கூண்டில் நாம் அடைபட்டாலும், சுதந்திரம் அடைபடாது!

‘சுதந்திரம்' என்பது நாமே எடுத்துக்கொள்வதா? அல்லது அடுத்தவர் நமக்கு கொடுப்பதா?
கூண்டில் நாம் அடைபட்டாலும், சுதந்திரம் அடைபடாது!

‘சுதந்திரம்' என்பது நாமே எடுத்துக்கொள்வதா? அல்லது அடுத்தவர் நமக்கு கொடுப்பதா? இந்தக் கேள்வி இன்றைய தினத்தில் மிக அவசியமானது. 1947ம் வருடத்திற்கு பிறகு சுதந்திரத்தைப் பற்றி பேசி அதற்கு உயிர் கொடுத்துள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம். நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் சுதந்திரத்தை அடுத்தவர் கொடுத்து பெறுவதிலேயே இருக்கிறோம். அப்படியென்றால் ‘சுதந்திரம்' என்பது கொடுப்பவரின் பாக்கெட்டில் பத்திரமாக இருக்கிறது என்றுதானே நினைக்கத் தோன்றுகிறது.

காவல்துறையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ஓடி ஒளிந்துகொள்வதுதான் முழுச்சுதந்திரம் என்று நினைத்தால், அது ஏற்றுக் கொள்ளக்கூடிய சுதந்திரமா? இது இக்கட்டான கேள்வி. அதில் சுதந்திரம் இல்லை. ஆனால், அதை சுதந்திரம் என்று யாராவது நினைத்தால், சுதந்திரத்தை பற்றிய அவரது புரிதல் தவறாக இருக்கிறது என்று அர்த்தம்.

விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பார், வெளி நாடு தப்பிச் செல்ல மாட்டார் என்றெல்லாம் அவரின் சார்பில் அவரது வழக்கறிஞர் உறுதியளித்தார். இவையெல்லாம் பயத்தின் வெளிப்பாடா? இல்லை. தேவையற்ற சிறைவாசத்திலிருந்து தப்பிக்க பயன்படுத்தப்படும் சட்ட நடைமுறை என்று சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். ஆனால், இப்படிப்பட்ட சட்ட நடைமுறையை சுதந்திர போராட்ட வீரர் வீரசாவர்க்கர் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து கடைபிடித்த போது அவரை கோழை என்று அசிங்கப்படுத்துகிறது காங்கிரஸ். இன்றும் அதே பதத்தை தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறது. சாவர்க்கர் போராடியது பிரிட்டிஷ் அரசை எதிர்த்து. ப. சிதம்பரம் போராடுவது நம்மவர்களை எதிர்த்து. தன்னுடைய விடுதலையை சுதந்திரத்தோடு ஒப்பிடும் ப. சிதம்பரமும் காங்கிரஸும், வீரசாவர்க்கரின் கடிதமும் இதே போன்ற ஒரு சுதந்திரத்தை நோக்கியது என்பது ஏன் புரிந்துகொள்வதில்லை?

கடந்த 21ம் தேதி சிதம்பரம் கைது செய்யப்படுவதற்கு முன் காங்கிரஸ் அலுவலகத்தில் திடீரென்று பத்திரிக்கையாளர்கள் முன் தோன்றினார். “ நாட்டின் குடிமக்களுக்கு சுதந்திர உரிமையை நம் அரசியல் சட்டம் வழங்கியுள்ளது. தனிமனித சுதந்திரமே ஜனநாயகத்தின் அடிப்படை என்று நம்புகிறேன். உயிர் அல்லது சுந்தந்திரம்', இதில் எது வேண்டும் என என்னிடம் கேட்டால், சுதந்திரத்தைத்தான் தயக்கமின்றி தேர்வு செய்வேன். சுதந்திரத்தை பெற நாம் போராடினோம். இப்போது, சுதந்திரத்தை பாதுகாக்க போரடி வருகிறோம். கடந்த 24 மணி நேரத்தில் நடந்த நிகழ்வுகளால், சிலர் கவலை அடைந்துள்ளனர். பலருக்கு குழப்பம் ஏற்பட்டுள்ளது. அந்த கவலை மற்றும் குழப்பம் போக்கவே இப்போது செய்தியாளர்களை நான் சந்திக்கிறேன்', என்றெல்லாம் பேசினார் சிதம்பரம்.

