இந்துக்களே! உங்கள் மதத்தின் மீது பிடிப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்

சமீபத்தில் தமிழகத்தையே உலுக்கிய ஒரு சம்பவம் திருபுவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் கொலை. மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மதவெறி இழைத்த கொடூரமே இந்தப் படுகொலை.
இந்துக்களே! உங்கள் மதத்தின் மீது பிடிப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்

சமீபத்தில் தமிழகத்தையே உலுக்கிய ஒரு சம்பவம் திருபுவனத்தைச் சேர்ந்த ராமலிங்கம் கொலை. மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் மதவெறி இழைத்த கொடூரமே இந்தப் படுகொலை. கொலை தொடர்பாக சிலர் சரணடைந்தனர். அவர்களின் பின்புலத்தை பார்க்கும் போது அவர்கள் ஒரு குறிப்பிட்ட இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இந்த படுகொலையை எந்தெந்த தலைவர்கள் கண்டித்தார்கள்? யாரெல்லாம் சரணடைந்தவர்கள் சார்ந்த அமைப்பை கண்டித்தார்கள்? என்பதை பார்த்தால் பல உண்மைகள் புலப்படும்.

“கும்பகோணம் ராமலிங்கம் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இந்தக் கொலையில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களை நீதிமன்றத்தின் முன்பு நிறுத்தி விரைவில் தண்டனை பெற்றுக் கொடுத்து இதுபோன்ற வன்முறைகளுக்கு முடிவுகட்ட வேண்டும்', என்று குறிப்பிட்டுள்ளார்  ஸ்டாலின், அதுவும் மூன்று நாட்களுக்குப் பிறகு. ஆனால், சில மாதங்களுக்கு முன், கர்நாடகத்தைச் சேர்ந்த கெளரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டபோது, “படுகொலையை வன்மையாக கண்டிக்கிறேன். வலதுசாரி அமைப்புகளால் இந்திய பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது அதிர்ச்சியளிக்கிறது. கொலைகாரர்களை கைது செய்ய வேண்டும்', என்று ஸ்டாலின் தனது கருத்தை பதிவு செய்தார்.

கெளரி லங்கெஷ் கொலைக்கு காரணமானவர்களை “வலதுசாரி அமைப்புகள்”, என்று சொல்லும் ஸ்டாலின், ராமலிங்கம் கொலைக்கு காரணமானவர்களை, “கொலையில் ஈடுபட்டவர்கள்” என்று பொத்தம்பொதுவாக சொல்வது சரியா? இந்துக்களுக்கு எதிரான இந்த சிந்தனைதான் ஜனநாயக சிந்தனையா? ராமலிங்கம் தமிழர் தானே! இலங்கை தமிழருக்காக பொங்கும் அரசியல்வாதிகள் தமிழக தமிழருக்காக பொங்காதது ஏன்?

தொடர்ந்து படிக்கும் முன் ஒரு குட்டிக்கதை.

ஒரு பரம்பரை பிச்சைக்காரன். அவனிடம் ஒரு திருவோடு இருந்தது. அது அவனுடைய பரம்பரை சொத்து. ஒரு நாள் சாதுவை சந்தித்தான், தனது கஷ்டத்தை சொல்லி வருத்தப்பட்டான்.

‘தம்பி! உனக்கு ஒரு ரகசியத்தைச் சொல்கிறேன். நீ கையில் வைத்திருப்பது சாதாரண திருவோடு அல்ல. தங்கத் திருவோடு. விலைமதிப்புமிக்கது. இந்த உண்மை தெரியாமல் உனது பரம்பரையே பிச்சையெடுத்து வாழ்ந்தது. நீயாவது உண்மையை தெரிந்துகொள்', என்று சொல்லிவிட்டு நகர்ந்தார் சாது.

பிச்சைக்காரனுக்கு மகிழ்ச்சி. திருவோட்டை அடிக்கடி திருப்பி பார்த்தான், சுற்றும்முற்றும் பார்த்தான், பிறகு அதை பையில் வைத்துக்கொண்டான். இப்படியே திருவோட்டை பத்திரப்படுத்துவதிலேயே நாட்கள் நகர்ந்தது. ஒரு நாள் அவன் மரணப்படுக்கையில் விழுந்தான். சாது அவனை சந்தித்தார்.

