"ஒரே தேசம், ஒரே கட்சி" யை நோக்கி நகரும் இந்திய ஜனநாயகம்: யாருக்கான எச்சரிக்கை இது?

"ஒரே தேசம், ஒரே தேர்தல்", "ஒரே தேசம், ஒரே ரேஷன்" என ஒற்றைமயத்தை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கும் அதே நேரத்தில்தான் "ஒரே தேசம், ஒரே கட்சி" என்பதை நோக்கியும் இந்திய ஜனநாயகம் நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
"ஒரே தேசம், ஒரே கட்சி" யை நோக்கி நகரும் இந்திய ஜனநாயகம்: யாருக்கான எச்சரிக்கை இது?


பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, "ஒரே தேசம், ஒரே இடத்தில் அதிகாரம்" என்கிற சித்தாந்தத்தை வீரியமாக செயல்படுத்தி வருகிறது. இதுதொடர்பான மசோதாக்களும் நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்து துரிதமாக நிறைவேறி வருகிறது. 

இது ஒருபுறம் அரங்கேறிக்கொண்டு இருக்கும் அதே நேரத்தில் இதற்கு இணையாக "ஒரே தேசம், ஒரே கட்சி" என்பதை நோக்கியும் இந்தியா நகர்ந்துக்கொண்டிருக்கிறது.

ஒரு கட்சியில் இருந்து இன்னொரு கட்சிக்கு தாவுவது என்பது இந்திய அரசியலில் "கட்சித் தாவல் இங்கே தர்மமடா" என்று சினிமா பாடல் வரியில் இடம்பிடிக்கும் அளவுக்கு மிகச் சாதாரண விஷயம்தான். அது தற்போது சற்று நவீனமடைந்து எம்எல்ஏ-க்கள், எம்பி-க்கள் கூட்டாக கட்சித் தாவுவதாக மோசமடைந்துள்ளது. 

தொகுதிப் பிரதிநிதியாக மக்களின் ஆதரவால் தேர்வான பிறகு, ஆதரவளித்த மக்களால் நிராகரிக்கப்பட்ட கட்சியிலே போய் இணைவதை எப்படி விளக்குவது என்று தெரியவில்லை.

இதை ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று விமரிசித்தாலும், 17-வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, இரண்டு மாநிலங்களில் எம்எல்ஏ-க்கள் கூட்டாக கட்சித் தாவியதால், எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்த இரண்டு கட்சிகள் அம்மாநிலங்களின் பேரவையில் தற்போது ஒற்றை இலக்கு உறுப்பினர்களுடன் உள்ளது.  

ஒரு மாநிலத்தில் இரண்டு பிராந்தியக் கட்சிகள் மட்டுமே மக்களால் பேரவைக்கு தேர்வான நிலையில், எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்கள் கூட்டாக தேசியக் கட்சியில் இணைந்து அந்தக் கட்சிக்கு பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைக் கொடுத்துள்ளனர். ஜனநாயகமே கேள்விக்குறியான பிறகு, அது அளிக்கும் மாநில சுயாட்சி மட்டும் எப்படி கேள்விக்குள்ளாகாமல் இருக்கும். அதற்கான ஒரு சான்றுதான் இது.

கடந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மட்டுமே, சுமார் 30-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள், 50-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் பாஜகவுக்கு கட்சித் தாவியுள்ளனர்.

இந்த தேர்தல் முடிவுக்குப் பிறகு, எந்தெந்த மாநிலங்களில் எந்தச் சூழலில் எத்தனை எம்எல்ஏ-க்கள் பாஜகவில் இணைந்துள்ளனர் என்பதை ஆராய்ந்தபோது கிடைத்ததுதான் பின்வரும் மாநில வாரியான நீண்ட நெடிய பத்திகள்.   

சம்பவம் 1 - கோவா:

40 தொகுதிகளைக் கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு கடந்த 2017-ஆம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவில், 16 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக காங்கிரஸ் விளங்கியது. எனினும், 14 உறுப்பினர்களைக் கொண்டிருந்த பாஜக, கோவா முன்னேற்றக் கட்சி மற்றும் மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் தலா 3 எம்எல்ஏ-க்கள், மற்றும் 3 சுயேச்சைகளின் ஆதரவு என மொத்தம் 23 எம்எல்ஏ-க்கள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது.

