திருவாசகம் (சமய இலக்கியம்), தாத்தா சொன்ன கதைகள் (சிறுவர் இலக்கியம்) இரு நூல்கள் வெளியீடு

பேராசிரியர் இராம.குருநாதன் வரவேற்புரை வழங்கியதுடன் காதல் செய்து உய்மின் நூல் குறித்து அற்புதமான பல பதிவுகளை முன்வைத்தார்.
திருவாசகம் (சமய இலக்கியம்), தாத்தா சொன்ன கதைகள் (சிறுவர் இலக்கியம்) இரு நூல்கள் வெளியீடு

நூல் வெளியீடு

இடம்- கன்னிமாரா நூலகர் வாசகர் வட்டம்

18.8.2019, மாலை 4 மணி.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில்....

பேராசிரியர் இராம.குருநாதன் வரவேற்புரை வழங்கியதுடன் காதல் செய்து உய்மின் நூல் குறித்து அற்புதமான பல பதிவுகளை முன்வைத்தார். “சொல்லிய பாட்டின் பொருள் உணர்ந்து சொல்லுவார்” என்று மாணிக்கவாசகர் ஏன் கூறியிருக்கிறார் என்பதையும், அறிவு வேறு, உணர்வு வேறு என்பதை முன்னுரையில் விளக்கமாகத் தந்திருப்பதையும் சுட்டிக்காட்டிப் பேசினார்.

அடுத்து நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கிய சிவாலயம் ஜெ.மோகன் அவர்கள் 'காதல் செய்து உய்மின்' நூலை வெளியிட, செல்வி பானுமதி பெற்றுக்கொண்டார்.

சிவாலயம் ஜெ.மோகன் அவர்கள் நூலின் அறிமுக உரை குறித்துப் பேசியபோது, '2006-ஆம் ஆண்டு முதன்முறையாக சகோதரி மஞ்சுளாவின் திருவாசகத்தில் புராணக் கதைகள் நூலை - திருவான்மியூர் கோயிலில் வெளியிட்டது முதலே சகோதரி மஞ்சுளாவைத் தெரியும். கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குமேல் இப்போது இப்படியொரு வாய்ப்பு மீண்டும் எனக்குத் தந்திருக்கிறார். திருவாசகம் என்றால் எனக்கு உடனே சகோதரி மஞ்சுளாதான் நினைவுக்கு வருவார். திருவாசகத்தையும் அவரையும் பிரிக்க முடியாது. திருவாசகம் பற்றிப் பேசத் தொடங்கினாலே போதும், அவர் கண்களில் கண்ணீர் பெருக்கெடுக்கும். அந்த அளவுக்கு அவர் அதை உணர்ந்து படித்திருக்கிறார். ஆழங்கால்பட்டிருக்கிறார் என்பது இந்நூலிலுள்ள கட்டுரைகள் எடுத்துரைக்கின்றன.  

சில கருத்துக்களை ஆழமாகத் துணிவாகப் பதிவு செய்திருக்கிறார். ஒரு நூலில் என்ன உள்ளது என்பதை முன்னுரையில் விரிவாகக் கூறுவது சான்றோர் வழக்கம். இவர் நூலிலும் அறிமுக உரையிலேயே நூலின் தன்மையை விரிவாக எழுதியிருக்கிறார். தனக்கு ஞான நூல்களைக் கற்றுத்தந்த ஞானாசிரியரை மறக்காமல் நினைவுகூர்ந்து, அவர் கூறியதை மேற்கோள்காட்டி எழுதியிருப்பது சிறப்பு. அதேபோல யார் யாரெல்லாம் தனக்கு உதவினார்கள், எப்படி இந்த நூல் உருவானது என்பதையும் எடுத்துக்கூறி நன்றி பாராட்டியிருக்கிறார். குறிப்பாக, திருவாசகத்தைப் படித்து அனுபவிக்க சைவ சித்தாந்தத் தத்துவ அறிவு சிறிதளவாவது இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால், திருவாசகம் முழுவதிலுமே சைவ சித்தாந்தக் கருத்துக்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அதனால் அடிப்படை சைவ சித்தாந்தத்தைத் தெரிந்துகொண்டு திருவாசகத்தை அணுகுவது மிகச்சிறப்பாது என்று துணிந்து கூறியிருக்கிறார்.

