சிறப்புக் கட்டுரைகள்

மனித முகத்துடன் காட்சி அளிக்கும் ஆதி விநாயகர்!

29th Aug 2019 06:19 PM | - ஜோதிட சிரோன்மணி தேவி

ADVERTISEMENT

 

சுக்லாம்பரதரம், விஷ்ணும், சசிவர்ணம், சதுர்புஜம்

ப்ரஸந்த வதநம் த்யாயேத் ஸர்வ விக்நோப சாந்தயே.

விநாயகர் சதுர்த்தி விழாவில் நடைபெறும் காலத்தில் விநாயகர் பற்றி சிறிதேனும் தெரிந்து கொள்ளவேண்டும். விநாயகர் எங்கும் இருக்கும் பரம்பொருள் என்பதற்கு அவரை  சந்தனம், களிமண், சுதை, வெள்ளெருக்கு வேர்,  மஞ்சள், சாணம் இப்படி எளிதாகக் கிடைக்கக்கூடிய பொருளில் விநாயகரை செய்து, பால் அல்லது நீர் கொண்டு அபிஷேகம்  செய்து அருகம் புல், வெள்ளெருக்கு மாலை அணிவித்து மற்றும் 21 இலைகளைக்  கொண்டு பூஜை செய்தல் நினைத்தது நடக்கும். 

ADVERTISEMENT

இவற்றில் சுதை - விநாயகருக்குமட்டும் அபிஷேகம் செய்யக்கூடாது. கையிலாயத்தில் சிவன் பார்வதி திருக்கல்யாண ஏற்பாடு நடைபெற்றது. அப்பொழுது அங்கு நிறைய  இடர்பாடுகள் ஏற்படுகிறது. பார்வதி தன் கரங்களால் மூலாதாரத்தைக் கொண்டு பிடித்து வைக்கிறார் அதுவே மூலாதார விநாயகராக குழந்தையாக தோற்றமளிக்கிறார்.  மூலாதாரத்தில் இருக்கும் விநாயகர், குண்டலினி சக்தியை அங்கே இருந்து எழுப்பிக்கொண்டு வந்து மற்ற ஆறு ஆதாரங்களில் தங்கித் தழைக்கச் செய்து கடைசியில்  சகஸ்ராரத்தை உணர வைக்கிறார்.

சிவபார்வதி திருக்கல்யாணம் என்றாலும் கணபதியை வழிபாட்டுக்குப் பின்பு திருமண வைபவம் நடைபெறும். விநாயகரின் அருளால்தான்   எந்தவித இடர்பாடுகளை நீக்க முடியும் என்பது அனைவரது கூற்று. எல்லா சுப விசேஷங்களில் வி என்கிற நாயகனை (விநாயகர்) மஞ்சள் பிடித்து முதலில் வணங்குவார்கள்.   இந்த இடத்தில் மஞ்சள் என்பது குருவை குறிக்கும் இங்கு விநாயகரிடம் ஒரு குருவின் தன்மை தெரிகிறது.

நாம் இன்று திருவாரூர் மாவட்டத்தில் திலதர்பணபுரி என்று சொல்லக்கூடிய அழகிய கிராமத்தில் காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள ஸ்தலமாகும்.

மனிதம்  முகத்துடன் அபூர்வமான தோற்றத்துடன் ஆதி விநாயகராகவும்; நரமுக விநாயகராகவும் முதல் மூர்த்தியாகவும் பின்பு தான் பல்வேறு அவதாரங்களை கொண்டு  உருவெடுக்கிறார் என்பது புராண கூற்று. இக்கோயிலுக்கு தனியாக ஆதி விநாயகர் தும்பிக்கையின்றி, வலக்கால் தொங்கவிட்டு, இடக்கால் மடித்து, இடக்கையை  இடக்காலின்மீது வைத்து வலக்கை சற்று சாய்ந்த அபய கரமாக அழகாக அமர்ந்துள்ளார். அதனால் நம் மூலாதார மூர்த்தியான ஆதி விநாயகரை எதோ ஒரு கர்மாவிற்காக  பிறந்த நாம் சனீஸ்வரர், ராகு, கேது மற்ற கிரகங்களின் பிடியில் மாட்டிக்கொண்டு இருக்கும் பொழுது இந்த விநாயகரின் காலை கட்டிப்பிடித்துகொண்டாள் அனைத்து  கர்மாக்களை நம்மை விட்டு விலகும் மற்றும் புத்தி தடுமாறாமல் எல்லாவித செயல்களையும் செய்து முடிக்க உதவியாக இருப்பார்.