இதன்பிறகு, நிறைய அரசியல் நாடகங்கள் அரங்கேறியது என்பது ஒரு கதை. அவை இந்தக் கட்டுரையின் இறுதியில் இணைக்கப்பட்டுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு நடந்த நாடகத்தை மட்டும் இந்த பத்தியில் கவனிப்போம்.

கடந்த ஜூலை மாதம், 15 காங்கிரஸ் எம்எல்ஏ-க்களில் 10 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் ஆளும் பாஜகவில் இணைந்தனர். மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏ-க்களுக்கு மேல் கட்சி மாறியதால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. இந்த 10 அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ-க்களில் மூன்று எம்எல்ஏ-க்களுக்கு பாஜக அரசில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக, பாஜக எம்எல்ஏ பிரான்சிஸ் டி சௌஸா மற்றும் முன்னாள் முதல்வர் மனோகர் பாரிக்கர் ஆகியோர் உயிரிழந்தபோது தங்களிடம் பெரும்பான்மை உறுப்பினர்கள் இருப்பதாக காங்கிரஸ் கட்சி அம்மாநில ஆளுநரிடம் இரண்டு முறை ஆட்சி அமைக்க உரிமை கோரியது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் 2 - கர்நாடகா:

2018-இல் நடைபெற்ற 15-வது சட்டப்பேரவைக்கான தேர்தலில் பாஜகவுக்கு 104, காங்கிரஸுக்கு 78, மஜதவுக்கு 37, பகுஜன் சமாஜ், பிரக்ஞாவந்த ஜனதா கட்சி, சுயேச்சைக்கு தலா ஓர் இடங்கள் கிடைத்தன. இதனால், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது. ஆனால், வெறும் 6 நாட்கள் மட்டுமே முதல்வராக இருந்த எடியூரப்பா நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன் ராஜிநாமா செய்தார். 

இதன்மூலம், குமாரசாமி தலைமையிலான காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி அமைத்தது. இது தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டணி, 14 மாதங்களாக ஆட்சி செய்து வந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 13 பேர் மற்றும் மஜத எம்எல்ஏ-க்கள் 3 பேர் ராஜிநாமா செய்தனர். இதனால், குமாரசாமி அரசு பெரும்பான்மையை இழந்தது. எனினும், அம்மாநில பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் தொடக்கத்தில் அவர்களது ராஜிநாமாவை ஏற்கவில்லை.  

இதன்பிறகு, அதிருப்தி எம்எல்ஏ-க்கள் பேரவைத் தலைவருக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சென்றது, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்று வந்தது என அம்மாநிலத்தில் அரசியல் குழப்பம் தொடர்ச்சியாக நீடித்து வந்தது. இதன்பிறகு, ஒரு வழியாக கடந்த ஜூலை 23-ஆம் தேதி நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி தலைமையிலான அரசு தோல்வியடைந்தது. இதையடுத்து, பாஜக மாநிலத் தலைவர் எடியூரப்பா கர்நாடக முதல்வராகப் பொறுப்பேற்றார்.

இதன்பிறகு, ராஜிநாமா செய்த 16 அதிருப்தி எம்எல்ஏ-க்கள் உட்பட 17 பேரை தகுதி நீக்கம் செய்து பேரவைத் தலைவர் ரமேஷ் குமார் உத்தரவிட்டார். எனினும், இந்த உத்தரவை எதிர்த்து தகுதி நீக்க எம்எல்ஏ-க்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கு முடிவுக்கு வந்த பிறகு, தகுதி நீக்கம் செய்யப்பட்ட காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏ-க்களும் பாஜகவில் இணைவதற்கான வாய்ப்புகள் மிகப் பிரகாசமாக உள்ளது.

இந்த ஆட்சி மாற்றம் மூலம், காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் எண்ணிக்கை 4 ஆக குறைந்தது. அதேசமயம், பாஜக 16 மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தில் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் 3 - சிக்கிம்:

சிக்கிமில் கடந்த ஏப்ரல் மாதம் பேரைவத் தேர்தல் நடைபெற்று, மே மாதம் அதன் வாக்குகள் எண்ணப்பட்டது. இதில், பிராந்தியக் கட்சிகளான சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா மற்றும் சிக்கிம் ஜனநாயக முன்னணி ஆகிய கட்சிகளே அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றன. காங்கிரஸ் மற்றும் பாஜக 32 தொகுதிகளிலும் தோல்வியைச் சந்தித்தது.

