முசிறி பாப்பிரஸ்- உலக வணிக ஒப்பந்தங்களில் காலத்தால் மிகப் பழமையானது

முசிறி பாப்பிரஸ்- உலக வணிக ஒப்பந்தங்களில் காலத்தால் மிகப் பழமையானது

பண்டைய தமிழரின் அயலகத் தொடர்புகள்பழந்தமிழ் வணிகர்கள், சர்வதேச வர்த்தகத்தின் முன்னோடிகளாக இருந்துள்ளனர்.

(‘Muziris Papyrus’-Ancient trade agreement)
பண்டைய தமிழரின் அயலகத் தொடர்புகள்
பழந்தமிழ் வணிகர்கள், சர்வதேச வர்த்தகத்தின் முன்னோடிகளாக இருந்துள்ளனர். பண்டைய தமிழர் வாழ்விற்கு இன்றியமையாதது பொருள் என்று கருதினர். உயிர் வாழ்வதற்குத் தேவையான கூறுகளாக உள்நாட்டுப் பொருள்களையும், அயல்நாட்டுப் பொருள்களையும் கருதலாயினர். அத்தகைய பொருள்களைப் பெறச் சோம்பல் இல்லாமல் கடுமையாக உழைத்து வளம் சேர்த்தனர். இம்முயற்சியின் ஒரு கூறாக,

திரைகடல் ஓடியும் திரவியம் தேடு

(கொன்றை வேந்தன், 39)

என்ற முதுமொழிக்கு ஏற்பக் கடல் கடந்த நாடுகளுடன் வாணிபம் செய்து பொருள் ஈட்டினர். பழந்தமிழர்கள் மலைகளுடனும், காடுகளுடனும், கடலுடனும் கலந்து உறவாடினார்கள். இவர்கள் பண்டைக் காலத்திலேயே அயல்நாடுகள் பலவற்றுடன் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர். இதற்கான சான்றுகளை அயல்நாட்டுக் குறிப்புகளைக் கொண்டும், நம்முடைய பழைய இலக்கியங்களில் காணப்படும் குறிப்புகளைக் கொண்டும் அறிந்து கொள்ளலாம்.

அயல்நாட்டுக் குறிப்புகள்
பழந்தமிழர்கள் மேற்கே கிரீஸ் (கிரேக்கம்), ரோமாபுரி, எகிப்து முதல் கிழக்கே சீனா வரையில் கடலோடிப் பிழைத்தார்கள். இந்நாடுகள் மட்டுமின்றிப் பாலஸ்தீனம், மெசபடோமியா, பாபிலோனியா போன்ற மேலை நாடுகளுடனும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள். மேலும் வட இந்திய நாடுகளுடனும் வாணிபத் தொடர்பு கொண்டிருந்தார்கள்.

தமிழகத்துப் பண்டங்களான ஏலம், இலவங்கம், இஞ்சி, மிளகு ஆகியவற்றிற்கு மேற்கு ஆசிய நாடுகளில் மிகுந்த தேவை ஏற்பட்டது. இதனைக் கருத்தில் கொண்ட பழந்தமிழர்கள் இவை போன்ற பொருள்களை அந்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தனர்.

யூதர்களின் ஆதி சமயத் தலைவர் மோசஸ் (Moses) என்பவர், தாம் நிகழ்த்தி வந்த இறைவழிபாட்டில் ஏலக்காயைப் பயன்படுத்தினார் என்று பழைய ஏற்பாடு (Old Testament) கூறுகிறது. மோசஸ் கோயில் கட்டி வழிபாடு செய்தது கி.மு. 1490இல் என்பர்.

தென் அரேபியா நாட்டு அரசி ஷேபா (Sheba), இஸ்ரேல் நாட்டின் மன்னன் சாலமன் (Solomon) என்பவனைக் காணச் சென்றபோது, அவனுக்குப் பரிசுப்பொருள்களாக ஏலக்காய், இலவங்கம் போன்ற நறுமணப் பண்டங்களைக் கொண்டு போனதாகப் பழைய ஏற்பாட்டில் ஒரு குறிப்புக் காணப்படுகிறது. சாலமன் ஆண்ட காலம் கி.மு.1000 என்பர்.

