இது தான் சுதந்திரமா? கடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: 200 மடங்காக உயர்ந்த கடன்!

தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில், இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது. ஆனால் கடன் சுமை கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி ரூபாய்.தமிழக அரசின் கடன் வரலாறு
இது தான் சுதந்திரமா? கடனில் தத்தளிக்கும் தமிழக அரசு: 200 மடங்காக உயர்ந்த கடன்!


தமிழ்நாடு அரசு மாநில வரி வருமானத்தில், இந்தியாவில் நான்காவது இடத்தில் உள்ளது. ஆனால் கடன் சுமை கிட்டத்தட்ட 4 லட்சம் கோடி ரூபாய்.
தமிழக அரசின் கடன் வரலாறு.


1984 - 85ம் நிதியாண்டில், எம்.ஜி.ஆர்., முதல்வராக இருந்தபொழுது 2,129.59 கோடி ரூபாய் கடன் இருந்தது. 2000-2001ம் நிதியாண்டில் ஆட்சியிலிருந்து திமுக விலகியபோது, ரூ.28,685 கோடியாக இருந்தது. 2001 – ஆம் ஆண்டு தமிழ் நாட்டின் மொத்த கடன் தொகை ரூ.28,685, சுதந்திரம் அடைந்து 54 ஆண்டுகள் வாங்கிய கடன் ரூ.28,685 கோடி, கடந்த பத்து ஆண்டுகளில் அரசு வாங்கிய கடன் தொகை மட்டும் ரூ.60,000 கோடி ஆகும்.

கருணாநிதி - ஜெயலலிதா 31.3.2006 அன்று ஜெயலலிதா ஆட்சி செய்த ஐந்தாண்டுக் காலத்துக்குப்பின், தமிழக அரசின் கடன் ரூ.57,457 கோடியாக அதிகரித்தது. அதன் பின்னர் 2006ம் ஆண்டு மே மாதம் திமுக ஆட்சி அமைத்தது. 2011ஆம் ஆண்டு திமுக ஆட்சி முடிவடையும் போது தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் தமிழக அரசின் கடன் ரூ.1,01,439 கோடியாக அதிகரித்தது.

அதிகரித்த கடன்சுமை 
2011ஆம் ஆண்டு மே மாதம் தமிழகத்தின் முதல்வரானார் ஜெயலலிதா. கடன் அளவு மிகப் பெரிய அளவில் அதிகரித்தது. 2011ஆம் தமிழகத்தின் கடன் ரூ.1,14,470 கோடியாக இருந்தது. இது 2012ல் இது ரூ.1,30,630 கோடியாகவும், 2013ஆம் ஆண்டில் ரூ.1,52,810 கோடியாகவும் உயர்ந்தது.


2014ஆம் ஆண்டில் திருத்தப்பட்ட பட்ஜெட் மதிப்பீட்டின்படி ரூ.1,71,490 கோடியாகவும் அதிகரித்தது. அதன்பின் 2015-ல் பட்ஜெட் மதிப்பீட்டின்படி கடன் ரூ.1,95,290 கோடியாகவும் அதிகரித்தது. 2015-16ஆம் ஆண்டில் தமிழகத்தின் கடனானது ரூ.2,11,483 கோடி என்று தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2016-17ஆம் நிதி ஆண்டுக்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்து பேசிய தமிழக நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் 2017 மார்ச் மாத முடிவில் தமிழக அரசின் மொத்த கடன் நிலுவை ரூ 2,47,031 கோடியாக இருக்கும் என்று அறிவித்தார்

பட்ஜெட் மீதான விவாதத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம், பல மாநிலங்கள், நம்மை விட அதிகமாக கடன் வாங்கியுள்ளதாக தெரிவிப்பது சரியான விளக்கமல்ல.