சைவ சித்தாந்தம் பயிலாமல் திருவாசகத்தை அனுபவிக்க முடியாது என்பதில் எனக்கும் உடன்பாடு உண்டு. அதை சகோதரி துணிவாகச் சொல்லியிருப்பதைப் பாராட்டலாம் என்றவர், அந்நூலிலுள்ள கட்டுரையின் தலைப்புகள் பற்றியும், மேற்கோள் காட்டப்பட்ட நூலின் தன்மைகள் பற்றியும், திருவாசகத்துக்கு உரை எழுதுவது வழக்கமில்லை. என்றாலும், பிற்காலத்தில் அருணை வடிவேல் முதலியார், தண்டபாணி தேசிகர் போன்ற ஒரு சிலர் எழுதத் தொடங்கினர். சகோதரி. மஞ்சுளா மேலும் திருவாசகம் தொடர்பான பல நூல்களை எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறி உரையை நிறைவு செய்தார்.

அடுத்து, நூலைப் பெற்றுக் கொண்ட செல்வி பானுமதி அவர்கள் பேசியபோது, முதல் கட்டுரையான திருக்கோவையாரின் மாண்பு கூறியவர் இன்றுவரை ஒரு விவாதப் பொருளாகவே இருக்கும் - முட்டையா கோழியா எது முதலில் வந்தது என்பதற்கான விளக்கத்தைச் சொல்லும் ஒரு கட்டுரையைச் சுட்டிக்காட்டினார். எட்டும் இரண்டும் என்றால் என்ன... படித்தவர்களால் வரும் பிழையைச் சுட்டிக்காட்டும் ஒரு கட்டுரை, ஒரு எழுத்து மாறினால்கூட சமய நூல்களில் பொருளே மாறிப்போய்விடும் என்பதையும், யானாகி நின்றான், காதல் செய்து உய்மின் என்பதற்கான விளக்கம் போன்றவற்றைக் கூறி விரிவாக உரையாற்றினார்.

அடுத்து 'தாத்தா சொன்ன கதைகள்’ நூலை வெளியிட்ட திரு பி.வெங்கட்ராமன் அவர்கள் பேசியபோது, “இந்நூலில் சிந்தனைக்கு விருந்தாக பல கதைகள் உள்ளன. அடுக்குமாடிப் குடியிருப்பில் உள்ளவர்கள் அனைவரும் படிக்க வேண்டிய கதைகள் உள்ளன. மஞ்சுளா இதுபோன்ற நிறைய நூல்களைப் படைக்க வேண்டும்” என்று பேசினார். இந்நூலைப் பெற்றுக்கொண்டு சிறப்பித்த, எழுத்தாளர் திருமதி காந்தலெட்சுமி சந்திரமௌளி அவர்கள் பேசியபோது, “குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்தில் என்பார்கள். இங்கு இவ்விரண்டுமே கொண்டாடப்படுவது சிறப்பானது. இன்றைய காலத்துக்குத் தேவையான ஒரு பதிவு. இன்றைக்கு நாம் எல்லோரும் அப்பாட்மென்ட் வாழ்க்கை வாழ்கிறோம். கதையின் கதாநாயகர் கிருஷ்ணமூர்த்தி தாத்தா. அந்தக் கிருஷ்ணமூர்த்தி தாத்தாவாக அவதாரம் செய்திருப்பவர் இடைமருதூர் கி.மஞ்சுளாதான். பணி ஓய்வுக்குப் பிறகு வயதான தாத்தா ஒருவர், தான் உண்டு, தன் வேலை உண்டு என்று தொலைக்காட்சியையும், கிரிக்கெட்டையும் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்காமல், தான் வாழும் குடியிருப்பில் வசிக்கும் குழந்தைகளை ஒருங்கிணைத்து அவர்களுக்குப் பயனுள்ள நல்ல நல்ல கதைகளைக் கூறி வழிநடத்துகிறார் இந்தக் கிருஷ்ணமூர்த்தித் தாத்தா. முதல் கதையின் ஓவியமே அசத்துகிறது. குரங்கின் கோபத்தை சின்னச் சின்ன ஸ்ட்ரோக்குகளில் கண்களில் தீட்டிக் காட்டியிருக்கும் ஓவியர் சுமன் அற்புதமாக வரைந்திருக்கிறார். அதேபோல ஓவியர் டி.என். ராஜனின் எல்லா ஓவியங்களும் அருமை.