17 இடங்களில் வெற்றி பெற்ற சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா ஆட்சியைப் பிடித்தது. இதன்மூலம், கடந்த 24 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த பவன்குமார் சாம்லிங் தலைமையிலான சிக்கிம் ஜனநாயக முன்னணி 15 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று ஆட்சியை இழந்தது. 

இதில், பவன்குமார் சாம்லிங் உட்பட இருவர் தலா 2 தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றதால் சிக்கிம் ஜனநாயக கட்சி 15 இடங்களில் வெற்றி பெற்றிருந்த போதிலும் அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 13 ஆக இருந்தது. 

இந்த நிலையில், சிக்கிம் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த 13 எம்எல்ஏ-க்களில் 10 எம்எல்ஏ-க்கள் கடந்த 13-ஆம் தேதி பாஜகவில் இணைந்தனர். மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏ-க்கள் கட்சி மாறியதால் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது. இதன்மூலம், பேரவைத் தேர்தலில் போட்டியிட்டு மக்களால் ஒரு இடத்தில் கூட தேர்வு செய்யப்படாத பாஜக தற்போது அம்மாநிலப் பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்துள்ளது.

10 எம்எல்ஏ-க்கள் பறிகொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள் சிக்கிம் ஜனநாயக முன்னணியின் மேலும் இரண்டு எம்எல்ஏ-க்கள் அதற்கு அடுத்த தினமே தொகுதி நலனைக் கருத்தில் கொண்டு ஆளும் சிக்கிம் கிராந்திகாரி கட்சியில் இணைத்துக் கொண்டனர். இதன்மூலம், மக்களால் எதிர்க்கட்சி அந்தஸ்து வழங்கப்பட்ட சிக்கிம் ஜனநாயக முன்னணி சார்பில் தற்போது முன்னாள் முதல்வர் பவன் குமார் மட்டுமே அம்மாநில பேரவையில் ஒற்றை எம்எல்ஏ-வாக இருக்கிறார்.

சம்பவம் 4 - மகாராஷ்டிரா:

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவராக ராதாகிருஷ்ண விகே பாட்டீல் இருந்தார். கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன் அவரது மகன் காங்கிரஸில் இருந்து விலகி பாஜகவில் இணைந்ததால், அவர் தனது எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அவரும் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜிநாமா செய்தது மகாராஷ்டிர மாநிலத்தில் அக்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தியது. அவரும் பாஜகவில் இணையப்போவதாக அறிவித்தார். மக்களவைத் தேர்தலுக்கு முன் பாஜகவில் இணைந்த அவரது மகன், அகமதுநகர் மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது இந்த இடத்தில் குறிப்பிடத்தக்கது.

இதைத்தொடர்ந்து கடந்த ஜூலை மாதம், 3 தேசியவாத காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-க்கள் மற்றும் ஒரு காங்கிரஸ் எம்எல்ஏ தங்களது ராஜிநாமா கடிதங்களை சபாநாயகரிடம் அளித்தனர். இதன்பிறகு, இந்த 4 பேரும் தங்களை பாஜகவில் இணைத்துக் கொண்டனர். இதனிடையே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மும்பை பிரிவு தலைவர் சச்சின் அஹிரும் சிவ சேனா கட்சியில் இணைந்தார். ஒரு கட்சியின் முக்கிய நகரத்தினுடைய தலைவர் மற்றொரு கட்சிக்கு மாறுகிறார் என்பது இதன் வீரியத்தை உணர்த்துகிறது. 

மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இந்த தேர்தலிலும் பாஜக மற்றும் சிவ சேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த தேர்தலில், எதிர்க்கட்சிகளில் இருந்து பாஜக மற்றும் சிவ சேனாவில் இணைந்த அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு வாய்ப்பளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முக்கியத் தலைவர்களான ராதாகிருஷ்ண விகே பாட்டீல் மற்றும் சச்சின் அஹிர் ஆகியோருக்கு அமைச்சர் பதவி வழங்குவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் பேசப்பட்டு வருகிறது.

சம்பவம் 5 - குஜராத்:

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மிக முக்கியமான எம்எல்ஏ-வாக பார்க்கப்பட்டவர் அல்பேஷ் தாகூர். 2017 சட்டப்பேரவைத் தேர்தலின்போது இவர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியுடன் இணைந்து தேர்தல் களப் பணியில் தீவிரமாக செயல்பட்டார். அந்த தேர்தலில் ராதன்பூர் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏ-வும் ஆனார்.