‘சாதுவே! இன்னும் சற்று நேரத்தில் நான் இறந்துவிடுவேன். இந்த திருவோட்டை என் மகனிடம் ஒப்படைக்கிறேன். அவன் சிறுவன். அவனுக்கு உலக அனுபவம் கிடையாது. நீங்கள் அவனை கவனித்துக் கொள்ளுங்கள்', என்று சொல்லிவிட்டு இறந்துபோனன்.

திருவோடு பிச்சைக்காரனின் மகனிடம் சென்றது. அவனும் தந்தையைப் போலவே திருவோட்டை பத்திரப்படுத்தினானே தவிர விற்க முயற்சிக்கவில்லை.

நடப்பவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்தார் சாது. பக்கத்தில் அவரது சீடன்.

‘குருவே! பிச்சைக்காரன் தங்கத் திருவோட்டை விற்க முயலவில்லை. தன்னிடம் இருக்கும் திருவோட்டின் மதிப்பைக்கூட அவன் தெரிந்து கொள்ள விரும்பவில்லை. அதை மறைத்து வைப்பதிலேயே கவனத்தை செலுத்தினான். . அவனுடைய மகனும் அவனைப் போலவே திருவோட்டின் மதிப்பை தெரிந்துகொள்ள முயற்சிக்கவில்லை. ஏன் இப்படி இருக்கிறார்கள்?' என்று கேட்டான் சீடன்.

‘சீடனே! நீ ஒரு உண்மையை தெரிந்துகொள். அவனிடம் இருக்கும் திருவோடு தங்கத்தாலானது அல்ல. பிச்சைக்காரனை மகிழ்விக்க அப்படி ஒரு பொய்யைச் சொன்னேன். திருவோட்டின் மதிப்பை மட்டுமல்ல, நான் சொன்ன விஷயத்தில் உள்ள உண்மையை தெரிந்துகொள்வதைக்கூட அவன் விரும்பவில்லை. காரணம் நான் சொன்ன பொய் அவனுக்கு பிடித்துப் போய்விட்டது. ஆயிரம் உண்மைகளை ஏற்றுக்கொள்வதில் கிடைக்கின்ற திருப்தியை விட தனக்குப் பிடித்தமான பொய்யை ஏற்றுக்கொள்வதில் அதிக திருப்தி கிடைக்கிறது. அவன் கையில் இருப்பது எதற்கும் உதவாத திருவோடு என்று மற்றவர்கள் நினைப்பார்கள். அது தங்கம் என்று அவன் நினைப்பான். இன்னும் நூறு ஆண்டுகள் ஆனாலும் திருவோடு பத்திரமாக பையில் மட்டுமே இருக்கும்', என்றார் சாது.

இந்தக் கதையில் பார்த்த திருவோடுதான் தமிழகத்தில் நாம் பார்க்கும் ஜனநாயகம். அதை வைத்திருப்பவர் தான் அரசியல்வாதி. தற்போதுவரை நாம் பார்க்கும் ஜனநாயகம் அரசியல்வாதிக்கு மட்டுமே சொந்தமாக இருக்கிறது. அதனால்தான் அரசியல்வாதிகள் ஜனநாயகத்தைப் பற்றி பெருமையாகவும், அது நமது சொத்து என்றெல்லாம் பேசுகிறார்கள். குறிப்பாக தமிழகத்தில் அந்த ஜனநாயகத்தை இந்துக்களுக்கு எதிராக திருப்பிவிடுகிறார்கள் சில குறிப்பிட்ட அரசியல்வாதிகள். தமிழக இந்துக்களுக்கு அந்த ஜனநாயகம் இதுவரை எரிச்சலையும், அவமானத்தையும், ஏமாற்றத்தையும் மட்டுமே கொடுத்துள்ளது. அப்படிப்பட்ட சில சூழல்களை பார்போம்.

சமீபத்தில் நடந்த ஒரு இஸ்லாமிய சகோதரர் இல்ல திருமணத்தில் இந்து திருமண சடங்குகளை கேவலமாக சித்தரித்தார் ஸ்டாலின். இந்தக் கருத்தை ஒரு பொதுக்கூட்டத்தில் பேசவில்லை. பதிலாக ஒரு இஸ்லாமிய திருமணத்தில் சொல்லும் போது அது மததுவேஷத்தை வளர்க்காதா? இதுதான் ஜனநாயகமா? இத்தகைய கருத்தை சொல்வதன் மூலம் தான் ஒரு இந்து எதிர்ப்பாளர் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். இத்தகைய இந்து எதிர்ப்பு சிந்தனையுடைய ஒருவர் எப்படி இந்துக்களுக்கும் முதல்வராக இருக்க முடியும்? அவரை புறக்கணியுங்கள் என்று சொல்லவில்லை, பதிலாக, இந்துகளைப் பற்றிய அவரது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள அவரது கட்சியைச் சார்ந்த இந்து உறுப்பினர்கள் வலியுறுத்த வேண்டும்.

எதற்கெடுத்தாலும் சிறுபான்மையினர் என்று பேசும் தமிழக அரசியல்வாதிகளே! 
இந்தியா இந்து நாடல்ல. அப்படியிருக்கையில் “சிறுபான்மையினர்” என்று குறிப்பிட்ட சிலரை மட்டும் எப்படி அடையாளம் காட்டுகிறீர்கள்? அரசியல்வாதிகள் மாற்று மதத்தவரிடம் காணப்படும் ஒற்றுமை ஓட்டாக மாறும் என்று கணக்குப்போடுகிறார்கள். இதுவே நாட்டில் இன்று நாம் பார்க்கும் பாதிக்கு மேற்பட்ட பிரச்னைகளுக்கு காரணம். இதுதான் ஜனநாயகமா? இந்துக்களும் மத அடிப்படையில் ஒற்றுமையாக இருந்து, அந்த அடிப்படையிலேயே ஓட்டளிக்கும் நிலை வருமானால், அரசியல்வாதிகள் இப்படி இந்து மதத்தை இழிவுபடுத்தும் காரியத்தையோ, அல்லது பிற மதத்தவரோடு ஒப்பிட்டு பிரச்னைகளை கிளப்பும் செயலையோ செய்யமாட்டார்கள். சிறுபான்மையினர் என்ற வார்த்தைக்குள் அரசியல்வாதிகள் தங்களை ஒளித்து வைத்துக் கொள்ளமாட்டார்கள்.

இந்து மதம் பல ஜாதிகளை உள்ளடக்கியது. மற்ற மதங்களும் இதே போன்ற ஒரு அமைப்பாகத்தான் இருக்கின்றது. ஆனால், தமிழ்நாட்டில் இந்து மதத்தின் பல ஜாதிகளில் ஒன்றான “பிராமணர்கள்” மட்டும் தொடர்ந்து இழிவுபடுத்தப்படுகிறார்கள். தெருமுனை கூட்டங்களிலும், தொலைக்காட்சி விவாதங்களிலும், ஏன் முன்னாள் முதல்வர் ஒருவர் கூட பிராமண எதிர்ப்பை தனது வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தார். மற்ற மதத்தினர்களின் ஜாதியிலிருந்து ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்து இவர்கள் பேசுவார்களா? இது வெறுப்பு அரசியல் அல்லவா? இந்த வெறுப்பு அரசியலை முன்னிலைப்படுத்துவதன் மூலம், இந்து மதத்திற்குள் ஒற்றுமை ஏற்படாமல் இது நாள்வரை செய்துவிட்டனர். அதே வேளையில் சிறுபான்மையினர் என்ற போர்வைக்குள் மற்றவர்களை ஒற்றுமையோடு வைத்திருக்கிறார்கள். உண்மையில் மற்ற மதத்தவர்கள் இத்தகைய பிரித்தாளும் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே தங்கள் வாக்குகளை அளிப்பதில்லை என்பதும் உண்மை. யார் யாருக்கு வேண்டுமானாலும் ஓட்டளிக்கட்டும். இந்துக்களின் ஒரு பிரிவினருக்கு மட்டும் தொடர்ந்து இத்தகைய அநீதி இழைக்கப்படுவது சரியா? இதுதான் ஜனநாயகமா?

தமிழக இந்து எதிர்ப்பாளர்களே! பாஜகவோ, சங்பரிவார்களோ இந்துக்களின் ஒரே பிரதிநிதியல்ல. உங்களுக்கு பாஜகவை பிடிக்காமல் போகலாம், பிரதமர் மோடியை பிடிக்காமல் போகலாம் அதற்காக இந்துக்களை இழிவுபடுத்துவதோ, இந்துக்களுக்கு எதிரான நிலையை கையிலெடுப்பதோ தவறு. இந்துக்களை இழிவுபடுத்தினால் பாஜகவை வம்புக்கு இழுக்கலாம், ஆர் எஸ் எஸ்யை வம்புக்கு இழுக்கலாம் என்று கணக்குப் போடாதீர்கள். உங்களால் நேரடியாக பாதிக்கப்படுவது இந்துக்கள். இந்துக்கள் எல்லோரும் பாஜக, ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் என்று நினைக்க வேண்டாம். உங்கள் ஆதரவாளராகக்கூட இருப்பார்கள். அவர்களை நீங்கள் இழக்கும் சூழலை ஏற்பட்டுள்ளது. மறந்துவிடவேண்டாம்.

இப்தார் நோன்பு கூட்டத்தில் கலந்துகொண்டு கஞ்சி குடித்தும், கிருஸ்மஸ் கூட்டத்தில் கலந்துகொண்டு கேக் ஊட்டிவிடும், அரசியல்வாதிகள் எத்தனை பேர் வினாயக சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்துகொள்கிறார்கள்? கொழுக்கட்டை சாப்பிடுகிறீர்கள்? இஸ்லாமியர்கள் மீதோ, கிருஸ்தவர்கள் மீதோ எந்த தவறும் இல்லை. அரசியல்வாதிகளே இந்த பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள். இந்துக்கள் தான் சார்ந்த மதம் சார்ந்து ஓட்டளிக்கமாட்டார்கள், தான் சார்ந்த கட்சியின் அடிப்படையில் மட்டுமே ஓட்டளிப்பார்கள் என்ற தைரியம் மட்டுமே அரசியல்வாதிகளை இந்து மக்களின் உணர்வுகளை தொடர்ந்து புறக்கணிக்கும் செயலை செய்ய வைக்கிறது. இதுதான் ஜனநாயகமா?

உலகத்தில் உள்ள அத்துனை இந்துக்களும் கொண்டாடும் ஒரு பண்டிகையை கொண்டாடாவிட்டாலும் பரவாயில்லை, அதை பண்டிகையாக கொண்டாட மாட்டோம், விடுமுறை நாளாக மட்டுமே கொண்டாடுவோம் என்று சொல்வதுதான் ஜனநாயகமா? இது இந்துக்களை வெறுப்பேற்றும் செயலல்லவா! இன்றும் அக்கம்பக்கத்தில் வசிக்கும் மாற்று மதத்தினரிடம் இந்துக்கள் நட்பாகத்தான் பழகுகிறார்கள். ஆனால், அரசியல்வாதிகள் மட்டும் இந்து எதிர்ப்பு என்ற கொள்கையை வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் அத்தகைய தலைவர் சார்ந்த கட்சியின் ஒரு வண்டுமுருகனைகூட அவர்களால் மாற்ற முடியவில்லை. தினம் தினம் தோற்றுக்கொண்டிருக்கிறது அவர்களது இந்து எதிர்ப்புக்கொள்கை.

இந்துக்களின் கோவில்களை அறநிலையத்துறை தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. எல்லா கோவில்களுக்கும் சொத்துக்கள் குவிந்திருந்தாலும், கோவில்கள் செழுமையாக இருக்கிறதா? சரியான முறையில் பராமரிக்கப்படுகிறதா? அங்கு பணியாற்றுபவர்களுக்கு சம்பளம் சரியாக கொடுக்கப்படுகிறதா? எவ்வளவு ஊதியம் கொடுக்கப்படுகிறது என்பதை கேட்டால், சந்தி சிரிக்கும். இதைவிட கேவலம், பல கோவில்களில் பூஜைக்கான பொருட்களே முறையாக வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. இதுதான் ஜன நாயகமா? மற்ற மதத்தவரின் வழிபாட்டுத் தலங்களிலும், அறநிலையத்துறை சாராத இந்துக் கோவில்களும் செழுமையாகவே இருக்கின்றன. காரணம், அந்தக் கோவிலின் வருமானம் அவர்களிடமே போய்ச் சேருகிறது. ஆனால், அறநிலைத்துறை சார்ந்த கோவில்களில் அரசு எல்லா வளங்களையும் தன் வசம் வைத்துக்கொண்டு, கிடைக்கும் வருமானத்தையும் எடுத்துக் கொண்டு கோவில்களை குட்டிச்சுவராக்குவதுதான் ஜனநாயகமா?