சோமுவும் சுண்டைக்காயும் கதையில் - சுண்டைக்காய் ஒரு டயட்டீஷியனின் வேலையைச் செய்துவிடுகிறது. சூப்பர் மேன் சுரேஷ், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திறமை இருக்கும் அதனால் யாரையும் தவறாக நினைக்கக்கூடாது என்று கூறும் சிறுபஞ்சமூலம் கூறும் பாடலை 'அரிய ஐவர்’ கதையில் கூறியிருப்பது சிறப்பு. கல் எறிந்தவனுக்கும் கருணை காட்டும் மரம் கதை குறிப்பிடத்தக்கது. அதேபோல, 'மனசு மாறிய பாட்டி’ கதை நல்ல சிந்தனை. சிறுவர்களுக்கு அற்புதமான பல கதைகளை எழுதும் மஞ்சுளா அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இன்றைக்கு இருக்கும் பெண்கள் பாலியல் வன்கொடுமை பற்றியும், இன்றைய இளைஞர்களின் ஒழுக்கக்கேடு பற்றியும், ஆசிரியர்களை மாணவர்கள் கேலி செய்வது குறித்தும், அறநெறி குறைந்து வருவது குறித்தும் அவர் நிறைய எழுத வேண்டும்.” என்றார்.

அடுத்து புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் தலைவர் முத்து. சீனிவாசன் அவர்கள் பேசியபோது, “இடைமருதூர் கி.மஞ்சுளாவின் பன்முகத் தன்மையை திரு வெங்கட்ராமன் அவர்கள் மூலம் கேட்டு வியந்து, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே அவருக்கு “இதழியல் சுடர்” என்ற விருதை வழக்கினோம். அதுமட்டுல்ல ஆண்டுதோறும் வெளியாகும் (சாதனை மகளிர்) “சாதனை முத்துக்கள்” நூலில் அவரது வாழ்க்கை வரலாற்றைச் சுருக்கமாகப் பதிவு செய்திருக்கிறோம். சங்க இலக்கியம், சமய இலக்கியம் மட்டுமல்லாமல் 20க்கும் மேற்பட்ட பன்னாட்டுக் கருத்தரங்கில் கட்டுரை எழுதியிருக்கிறார். கட்டுரை, சிறுகதை, நேர்காணல், நாடகம், சிறுவர் இலக்கியம், குறுநாவல் என்று எழுதியுள்ளதுடன், இதழாசிரியர், பதிப்பாசிரியர், தொகுப்பாசிரியர், பொறுப்பாசிரியர், மொழிபெயர்ப்பாளர், எனப் பன்முகத் தன்மை கொண்ட இவர் இதுவரை 25-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்து கொண்டு கட்டுரைகளை வாசித்துள்ளார். அது மட்டுமல்ல, தினமணியில் நூற்றுக்கணக்கான ஆராய்ச்சிக் கட்டுரைகளை, நேர்காணல்களை, மொழிபெயர்ப்பு கதைகளை, ஆன்மிகக் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய, சித்தாந்த ரத்தினம், சைவத் தமிழ் சிந்தையர், புதுக்கோட்டை இலக்கியப் பேரவை வழங்கிய இதழியல் சுடர், சென்னைக் கம்பன் கழகம் வழங்கிய தமிழ் நிதி, மடிப்பாக்கம் சிவநேயப் பேரவை வழங்கிய “இறைமாமணி” போன்ற விருதுகளைப் பெற்றவர். மேலும், இவரது குறுநாவலான ஆத்மதாகம் என்ற நூலுக்கு திருப்பூர் அரிமா சங்கம் சக்தி விருது (2014) வழங்கி கௌரவித்திருக்கிறது. இத்தனை சிறப்புக்குரிய சாதனைப் பெண்மணியான இவர், மிக எளிதாக சொகுசான வாழ்வு வாழவில்லை, சொகுசாக உட்கார்ந்துகொண்டு எழுத்துப் பணி செய்தவரல்ல இவர். பல கடினமான பாதைகளைக் கடந்து வந்திருக்கிறார். அவர் தந்தை அரசுப் பள்ளியில் ஓவிய ஆசிரியர். தாயார் அரசுப்பள்ளியில் நூலகர். திருமணத்திற்குப் பிறகு, ஒரு குழந்தைக்குத் தாயான பிறகே பாதியில் விட்ட தன் படிப்பைத் தொடர்ந்து படித்து எம்.ஏ, எம்ஃபில், என்று, இப்போது டாக்டர் பட்டம் வரை படித்து முன்னேறியிருக்கிறார் என்பதிலிருந்தே இவரது கடின உழைப்பு தெரிகிறது. இவரது பன்முகத் தன்மை நம்மை பிரமிக்க வைக்கிறது. இதுபோன்ற பல நூல்களைப் படைத்து, பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்” என்றார்.

