கோவை குடிநீர் விநியோகத்துக்கு சூயஸ் ஏன்? குடிநீர் வடிகால் வாரியத்தின் மீது நம்பிக்கையில்லையா?

கோவை மாநகரில் குடிநீர் விநியோகிக்கும் உரிமம் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது கோவை மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
கோவை குடிநீர் விநியோகத்துக்கு சூயஸ் ஏன்? குடிநீர் வடிகால் வாரியத்தின் மீது நம்பிக்கையில்லையா?

கோவை மாநகரில் குடிநீர் விநியோகிக்கும் உரிமம் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது கோவை மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கோவை மாநகராட்சி பகுதியில் 3.5 லட்சம் குடிநீர் இணைப்பு உள்ளன. கோவை நகருக்கு சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, ஆழியார் கூட்டு குடிநீர் திட்டம், கவுண்டம்பாளையம், வடவள்ளி கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் தினமும் சுமார் 200 எம்.எல்.டி தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. 

மாநகராட்சி வார்டு எண்ணிக்கை முதலில் 72ஆக இருந்தது. தற்போது 100 வார்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. முந்தைய 72 வார்டு 60 வார்டுகளாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இந்த பழைய வார்டு பகுதிகளில் குடிநீர் விநியோகம் சரிவர இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. வி.ஐ.பி.க்கள் வசிக்கும் பகுதிகளுக்கு அதிகமாகவும், பிற பகுதிகளுக்கு குறைந்த அளவும் குடிநீர் வினியோகம் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது. 

60 வார்டு முழுவதும் தினசரி 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து திட்டம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்டது. பின்னர், இதனை தனியார் துறையின் மூலம் செயல்படுத்த மாநகராட்சி முடிவு செய்தது. அதன்படி, ரூ.550.55 கோடி மதிப்பில் விரிவான திட்ட அறிக்கை மாநகராட்சி சார்பில் தயாரிக்கப்பட்டது. 

அறிக்கையில், புதிய குழாய் அமைப்பது, பராமரிப்பது, புதிய நீர் தொட்டி கட்டுவது உள்ளிட்டவை குறிப்பிடப்பட்டது. இந்த திட்டத்தின் நோக்கம் நகரில் உள்ள அனைத்து பொது குடிநீர் குழாய்களையும் அகற்றிவிட்டு ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்பதாகும். மேலும், பொதுமக்கள் பயன்படுத்தும் குடிநீர் அளவுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கவும், குடிநீர் பயன்பாட்டை குறைக்கவும் முடிவு செய்யப்பட்டது. 

இதனைத்தொடர்ந்து, திட்டத்தை செயல்படுத்த தகுந்த நிறுவனம் தேர்வு செய்ய டெண்டர் விடப்பட்டது. டெண்டரில் 3 நிறுவனங்கள் பங்கேற்றது. மாநகராட்சியின் நிபந்தனைக்குட்பட்ட பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது. இந்த நிறுவனத்திற்கு சில மாதங்களுக்கு முன்பு திட்டத்தை செயல்படுத்த பணி ஆணை வழங்கப்பட்டது. இந்த தனியார் நிறுவனத்தினர் முதல் ஒரு வருடம் நேரடியாக களஆய்வு செய்வார்கள். பின்னர், அடுத்த 4 ஆண்டுகளில் திட்டத்தை செயல்படுத்தி முடிக்கவுள்ளனர். 

கோவை மாநகர மக்களின் குடிநீர் விநியோகத்தை அடுத்த 26 ஆண்டு காலத்திற்கு பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனத்திற்கு வழங்க கோவை மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தமிட்டுள்ளது. 

பிரான்ஸ் நாட்டின் தனியார் நிறுவனமான சூயஸ் நிறுவனத்திற்கு கோவை மாநகராட்சியின் 60 வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நமது பணம் ரூ.2,961,000,00,00 பிரான்ஸ் நிறுவனத்திற்கு அளிக்கப்படும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் அனைத்து வீடுகளுக்கும் சீரான குடிநீரை 24 மணிநேரமும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதாவது மின்சாரம், பெட்ரோல், டீசல் போன்றவற்றை எப்படி மீட்டர் அளவில் பெறுகிறோமோ அதேபோல தண்ணீரையும் மீட்டர் அளவில் பெற வேண்டும். இதன்படி பயன்பாட்டிற்கு ஏற்பவும், வீடுகளின் சதுர பரப்பளவு கணக்கீட்டின்படியும் குடிநீர் கட்டணம் நிர்ணயிக்கப்படும்.