சாலமனுக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை சேரநாட்டுத் துறைமுகத்திலிருந்து கப்பல் மூலம் மயில் தோகை, அகில் மரங்கள், யானைத் தந்தம், குரங்குகள், வெள்ளி போன்ற பொருள்கள் கொண்டு செல்லப்பட்டன என்ற குறிப்பும் அறியப்படுகிறது.

மேலே குறிப்பிட்ட சான்றுகளால் ஏறத்தாழ மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பழந்தமிழர் மேலை நாட்டாரோடு வாணிபத் தொடர்பு கொண்டிருந்தனர் என்பதை அறியலாம்.

முசிறி (Muziri)
முசிறி என்னும் ஊர் சேரநாட்டின் துறைமுகம். சங்ககாலத்தில் அரபிக்கடலின் கடற்கரையில் இருந்தது. கி.பி. முதல் நூற்றாண்டில் இந்தியாவுக்கு பெரிப்ளஸ் குறிப்பு பத்தி 54-ல் இது முசிறிஸ் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெரிபுளுஸ் (The Periplus of the Erythrean Sea)  குறிப்பில்:   முசிறி ஒரு செல்வச்செழிப்புள்ள நகரம். அரியாகே (ariake), எகிப்து (Egypt) ஆகிய இடங்களிலிருந்து கப்பல்கள் இங்கு (முசிறிக்கு) வந்துபோயின. எகிப்திலிருந்து வந்தவை கிரேக்கக்கப்பல்களாகும். உயர்வகை முத்துகள், மணிக்கற்கள், மிளகு ஆகியன ஏற்றுமதி ஆயின. பவழம்  (Coral), காரீயம் (Lead), வெள்ளீயம் (Tin) மற்றும் (Stibium) ஆகியவை இறக்குமதி ஆயின.

பிளினி (Pliny) – (Pliny’s Natural History) நூலில் உள்ள குறிப்பில்: 
இந்தியத் துணைக்கண்டத்தை நோக்கி நிகழ்ந்த கடல் பயணங்கள் எகிப்திலிருந்தும், ஓசலிஸ் (Ocelis) என்னும் இடத்திலிருந்தும் மேற்கொள்ளப்பட்டன.  எகிப்திலிருந்து இந்தியாவின் இப்பகுதிக்கு (முசிறிக்கு)க் கடல் பயணம் மேற்கொள்ளத்தகுந்த பருவ காலம் ஜூலை மாதமாகும். ஓசலிஸிலிருந்து பயணப்படுவோர்க்கு ஒரு வசதி உண்டு. இங்கிருந்து புறப்படுகின்றவர்கள் ஹிப்பலாஸ் (Hippalos) என்னும் பருவக்காற்றின் துணை கொண்டு நாற்பது நாட்களில் இந்தியாவின் முதல் வணிக நகரமான முசிரிஸ் அடையமுடியும். ஆனால், இப்பயணத்தில் ஓர் ஆபத்தும் உள்ளது. வழியில்  நித்ரியாஸ் (Nitriyas) என்னும் இடத்தில் தங்கியிருக்கும் கடற்கொள்ளையர்கள் தாக்குவார்கள். முசிரிஸில் பெரிய அளவில் வாணிகம் நடைபெறவில்லை. வணிகப்பரிமாற்றங்கள் நடைபெறும் நகரங்கள் நிலப்பகுதியில் வெகு தொலைவில் உள்ளன. வணிகப்பொருள்களை ஏற்றி உள்நாடு செல்லவும், உள்நாட்டிலிருந்து பொருள்களைக்கொணர்ந்து இறக்கவும் படகுகளையே பயன்படுத்த வேண்டியுள்ளது.  ஒரே மரத்தைக்குடைந்து செய்யப்பட்ட இப்படகுகள் (dug out canoe)  “கட்டனர“ (cottonara) எனப்பட்டன. இங்குள்ள அரசன் கலபத்ராஸ்  (Caelobothros) என அழைக்கப்படுகிறான். பகாரே  (Bacare)  என்னும் இடத்துக்கு மிளகுப்பொதிகள் படகுகள் மூலம் கொண்டுவரப்படுகின்றன. இந்தத் துறைமுகத்தின் பெயரோ, இங்கு குறிப்பிட்ட நகரங்களின் பெயரோ, இதற்கு முன்னர் எழுதிய நூல்களில் காணப்படவில்லை. இதிலிருந்து, இப்பகுதியில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பது தெளிவாகிறது.