ஜாதகத்தில் முக்தி என்றால் நமக்கு கேதுவும், 12ம் அதிபதியும் நினைவுக்கு வந்துவிடுவார்கள். கேதுவிற்கு உகந்த தெய்வம் விநாயகர். அதனால் இவருடைய தந்தை இங்கு  கிழக்கு நோக்கி பத்தாயிரம் ருத்திராட்சங்கள் கொண்ட ருத்திராட்சப் பந்தலின் கீழ் நாகம் குடைபிடிக்க பக்திப்பழமாக மூலவர் முக்தீஸ்வரராக காட்சி அளிக்கிறார். அம்பாள்  சொர்ணவல்லி தாயாருடன் சிவபெருமானுடன் இங்கு விநாயகர் அழகிய தோற்றத்தில் அருள்பாலிக்கிறார். 

திலதைப்பதி எனப்படும் திலதர்ப்பணபுரி திருத்தலத்தில் திருஞானசம்பந்தர் பெருமான் அருளிச்செய்த தேவாரப் பாடல்:

பொடிகள்பூசிப் பலதொண்டர் கூடிப் புலர்காலையே
அடிகள்ஆரத் தொழுதேத்த நின்ற அழகன்னிடம்
கொடிகள்ஓங்கிக் குலவும் விழவார் திலதைப்பதி
வடிகொள் சோலைம் மலர்மணம் கமழும் மதிமுத்தமே !!

தொண்டர்மிண்டிப் புகைவிம்மு சாந்துங்கமழ் துணையலும்
கொண்டுகண்டார் குறிப்புணர நின்ற குழகன்னிடம்
தெண்டிரைப்பூம் புனல்அரிசில் சூழ்ந்த திலதைப்பதி
வண்டு கொண்டுற்று இசைபயிலும் சோலைம் மதிமுத்தமே !!

இராமபிரான் பிதுர்தோஷ நிவர்த்திக்காக எல்லா இடங்களிலும் சென்று நிறைவேற்ற முடியாததால் கடைசியாக  இங்குள்ள ஸ்தலத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.  இக்கோவிலின் தெற்குப்புரத்தில் ராமன் தங்களுடைய தந்தை தசரதர் மற்றும் ஜடாயுவிற்காக பிதுர்தோஷ நிவர்திகளை செய்து முடித்தார் என்று கூறப்படுகிறது. அவர்  பிடித்து வைத்த 4 பிண்டங்களும் லிங்கங்களாக மாறிவிட்டது. இன்றும் இந்த பிதுர் லிங்கங்கள் அங்கு அமையப்பட்டுள்ளது. இங்கு பஞ்சாயதனம் என்று கூறப்படும்  ஐம்பெரும் தெய்வங்களான பிள்ளையார், சூரியன், அம்பிகை, விஷ்ணு, சிவன் என்று ஒரே நேரத்தில் ஒரே பீடத்தில் வைத்து பூஜை செய்வது என்பது மிகவும் விசேஷம்.  

இங்கு எந்தத்திதியும் நட்சத்திரமும் பார்க்காமல் எள் (திலம்) வைத்து பிதுர் தர்ப்பணம் செய்யலாம். இதனால் தான் இத்தலம் திலதர்ப்பணபுரி என்றழைப்படுகிறது. பஞ்சசத்தி  என்று கூறப்படும் சிவபெருமானுடைய பராசக்தி, ஆதிசக்தி, இச்சாசக்தி, ஞானசக்தி, கிரியாசக்தி என்ற ஐவகைச் சக்தியும் ஒன்றாக அமைந்த ஸ்தலம். 

திருத்தலம் அமைவிடம்

திலதர்ப்பணபுரி திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ள எரவாஞ்சேரி செல்லும் சாலையில் சுமார் 2 km தொலைவில் உள்ளது. 

அருள்மிகு மதிமுக்தீஸ்வரர் திருக்கோயில்
செதலபதி, பூந்தோட்டம் அஞ்சல், நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம்:  609503 

திறக்கும் நேரம் 

காலை:  7 மணி -  பகல் 12-45 மணி வரை
மாலை : 4 மணி - இரவு 8  மணி வரை  

ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்தனை ஞானக்கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே
-திருமூலர் (திருமந்திரம்).
விநாயகர் துதியினை சொல்லி வணங்குவோம்

குருவே சரணம்  

- ஜோதிட சிரோன்மணி தேவி

தொலைபேசி : 8939115647

ADVERTISEMENT
ADVERTISEMENT