தமிழகத்தின் கடன் தொகை ரூபாய் 3.26 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது என்று இந்திய தணிக்கை துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கணக்கெடுப்பு மற்றும் தணிக்கை துறை தலைவரின் 2017-18ம் ஆண்டு நிதிநிலை மீதான தணிக்கை அறிக்கையில்  “ தமிழக அரசின் மொத்த வருவாய் 2017-18ம் நிதி ஆண்டில் ரூபாய் 1 லட்சத்து 46 ஆயிரத்து 279 கோடியாக இருந்தது. அதில் வருவாய் ரூபாய் 93 ஆயிரத்து 737 கோடி ஆகும். வருவாய் செலவினம் ரூபாய் 1 லட்சத்து 67 ஆயிரத்து 873 கோடி. 2016-17 ஆண்டு முடிவில் ரூபாய் 2 லட்சத்து 83 ஆயிரத்து 394 கோடியாக இருந்த கடன் 2017-18ம் ஆண்டு முடிவில் ரூபாய் 3 லட்சத்து 26 ஆயிரத்து 518 கோடியாக அதிகரித்துள்ளது. இது 15.22 சதவீதம் அதிகமாகும். வருவாய் செலவீனங்களில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட நிதியுதவி 2016-17 நிதியாண்டில் ரூபாய் 11 ஆயிரத்து 216 கோடியாக இருந்தது. இது கடந்த ஆண்டு ரூபாய் 8 ஆயிரத்து 911 கோடியாக குறைந்துள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படாததால் 14வது நிதிக்குழு ஆணைய பரிந்துரைகளின் படி மத்திய அரசிடம் இருந்து ஊராட்சி அமைப்புகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான அடிப்படை மானியங்கள் பெற முடியாததால் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் நிதி குறைந்துள்ளது. 2012-17 வரையிலான அமைப்புகளுக்கு தொடர்புடைய மிகை செலவினமான ரூ.1099 கோடியே 58 லட்சம் சட்டசபையில் முறைப்படுத்தப்படவில்லை.  அனைவருக்கும் கல்வித் திட்டம், இடைநிலைக் கல்வி மேம்பாட்டு திட்டம் போன்றவற்றின் கீழ் திட்டங்களை நடைமுறைப்படுத்த ரு.1627 கோடி நிதி உபயோகப்படுத்தப்படாமல் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது “ எனவும் 

நிலங்களை கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம், ஒப்பந்தப்புள்ளிகள் முடிக்கப்படாததன் காரணமாக நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறையில் ரூபாய் 1022 கோடி திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. காவிரிபாசன பகுதியில் தட்பவெட்ப நிலை மாறுதலால் ஏற்படும் தாக்குதலை மட்டுப்படுத்தும் திட்டம், தமிழ்நாடு நவீன பாசன வேளாண்மை திட்டம், நீர் பாசன கட்டமைப்புகளை புதுப்பித்தல், நீர்வள மேலாண்மை குழு குடி மராமத்து மற்றும் மறு சீரமைப்பு பணிகள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் அணைகளை புனரமைத்தல் திட்டங்கள் உள்ளிட்டவற்றை நடைமுறைப்படுத்த நிதி பயன்படுத்தப்படாததால் ரூபாய் 1,729 கோடி திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின்சார வாரிய மூலதன நிதியின் கீழ் கடலோர பேரிடர் துயர் தணிப்பு திட்டத்தின் மூலம் புயலால் பாதிக்கப்படாத மின் இணைப்பு அமைத்தல் போன்ற திட்டங்களை நடைமுறைப்படுத்த நிதிகள் பயன்படுத்தப்படாததால் ரூபாய்1493 கோடி நிதி திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது எனவும் 2018ம் ஆண்டு மார்ச் 31ம் தேதியின்படி அரசில் ரூபாய் 1276 கோடியே 27 லட்சம் முதலீடு செய்யப்பட்ட சாலைகள், பாலங்கள் மற்றும் கட்டிடங்கள் தொடர்பான 134  திட்டமிட்ட நிறைவு தேதிக்கு பிறகும் முடியாமல் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது. 2015-16ம் நிதி ஆண்டில் ரூபாய்6 ஆயிரத்து 156 கோடியாக இருந்த திருமண உதவி திட்டம், இலவச மடிக்கணினி மற்றும் சீருடை வழங்குதல் போன்ற இலவச திட்டங்களின் மதிப்பு கடந்த 2017-18 நிதியாண்டில் ரூ.4 ஆயிரத்து 433 கோடியாக குறைந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