இது, சீன, அரேபிய தொடர்புடைய மிகப்பெரிய வணிக மையமாக இருந்துள்ளது. முசிறி பட்டணத்தில், சுட்ட செங்கற்களாலான கட்டடங்கள், 'ரூலட்டட்' என்ற துண்டுகள், 'ஆம்போரா' ஜாடி துண்டுகள், ரோமானிய சிவப்பு வகை ஓடுகள், உயர்வகை கற்களாலான மணிகள் இருந்தன. இது, ஒரு நகரத்துக்கான சான்றுகள். முசிறி துறைமுகம் வீடுகளும், ரோமானிய முறையில் கட்டப்பட்டு உள்ளன. இவற்றை, 2,000 ஆண்டுகளுக்கு முன் கட்டி உள்ளனர். துறைமுக வர்த்தகத்தை கட்டுப்படுத்தும் திறன், முசிறி பட்டணத்திற்கு இருந்துள்ளது.

முசிறி என்னும் சேர நாட்டுத் துறைமுகப்பட்டினத்தில், யவனர்களின் மரக்கலங்கள் பொன்னைக் கொண்டுவந்து கொட்டிவிட்டு, அதற்கு விலையாக மிளகு மூட்டைகளை ஏற்றிச் செல்வதாக அகநானூறு குறிப்பிடுகிறது.

யவனர் தந்த வினைமாண் நன்கலம் 
பொன்னொடு வந்து கறியொடு பெயரும் 
வளங்கெழு முசிறி

(அகநானூறு, 149:9-11)

முசிறி பாப்பிரஸ் ஒப்பந்தம் (Muziris Papyrus)
Pcv: muziri papyrus

வணிக ஒப்பந்தங்களில் காலத்தால் மிகப் பழமையான ஒப்பந்தம் இதுவே. முசிறி துறைமுகத்தில்பொருள் ஏற்றப்பட்டு, மத்தியத் தரைக்கடல் பகுதியில் நைல் நதி முகத்துவாரத்தில்  அமைந்துள்ள அலெக்ஸாண்டிரியா  நகரைச்  சென்று  சேருவது  சம்பந்தமான  ஒப்பந்தம்  அது.  அங்கு  இருந்து  மத்தியத்தரைக்கடல்  வழியாக  ரோம் நாட்டை  அடைவதற்கு,  வேறு  ஓர்  ஒப்பந்தம்  இருந்திருக்க வேண்டும் என அறிஞர்கள் கருதுகின்றனர்.

இந்த ஒப்பந்தம் கிரேக்க மொழியில் உள்ளதால், அந்த வணிகத்தில் ஈடுபட்ட தமிழ் வணிகனுக்கு, கிரேக்க  மொழி தெரிந்திருக்கிறது என்பது தெளிவாகிறது. அன்றைய தமிழகத்தில் கிரேக்கம் தெரிந்தவர்கள் பலரும் இருந்தனர் என்பதை நமது சங்க இலக்கியங்கள் கூறுகின்றன.