24 மணி நேரம் தண்ணீர் குழாயில் வருவதால் தண்ணீரை சேமித்துவைக்க டேங்க், தண்ணீர் தொட்டி அவசியமில்லை. வைப்புத்தொகை ரூ.15,000/-

குடிநீர் விநியோகத்தை தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியமும், மாநகராட்சி நிர்வாகமும் சீராக செய்து வரும் நிலையில் தனியாருக்கு இந்த உரிமையை கொடுக்க வேண்டிய அவசியம் என்ன;

கோவை மாநகராட்சி, பிரான்ஸ் நிறுவனமான சூயஸ் மூலம் செயல்படுத்த இருக்கும் 243X7 குடிநீர் திட்டத்துக்கு எதிரான ஒரு வீடியோவை தனது முகநூல் பக்கத்தில் ஷேர் செய்ததற்காக அப்துல் ரசாக் என்கிற இளைஞர் கைது செய்யப்பட்டார். இதைக் கண்டித்து சூயஸே வெளியேறு என்கிற முழக்கத்தை முன்வைத்து ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்யும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

சிறுவாணி, பில்லூர் 1, பில்லூர் 2, ஆழியார் கூட்டுக் குடிநீர் திட்டம், வடவள்ளி கூட்டுக்குடிநீர் திட்டங்கள் ஆகியவை கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. இங்குள்ள 100 வார்டுகளில் 60 வார்டுகளுக்கு 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்வதற்காக பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சூயஸ் என்ற நிறுவனத்துடன் கடந்த ஆண்டு ரூ. 3,167 கோடி மதிப்பில் ஒப்பந்தம் போட்டது கோவை மாநகராட்சி. அந்த அறிவிப்பு வெளியானது முதலே சூயஸுக்கு எதிரான போராட்டங்கள் வெடிக்கத் தொடங்கிவிட்டன.

`சில மாற்றங்களுடன் குடிநீர் கட்டணத்தை சூயஸ் நிறுவனம் நிர்ணயித்துக்கொள்ளலாம்' என்றும் `தேவை ஏற்பட்டால் குடிநீர் கட்டணத்தை உயர்த்தலாம்' என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. இதனைச் சுட்டிக்காட்டி, சூயஸ் நிறுவனத்திடம் குடிநீர் விநியோகத்தை ஒப்படைத்தால் 1200 பொது குடிநீர் குழாய் மூடப்படும் அபாயமும் குடிநீர் கட்டணமும் உயரும் அபாயமும் ஏற்படலாம். ஆகையால், இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு கோவை மாநகராட்சியே குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள வேண்டும்' என்ற குரல்கள் வலுத்தன.

ஆனால், அவற்றையெல்லாம் பொருட்படுத்தாத நிர்வாகம், திட்டத்தைச் செயல்படுத்துவதில் முனைப்புக் காட்டியது. உள்ளாட்சித்துறை அமைச்சர், `இது வளர்ச்சிக்கான திட்டம், எதிர்க்கட்சிகள் வேண்டுமென்றே இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். எவ்வளவு எதிர்ப்புகள் வந்தாலும் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியே தீருவோம்' என்று மேடைகளில் முழங்கினார்.

`நீர் எங்கள் உரிமை... சூயஸே வெளியேறு!’ - செல்ஃபி போராட்டம்

`இந்தத் திட்டத்தைப் பற்றி அவதூறு பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என்று மாநகராட்சி எச்சரித்தது. ஆனாலும், சமூக வலைதளத்தில் சூயஸுக்கான எதிர்ப்புக்குரல் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருந்தது. அதற்குக் கடிவாளம் போடும் நோக்கில், கடந்த சில தினங்களுக்கு முன்பு சூயஸுக்கு எதிராக யாரோ ஒருவர் உருவாக்கிய வீடியோவை ஷேர் செய்ததற்காக அப்துல் ரசாக் என்பவர் மீது வழக்குப் பதிவுசெய்து கைது செய்தனர் உக்கடம் போலீஸார். இது கோவை வாசிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தநிலையில் நேற்று மாலை இதைக் கண்டித்து `சூயஸே வெளியேறு’ என்கிற முழக்கத்தை முன்வைத்து செல்ஃபி எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்யும் போராட்டத்தை நடத்தியுள்ளனர் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர். இது கோவை மாநகராட்சிக்கு மேலும் நெருக்கடியை உருவாக்கியிருக்கிறது.

