சிறப்புக் கட்டுரைகள்

பற்றியெரியும் உலகின் நுரையீரல்... அமேசான் தீ இயற்கையா? மனிதனால் ஏற்படுத்தப்பட்டதா?

23rd Aug 2019 02:54 PM | C.P.சரவணன், வழக்குரைஞர்

ADVERTISEMENT

 

2 வாரங்களாக அமேசான் காடுகளில் தீ எரிந்து வரும் நிலையில், இந்த தீ விபத்து சூழலியல் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். உலகின் நுரையீரல் எனப்படும் அமேசான் காடுகள் ஒட்டுமொத்தமாக 20 சதவிகித ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்கிறது. காடுகள் அழிவதால் அது சேமித்து வைத்திருக்கும் கரியமில வாயு அதிகளவு சூழலில் கலந்து மனிதர்களுக்கு உடல் ரீதியான பாதிப்பினை ஏற்படுத்தும். புவி வெப்பமயமாதலையும் இது ஊக்குவிக்கும். உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளான அமேசான் காடுகள், தென் அமெரிக்க கண்டத்தில் 5.5 மில்லியன் ஹெக்டேர் அளவில் பரவியுள்ளது. மழைக்காடுகள் அழிவது மழைப்பொழிவையும் குறைக்கும். புவிப்பரப்பில் 4 சதவிகித பரப்பளவை தன்னகத்தே கொண்டுள்ள அமேசான் மழைக்காடுகளில், 3-ல் ஒரு பங்கு அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்குகள் உள்ளன. தொடர்ந்து தீ எரிவதால் இவற்றுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 1950-ம் ஆண்டு முதல் அமேசான் மழைக்காடுகள் தனது 18 சதவிகித உண்மையான பரப்பளவை இழந்துள்ளது. மரங்கள் வெட்டிக்கடத்தப்படுவது, மனித தேவைக்காக மரங்கள் வெட்டப்படுவதால் காட்டின் பரப்பளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019-ம் ஆண்டில் மட்டும் 73 ஆயிரம் தீ சம்பவங்கள் அமேசான் மழைக்காடுகளில் நடந்துள்ளதாக பிரேசில் நாட்டின் விண்வெளித்துறை கூறியுள்ளது.

அடுத்த 50 ஆண்டுகளில் அமேசான் மழைக்காடுகளின் 65 சதவிகித பரப்பளவு அழியும் ஆபத்து இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்தக் காட்டுத்தீயின் மூலம், நம்மை அழிக்கும் காலநிலை மாற்றத்தை விரைவுபடுத்தக்கூடிய கரிம வாயுக்களின் வெளியேற்றத்தை அதிகப்படுத்தப் போகிறார்கள். இதை எதிர்த்துப் போராடிய அமேசானிய பழங்குடிகளை, அந்தக் காட்டின் ஆதிப் பிள்ளைகளைத் துரத்திவிடப் போகிறார்கள்.

அமேசான் மழைக்காடுகள், கோடைக்காலத்தில்கூட அவ்வளவு எளிதில் தீ பற்றக்கூடியதல்ல. கலிபோர்னியா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளிலுள்ள வறண்ட காடுகளைப் போல் இவை இல்லை. அதிகபட்சம் அடர்த்தியான ஈரப்பதம் மிக்கக் காடுகளைக் கொண்டது. அங்குக் காட்டுத்தீ ஏற்படக் காரணம் மனிதர்களே என்கிறார்கள் சூழலியலாளர்கள். இதில் பெரும்பாலான விபத்துகளுக்கு மனிதர்கள் பற்ற வைத்ததால் உருவானது என்கிறார் கிரிஸ்டியன் போய்ரர்.

ADVERTISEMENT

பிரேசில் நாட்டின் ஆராய்ச்சி மையம் (INPE) இந்த வாரத்தில் இதுவரை உருவான காட்டுத்தீயின் எண்ணிக்கை கடந்த ஆண்டைவிட 80 சதவிகிதம் அதிகம் என்கிறது. இதனால், உலகிலேயே அமேசான் காட்டிற்கு மட்டுமே சொந்தமான பல தனித்துவமிக்கச் சூழலியல் பகுதிகள் நெருப்புக்கு இரையாகிவிட்டன.

``அமேசான் காட்டுத்தீக்கு முழுக்க முழுக்க வறட்சியான காலநிலை, வறண்ட காற்று, அதீத வெப்பம் போன்றவையே காரணம்" என்கிறார் பிரேசில் நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் ரிகார்டோ சேல்ஸ். வானியல் ஆய்வாளர் ஹேலி பிரிங்க், ``இதற்குத் தட்பவெப்பநிலையோ காலநிலையோ, மின்னலோ எதுவும் காரணமில்லை. இது மனிதர்களால் உண்டான காட்டுத்தீ தான்" என்று சுற்றுச்சூழல் அமைச்சரின் கூற்றை மறுத்துள்ளார்.

ஈக்வடார் நாட்டிலிருக்கும் அமேசான் காட்டுப் பகுதியில் வாழும் வாவோரணி என்ற பழங்குடியின மக்கள் அந்தக் காட்டைச் சார்ந்து பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் கடந்த மே மாதம், ஏழு மில்லியன் ஏக்கர் வனப்பகுதியை ஆக்கிரமித்து எண்ணெய் எடுக்கத் திட்டமிட்டிருந்த நிறுவனத்திற்கு எதிராகப் போராடித் தங்கள் உரிமைகளை மீட்டெடுத்தார்கள். அந்த நிறுவனம் எண்ணெய் எடுப்பதற்குச் சாதகமாக வரவிருந்த சட்டத்தை நிறைவேற்ற விடாமல் வெற்றி கண்டனர். அது நடந்த சில நாள்களிலேயே அமேசான் காடு முழுக்கக் காட்டுத்தீ ஏற்பட்டிருப்பதையும் அது மனிதர்களால் ஏற்பட்டதுதான் என்று சூழலியல் மற்றும் வானியல் ஆய்வாளர்கள் குற்றம் சாட்டுவதையும் எதேச்சையாக நடந்ததென்று கடந்து போக முடியாதென்று சூழலியல் ஆர்வலர்கள் சந்தேகிக்கின்றனர்.