முசிறி பேப்பிரசு உடன்படிக்கை என்பது பொ.ஆ 1-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சங்ககாலச் சேரர்களின்  துறைமுகப் பட்டினமான முசிறித் துறைமுக வணிகர்களுக்கும் எகிப்து நாட்டு துறைமுகப்பட்டினமான அலெக்சாண்டிரியா வணிகர்களுக்கும் நடந்த வணிக ஒப்பந்தம் ஆகும். இந்த உடன்படிக்கை கிரேக்க மொழியில் பேப்பிரசு தாளில் எழுதப்பட்டுளது. 1980ல் எகிப்து நாட்டில் கண்டறியப்பட்டு தற்போது வியன்னா நகர அருங்காட்சியத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த கோப்பு எகிப்திய மற்றும் முசிறி வணிகர்களுக்கிடையே நடந்த கடன் மாற்று விவரங்களை குறிப்பிடுகின்றன. இதில்  இலாமிச்சை, தந்தம், ஆடைகள் போன்றவற்றை 25 சதவீத சுங்க வரியுடன் விற்கப்பட்டுள்ளதாய்க் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை எழுதிய வணிகர் ரோமப் பேரரசுக்கு பணிந்து தான் கொண்டு செல்லும் பொருட்களுக்கு தானே உத்தரவாதம் தருவது போல் இதை எழுதியுள்ளார். 

இந்த உடன்படிக்கையின் மேல் புறமும் கீழ் புறமும் கிடைக்கவில்லை. அதனால் அவ்வணிகர்களின் பெயரை அறிய முடியவில்லை. இதன் முன்பக்கத்தில் உடன்படிக்கை ஒப்புதலும் பின்பக்கத்தில் இவ்வுடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பொருட்களின் எடை அளவைகளும் தரப்பட்டுள்ளது. அந்த கிரேக்க மொழி உடன்படிக்கையின் தமிழ் மொழிபெயர்ப்பு,

முன் பக்கம்

"...தங்களது துணைத்தலைவர்கள்/பிரதிநிதிகள் அல்லது மேலாளர்கள் ... மற்றும் நாம் ஏற்கனவே ஒப்புக்கொண்டபடி தங்களது ஒட்டக ஓட்டுனருக்கு 170 டேலன்ட், 50 திரமம் அதிகப்படியான கோபடசு செல்லும் சாலையைப் பயன்படுத்தத் தருவேன் , நான் சுமைகளை எனது கண்கானிப்பில் பாலைவனம் வழியாக எடுத்துச்செல்வேன் , பொருட்களை சேதம் விளையாமல் கோபடசிலுள்ள சுங்கச்சாவடிக்கு கொண்டு வருவேன் , தாங்கள் அல்லது தங்கள் துணைத்தலைவர்கள் அல்லது அவர்களுடைய தற்போதைய முகவர் முடிவின் படி ஆற்றங்கரையில் இறக்கி பத்திரமாக வைப்பேன் , சரியான காலத்தில் படகில் பத்திரமாகக் கொண்டு செல்வேன் , அங்கிருந்து டெட்ரோலோசியா சுங்கச்சாவடி கிடங்கிற்கு எடுத்துச் செல்வேன் , தங்களது முடிவின் உரிமை மற்றும் முத்திரையின் படி அல்லது எவ்வாறாயின் தங்களது பதிவாளரின் முடிவின் படி அதே முறையில் எடுத்துச் செல்வேன் எனவும் உறுதியளிக்கிறேன். 