சிதம்பரம் அவர்களே! நீங்கள் உள்துறை அமைச்சராக இருந்த போது கைது செய்யப்பட்ட பெரிய அரசியல்வாதிகளும் இதே கருத்தை சொல்லியிருந்தால், அதை ஏற்றுக் கொண்டிருப்பீர்களா? அல்லது அத்தகைய கைது நடவடிக்கைகள் எல்லாமே சுதந்திரத்திற்கு எதிரானது என்று தற்போது கருத்து தெரிவிப்பீர்களா? ஒருவேளை உயிரா! சுதந்திரமா! அல்லது ஜாமீனா? என்று கேள்வியை கேட்டிருந்தால் அப்போதும் நீங்கள் சுதந்திரத்தை தேர்ந்தெடுப்பீர்கள் என்று நம்புகிறோம்.

சிபிஐ உங்களைத் தேடுகிறது என்ற செய்தியை தொலைக்காட்சி மூலமாக உலகமெங்கும் ஒளிபரப்பப்பட்டது. அதைப்பற்றிய விவாதங்களும் நடந்தது. சிபிஐ உங்கள் வீட்டுக்கு பலமுறை வந்தது. வாசலில் ‘இரண்டு மணி நேரத்தில் விசாரணைக்கு வரவேண்டும்', என்ற நோட்டீசை ஒட்டியது. அந்த நோட்டீசை நீங்கள் மதித்தீர்களா? உங்களைச் சார்ந்தவர்கள் அதில் குறைகளை கண்டுபிடித்து கேள்விகளை எழுப்பினார்கள். அந்த நோட்டீஸை புறக்கணித்தீர்கள். எதற்காக அந்த நோட்டீஸை ஒட்டினீர்கள் என்று கேள்வி கேட்கும் சுதந்திரம் உங்களிடம் இருந்ததே, அதை ஏன் நீங்கள் பயன்படுத்தவில்லை?

ஜாம்மு காஷ்மீரில் இண்டெர்நெட், செல்போன் இயங்கவில்லை என்று சில நாட்களுக்கு முன் முழங்கிய நீங்கள், தலைமறைவாக இருந்த தருணத்தில் உங்கள் செல்போனை ‘சுவிட்ச் ஆப்' செய்து வைத்திருந்தீர்களே! உங்களின் தனிமனித சுதந்திரத்தை செல்போனை ‘சுவிட்ச் ஆப்' செய்வதன் மூலமாகவா நிரூபிக்க வேண்டும்?

உங்கள் வீட்டின் முன் சிபிஐ அதிகாரிகள் நிற்கும் போது கதவுகளை உட்புறமாக பூட்டி வைத்தீர்கள். இதனால் சிபிஐ அதிகாரிகள் சுவர் ஏறி குதிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டார்கள். ‘தன் மீது குற்றம்சாட்டப்பட்ட பின் நேராகச் சென்று சிபிஐ அலுவலகத்தின் கதவை தட்டுமளவிற்கு உங்களுக்கு துணிச்சலும், சட்டப்பாதுகாப்பும் இருக்கிறது', என்று நாங்கள் நினைத்திருந்தோம். அப்படியில்லாமல் அதிகாரிகளை வெளியில் காக்க வைப்பதுதான் சுதந்திரம் என்று நீங்கள் நினைத்தீர்களா? அதுதான் சுதந்திரம் உங்களுக்கு கற்றுக்கொடுத்த பாடமா?

உள்துறை அமைச்சராக நீங்கள் இருந்த போது இதே போன்ற பல அதிகாரிகளை கையாண்டிருப்பீர்கள். இப்போது பணியில் இருப்பவர்களும் அதே போன்ற அதிகாரிகள் தானே? உங்களுடன் இருக்கும் போது அவர்கள் அதிகாரிகள், மற்றவர்களோடு இருக்கும் போது அவர்கள் சதிகாரர்களா?