போராட்டத்தைத் தொடங்கி வைத்த ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, ``உலகப் புகைப்பட தினத்தில் `சூயஸ் நிறுவனமே வெளியேறு' என்ற முழக்கம் பொறிக்கப்பட்ட பேனர் முன்பு நின்று செல்ஃபி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவேற்றும் போராட்டத்தைத் தொடங்கியிருக்கிறோம். சூயஸ் நிறுவனம் கோவைக்கு வந்தால் என்ன ஆகும் என்று யாரோ ஒருவர் தயாரித்த வீடியோவை தன்னுடைய முகநூல் பக்கத்தில் பகிர்ந்ததற்காகக் கோவையைச் சேர்ந்த அப்துல்ரசாக் என்பவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுபோன்ற அச்சுறுத்தலால் ஒருபோதும் போராட்டத்தை ஒடுக்கிவிட முடியாது என்பதை அறிவிக்கின்ற வகையில் செல்ஃபி போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம்

ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா
ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் 25,000-க்கும் மேற்பட்டோர் இதேபோன்று செல்ஃபி எடுத்து முகநூலில் பதிவிட ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம். உடனடியாக சூயஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு மாநகராட்சியே குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால் சூயஸுக்கு எதிரான எங்கள் போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்துவோம். வழக்குகளுக்கும் கைதுகளுக்கும் அஞ்சமாட்டோம். நீர் எங்கள் உரிமை அதைத் தனியாருக்குத் தாரை வார்க்க ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டோம்’ என்றார் உறுதியான குரலில்.

யார் இந்த சூயெஸ் ?
சூயெஸ் (SUEZ) மற்றும்  விவெண்டி (Vivendi Environment) என்று முன்பு அழைக்கப்பட்ட வியோலி என்விராண்மெண்ட் (Veolia Environment) என்னும் இரு நிறுவனங்கள்தான் பிரான்ஸின் தண்ணீர் விநியோகத்தை கட்டுப்படுத்தும் மிகப் பெரிய நிறுவனங்கள்.  

சூயெஸ் நிறுவனம் தண்ணீர் வணிகத்தில் 1822ஆம் ஆண்டு முதல் உள்ளது. உலகம் முழுக்க 15 கோடி வாடிக்கையாளர்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்கிறது. அதேபோல் வியோலி நிறுவனம் 150 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள நிறுவனம். நூறு நாடுகளில் 11 கோடி வாடிக்கையாளர்களுக்கு குடிநீர் மற்றும் வடிகால் தேவைகளை நிறைவு செய்கிறது. உலகில் 7000 நகரங்களுக்கு குடி நீர் விநியோகம் செய்து வருகிறது.

இவ்விரு நிறுவனங்களும் குடிநீர் வணிகத்திற்காக ஒப்பந்தமிடும் மாநகராட்சிகளையே விலைக்கு வாங்கும் பொருளாதார வலிமைக் கொண்டவை! ஆனால் இம்மாபெரும் நிறுவனங்களின் பங்களிப்போடு தனியார் மயமாக்கப்பட்ட தண்ணீர் விநியோகம் பாரீஸ் உட்பட பல நகரங்களில் இன்று இவர்களின் கட்டுப்பாட்டிலிருந்து அகற்றப்பட்டு மீண்டும் மாநகராட்சிகளே பராமரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. காரணம், இந்த நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் இருந்த குடிநீர் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டதுதான் மிக முக்கிய காரணமாகும்.

மேலும் இந்த தண்ணீர் நிறுவனங்கள் தங்களுடைய ஒப்பந்தத்தை தக்க வைத்துக்கொள்ள அரசியல்வாதிகளுக்கு கொடுத்த லஞ்சம் அம்பலமாகியது. பாரீசின் நகரத் தந்தையாக (Mayor) இருந்தவரான ஜாக்விஸ் சிராக் பிரான்ஸ் நாட்டின் அதிபராக வெற்றி பெற்ற பிறகும் பாரீஸின் நகரத் தந்தையாகவும் சில மாதங்கள் தொடர்ந்ததற்கு தண்ணீர் கம்பனிகளிடமிருந்து கிடைத்த கையூட்டுதான் காரணம் என்று விமர்சிக்கப்பட்டது.