2011-2012 ஆம் ஆண்டில் அரசின் வரவு

  • சேமநல நிதி முதலிய பொறுப்புகளை உள்ளடக்கிய மாநில அரசின் மொத்தக் கடன் 31.3.2011 அன்று ரூபாய் 1,01,349.45 கோடியாக இருந்தது. 
  • மாநில அரசின் சொந்த வரி வருவாய் ரூபாய் 59,787 கோடி எனவும் 
  • வணிக வரிகளின் வரவு ரூபாய் 37,196 கோடி எனவும் 
  • ஆயத்தீர்வை வரவுகள் ரூபாய் 10,191 எனவும்
  • முத்திரைத்தாள் தீர்வை ரூபாய் 6,493 எனவும்
  • மத்திய அரசு பகிர்ந்தளிக்கக்கூடிய நிகர வரி வருவாயில் தமிழக அரசின் பங்கு, சேவை வரியைப் பொறுத்த வரையில்  ரூபாய் 13,111 கோடி எனவும் 
  • வரி அல்லாத வருவாய், ரூபாய் 4,483.72 கோடி எனவும் யாக மதிப்பிடப்பட்டுள்ளது.

2019-2020 ஆம் ஆண்டில் அரசின் வரவு

  • தமிழ்நாட்டில், டாஸ்மாக் மூலம் வருவாய் வரவினம் 6,724.38 கோடி ரூபாயாகவும்,
  • முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவுக் கட்டணங்களின் கீழ் பெறப்படும் வருவாயாக 13,122.81 கோடி ரூபாய்
  • வாகனங்கள் மீதான வரி வருவாய் 6,510.70 கோடி ரூபாயாக
  • மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரவினங்கள் 1,24,813.06 கோடி ரூபாயாக இருக்கும் 
  • மாநிலத்தின் சொந்த வரியல்லாத வருவாய் 13,326.91 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது.
  • மாநிலங்களுக்கு இடையிலான மத்திய வரிகளின் பகிர்வில், தமிழ்நாட்டிற்கான பங்கு 33,978.47 கோடி ரூபாயாகவும் இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது.

2019-2020  நிதிநிலைக் குறியீடுகள்

141. 2018-2019 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில்,
மாநிலத்தின் மொத்த வருவாய் வரவுகள் 1,80,618.71 கோடி ரூபாயாகவும்,
வருவாய்ச் செலவினங்கள் 1,99,937.73 கோடி ரூபாயாகவும் இருக்கும். இதன் விளைவாக, 2018-2019 ஆம் ஆண்டிற்கு வருவாய்ப் பற்றாக்குறை 19,319.02 
எனவே, 2020 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 31 அன்று, நிகர நிலுவைக் கடன்கள் 3,97,495.96 கோடி ரூபாயாக இருக்கும்.

2018-2019 ஆம் ஆண்டிற்கான மாநிலத்தின் சொந்த வரி வருவாய் வரவினங்கள் 1,10,178.43 கோடி ரூபாய், பொருட்கள் மற்றும் சேவைகள் வரியின் உறுதிசெய்யப்பட்ட வளர்ச்சி மற்றும் பொருட்கள் மற்றும் சேவைகள் வரி அல்லாத வரிகளான பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் மதுபானங்கள் மீதான விற்பனை வரியின் வளர்ச்சியினை கருத்திற்கொண்டு வணிகவரிகள் மூலம் பெறப்படும் வரவுகள் 96,177.14 கோடி ரூபாயாக மாநில ஆயத்தீர்வைகளில் 2018-2019 ஆம் ஆண்டின் திருத்த மதிப்பீட்டைவிட 2019-2020 ஆம் ஆண்டில் 8 சதவீத வளர்ச்சிஎதிர்பார்க்கப்படுவதால், 2019-2020 ஆம் ஆண்டில் இது 7,262.33 கோடி 2018-2019 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் 5,918.82 கோடி ரூபாயாகக் கணிக்கப்பட்ட மோட்டார் வாகன வரிவருவாய், 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 6,510.70 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில், மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாய் 13,326.91 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசிடமிருந்து பெறும் உதவி மானியங்கள் 33,978.47 கோடி ரூபாயாகவும், சம்பள செலவினத்திற்கான ஒதுக்கீடு 55,399.74 கோடி ரூபாயாகவும், உதவித்தொகைகள் மற்றும் நிதி மாற்றங்களுக்கான ஒதுக்கீடு 82,673.32 கோடி ரூபாயாகவும், ஊதியம் அல்லாத செயல்முறை மற்றும் பராமரிப்பு செலவுகள் 11,083.42 கோடி ரூபாயாக 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் வட்டி செலுத்துவதற்கான செலவினம் 33,226.27 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது

மூலதன உட்கட்டமைப்பை உருவாக்க வேண்டியதன் தேவையை உணர்ந்து, 2018-2019 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் 26,191.98 கோடி ரூபாய், 2019-2020 ஆம் ஆண்டிற்கான, நிகரக் கடன் வரம்பு 51,800 கோடி ரூபாய் என்று கணிக்கப்பட்டிருந்தாலும், மாநில அரசு 43,000 கோடி ரூபாய் மட்டுமே நிகரக் கடன் வாங்க திட்டமிட்டுள்ளது

விரைவான பொருளாதார வளர்ச்சியை அடையவும், சீரான நிதி மேலாண்மையை உறுதி செய்யவும் அனைத்து வகையான நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுத்து வருகிறது என அரசு சொல்கிறது.

துணை மதிப்பீடு நிதியாக ரூ.6,682 கோடி ஒதுக்கீடு 
2108-19-ம் ஆண்டுக்கான துணை மதிப்பீடு நிதியாக ரூ.6,682 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாவது தமிழ்நாடு மின் உற்பத்தி மின் பகிர்மான கழகம் தனது நிலுவை தொகையை செலுத்த ரூ.1,000 கோடிக்கு நிதி அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஓ.பி.எஸ். தெரிவித்தார். போக்குவரத்து ஊழியர்களுக்கான இறுதி பலன்களை வழங்க ரூ.1,093 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், கோடைக்கால குடிநீர் பற்றாக்குறையை போக்க குடிநீர் வழங்கல் துறைக்கு ரூ.226 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார். 

கூட்டுறவு விவசாய கடன்களை தள்ளுபடி செய்வதற்காக கூட்டுறவு வங்கிகளுக்கு ரூ.253.39 கோடி ஒதுக்க அரசு அனுமதி அளித்துள்ளதாம். மக்காச்சோளம் பயிர் பாதிப்புக்குள்ளான விவசாயிகளுக்கு உள்ளீட்டு மானியம் வழங்க ரூ.186.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். எரிசக்தி துறைக்கு கூடுதலாக ரூ.1,640 கோடி ஒதுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், 2006 மார்ச் 31-ம் தேதி வரை நிலுவையில் இருந்த விவசாய கடனை தள்ளுபடி செய்ய கூட்டுறவு வங்கிக்கு ரூ.253.3 கோடி நிதி ஒதுக்க அரசு அனுமதி வழங்கியுள்ளதாக பேரவையில் ஓ.பி.எஸ். அறிவித்தார். மேலும் மாநில போக்குவரத்து கழகங்களுக்கு 3,000 புதிய பேருந்துகள் வாங்குவதற்காக துணை மதிப்பீடுகளில் ரூ.302 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார். 

மும்பையில் புதிதாக தமிழ்நாடு இல்லம் அமைக்கப்படும். வேலைவாய்ப்பு, படிப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக வெளிநாடு செல்லும் தமிழர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும். தொழில் நிறுவனங்களுக்கான கட்டுமான அனுமதி இணையம் மூலமாகவே இனி வழங்கப்படும். சென்னை பெரும்பாக்கத்தில் ரூ.121 கோடி மதிப்பில் 1,152 குடியிருப்புகள் கட்டப்படும். தமிழ்நாடு குடிசைமாற்று வாரிய அலுவலக பணிகளை கணினிமயமாக்கும் திட்டம் செயல்படுத்தப்படும். நகர ஊரமைப்பு இயக்ககம் மூலமாக வழங்கப்பட்டு வந்த அனுமதி இனி இணையம் மூலமாக வழங்கப்படும்.

அரசு ஊழியர்களின் பண்டிகை கால முன்பணம் ரூ.10,000 ஆக அதிகரித்து ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.  தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான பண்டிகைக்கால முன்பணம் ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஒரு லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட திட்டம். குடிசையில்லா நகரங்களை உருவாக்க ரூ.4,860 கோடி மதிப்பில் ஒரு லட்சம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும். தமிழ்நாடு தொலைநோக்கு திட்டம் 2023-ன் கீழ் அடுக்குமாடி குடிப்பியிருப்புகள் கட்டப்படும் என துணை முதல்வர் அறிவித்தார். 

