது'

நாங்கள் கேட்டுக் கொண்டிருந்தோம்.

முதலில் பி.எஸ். ராமையா போன்ற பெரிய எழுத்தாளர்கள் புத்தகங்களைப் படிக்க வேண்டும். அவர் முந்நூற்றுக்கு மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறார். அவை எல்லாம் அச்சாகாமல் இருக்கின்றன. 

'முதலில் மூத்த எழுத்தாளர்கள் கதைகளை பிரசுரிக்க முயற்சி செய்யுங்கள். அதைவிட்டு இரண்டு மூன்று கதைகள் எழுதியது அவற்றைத் தூக்கிக் கொண்டு புத்தகம் போட கிளம்பி விடுகிறீர்கள்’ என்றார்.

'சார், நாங்கள் எங்கள் பணத்தில் புத்தகம் போடுகிறோம். இன்னொருவரைத் தேடிக் கொண்டு போய் புத்தகம் போட கேட்கவில்லை. அதற்காகவே எங்களைப்  பாராட்ட வேண்டும்’ என்று சொல்லி விட்டு கிருஷ்ணமூர்த்தியை அழைத்துக் கொண்டு தேநீர் கூடத்திற்குச் சென்றேன்.

கு.அழகிரிசாமி ஒரு நாற்காலியில் அமர்ந்து தேநீர் அருந்திக் கொண்டிருந்தார். நாங்கள் தேநீர் வாங்கிக் கொண்டு அவர் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர்ந்தோம். அவர் 'ராஜா வந்திருக்கிறார்' என்று சிறுகதை இடம் பெற்றுள்ள அழகிரிசாமி கதை தொகுப்பைப் படித்திருக்கிறேன். ஒரு சிறுவனின் கதையை மெருகு குலையாமல் சொல்லும் கதை. அதோட அன்பளிப்பு, இரண்டு பெண்கள் என்ற கதைகள் எல்லாம் முதல் தரமான கதைகளாகப்பட்டன.

அவர் கரிசல் காட்டுப் பகுதியில் இருந்து வந்து இருந்தாலும், கரிசல் சொல் வழக்கிற்கு நேர் எதிராக காவியத்தன்மை மிளிர சிறுகதைகள் எழுதியவர். அவர் தமிழ் பொதுவானது. ஆனால் உணர்ச்சிமிக்கது. வட்டார மொழியில் இலக்கியம் இல்லை என்று எழுதியே நிலை நாட்டிய எழுத்தாளர். அவர் கதையின் மொழி என்பது வட்டார மொழிக்கு எதிரானது என்பதை நிலை நாட்டுவது தமிழ் காவிய மரபின் தொடர்ச்சியில் வருவது. 'என்ன எழுதிக் கொண்டு இருக்கிறீர்கள். புத்தகம் ஏதாவது வரப் போகிறதா?'  என்று கேட்டார். 

'நாங்கள் நான்கு பேர்கள் சேர்ந்து, பன்னிரண்டு சிறுகதைகள் கொண்ட ஒரு தொகுப்பைக் கொண்டு வர இருக்கிறோம்.’

'யார் போடுகிறார்கள்’

'நாங்களே தான். எங்கள் கதைகளை நாங்களே புத்தகமாகப் போட்டுக் கொள்கிறோம்’

'அது நல்லது தான். என்ன பெயர்’ என்று கேட்டார்.

'கோணல்கள்’

'என்ன கோணல்களா? வேற நல்ல, நல்ல பெயர்கள் இருக்க முதல் புத்தகத்திற்கே இப்படியொரு பெயரா?’

'இதுவும் நல்ல பெயர் தானே?'

'ஆமாம். உலகத்தில் எல்லா பெயர்களும் நல்ல பெயர்கள் தான்’

'கோணல்கள் தயாரானதும் உங்களை வந்து பார்க்கிறேன். ஒரு சிறிய வெளியீட்டு விழா வைக்கலாம் என்று இருக்கிறோம். நீங்கள் வந்து கலந்து கொள்ள வேண்டும். பேச வேண்டும்’

'அதற்கென்ன பேசுவோம். புதிதாக எழுத வருகின்றவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். நல்லா எழுதுகிறவர்களை பிரபல்யபடுத்த வேண்டும்’ என்றார். 

கோணல்கள் சிறுகதைத் தொகுப்பு தயாரானதும் அழகிரிசாமி வீட்டிற்கு எடுத்துக் கொண்டு சென்றேன். அட்டை நவீன ஓவியம். இன்ன உருவம் என்று சொல்ல முடியாத அரூபமானது. இரண்டு நிமிடம் அட்டைப் படத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு, 'இன்னும் கொஞ்சம் புரிகிறது மாதிரி போட்டிருக்கலாம். ஓவியத்தைப் பார்த்தால் புரிய வேண்டும். கதையைப் படித்தால் சொல்லி இருப்பது தெரிய வேண்டும். இது தான் சரியான கலை. புரிந்து கொள்ள வைக்காமல் மிரட்டி விரட்டுவது கலை இல்லை’என்றார்.

'மனிதர்களால் எல்லாவற்றையும் புரிந்து கொள்ள முடியும். முதல் பார்வைக்குப் பிடிபடவில்லை என்றால் இரண்டாவது, மூன்றாவது பார்வையில் பிடிபட்டுவிடும்' என்றேன். 