இறுதியாக ஏற்புரை வழங்கிய இடைமருதூர் கி.மஞ்சுளா ...

“பேரன்பிற்கும் பெருமதிப்புக்கும் உரிய, அவையில் வீற்றிருக்கும் சான்றோர் பெருமக்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய நூல் வெளியீட்டில் பல சிறப்புகள் உள்ளன. குழந்தை இலக்கியம்தான் எல்லா இலக்கியத்துக்கும் முன்னோடி. உடல்நிலை சரியில்லாத நிலையிலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த இலக்கிய வீதி இனியவன் அவர்கள், பொன்.வேலாயுதனார் போன்றோருக்கு என் மனமார்ந்த நன்றிகள். குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா தன் பிறந்த நாளின்போது குழந்தைகளுக்கான நூல் ஒன்றை வெளியிடுவார் என்பதைப் படித்தபோது, எனக்கும் அப்படியொரு ஆசை வந்தது. அதை குழந்தை இலக்கியப் பேரவையின் தலைவரான பி.வெட்கட்ராமன் அவர்களிடம் சொன்னபோது அதுவும் ஒரு நாள் நடக்கும் என்று உறுதி கூறினார்.  அது இன்று நடந்திருக்கிறது.

திரு.வெங்கட்ராமன் அவர்களின் ஒத்துழைப்பாலும் ஒருங்கிணைப்பாலும்தான் இன்று இந்த நிகழ்வு அரங்கேறியிருக்கிறது. அவர், நிகழ்ச்சிக்கு இந்தப் பெண்மணிகளை அழைக்கலாம் என்று கூறி, எழுத்தாளர் திருமதி காந்தலெட்சுமி சந்திரமௌளி, செல்வி பானுமதி இருவரையும் அழைக்க, அவர்களும் மறுக்காமல் வந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக உரையாற்றி என்னை கௌரவப்படுத்தியமைக்கு மிகவும் நன்றி. சிவாலயம் ஜெ. மோகன் அவர்கள் ஏற்கெனவே 2006-இல் எனது திருவாசகத்தில் புராணக் கதைகள் என்ற நூலை திருவான்மியூர் கோயில் (சனிப்பிரதோஷ நன்நாளில்) நால்வர் மண்டபத்தில் வெளியிட்டு சிறப்பித்தார்கள். அதுமட்டுமல்ல, சூளைமேடு ஔவைத் தமிழ்ச் சங்கம் எங்களை எப்போதும் ஒருங்கிணைத்தே வைத்திருந்தது. அப்போது நான் ஔவைத் தமிழ்ச் சங்கத்தின் துணைச் செயலாளராக இருந்தேன் என்பதால்.

ஈன்ற பொழுதில் பெரிதுவக்கும் தன்மகனை

சான்றோர் எனக்கேட்ட தாய்

என்பார் திருவள்ளுவர். எப்படி தாய், தந்தை பெருமைப்படுவார்களோ, அதை விட தன் மாணவி ஒருத்தி சான்றோர் அவையில் மதிக்கப்படுவதைக் கேட்கும், பார்க்கும் ஆசிரியரும் பெருமைப்படுவார் என நினைக்கிறேன். அந்த வகையில், சென்னைப் பல்கலை. தொலைதூரக் கல்வியில் பயின்றபோது பேராசிரியர் திரு இராம.குருநாதன் அவர்களிடம் பாடம் கேட்கும் பாக்கியம் பெற்றவள் நான். இந்நிகழ்ச்சியை நடத்திக் கொடுத்திருப்பதற்கு அவரும் ஒரு காரணம்.