உலக நாடுகளில் தண்ணீர் நிறுவனங்கள் தங்களுடைய வருவாயிலிருந்து 3 முதல் 5 விழுக்காடு வரை அரசியல்வாதிகளுக்கு கையூட்டாகவும் சில அரசியல் பிரமுகர்களை  தங்கள் நிறுவங்களில் உயர் பதவிகளில் பணிபுரிவதாக பொய்யாக பதிவு செய்து அவர்களுக்கு ‘சம்பளமாக’ கொடுத்த சம்பவங்கள் பல அம்பலமாகியுள்ளன!

லத்தீன் அமெரிக்க நாடான உருகுவே நாட்டில் நுழைந்த சூயஸ் நிறுவனம் நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென அந்நாட்டு மக்கள் பொது வாக்கெடுப்பு நடத்தி அரசுக்கு மனு அளித்தனர். 65 சதவிகித மக்கள் பரிந்துரைத்தபடி அரசியலைமைப்பு சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டு இயற்கை வளங்களை பன்னாட்டு கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பது நிறுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து எல்லா இயற்கை வளங்களும் அரசுடைமையாகவே இருக்க வேண்டும் என்ற மக்கள் போராட்டங்கள் லத்தீன் அமெரிக்கா முழுவதும் வெடித்தெழுந்தன.  தென் ஆப்பிரிக்காவில் தண்ணீர் தனியார்மயமாக்கப்பட்ட பிறகு உயர்த்தப்பட்ட தண்ணீர் கட்டணத்தை மக்கள் செலுத்த முடியாமல் போனதால் 2003 மற்றும் 2004ஆம் ஆண்டு ஒரு கோடி மக்களின் குடிநீர் இணைப்பை அரசு துண்டித்தது.

GDF Suez என்னும் நிறுவனம் தெற்கு ஜெர்மனியில் போடப்பட்ட மேகால் பைப்லைன் (MEGAL Pipeline) ஒப்பந்தத்தில் போட்டி நிறுவனங்களுடன் ‘Collusion’ என்னும் கூட்டுக்களவு ஒப்பந்தத்தில் ஈடுபட்டதால் சூயெஸ் நிறுவனத்திற்கு 2009ம் ஆண்டு ஜூலை மாதம் ஐரோப்பிய ஆணையம் 553 மில்லியன் யூரொவிற்கான (4424 கோடி ரூபாய்) அபராதம் விதித்தது.

சூயஸ் கால்வாயை கட்டி நிர்மாணித்த மாபெரும் நிறுவனம் என்று பெருமையோடு கூறும் மாநகராட்சி ஆணையருக்கு சூயஸ் நிறுவனத்தின் இந்த கசப்பான வரலாறும் தெரிந்திருக்கும் என நம்புகிறோம்.

உலக சம்பவங்கள்,  குறிப்பாக தண்ணீரை தனியார்மயமாக்கி வெற்றி கண்டதாக கூறப்படும் பிரான்ஸ் நாட்டில், சூயஸ் நிறுவனம் கொடி கட்டி பறக்கும் நாட்டில் 2008ம் ஆண்டு  தனியாரிடமிருந்து தண்ணீர் விநியோக ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் பாரீஸ் மாநகராட்சியே (Remunicipalisation) குடிநீர் விநியோகத்தை ஏற்று நடத்துகிறது. அப்படியானால் ‘குறைந்த செலவில் நிறைந்த சேவை’ என்ற முழக்கத்தோடு புகுத்தப்பட்ட தனியார் பங்களிப்பு, அது எந்த வடிவத்தில் வந்தாலும், அது தோற்றுவிட்டது என்பது மட்டுமின்றி மக்களால் விரட்டியடிக்கப்பட்டிருக்கிறது என்பதும் வரலாறாகும். ஆப்பிரிக்காவையும் லத்தீன் அமெரிக்காவையும் சுரண்டி கொழுத்த அனுபவத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் இப்போது நம்மை சுரண்ட வந்துள்ளன. அவற்றை எதிர்கொள்ள லத்தீன் அமெரிக்க மக்கள் நமக்கு வழிகாட்டுகிறார்கள்.

மாநகரசபை செயல்படாத சூழ்நிலையில் இவ்வளவு பெரிய திட்டத்திற்கான ஒப்பந்தத்தை இறுதிபடுத்த வேண்டிய அவசரத் தேவை என்ன? திட்டத்தினை கைவிட்டு குடிநீர் வடிகால் வாரியத்தின் வசம் ஒப்படைப்பது அரசுக்கு மக்கள் மீது நம்பிக்கை ஏற்படுத்தும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com