இந்த நிலையில், கடந்த மக்களவைத் தேர்தலுக்கு முன்பு ஏப்ரல் மாதம், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளையும் ராஜிநாமா செய்தார். கட்சியின் மாநிலத் தலைமையிடம் ஏற்பட்ட விரிசல்தான் காரணம் என கூறப்பட்டு வந்தது. எனினும் அப்போது அவர் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்யவில்லை. இந்த தருணத்திலேயே அவர் பாஜகவில் இணையலாம் என்றும் பேச்சு அடிபட்டது. ஆனால், அல்பேஷ் அதை அப்போது செய்யவில்லை. 

இதையடுத்து, மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலின்போது காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களித்தார். இதன்பிறகே, ஜூலை 5-ஆம் தேதி அல்பேஷ் தாகூர் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். இவருடன், இவருக்கு நெருக்கமான தவல்சின் ஸாலாவும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலின்போது காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எதிராக வாக்களித்த பிறகு எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார். இதையடுத்து, இந்த இரண்டு அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏ-க்களும் கடந்த ஜூலை 18-ஆம் தேதி பாஜகவில் இணைந்தனர்.

சம்பவம் 6 - மேற்கு வங்கம்:

மேற்கு வங்க மாநிலத்தில், 2019 மக்களவைத் தேர்தல் பாஜகவுக்கு மிகச் சிறப்பாக அமைந்தது. 2014 மக்களவைத் தேர்தலில் வெறும் 2 இடங்களில் மட்டும் வெற்றி பெற்றிருந்த பாஜக, கடந்த தேர்தலில் 18 இடங்களில் வெற்றி பெற்றது. 

இந்த முடிவுகளுக்குப் பிறகு, அம்மாநிலத்தில் ஆளும் கட்சியான திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்எல்ஏ-க்கள் 4 பேர் பாஜகவில் ஐக்கியமாகியுள்ளனர். இது தவிர ஒரு காங்கிரஸ் மற்றும் ஒரு கம்யூனிஸ்ட் எம்எல்ஏ-க்களும் பாஜகவில் இணைந்துள்ளனர். இந்த வரிசையில் கடைசியாக கொல்கத்தா முன்னாள் மேயரும், எம்எல்ஏவுமான சோவன் சாட்டர்ஜி மற்றும் அவரது நெருங்கிய நண்பர் பைசாகி பானர்ஜி ஆகியோர் பாஜகவில் இணைந்தனர். இதில், சோவன் சாட்டர்ஜி மம்தா பானர்ஜியின் நம்பிக்கைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மேற்கு வங்கத்தில் எம்எல்ஏ-க்கள் மட்டுமில்லாமல், இதுவரை மொத்தம் 65 திரிணமூல் காங்கிரஸ் கவுன்சிலர்களும் பாஜகவில் இணைந்துள்ளனர். 

முன்னதாக, மக்களவைத் தேர்தலுக்கு முன் மேற்கு வங்கத்தில் பிரசாரம் மேற்கொண்ட பிரதமர் மோடி, மம்தா பானர்ஜியின் சர்வாதிகார நடவடிக்கைகள் காரணமாக அதிருப்தியில் உள்ள திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த 40 எம்எல்ஏ-க்கள் பாஜகவுடன் தொடர்பில் இருந்து வருவதாகவும், கட்சியைச் சேர்ந்த பல பிராந்தியத் தலைவர்கள் அதிருப்தியில் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார் என்பது இந்த இடத்தில் நினைவுகூரத்தக்கது.


சம்பவம் 7 - ஆந்திரப் பிரதேசம்:

சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு 6 எம்பி-க்கள் தேர்வானார்கள். இந்த 6 எம்பி-க்களில் 4 எம்பி-க்கள் மக்களவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு கடந்த ஜூன் மாதம் பாஜகவில் இணைந்தனர். 6-இல் 4 பேர் கட்சி மாறியுள்ளதால், இந்த இடத்திலும் கட்சித் தாவல் தடைச் சட்டம் பாயவில்லை. 

இந்த கட்சித் தாவல் மூலம் மாநிலங்களவையில் பாஜகவின் பலம் 75 ஆக அதிகரித்தது.