இங்கு வெளியிடப்பட்ட இவ்விரு நூல்களும் இரண்டு விதமான பசியைப் போக்கக் கூடியவை. ஒன்று திருவாசகம் தொடர்பான ’காதல் செய்து உய்மின் நூல் ஆன்மப் பசியைப் போக்கக்கூடியது. மற்றொன்று, சிறுவர் இலக்கியமான “தாத்தா சொன்ன கதைகள்” அறிவுப் பசியைப் போக்கக்கூடியது. 'காதல் செய்து உய்மின்’ என்ற நூலை எழுதக் காரணமாக இருந்தவர் காவேரிப்பாக்கம் அருள்திரு மாணிக்கவாசகர் மன்றச் செயலாளர் இரா.கி.சச்சிதானந்தம் அவர்கள். ஒவ்வோர் ஆண்டும் மாணிக்கவாசகர் குருபூஜையின்போது ஒரு மலர் வெளியிடுவார். அந்த மலரின் என் கட்டுரை அவசியம் இடம்பெற வேண்டும் என்று அன்புக் கட்டளை இடுவார். திருவாசகத்தில் ஏதோ ஒரு பாடலில் உள்ள பாடல் வரி ஒன்றை குறிப்பிட்டு எழுதி, இதைப் பற்றி கட்டுரை எழுதி அனுப்புங்கள் என்று கூறிவிடுவார். அவர் அன்புக் கட்டளையை ஏற்று எழுதிய கட்டுரைகள் பலவும் இந்நூலில் உள்ளன. இப்படி ஒரு நூல் வெளிவரக் காரணமானவர் அவர்தான். அவர் இன்று நம்மிடைய இல்லை என்பதால், அவருடைய மகன்களான திரு விசாகன் அவர்களையும், திரு இராமலிங்கம் அவர்களையும் சிறப்பிக்க விரும்புகிறேன். நிகழ்ச்சிக்கு வந்திருந்து பெருமைப்படுத்திய அனைவரும் “நன்றி” என்ற ஒரு வார்த்தையைத் தவிர வேறு எதை நான் கூறிவிட முடியும்? மாணிக்கவாசகரின் மணிவாக்கினால் சொல்வதாக இருந்தால்,

யாவர்க்கும் மேலாம் அளவிலாச் சீருடையான்

யாவர்க்கும் கீழாம் அடியேனை - யாவரும்

பெற்றறியா இன்பத்துள் வைத்தாய்க்கு – என் எம்பெருமான்

மற்றறியேன் செய்யும் வகை.

எனக் கூறி எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி, வணக்கம்.

நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கினார் கன்னிக்கோயில் ராஜா. அனைவருக்கும் நன்றியுரை வழங்கி நிகழ்ச்சியை நிறைவு செய்தார் மணிவாசகர் பதிப்பகம்- திரு இராம.குருமூர்த்தி அவர்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில், இலக்கியவீதி இனியவன், அம்பத்தூர் கம்பன் கழகத் தலைவர் பள்ளத்தூர் பழ. பழனியப்பன், திருவலிதாயம் உழவாரப்பணி மன்றச் செயலாளர் திரு.பாடி.சுப்பிரமணியன், முனைவர் மலையமான், ஆன்மீகக் களஞ்சியம் ஆசிரியர் தெள்ளாறு ஈ.மணி, சூளைமேடு அன்பரசன், டாக்டர் சீனிவாச கண்ணன், செய்தி வாசிப்பாளர் கோதை ஜோதிலெட்சுமி, கவிஞர் ஹாரிங்டன் ஹரிஹரன், மயிலாடுதுறை இளையபாரதி, தாயம்மாள் அறவாணன், கவிஞர் மலர்மகன், கவிஞர் சி.மகேஸ்வரி, தில்லை சிவா, ஓவியர் சுமன், ஓவியர் டி.என். ராஜன், கவிஞர் ராஜா.கருணாகரன், கவிஞர் வசீகரன், தினமணி உதவி ஆசிரியர் திரு சுந்தரபாண்டியன்(விழுப்புரம்), உ.வே.சா. நூலகம் - திரு உத்திராடம், பேராசிரியர் திரு.கிருஷ்ணமூர்த்தி, பொன்.வேலாயுதனார் முதலிய பலர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com