சென்னை திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் ரூ.150 கோடி செலவில் பேருந்து நிலையம் அமைக்கப்படும். சென்னை, வேளச்சேரி, ரயில்நிலையம் அருகே ரூ.80 கோடி செலவில் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகன நிறுத்தம் அமைக்கப்படும். கோயம்பேடு மலர் அங்காடி அருகே உள்ள 3 ஏக்கர் இடத்தில் ரூ.40 கோடி மதிப்பில் நவீன மலர் அங்காடி அமைக்கப்படும். கோயம்பேடு அங்காடியில் பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு கழிப்பறையுடன் கூடிய இருப்பிடங்கள் ரூ.2 கோடியில் கட்டப்படும்.

சட்டமன்ற உறுப்பினர்களின் செலவுகள்

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம், படிகள், ஏனைய வசதிகள் மற்றும் இயற்கை எய்திய உறுப்பினர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்பெறும் நிதியுதவி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பெறும் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் மற்றும் ஏனைய வசதிகள் குறித்த விவரங்கள் 15-5-2015  அன்றுள்ளவாறு இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளன.

தினப்படி
சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடரில் கலந்து கொண்ட நாட்களுக்கும், சட்டமன்றப் பேரவைக் கூட்டம் தொடர்ந்து நடைபெறும்போது இரண்டு நாட்கள் முன்னருக்கும், ஒரு நாள் பின்னருக்கும் மற்றும் சட்டமன்றப்பேரவை குழு கூட்டம் நடைபெறும் போது ஒரு நாள் முன்னரும், பின்னரும் நாளொன்றுக்கு ரூ.500/- தினப்படி வழங்கப்படும்.

பயணப்படி
இரயில் வழியாக இரயிலில் குளிர் பதன வசதி செய்யப்பட்ட இரண்டடுக்கு படுக்கை வசதி கொண்ட  பெட்டியில் சென்று வருவதற்கான இரயில் கட்டணத்துடன் கிலோ மீட்டர் ஒன்றுக்குப் பின்னக் கட்டணம் 10 காசுகள்.

சாலை வழியாக பேருந்து வழித்தடம் உள்ள வழிகள் மூலமாக பயணம் செய்ய கிலோ மீட்டர் ஒன்றுக்கு 25 காசுகளும், பேருந்து வழித்தடமில்லாத ஏனைய வழியில் பயணம் செய்ய கிலோ மீட்டர் ஒன்றுக்கு 50 காசுகளும் வழங்கப்படும்.

பயணச் சலுகைகள்


பேருந்து பயணச் சலுகை:
ஒவ்வொரு உறுப்பினருக்கும், உறுப்பினர் அடையாள அட்டை பேரவைச் செயலகத்தால் வழங்கப்பெறுகிறது. உறுப்பினர்கள், இந்த அடையாள அட்டையுடன் மாநில அரசுக்குச் சொந்தமான போக்குவரத்துக் கழகத்தால் இயக்கப்படும், எந்தவொரு பேருந்து மூலமாக தமிழ்நாடு மாநிலத்தில் எந்தவொரு பகுதியிலும், எந்த நேரத்திலும் தனியாகவோ அல்லது அவருடைய கணவன்/மனைவியுடனோ அல்லது ஏதேனுமொரு பிற துணையுடன் பயணம் செய்யலாம்.

இந்தியாவின் எந்தவொரு இரயிலிலும், எந்தவொரு வகுப்பிலும், தனியாகவோ அல்லது அவருடைய கணவன் / மனைவியுடனோ அல்லது வேறு ஒரு உறவினருடனோ ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பயணங்கள் செய்வதற்காக, ஒவ்வொரு நிதியாண்டிலும், இரண்டு சம தவணைகளில் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் வழங்கத்தக்க வகையில் இரயிலில் பயணம் செய்வதற்கான படியாக ரூ.20,000/- வழங்கப்படுகிறது.

சட்டமன்றப் பேரவை கூட்டத் தொடர் நடைபெறும் ஒவ்வொரு முறையும், ஒவ்வொரு உறுப்பினரும் அவருடைய கணவன்/மனைவியுடன் அவர் வசிக்குமிடத்திலிருந்து சட்டமன்றப் பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் இடத்திற்கு வந்து மீண்டும் அவர் இருப்பிடம் திரும்பிச் செல்வதற்கு குளிர் சாதன அமைப்புடைய இரண்டடுக்கு படுக்கை வசதி கொண்ட இரயிலில் பயணம் செய்வதற்கான கட்டணத்தை ஒருமுறை பெறத் தகுதியுடையவராவார்.

