புது தில்லி: கடந்த 3 ஆண்டுகளில் ரயில்வேயில் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் பயணிகளிடம் இருந்து பெறப்படும் அபராதத் தொகை 30% உயர்ந்துள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.
அதன்படி, 2016 முதல் 2019ம் ஆண்டு வரையிலான 3 ஆண்டுகளில் மட்டும் டிக்கெட் எடுக்காத பயணிகளிடம் இருந்து அபராதமாக ரூ.1,377 கோடியை இந்திய ரயில்வே வசூலித்துள்ளது.
நாடாளுமன்ற கமிட்டி இது குறித்து சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் பயணிகளிடம் இருந்து பெறப்படும் அபராதத் தொகை மூலமான வருவாய் கணிசமாகக் குறைந்து வருவதாகக் கூறப்பட்டது.
இதையடுத்து, டிக்கெட் எடுக்காமல் பயணிக்கும் பயணிகளுக்கு எதிராக இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் இந்திய ரயில்வே அறிவுறுத்தியது. அதுமட்டுமல்ல, அனைத்து ரயில்வே டிக்கெட் பரிசோதனையாளர்களுக்கும் ஆண்டுக்கு இவ்வளவு வருவாயை ஈட்டித்தர வேண்டும் என்று இந்திய ரயில்வே இலக்கு நிர்ணயித்திருந்தது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இது குறித்து தெரியவந்திருக்கும் தகவல் என்னவென்றால், 2016 - 2017ம் ஆண்டில் மட்டும் ரூ.405.30 கோடி அளவுக்கும், 2018 - 2019ம் ஆண்டில் ரூ.530 கோடியும் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.
டிக்கெட் இல்லாமல் பிடிபடும் பயணிகள், அந்த ரயில் டிக்கெட்டுக்கான கட்டணத்துடன் ரூ.250ஐ அபராதமாக செலுத்த வேண்டும். ஒரு வேளை அபராதத்தை செலுத்த மறுத்தாலோ அல்லது பிடிபடும் நபரிடம் பணம் இல்லையென்றாலோ அவர் ரயில்வே பாதுகாப்புப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு அவர் மீது ரயில்வே சட்டம் 137ன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்படும்.
அவர் நீதிபதி முன்பு நிறுத்தப்பட்டு, அவருக்கு ரூ.1000 அபராதமாக விதிக்கப்படும். ஒரு வேளை அந்த ஆயிரத்தையும் அவர் செலுத்தத் தவறினால், அவர் அதிகபட்சமாக 6 மாதம் சிறையில் அடைக்கப்படுவார் என்கிறது இந்தியன் ரயில்வே.
ஆச்சரியத்தை அதிகரிக்கும் சின்ன சின்னத் தகவல்கள்!
- 2018 ஏப்ரல் - 2019 ஜனவரி வரை டிக்கெட் எடுக்காமல் பிடிபட்டவர்கள் மட்டும் 89 லட்சம் பேர்.
- டிக்கெட் எடுக்காதவர்களுக்கு குறைந்தபட்ச அபராதம் ரூ.250.
- 2016ம் ஆண்டு முதல் இப்படி அபராதமாகக் கிடைத்த வருவாய் மட்டும் ரூ.1,377 கோடியாகும்.
- கடந்த 3 ஆண்டில் மட்டும் அபராதமாகக் கிடைக்கும் வருவாய் 31% அதிகரிப்பு
- ரயில்வேயில் காத்திருப்புப் பட்டியலில் டிக்கெட் புக் கெய்யும் 47% பயணிகளுக்கு ஒருபோதும் படுக்கை வசதி கொண்ட இருக்கை கிடைப்பதே இல்லை.
- தெற்கு ரயில்வேயில் ஒரு நாளைக்கு 31,575 பேர் காத்திருப்புப் பட்டியலில் ரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்கிறார்கள்.
- அதில் 19,046 பேருக்கு மட்டுமே டிக்கெட் உறுதியாகிறது.
- தெற்கு ரயில்வேயில் காத்திருப்போர் டிக்கெட்டை முன்பதிவு செய்து உறுதியாவது தினமும் 61%ஆக உள்ளது.
- இதேப்போல ஒட்டுமொத்தமாக 2015ம் ஆண்டு நவம்பர் முதல் 2019 மார்ச் மாதம் வரை மட்டும் டிக்கெட்டுகளை ரத்து செய்வதன் மூலம் ரயில்வே பெற்ற வருவாய் ரூ.5,366 கோடியாகும்.