பாஜக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு மதமாற்ற முயற்சிகள் உச்சத்தில் நடப்பதை நம் பார்க்கிறோம். இந்து குழந்தைகளுக்கு பொம்மைகள், திண்பண்டங்கள் கொடுப்பது, அவர்களிடம் மதப்பிரச்சாரங்களை செய்வது போன்ற பல யுக்திகளால் மதமாற்ற முயற்சி அதிகம் நடக்கிறது. இந்து ஏழைகள் மட்டுமே இவர்களது இலக்கு. அவர்களுக்கு செய்யும் உதவி அவர்களின் வறுமையை விரட்டவேண்டுமே தவிர அவர்களின் இந்து உணர்வை விரட்டக்கூடாது. அடுத்த மதத்தை ஒழிக்கும் முயற்சி ஜனநாயகமா? கட்டாய மதமாற்ற தடை சட்டம் ஏன் கைவிடப்பட்டது? மதமாற்றத்திற்கு அவர்கள் செலவிடும் பணம் கடல்தாண்டி வருகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்துக் கோவில்களில் கிடைக்கும் வருமானம் ஒருவேளை இந்து மக்களின் வளர்ச்சிக்கு கிடைக்குமானால், அந்தப் பணம் இந்துக்களை வளப்படுத்த உதவுமே!

உலகின் எந்த மூலையிலாவது ஒரு இந்து மாற்று மதத்தவரிடம் சென்று இந்துவாக மாறுங்கள் என்று பிரச்சாரம் செய்ததுண்டா? மதமாற்றத்தையே தொழிலாக கொண்டு எந்த இந்துவாவது சம்பளம் பெருகிறானா?

தமிழகத்தில் நாத்திகம் அதிகமாக இருப்பதுபோன்ற தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் ஒருகூட்டம். பெரும்பான்மையான ஆத்திகர்களை கேவலமாக பேசுவதே இவர்களது முழு நேரத் தொழில். பெரும்பான்மை ஆத்திகர்களின் அமைதி நாத்திகர்களுக்கு கூடுதல் பலத்தை கொடுக்கிறது. நம்மிடைய இருக்கும் ஒரு குணம் நம் எதிர்ப்பாளர்களுக்கு பலத்தை கொடுக்குமானால், அந்த குணம் நம்முடைய பலவீனம். இதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

பெரும்பான்மையான இந்துக்களுக்கு எதிராக ஒரு தலைவர் பேசுகிறார், அதை இந்துக்கள் அமைதியாக கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் அந்த தலைவரின் மீது அவர்கள் கொண்டிருக்கும் அன்பு. இதைப் புரிந்துகொள்ளாமல், கேட்டுக்கொண்டிருப்பவர்கள் எல்லாம் இந்துக்களுக்கு எதிரானவர்கள் என்று அவர் நினைத்தால், அவரது அறியாமை விரைவில் விலகும். மக்களே! உங்கள் தலைவர் உங்கள் மீது அன்பு வைத்திருக்கிறார் என்றால், அவர் எப்படி நீங்கள் வருத்தப்படும் விஷயத்தை எந்த சலனமும் இல்லாமல் செய்வார்?

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால், இன்று தமிழகத்தில் நாம் பார்க்கும் ஜனநாயகம் இந்து எதிர்ப்பாளர்களுக்காக உருமாற்றப்பட்ட ஜனநாயகம். சட்டங்களால் இந்த நிலையை மாற்ற முடியாது. தனிப்பட்ட ஒவ்வொரு இந்துவும் தான் சார்ந்த மதத்தின் மீது ஒரு பிடிப்பை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்துக்களின் உணர்வுகளை அவரவர் சார்ந்த கட்சியின் தலைமைக்கு உணர்த்த வேண்டும். இந்த விழிப்புணர்ச்சி ஓட்டு விஷயத்திலும் வருமானால், இத்தகைய தலைவர்களும் பங்குனி உத்திரத்திற்கு காவடி தூக்குவதையும் பார்க்கலாம்.

சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com