தங்குமிட வசதிகள்
ஒவ்வொரு உறுப்பினரும் மாதமொன்றுக்கு ரூ.250/- வாடகை செலுத்துவதன் பேரில் சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களுக்கான அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒதுக்கீடு பெற தகுதியுடையவராவார்.

தொலைபேசி வசதிகள்
(i) அடுக்குமாடிக் குடியிருப்பு :
உறுப்பினர்களின் விருப்பத்திற்கேற்ப சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் அடுக்குமாடி குடியிருப்புகளில் நேரடி தொலைபேசி வசதி அமைக்கப்படுகிறது.

மேற்சொன்ன தொலைபேசியை நிறுவுவதற்கான கட்டணம் (Installation Charges) மற்றும் இரு மாதத்திற்கான வாடகையை அரசே செலுத்துகிறது. ஏனைய கட்டணங்கள் அனைத்தையும் சம்பந்தப்பட்ட உறுப்பினரே செலுத்த வேண்டும்.

(ii) இருப்பிடத் தொலைபேசி:
ஒவ்வொரு உறுப்பினரும் தன்னுடைய இருப்பிடத்திற்கு தொலைபேசி இணைப்பு பெறத்தகுதியுடையவர். இதனை நிறுவுவதற்கான செலவை இச்செயலகமே ஏற்றுக் கொள்ளும். தொலைபேசியை நிறுவுவதற்கான வைப்புத் தொகையை செலுத்துவது தொடர்பாக உறுப்பினர், வட்டியில்லாமல் வசூலிக்கத்தக்க முன்பணத்தை இச்செயலகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

மருத்துவ வசதிகள்
ஒவ்வொரு உறுப்பினரும், அவருடைய குடும்ப உறுப்பினர்களும் மாநில அரசு பராமரிக்கும் மருத்துவமனைகளில் கட்டணமின்றி தங்கும் இடவசதியைப் பெறவும், மருத்துவச் சிகிச்சைப் பெறவும் தகுதியுடையவராவர். அவர்களுடைய மருத்துவச் சிகிச்சை தொடர்பாக வெளி அங்காடியில் வாங்கும் மருந்துகளுக்காகும் செலவுத் தொகை திருப்பிக் கொடுக்கப்படுகிறது.

முக்கியமான அறுவை சிகிச்சைகளுக்கு நிதியுதவி
மத்திய அரசு ஏதேனும், மாநில அரசு அல்லது மத்திய அரசின் நேரடி ஆட்சிப் பகுதியின் ஏதேனும் நிருவாகத்தினர் பராமரித்து வருகின்ற ஏதேனும் மருத்துவமனையில் அல்லது இந்திய அரசின் ஆட்சிப் பகுதியில் அமைந்துள்ள ஏதேனும் தனியார் மருத்துவமனையில், மாநில அரசுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிப்பதன் பேரில் இருதயம், சிறுநீரகம் அல்லது உடம்பின் வேறு ஏதேனும் பாகம் தொடர்பாக, முக்கியமானதொரு அறுவைச் சிகிச்சை என மாநில அரசு கருதுகின்ற அறுவைச் சிகிச்சையை மேற்கொள்கிற சட்டமன்றப்பேரவையின் ஒவ்வொரு உறுப்பினரும், வரையறுக்கப்படுகின்ற அத்தகைய நிபந்தனைகளுக்குட்பட்டு, நிதியுதவி பெறுவதற்கு உரிமையுடையவராவர்.

ஏனைய வசதிகள்
(i) நூலகம்: சட்டமன்ற நூலகம், அனைத்து வசதிகளையும் கொண்டுள்ளது. அதன் சேவைகள் எல்லா உறுப்பினர்களுக்கும் கிடைக்கப்பெறுகின்றன.
(ii) எழுது பொருட்கள் வழங்கல்: ஒவ்வோராண்டும், ஒவ்வொரு உறுப்பினருக்கும் ‘உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை’ என்ற வாசகத்தோடு மாநில அரசுச் சின்னம் பொறிக்கப்பட்ட பின்வரும் எழுது பொருட்கள் வழங்கப்படுகின்றன:-

  • (அ) சிறிய கடிதத் தாள்கள் 3,700
  • (ஆ) பெரிய கடிதத் தாள்கள் 1,500
  • (இ) உறைகள் (நீள் சதுர அளவில்) 750
  • (ஈ) உறைகள் (சிறிய அளவில்) 1,500
  • (உ) ஹிரோ பேனா ஒன்று
  • (ஊ) சட்டமன்றப் பேரவை உறுப்பினர் நாட்குறிப்பேடு ஒன்று மற்றும் சுவரில் மாட்டக்கூடிய நாட்காட்டி இரண்டு.