பாத்ரூமில் வழுக்கி விழுந்து கை, கால்களில் மாவுகட்டுடன் காட்சியளிக்கும் உள்ளூர் குற்றவாளிகளுக்கும் இத்தகைய சட்டப்பாதுகாப்பும், சுதந்திரமும் கிடைக்கிறதா? நிச்சயமாக இல்லை. அப்படியென்றால் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற பதம் மிகப்பெரிய பொய்யா? ப. சிதம்பரம் அவர்களே! சுதந்திரம் என்ற வார்த்தைக்கு உங்கள் அகராதியில் இருக்கும் விளக்கம் நிஜத்தில் சதாரண மக்களுக்கு கிடைப்பதில்லை. உள்துறை அமைச்சராகவும், நிதியமைச்சராகவும் இருந்த நீங்கள் இதைப்பற்றி என்றாவது கவலைப்பட்டிருக்கிறீர்களா? எவ்வளவோ புகழ்பெற்ற அரசியல்வாதிகள் கைது செய்யப்பட்டு, மாதக்கணக்கில் சிறையிலடைக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் ஜாமின் பெற்று தங்களை பரிசுத்தமானவர்கள் என்று நிரூபித்தவர்களும் உண்டு. அப்படி நிரூபிக்க முடியாமல் தண்டனை பெற்றவர்களும் உண்டு. ஆனால், வெகு சிலர் மட்டுமே கைது நடவடிக்கைக்கு ஒத்துழைக்காமல் முரண்டுபிடித்த வரலாறும் உண்டு. ஒரு நாள் தலைமறைவு, வீட்டுக் கதவை பூட்டி வைத்து அதிகாரிகளை சுவர் ஏறிக் குதிக்கச் செய்தது போன்றவை உங்கள் ராஜதந்திரத்திற்கு கிடைத்த வெற்றியாக இருக்கலாம். ஆனால், இவையெல்லாம் உங்கள் சரித்திரத்தில் இடம்பெறப்போகும் கரும்புள்ளிகள்.

ஒரு குட்டிக்கதை.

ஒரு கிராமம். ஒரு சிறுத்தை அடிக்கடி ஊருக்குள் புகுந்து மக்களுக்கு தொந்தரவு கொடுத்தது. மக்கள் சிறுத்தையை பிடிக்க முடிவுசெய்தனர். பெரிய கூண்டு ஒன்றை தயார் செய்தனர். வெளியே தெரியாதவாறு இலைகளால் மூடினர். கூண்டுக்குள் ஆடு ஒன்றை கட்டிவைத்தார்கள். ஆட்டைச் சாப்பிட சிறுத்தை வரும் போது கூண்டின் கதவு தானாகவே மூடிக்கொள்ளும். இது தான் ஏற்பாடு.

அந்த வழியே ஒரு சாது சென்றுகொண்டிருந்தார். ஆடு அவரை அழைத்தது.

‘சுதந்திரமாக சுற்றித் திரிந்துகொண்டிருந்த என்னை இங்கே கட்டிவைத்துள்ளார்கள். இது நியாயமா? என்று கேட்டது ஆடு.

பதிலேதும் சொல்லாமல் சாது அந்த இடத்தை விட்டு நகர்ந்தார்.

சற்று நேரத்தில் சிறுத்தை அங்கு வந்தது. ஆட்டுக்குட்டியைப் பார்த்தது. அதைச் சாப்பிட கூண்டுக்குள் நுழைய முயற்சித்தது. அப்போது ஆடு பேசத் தொடங்கியது.

‘சிறுத்தையே என்னை இங்கே கட்டிவைத்திருப்பது உன்னை பிடிப்பதற்காகத்தான். என் அருகில் நீ வந்தவுடன் கதவு தானாகவே மூடிக்கொள்ளும். நீ மாட்டிக்கொள்வாய்! ஜாக்கிரதை', என்று எச்சரித்தது ஆடு.

‘நீ சொல்வதை எப்படி நான் நம்புவது! என்னை ஏமாற்றப்பார்க்கிறாயா?', என்றது சிறுத்தை.

‘நிரூபிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. நம்புவதும், நம்பாததும் உன் இஷ்டம்', என்றது ஆடு.

சிறுத்தைக்கு அகோர பசி. தற்போது பயமும் சேர்ந்து கொண்டது. ஆடு சொல்வதை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தது. அந்த வழியே சாது வந்துகொண்டிருந்தார். சிறுத்தை நேராக சாதுவிடம் சென்றது.

‘எனக்கு பசிக்கிறது. ஆடு சொல்வது உண்மையா? சரியான பதிலைச் சொல். இல்லையென்றால் உன்னைச் சாப்பிட்டு விடுவேன்', என்றது சிறுத்தை.

பயந்து போனார் சாது. யோசிக்கத் தொடங்கினார்.