இன்னொருபுறம், பிரேசில் அதிபர் ஜெய்ர் பொல்சொனாரோதான் காரணமென்று பிரேசிலைச் சேர்ந்த சூழலியலாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். பொல்சானாரோ அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது, அமேசான் காட்டைப் பொருளாதார ரீதியாகப் பயன்படுத்தி நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பதாகச் சொல்லியிருந்தார். அவர் சொல்லியதைப் போலவே பண்ணையாளர்கள், விவசாயிகள், இயற்கை வள நிறுவனங்களைக் காடுகளைப் பயன்படுத்திக்கொள்ள விடப்போவதாகவும் அதற்காகவே மழைக்காட்டில் காட்டுத்தீ ஏற்படுத்தி அதன் பெரும் பகுதியை அழிக்கத் திட்டமிட்டு இதைச் செய்துள்ளதாகவும் அவர்மீது பிரேசிலைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.

``கடந்த மூன்று வாரங்களாக அமேசான் மழைக்காடு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. லட்சக்கணக்கான மரங்கள் சாம்பலாகிவிட்டன. இதற்குக் காரணம், பண்ணையாளர்களும் பெருவிவசாயிகளும்தான். அவர்கள் இதைப் பிரச்னையின்றிச் செய்வதற்குத் தகுந்தவகையில் சட்டத்தை எளிமையாக்கியுள்ளார்கள். அதன் விளைவாகக் கட்டுப்பாட்டை மீறிக் காட்டுத்தீ வளர்ந்துவிட்டது. அவர்கள் பற்றவைத்த நெருப்பினால் உண்டான கோபம் அமேசானுக்கு இன்னும் அடங்கவில்லை" .

எரிந்துகொண்டிருக்கும் நெருப்பு பெருவிவசாயிகளை, ஆக்கிரமிப்பாளர்களை, நிறுவனங்களை அமேசானை நோக்கி இழுத்துக் கொண்டிருக்கிறது. அங்கு உருவாகியிருக்கும் அரசும் அதைத்தான் எதிர்பார்க்கிறது. அப்போதுதான் உலகின் நுரையீரலை விற்பனைப் பொருளாக்கி அதன்மூலம் லாபம் பார்க்கமுடியும். அப்போதுதான் அந்த நிலத்தைப் பண்ணையாளர்களுக்குக் கூறுபோட்டு விற்றுத் தீர்க்கமுடியும். அப்போதுதான் நிறுவனங்கள் இயற்கை வளங்களைத் திருட வழி செய்துகொடுக்க முடியும். மழைக்காடுகளைத் திருடும் மாஃபியா கும்பலிடம் அமேசானைச் சிக்கவைத்துச் சீரழிக்க முடியும்.

ஒரு காடு அழிந்தால் அதைச் சார்ந்திருக்கும் நாடும் அழியும். ஆனால், அமேசான் அழிந்தால் அது உலக அழிவையே விரைவுபடுத்திவிடும். ஏனென்றால், அது வெறும் மழைக்காடு மட்டுமல்ல; அதுதான் உலகின் நுரையீரல். அதிகபட்ச பிராண வாயுவை வாரிக் கொடுத்துக் கொண்டிருந்த வள்ளல். இன்று பிரேசில், ஈக்வடார் போன்ற அரசுகள் செய்துள்ள செயல் நமக்குப் பாதுகாவலனாக இருந்த காட்டைச் சீரழிக்கிறது. அதிலிருந்தே நம்மை அழிக்கும் காலநிலை மாற்றத்தை விரைவுபடுத்தும் கரிம வாயுக்களின் வெளியேற்றத்தை அதிகப்படுத்தப் போகிறார்கள். இதை எதிர்த்துப் போராடிய அமேசானிய பழங்குடிகளை அந்தக் காட்டின் ஆதிப் பிள்ளைகளைத் துரத்திவிடப் போகிறார்கள்.

அமேசான் காடு உலகின் பிராண வாயு உற்பத்தியில் 20 சதவிகிதம் பங்கு வகிக்கின்றது. `பூமியின் நுரையீரல்' என்ற பெயரும் அதற்கு உண்டு. அதன் தொடர்ச்சியான அழிவு, பிராண வாயு உற்பத்திக்குப் பதிலாக அதிகமான கரிம வாயுவை வெளியேற்ற வைக்கிறது. அது மீட்டுருவாக்க முடியாத அளவுக்குச் சேதமடைந்தால், பயன்களைவிட அபாயங்கள் அதிகமாக இருக்கும் என்கிறது உலகக் காட்டுயிர் நிதியம் (World Wildlife Fund).

"நம் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் அதற்குக் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட நம்மிடமிருக்கும் ஓர் ஆயுதம்தான் அமேசான். இப்போது அமேசானைக் காப்பாற்றுவதால் நாம் அதை மட்டும் பாதுகாக்கப் போவதில்லை, அதன்மூலம் நமக்கு நிகழவிருக்கும் பேரழிவிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ளப் போகிறோம்".

இதைச் சொன்னால் முன்னெச்சரிக்கை எடுக்கவும் யோசிக்கவுமே தவிர பீதியை கிளப்ப என்று நினைத்தால், அழிவு நிச்சயம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT