சிறப்புக் கட்டுரைகள்

நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கையிழப்பே கொண்டாட்டங்களின் உள்மனம்

6th Dec 2019 06:33 PM | எம். பாண்டியராஜன்

ADVERTISEMENT

 

ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் பாலியல் வன்முறைக் கொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட நால்வரும் அதிகாலையில்  சுட்டுக்கொல்லப்பட்டதை நாட்டின் பெரும்பான்மை  கொண்டாடிக் கொண்டிருக்கிறது.

ஊடகங்களும் மக்களின் மன நிலையைப் பிரதிபலிப்பதாக உற்சாகமூட்டுகின்றன.

தெலங்கானா காவல்துறைத் தலைவர் மகேந்திர ரெட்டிக்குப் பாராட்டு மழை.

ADVERTISEMENT

என்கவுன்டர்களைக் கடுமையாகக் கண்டித்தும் விமர்சித்தும் வரும் எத்தனையோ பேர் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்பதா, கொலையை ஆதரிப்பதா, கண்டிப்பதா எனப் பெரும் குழப்பத்தில் இருக்கிறார்கள், யோசிக்கிறார்கள்.

இந்த என்கவுன்டரில் என்ன நடந்திருக்கும் என்பதை எல்லோராலுமே ஊகிக்க முடியும். ஆனாலும்கூட பெரும்பாலானோர் கொண்டாடுகிறார்கள்.

ஏனெனில், இந்த சம்பவம் தொடர்பாக, குற்றம் சாட்டப்பட்டோருக்கு எதிராகத் தொடுத்து நீதிமன்றத்தில்  நடத்தப்படும் வழக்கின் விசாரணை எவ்வளவு காலம் நடக்கும் என எல்லோருக்கும் தெரியும்.

விசாரணை நீதிமன்றம், செசன்ஸ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம், மறு ஆய்வு, குடியரசுத் தலைவரிடம் மனு, மீண்டும் மீண்டும் மனுக்கள்!

இவர்களுக்கெல்லாம் தக்க தண்டனை கிடைக்க வாய்ப்பு இருக்கிறதா? தீர்ப்பு என்னவாக இருக்கும்? நடைமுறைகளைப் பார்க்கும் மக்கள் நம்பிக்கையிழந்திருக்கிறார்கள். எனவேதான், 'உடனடி நீதி' கண்டு உற்சாகம் கொள்கிறார்கள்.

இந்த என்கவுன்டருக்கு மக்களிடையே கிடைக்கும் ஆதரவும் அவர்களின் கொண்டாட்டமும் இப்போதைக்கு அரசுக்கும் காவல்துறைக்கும் உற்சாகமளிப்பதாக இருக்கலாம்.

ஆனால்,  உண்மையில் இது ஆபத்தான மன நிலை என்பதை அரச அமைப்புகளோ, நீதித் துறையோ, அரசியல் தலைவர்களோ அறிகிறார்களா, புரிகிறதா எனத் தெரியவில்லை.

கோடி கோடியாகக் கொள்ளையடிக்கும்போதும், ஊழலில் ஊறித் திளைக்கும்போதும் அவன் புத்திசாலி, சம்பாதிக்கத் தெரிந்திருக்கிறது என்று மக்கள் கடந்துபோய்விடுகிறார்கள்.

கொலை செய்யும்போதுகூட உணர்ச்சிவசப்படாத மக்கள், பாலியல் வன்முறைக் கொலைகளின்போது மட்டும்  பெரும்  கொந்தளிப்புக்கு ஆளாவது இந்த மண்சார்ந்த, மக்களின் மனநிலை சார்ந்த விஷயமும்கூட.

இதுவரை இதுபோன்ற எத்தனை வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் முறையாகத்  தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்?

பொள்ளாச்சி பாலியல் குற்ற வழக்கில் எத்தனை எத்தனை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன? எத்தனை பேர் குற்றவாளிகள்? எத்தனை பெண்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்பது இன்னமும்கூட யாருக்கும் தெரியாது. ஆனால், இன்று எல்லாமே சுபமிட்டு முடிக்கப்பட்டுவிட்டதாகத்தான் மக்கள் நினைக்கிறார்கள்.

என்கவுன்டர்களில் எப்படி அனைவருமே அதிகாலையில் அல்லது நள்ளிரவில் பெரும்பாலும் ஆளரவமற்ற இடங்களிலேயே சுட்டுக் கொல்லப்படுகிறார்கள்? கொல்லப்பட்டவர்களில் ஒன்றுமறியாத ஒருவரும்கூட இருக்கலாம்.

ஒரு நிரபராதிகூட தண்டிக்கப்பட்டுவிடக் கூடாதுதான்; அதற்காக எவ்வளவு குற்றவாளிகள் தப்பிச் சென்றுகொண்டே இருப்பார்கள்? என்று நினைக்கத் தொடங்குகிறார்கள் மக்கள்.

நீதிமன்றங்களின் மீதான நம்பிக்கையிழப்பே கொண்டாட்டங்களுக்குக் காரணம் என்றால் மிகையில்லை

நீதி பரிபாலன அமைப்பின் மீது மக்கள் நம்பிக்கையிழப்பது  வரவேற்கத் தக்க சூழ்நிலையல்ல, நாகரிகமான ஒரு சமுதாயத்தில் நல்லதுமல்ல.

இந்த என்கவுன்டர் நியாயந்தானா? என்ற கேள்விக்கு, ஒருவர் சொன்ன பதில், நல்ல கேள்விதான், ஆனால், பெண் குழந்தைகளைப் பெற்றவர்களிடம் மட்டும் கேளுங்கள்!

விழித்துக்கொள்ள வேண்டியது அரசமைப்புகளும் நீதித் துறையும்தான்!

ADVERTISEMENT
ADVERTISEMENT