‘ஆடு சொல்வது உண்மை என்று சொன்னால், பசியோடு இருக்கும் சிறுத்தை நம்மை சாப்பிட்டுவிடும். பொய் என்று சொன்னால், ஆட்டை சாப்பிட்டு விடும்', என்றவாறு மூளையை கசக்கத் தொடங்கினார் சாது.

‘என்ன யோசிக்கிறாய்? பதில் சொல்', என்று மிரட்டியது சிறுத்தை.

‘சற்று பொறு, ஆடு சொல்வது உண்மையா என்பதை கண்டுபிடிக்கிறேன்', என்று சொல்லியவாறு கூண்டுக்குள் நுழைந்தார் சாது. சட்டென்று கதவு மூடிக்கொண்டது. கூண்டில் மாட்டிக்கொண்டார் சாது. அதுவும் நன்மைக்குத்தான். இனி சிறுத்தையால் அவரை கொல்ல முடியாது.

உள்ளிருந்தபடியே சிறுத்தையிடம் பேசினார் சாது,

‘சிறுத்தையே! ‘ஆடு சொன்னது உண்மைதான்', என்றார் சாது

‘நல்லவேளை என்னைக் காப்பாற்றினாய். இனி இந்த ஊரில் இருந்தால் எனக்கு ஆபத்து', என்றவாறு காட்டுக்குள் ஓடியது சிறுத்தை.

கூண்டுக்குள் இருந்த ஆட்டுடன் பேசினார் சாது.

‘பார்த்தாயா. வெளியில் சுற்றித் திரிவது சுதந்திரமல்ல. நாம் இந்த கூண்டில் அடைபட்டுக்கிடந்தாலும், பாதுகாப்பாக இருக்கிறோம். சுதந்திரம் என்பது ஒரு செயல் அல்ல. ஒரு உணர்வு', என்றார் சாது.

‘நீங்கள் சொல்வது மிகச் சரி. ஆனால் அதை அடைபட்டுக்கிடக்கும் போது தானே உணர்கிறோம்' என்றது ஆடு

‘அருமையான பதில். நீ சொல்வது உண்மைதான். சுதந்திரத்தின் அருமை அடைபட்டவர்களுக்கும், அடிமைகளுக்கும்தான் புரியும். அடைபட்டுக்கிடப்பது நாமே தவிர சுதந்திரமல்ல', என்றவாறு கிளம்பினார் சாது.

யார் ஆடு, யார் சாது என்ற விளக்கமெல்லாம் தேவையில்லை. புரிந்துகொள்ள வேண்டியது சிறிய விஷயம். அதிகாரத்தில் இருக்கும் போது, அதாவது சுதந்திரத்தை அடுத்தவருக்கு கொடுக்கும் நிலையில் இருக்கும் போது உணரப்படாத சுதந்திரம், அடைபட்டுக் கிடக்கும் போது உணரப்படுகிறது என்பதுதான். இது யாரையும் குறிப்பிட்டு சொல்லப்பட்டதல்ல. உயர் பதவியும், வாழ்க்கையின் உயர்ந்த நிலையும் நிரந்தரமல்ல. இருக்கின்ற போது அடுத்தவர் வெறுப்பை சம்பாதிக்காமல் இருந்தால், சுதந்திரம் நம்மிடமே இருக்கும், அதைப்பற்றி தனியாக சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. சுதந்திரம் நம்மிடம் இருக்கும் உணர்வு, அது ஒரு செயல் அல்ல. ஆகையால், சிதம்பரம் அவர்களே! ‘சுதந்திரத்திற்கு ஆபத்து', என்ற உங்களது கருத்தை ஏற்க முடியாது. இருபத்தி ஐந்து முறைக்கு மேல் முன் ஜாமீன் வழங்கியபோது உணரப்படாத சுதந்திரம், ஒரு முறை முன் ஜாமீன் மறுக்கப்பட்டபோது பறிபோய்விட்டது என்று சொல்வது சரியல்ல.

சிதம்பரம் அவர்களே! வழக்குகளையும், விசாரணைகளையும் தைரியமாக சந்தியுங்கள். தொடர்ந்து முன் ஜாமீன் பெரும் முயற்சியை கைவிடுங்கள். நீங்கள் சுத்தமானவர், நேர்மையானவர் என்பதை உலகிற்கு காட்டும் அருமையான வாய்ப்பை நழுவவிடாதீர்கள்.

- சாது ஸ்ரீராம்
saadhusriram@gmail.com
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com