பராமரிப்பில்லாத கிராம நூலகங்களில் வீணாகும் "பொக்கிஷங்கள்' 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் போதிய பராமரிப்பின்றி செயல்படாத நிலையில் உள்ள நூலகங்களில் புத்தகங்கள் சிதறிக் கிடப்பதுடன், செல்லரித்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பராமரிப்பில்லாத கிராம நூலகங்களில் வீணாகும் "பொக்கிஷங்கள்' 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் போதிய பராமரிப்பின்றி செயல்படாத நிலையில் உள்ள நூலகங்களில் புத்தகங்கள் சிதறிக் கிடப்பதுடன், செல்லரித்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
 

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 526 ஊராட்சிகள், 5 நகராட்சிகள், 10 பேரூராட்சிகளிலும் அண்ணா மறுமலர்ச்சி திட்டம் மூலம் நூலகங்கள் அமைத்து, செயல்பட்டு வருகின்றன. இதில், ஒவ்வொரு நூலகத்திலும் கிராமங்களில் உள்ள இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் ரூ. 3 லட்சம் முதல் ரூ. 5 லட்சம் மதிப்பிலான நூல்கள் மற்றும் பொது அறிவு நூல்கள் உள்ளன. அத்துடன், அவ்வப்போது போட்டித் தேர்வுக்கு தயாராகும் வகையில் புதிய நூல்களும், நாள்தோறும் நாளிதழ்கள் மற்றும் வார இதழ்கள் வாங்கி வைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவை ஒவ்வொரு ஊராட்சியிலும் இந்த கிராம நூலகங்கள் ஊராட்சி செயலரின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வந்தது. இந்த நூலகம் அமைக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பெரியவர்கள் அதிகமானோர் பயன்படுத்தத் தொடங்கினர்.
 

தற்போது ஊழியர்கள் பற்றாக்குறை, நூல்கள் வாங்க தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்யாதது போன்ற காரணங்களால் நூலகங்கள் செயல்பட முடியாத நிலையில் உள்ளன. கிராமப்புற நூலகங்கள் ஊராட்சி செயலர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன.
 

மேலும், இப்பணிக்கு நூலகம் தொடர்பான அனுபவம் இல்லாதவர்கள் பகுதி நேர நூலகர்களாக மதிப்பூதியத்தில் நியமனம் செய்யப்படுகின்றனர்.
 

இதனால் வாசகர்களின் தேவையறிந்து பணியாற்ற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. அதிலும் மாதந்தோறும் குறைந்தளவு மதிப்பூதியம் வழங்குவதால் சரியாக பணிக்கு வருவதில்லை எனக் கூறப்படுகிறது.
 

தற்போதைய நிலையில், கடந்த சில ஆண்டுகளாக அரசு மூலம் வரும் நூல்களின் எண்ணிக்கை குறைந்தது.
 

மேலும், நூலகம் திறக்காதது குறித்து பகுதி நேர நூலகர்களிடம் கேட்டால், கடந்த 6 மாதங்களாக மதிப்பூதியம் சரிவர மதிப்பூதியம் வழங்கவில்லை எனக் கூறுகின்றனர். அதேபோல், நாளிதழ்கள் வாங்குவதற்கான நிதியும் நிறுத்தப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்து வருகின்றனர்.
 

செல்லரிக்கும் நூல்கள்...
 

இதுகுறித்து பூண்டி ஊராட்சி ஒன்றியத்தைச் சேர்ந்த ரெங்கன் கூறுகையில், இந்த ஒன்றியத்துக்கு உள்பட்ட திருப்பேர் கிராமத்தில் தற்போது, போதிய பராமரிப்பு இல்லாத காரணத்தால் நூல்கள் அனைத்தும் செல்லரித்துக் காணப்படுகின்றன.
 

அத்துடன், நூலகம் குறித்து விழிப்புணர்வு இல்லாதவர்கள் பகுதி நேர நூலகர்களாக நியமனம் செய்யப்பட்டதால் நூல்களை வைக்கும் புத்தக அடுக்குகளில் தலைப்புகளில் அடிப்படையில் அடுக்கி வைப்பதற்கான எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. அத்துடன், ஜன்னல்கள் அனைத்தும் திறந்து கிடப்பதால் மழைநீர் உள்ளே புகுந்து நூல்கள் அனைத்தும் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், நூல்கள் அனைத்தும் அடுக்குகளில் இருந்து சரிந்து தரையில் விழுந்து செல்லரித்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது என்றார்.
 

இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், பகுதி நேர நூலகர்களுக்கான மதிப்பூதியம் ஊராட்சி நிதி மூலம் வழங்கப்படுகிறது. இதில் ஒவ்வொரு ஊராட்சியிலும் மதிப்பூதியம் வழங்கவில்லை என ஏற்கெனவே புகார் தெரிவித்துள்ளனர்.
 

அதேபோல், பெரும்பாலான ஊராட்சிகளில் குறைந்த ஊதியம் என்பதால் பணிக்கு வர யாரும் முன்வருவதில்லை. விரைவில் பகுதி நேர நூலகர்களுக்கு மதிப்பூதியம் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோல் நூலக பராமரிப்புக்கான திட்ட மதிப்பீடு தயார் செய்து அனுப்பி வைக்கப்பட உள்ளது என்றார்.
 
 

"தற்போது ஊழியர்கள் பற்றாக்குறை, நூல்கள் வாங்க தொடர்ந்து நிதி ஒதுக்கீடு செய்யாதது போன்ற காரணங்களால் நூலகங்கள் செயல்பட முடியாத நிலையில் உள்ளன.
 

கிராமப்புற நூலகங்கள் ஊராட்சி செயலர்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன. மேலும், இப்பணிக்கு நூலகம் தொடர்பான அனுபவம் இல்லாதவர்கள் பகுதி நேர நூலகர்களாக மதிப்பூதியத்தில் நியமனம் செய்யப்படுகின்றனர். இதனால் வாசகர்களின் தேவையறிந்து பணியாற்ற முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது."
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com