உறுப்பினர்கள் தாங்களாகவே பெயர் விவரத்தாள் கற்றைகளை அச்சிடுவதற்காக உறுப்பினர்களுக்குத் தேவைப்படும் போதெல்லாம் சட்டமன்றப் பேரவை உறுப்பினர் சின்னம் கொண்ட அச்சுக்கட்டையினை இச்செயலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். உபயோகித்த பின்னர் 15 நாட்களுக்குள் இச்செயலகத்திற்குத் திரும்பச் சேர்ப்பித்திட வேண்டும்.

(iii) செயலக உதவி: உறுப்பினர்களுக்குத் தேவைப்படும் தட்டச்சுத் தேவையை நிறைவு செய்வதற்காக, சட்டமன்றப் பேரவைக் கூட்டம் நடைபெறும் போது மட்டும் கூடுதலாக ஆங்கிலம் மற்றும் தமிழ் தட்டச்சர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படுகின்றனர்.

(iv) இரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு செய்யும் வசதி : தென்னக இரயில்வேயுடன் இணைந்து உறுப்பினர்களின் வசதிக்காக, குடியிருப்பு வளாகத்தில் இரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு மையம் ஒன்று செயல்பட்டு வருகின்றது.

(v) பேருந்து போக்குவரத்து வசதிகள்: சட்டமன்றப் பேரவைக் கூட்டத் தொடர் நடைபெறும் காலத்தில் உறுப்பினர்களின் பயனுக்காக சென்னை சென்ட்ரல் / எழும்பூரிலிருந்து அரசினர் தோட்டத்தில் உள்ள சட்டமன்றப் பேரவை உறுப்பினர்களின் குடியிருப்பு வளாகம், சென்னை-2-ற்கும், அங்கிருந்து சட்டமன்றப் பேரவைச் செயலகம், சென்னை-9-க்கு இடையிலும் சிறப்பு பேருந்துகளை இயக்க சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்துடன் ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

(vi) உணவக வசதிகள் : உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக, சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு வளாகம், உபவசதிக் கட்டிடத்தில் தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணியாளர்கள் கூட்டுறவு சங்க உணவகக் கிளை (சைவம்) ஒன்று இயங்கி வருகின்றது. மேலும், உபவசதிக் கட்டிடத்தின் பின்புறம் சில்லறை விற்பனைக் கடை தேநீர் மற்றும் குளிர்பானக் கடை, பேப்பர் கடை ஆகியன இயங்கி வருகின்றன.

(vii) வங்கி வசதி : உறுப்பினர்களின் வசதிக்காக, குடியிருப்பு வளாகத்தில் தானியங்கி பணம் வழங்கும் இயந்திர (ATM) வசதியுடன் கூடிய இந்தியன் வங்கிக் கிளை ஒன்று செயல்பட்டு வருகின்றது.

(viii) மருத்துவமனை வசதி: உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக, அரசு பொது மருத்துவமனையுடன் இணைக்கப்பட்ட 24 மணிநேர மருந்தகம் ஒன்று குடியிருப்பு வளாகத்தில் அனைத்து நாட்களிலும் செயல்படுகின்றது.

(ix) உடற்பயிற்சிக் கூட வசதிகள்: ஆண்/பெண் சட்டமன்ற உறுப்பினர்களின் பயன்பாட்டிற்காக அனைத்து வசதிகளுடன் கூடிய குளிர்சாதன வசதி செய்யப்பட்ட உடற்பயிற்சிக் கூடங்கள் இரண்டு தனித்தனியாக அமைக்கப்பட்டுள்ளன.