இப்போதிலிருந்து டெட்ரோலோசியா வரை செல்லப் படகுக்கு ஆகும் அனைத்து செலவுகளும், பாலைவனத்தைக் கடக்க ஆகும் அனைத்து பயணச் செலவுகளும், படகு, படகோட்டி, உடன் வருபவர்கள் அனைவருக்குமான செலவுகளும்.... அதன்படி, முசிறியில் முடிவு செய்யப்பட்ட கடன் ரசீதின் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் வரும் போது நான் எனது கடனைச் சட்டப்பூர்வமாக திருப்பிச் செலுத்தாத நிலையில் தாங்கள் மற்றும் தங்களது உதவியாளர்கள் தாம் நினைத்தபடி முடிவெடுக்கவும், எல்லையற்ற விருப்பாற்றலுடன் தங்களுடைய முடிவெடுக்கும் இசைவுடன் நிறைவேற்றும் நடவடிக்கையில் முடிவு செய்யவும் சட்டப்பூர்வமான முடிவல்லாதும் தாங்கள் மேற்கூறிய கடனின் தலைவர்  செல்வத்தில் கால் பங்கைப் பறிமுதல் செய்யவும், தாங்கள் விருப்பப்படி முக்கால் பங்கை எங்கு சேர்க்க வேண்டுமோ அங்கு சேர்க்கவும் விற்கவும் கடனைத் தாங்கள் விரும்பும் வண்ணம் ஒழுங்குபடுத்தவும் முதலீடுகளைத் தங்கள் விருப்புரிமைப்படி மேலாண்மை செய்யவும், சந்தை நிலவர விலையில் தங்களுக்கே விற்றுக் கொள்ளவும், பொருட்களை வைத்துக் கொள்ளவும், பெற்ற கடனை மேற்கூறிய கடனிலிருந்து எடுத்துக் கொள்ளவும் உறுதியளிக்கிறேன். தாங்கள் மற்றும் தங்கள் துணைத்தலைவர்கள் அல்லது பதிலாட்கள் பெற்றுக்கொள்வதற்குப் பொறுப்பாவார்கள் மற்றும் நாங்கள் ஒருவரை ஒருவர் எவ்வகையிலும் பொய் பேசி, குறை கூறிக் கொள்ளமாட்டோம். சமூகத்திற்காக அளிக்கப்படும் செலவின் இலாப நட்டங்கள் என்னையும், கடன் பெற்றவரையும் மற்றும் அடகு வைத்தவரையும் சாரும்."

 


பின்பக்கம்

”இதில் வடகங்கையிலிருந்து வந்த 60 பெட்டிகள் விலை ஒரு பெட்டிக்கு 45 வெள்ளி தாலந்து (டேலன்ட்) வீதம் 60க்கு 4500 திரமம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. மேலும் இதில் காணப்படும் எடை மற்றும் பண அளவீடுகள்,

எகிப்திய டேலன்ட் (எடை) = 54.5 மினா (எடை)
டெரார்ட் டேலன்ட் (எடை) = 43 மினா (எடை) = 70 லிட்ரா (பணம்)
மினா (எடை)
திரமம் (பணம்)
லிட்ரா (பணம்)

இந்த உடன்படிக்கை கண்டுபிடிக்கப்பட்டப் பிறகு பண்டைய ரோம் மற்றும் சங்ககாலச் சேரர் பற்றி அறிய விரும்பிய தொல்லியல், வரலாற்றியல், சட்டவியல், நிர்வாகவியல், பொருளாதாரவியல் போன்ற துறை வல்லுநர்களுக்கு பெரிய திருப்புமுனையாய் அமைந்தது.
 
இந்திய ஆய்வியல் துறை, கலை மற்றும் சமூகவியல் புலம், மலாயாப் பல்கலைக்கழகத்தின் “பண்டைய ரோமானிய அரசுடனான தமிழக வணிகத் தொடர்புகள் பற்றிய ரோமானிய ஆவணங்கள் கூறும் செய்திகள் (Roman Trade Links with the Ancient Tamil Countries-Roman Documents) தமிழ்ப் பேராய்வு ஆய்விதழ் மேலும் பல செய்திகளையும் தருகின்றது.

உலக வணிக ஒப்பந்தங்களில் காலத்தால் மிகப் பழமையானதே ஒழிய, இது முதல் ஒப்பந்தமல்ல, இதற்கு முன்னரே ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. நமக்கு கிடைத்த ஆவணம் இது தான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com