சர்க்கரையை விட ‘தேன்’ ரொம்ப நல்லது, ஆனா எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

தேன், சீனி இரண்டிலுமே குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் இருந்தாலும் சதவிகிதத்தில் வேறுபடுகின்றன. அதை வைத்துத் தான் அவற்றின் சர்க்கரை அபாயத்தன்மை கணக்கிடப்படுகிறது.
சர்க்கரையை விட ‘தேன்’ ரொம்ப நல்லது, ஆனா எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

வீடுகளில் பலகாரங்கள் தயாரிக்க முன்பெல்லாம் கருப்பட்டி, வெல்லம் பயன்படுத்தினார்கள். சீனி என்று சொல்லப்படுகிற வெள்ளைச் சர்க்கரையின் பயன்பாடு அதிகரித்ததும் வீடு, உணவகங்கள், பலகாரக் கடைகள் என எல்லா இடங்களிலும் பட்சணங்கள் அனைத்தையும் சீனியில் செய்வது அதிகரித்து விட்டது. இப்போது சீனி ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை சட்டென எகிற வைப்பதால்... மிகவும் அபாயகரமானதாகக் கருதி கூடுமானவரை மருத்துவர்கள் அதை தவிர்த்து விடுமாறு எச்சரித்துக் கொண்டிருக்கிறார்கள். 

சரி, சீனி பயன்படுத்தக் கூடாது என்றால் பிறகு இனிப்புக்கு எங்கே போவது?

எல்லோருக்குமே செயற்கை இனிப்பு மூட்டிகளை பயன்படுத்த முடியுமா? விலை கட்டுப்படியாகாதே. அப்படியான சமயங்களில் சிலர் இனிப்புகள் தயாரிக்கத் தேன் பயன்படுத்துகிறார்கள். தேனும் கூட சீனியுடன் ஒப்பிடுகையில் விலை அதிகம் தான். ஆனாலும், விலை குறைவென்று ஆரோக்ய விஷயத்தில் அசட்டையாக இருந்து விட முடியாதில்லையா? அதனால், தேன் விலை அதிகம் என்ற போதும் இப்போதெல்லாம் அக்மார்க் தேனில் செய்த இனிப்புகளை மட்டுமே வாங்கி உண்பவர்களும் இருக்கிறார்கள். அப்படியான வாடிக்கையாளர்களை முன்னிட்டு தேனில் செய்த பலகாரங்களும், பட்சணங்களுமாக இனிப்பகங்களில் தனி செக்சனே உருவாகி விட்டது.

தேனுக்கும், சீனிக்கும் இடையிலிருக்கும் ஒற்றுமை இரண்டுமே கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளால் ஆனவை என்ற போதும் இரண்டுக்குமான ஒரே ஒரு வித்யாசம் சீனியில் இருப்பது குளுக்கோஸ், தேனில் இருப்பது ஃபிரக்டோஸ் எனும் கார்போஹைட்ரேட் மூலக்கூறு. குளுக்கோஸுக்கும், ஃப்ரக்டோஸுக்கும் என்ன வித்யாசம்? சீனியில் இருக்கும் குளுக்கோஸ் அப்படியே ரத்தத்தில் கலந்து விடக்கூடியது. அதுவே ஃபிரக்டோஸ் அப்படி கலப்பதில்லை. அது செரிப்பதற்கு சற்று நேரமாவதால் குளுக்கோஸைக் காட்டிலும் சற்று அபாயம் குறைவானது. 

சீனியின் கிளைசிமிக் இண்டெக்ஸ் தேனைக்காட்டிலும் அதிகம் என்பதால் சீனி கலந்த இனிப்புகளை உண்ணும் போது உடனடியாக சர்க்கரை அளவு எகிறிவிடுகிறது. காரணம் சீனியில் ஃபிரக்டோஸ் அதிகமிருப்பதும் மினரல்கள் இல்லாமலிருப்பதும் தான். அதனால் தான் சீனி சேர்த்த இனிப்புகளை தொடர்ந்து உண்ணும் போது உடல் எடை கூடுகிறது.

100 கிராம் தேனை உண்ணும் போது நமது உடலுக்கு 288 கலோரிகள் கிடைக்கும்.

அதே, 100 கிராம் சீனியை உண்ணும் போது 394 கலோரிகளைப் பெறலாம்.

தேனில் மூன்றில் ஒருபாகம் தண்ணீர் மட்டுமே.

தேன், சீனி இரண்டிலுமே குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ் இருந்தாலும் சதவிகிதத்தில் வேறுபடுகின்றன. அதை வைத்துத் தான் அவற்றின் சர்க்கரை அபாயத்தன்மை கணக்கிடப்படுகிறது.

சீனியில் 50% ஃபிரக்டோஸ் 50% குளுக்கோஸ். அதே தேனில் 40% ஃப்ரக்டோஸும் 30% குளுக்கோஸும் இருக்கின்றன. தேனில் மிச்சமிருக்கும் 30% வெறும் தண்ணீர், மக்னீசியம்& பொட்டாசியம் உள்ளிட்ட மினரல்கள் மற்றும் பூக்களின் மகரந்தங்கள் உள்ளிட்டவையே.

எனவே தான் சீனி எனப்படும் வெள்ளைச் சர்க்கரையைக் காட்டிலும் தேன் நல்லது, ஆரோக்யமானது எனக் கருதப்படுகிறது.

தேனின் ஆரோக்ய பலன்கள்...

தேனில் ஃபினோலிக் ஆசிட் & ஃப்ளேவனாய்டுகள் உள்ளிட்ட ஆண்ட்டி ஆக்ஸிடண்டுகள் அதிகம் இருக்கின்றன. எனவே அதை உண்ணும் போது ரத்தத்தில் இருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அளவு தானாக அதிகரிக்கும். அதுமட்டுமல்ல தேனில் இருக்கும் மூலக்கூறுகள் இருதய நோய், கேன்சர், நீரழிவு நோய் உள்ளிட்ட அபாயகரமான நோய்களைக் கட்டுப்படுத்துவதிலும் உதவுவதாக சமீபத்தைய ஆராய்ச்சி ஒன்று கூறுகிறது.  

இனிப்பு சாப்பிடும் போதெல்லாம் சீனிக்குப் பதிலாக தேன் பயன்படுத்தத் தொடங்கிவிட்டோமெனில் கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தம் குறையும்.

அதுமட்டுமல்ல தேனில் ஆண்ட்டி பாக்டீரியல் பண்பு இருப்பதால் அல்சர், சொரியாசிஸ், டெர்மாடிடிஸ் உள்ளிட்ட சரும ஒவ்வாமை நோய்களையும் குணமாக்க முடியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com