'ஓ! நீ அப்படி வருகிறாயா’ என்று சொல்லிவிட்டு  உள்ளே போய் ஒரு காகிதச் சுருளைக் கொண்டு வந்து பிரித்துக் காட்டினார். பென்சில்  சித்திரங்கள், மரங்கள், பூக்கள், செடி கொடிகள், இலைகள், விலங்குகள், பறவைகள் என்று பலவற்றையும் பென்சில் சித்திரங்களாக வரைந்து வைத்திருந்தார். அவருக்குள் ஒரு சித்திரக்காரர் இருந்தான் என்று தான் சொல்ல வேண்டும்.

நவீன தமிழ் எழுத்தாளர்களிலேயே அதிகமாகத் தமிழ் படித்தவர் அவர்தான். சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், திருக்குறள், கம்பராமாயணம், கலிங்கத்துப்பரணி, பாரதியார், அருணாசலக் கவியார், காவடிசிந்து எல்லாம் படித்திருந்தார். தமிழ் எழுத்தாளர்கள் மட்டுமல்ல. எல்லா தமிழர்களும் பழந்தமிழ் இலக்கியங்கள் படிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.

வை.கோவிந்தன் வழியாக கம்பராமாயணத்தில் சுந்தர காண்டத்தைப் பதிப்பித்தார். காவடிசிந்துவிற்கு முன்னுரையுடன் ஒருபதிப்பு கொண்டு வந்தார். அவர் டி.கே. சிதம்பரனார் ரசனை மீது ஈடுபாடு கொண்டவர். ஆனால் தமிழை அவர் சொல்வது போல் பேச்சு நடையில் எழுத வேண்டும் என்பதை நிராகரித்தவர்.

அமைச்சர்கள், ஆளுநர்கள், பிரமுகர்கள் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு எழுத்தாளர்களுக்கு அறிவுரை வழங்குவதையும், பாராட்டுரைகள் வழங்குவதையும் கேலி செய்து கொண்டே இருப்பார். புத்தகங்களே படிக்காத இந்த மாதிரியான ஆட்கள் எதற்காக மேடை ஏறுகிறார்கள் என்பது தான் அவரது கேள்வி. 

1968-ஆம் ஆண்டு ஜனவரியில் சென்னை மாநகரத்தில் தமிழ் நாட்டின் முதலமைச்சராக அண்ணா இருந்த போது, கோலாகலமாக இரண்டாவது உலகத் தமிழ்மாநாடு நடைபெற்றது. லட்சக்கணக்கான தமிழ் மக்கள் பெரும் ஆரவாரத்தோடு கலந்து கொண்டார்கள். மெரினா கடற்கரையில் தமிழ்ப்  புலவர்கள், கவிஞர்கள், சான்றோர்கள் சிலைகள் திறக்கப்பட்டன. 

சென்னை அண்ணா சாலையில் உள்ள மத்திய நூலகத்தின் உள்ளரங்களில் 'கோணல்கள்' வெளியீட்டு விழா நடைபெற்றது. கு. அழகிரிசாமி தலைமை வகித்தார்.  புத்தக வெளியீடு பிரமுகர்கள் இல்லாமல், அமைச்சர்கள், நீதிபதிகள், ஆளுநர்  இல்லாமல் எழுத்தாளர்கள் கூடி நடத்துவது பற்றி பாராட்டிப் பேசினார். 'சிறுகதைகள் புதியவையாக இருக்கின்றன.  நாங்கள் எழுதிய போதும் புதியவையாக இருக்கின்றன என்றுதான் குறை சொல்வது மாதிரி சொன்னார்கள். ஆனால் எழுத்தாளர்கள் யார் சொல்வதையும் கேட்டுக் கொண்டு கதைகள் எழுதக்கூடாது. நன்கு யோசித்து தனக்கு சரியென்று படுவதையே எழுத வேண்டும். கோணல்கள் ஆசிரியர்கள் அப்படியே எழுதி இருக்கிறார்கள். என் பாராட்டுகள்' என்றார்.

மும்பையில் இருந்து வெளிவரும் ஆங்கில இதழான 'தி தாட்' (The thought) பத்திரிகையில்,க.நா.சுப்பிரமணியம், 'தமிழ்ச்சிறுகதை உலகத்தில் ஏற்பட்டு இருந்த இறுக்கத்தை கோணல்கள் உடைத்து முன்னெடுத்து சென்று உள்ளது' என்று எழுதினார்.

எங்களோடு மிகவும் நெருக்கமாக இருந்த கு.அழகிரிசாமி 1970-ஆம் ஆண்டில் தன் நாற்பத்தெழாவது வயதில் காலமானார். அதே ஆண்டில் அவரின் 'அன்பளிப்பு' என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்ய அகாதமி பரிசு வழங்கியது. அவரை எழுத்துக்களால் 'என்றும் இருப்பவர்' என்றே சொல்ல வேண்டும்.

(தினமணி கொண்டாட்டத்தில் ‘என்றும் இருப்பவர்கள்’ தொடரில் எழுத்தாளர் கு.அழகிரிசாமி பற்றி சா.கந்தசாமி எழுதியது)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com