மக்களவையில் பெரும்பான்மையுடன் இருக்கும் பாஜகவுக்கு மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

சம்பவம் 8 - தெலங்கானா:

தெலங்கானா சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை 18 ஆக இருந்தது. இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் இந்த 18 எம்எல்ஏ-க்களில் 12 எம்எல்ஏ-க்கள் ஒட்டுமொத்தமாக ஆளும் கட்சியான தெலங்கானா ராஷ்ட்ர சமிதி கட்சியில் இணைந்தனர். மூன்றில் இரண்டு பங்கு எம்எல்ஏ-க்கள் அல்லது அதற்கு மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் வேறு கட்சியில் இணைந்தால், அவர்கள் மீது கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாது. இதனால், அந்த 12 காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் கோரிக்கையை சபாநாயகர் ஏற்றுக்கொண்டார். 

இது காங்கிரஸ் கட்சிக்கு அம்மாநிலத்தில் மிகப் பெரிய பின்னடைவாக அமைந்தது. இந்த சரிவில் இருந்து மீண்டு எழுவதற்குள் காங்கிரஸ் கட்சியில் மீதமிருந்த 6 எம்எல்ஏ-க்களில் மேலும் ஒருவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைவதாக ஜூன் 20-ஆம் தேதி வெளிப்படையாகவே அறிவித்தார். இது தெலங்கானா காங்கிரஸில் மிகப் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது.

இது ஒரு தொடர் கதை என்பதைப் போல் இந்த கட்சித் தாவல் சம்பவங்கள் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு தொடர்ச்சியாக ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெற்றுதான் வருகிறது. இது வரும் காலங்களிலும் தொடரும் என்பதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலத்தில் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. அம்மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்குத் தேவையான இடங்கள் 116. அங்கு பாஜகவின் பலம் 109 என்பது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற சூழல்களைப் பார்க்கும்போது மாநிலக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் நிலை, ஜனநாயகம், மக்களுக்கான அதிகாரம் என அனைத்தும் மிகப் பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. 

கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு நிகழும் கட்சித் தாவல், ஜனநாயகத்துக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் விடுக்கப்படும் நேரடி சவால். அதுவே, ஒரு கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பிறகு, கட்சி மாறி இடைத்தேர்தலில் போட்டியிட்டு அதே தொகுதியில் அதே மக்களால் மீண்டும் எம்எல்ஏ ஆகிறார் என்றால் அது யாருக்கான சவால்?

பன்முகத்தன்மையுடைய இந்திய ஒன்றியத்தை ஒற்றை மயத்தை நோக்கி நகர்த்துவதைக் காட்டிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது இந்த "ஒரே தேசம், ஒரே கட்சி" எனும் நகர்வு. இந்த விளைவுகள் சர்வாதிகாரத்தில்தான் முடியும்.

கோவா: 

சுபாஷ் ஷிரோத்கர் மற்றும் தயானந்த் சோப்தே என்கிற இரண்டு காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் 2017 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு பாஜகவில் இணைந்தனர். இதனால், அந்த இரண்டு தொகுதிகள் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, பாஜக எம்எல்ஏ பிரான்சிஸ் டி சௌஸா மற்றும் முதல்வர் மனோகர் பாரிக்கர் ஆகியோர் மறைந்ததையடுத்து, அந்த இரண்டு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனால், சட்டப்பேரவையின் பலம் 36 ஆக குறைந்தது.  

பிறகு, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் 3 எம்எல்ஏ-க்களில் இரண்டு எம்எல்ஏ-க்கள் தீடீரென ஒரு இரவில் பாஜகவில் இணைந்தனர். இதனால், அம்மாநில சட்டப்பேரவையில் பாஜகவின் பலம் மீண்டும் 14 ஆக அதிகரித்தது. மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சியின் பலம் 3-இல் இருந்து 1 ஆக குறைந்தது. 

இதையடுத்து, 17-வது மக்களவைத் தேர்தலுடன் காலியாக இருந்த 4 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. இந்த 4 தொகுதிகளில் பாஜக 3 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றது. இதில், பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற 3 எம்எல்ஏ-க்களில் இருவர், 2017 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுக்குப் பிறகு காங்கிரஸில் இருந்து பாஜகவுக்கு மாறிய அதே சுபாஷ் ஷிரோத்கர் மற்றும் தயானந்த் சோப்தே ஆவர்.

இதன்மூலம், பாஜக 17 உறுப்பினர்களுடன் தனிப்பெரும் கட்சியாக விளங்கியது. மேலும் 3 கோவா முன்னேற்றக் கட்சி உறுப்பினர்கள் மற்றும் 3 சுயேச்சை உறுப்பினர்கள் ஆகியோரும் பாஜகவுக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். இதனால், காங்கிரஸ் கட்சியின் பலம் 15 ஆக குறைந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com