மேற்கூறிய வசதிகள்/சலுகைகள் தவிர கீழ்க்காணும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

1. யோகா பயிற்சி: சட்டமன்றப் பேரவை கூடும் நாட்களில், குடியிருப்பில் தங்கியுள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் குடியிருப்பு வளாகத்தில் உள்ள பூங்காவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் காலை நேரத்தில் யோகா பயிற்சி அளிக்கப்படுகின்றது.
2. சிறுவர் பூங்கா : சட்டமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு வளாகத்தில் சிறுவர் பூங்கா ஒன்று அமைக்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது.
3. இறகுப்பந்து விளையாட்டுத் திடல்: உறுப்பினர்கள் பயன்பாட்டிற்கென இறகுப்பந்து விளையாட்டுத் திடல் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

(x) வாகன அனுமதி சீட்டுகள் : அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் இரண்டு வாகனங்களுக்கு ஹோலோகிராம் பதிக்கப்பட்ட வாகன அனுமதிச் சீட்டுகள் வழங்கப்படுகின்றன.

(xi) இலவச நாளிதழ்கள் : சட்டமன்றப் பேரவை கூடும் நாட்களில் சென்னையிலுள்ள சட்டமன்றப் பேரவை உறுப்பினர்கள் குடியிருப்புகளில், உறுப்பினர்கள் விரும்பும் இரண்டு நாளிதழ்கள் வழங்கப்படுகின்றன.

அரசின் செலவுகள்
இதுமட்டுமின்றி, அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், அரசு விழாக்கள் போன்றவற்றாலேற்படும் செலவுகள் கணக்கில் அடங்காது.

மக்களின் நிலை, மாநிலத்தின் நிலை
நீர் நிலைகள் சரிசெய்யப்படவில்லை. மக்கள் வீதிகளில் தண்ணீருக்கு அல்லாடுகிறார்கள். தனியார்கள் வால்வோ, ஸ்கேனியா, பென்ஸ் பஸ்களை இயக்க, அரசுப் பேருந்துகள் கூரை கிழிந்து, லங்கடாவாக மாறியுள்ளது. அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் இன்றி நூலகமாக மாற்றும் நிலை, அரசு மருத்துவமனையை நம்பி அரசு அதிகாரிகளோ, அரசியல்வாதிகளோ செல்ல முடியாத நிலை.

இலவச கலர் டிவியில் ஆரம்பித்து டிவி, ஃபேன், கிரைண்டர், மானிய விலையில் ஸ்கூட்டி, தாலிக்கு தங்கம் என பலவழிகளில் இலவசங்களை அள்ளி வீசி ஓட்டுக்களை அறுவடை செய்கின்றனர். ஆள்பவர்கள் மாறினாலும் கடன்சுமை தமிழர்களின் தலையில் அதிகரித்துக்கொண்டேதான் செல்கிறது. தேர்தலை முன்னிட்டு அரசு பல்வேறு சலுகைகளை அளிக்க உள்ளதால் அடுத்த தேர்தலுக்குள் மொத்த கடன் ஒரு லட்சம் கோடி ரூபாய் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரசு எதற்கு இலவசம் தருகின்றது என இப்போது உணர்ந்திருப்பீர்கள். உலக வங்கியில் கடன் வாங்கி நல திட்டங்கள், இலவசங்கள் என மக்களுக்கு இனிப்பான செய்திகளை தந்தாலும், அதன் உண்மை நிலவரம் இதுதான். (நலதிட்டங்கள் மக்களை சரியாக சென்று அடைவதில்லை, பெரும்பாலான பணம் ஊழல் மூலலும் அரசியல் வாதிகளுக்கும், அதிகாரிகளுக்கும் தான் சென்று அடைகின்றது. நாம் கஷ்ட்டப்பட்டு உழைத்து அரசுக்கு செலுத்தும் வரி பணம், அமெரிக்க , ஐரோப்பாவில் உள்ளவர்களுக்கு வட்டி பணமாக போகின்றது.

என்ன தான் செய்யலாம்?
2017 இல் 'இந்தியாஸ்பெண்ட்' மேற்கொண்ட ஆய்வின்படி, தமிழகத்தில் ஒரு நபருக்குச் சராசரியாக 28,778 ரூபாய் கடன் இருக்கிறது.  இது மக்களால் வாங்கப்பட்ட கடனா? அல்லது மக்களால் முழுதும் சென்று சேர்ந்த நிதியா?

அனுபவிப்பவர்கள் இதை பொதுக் கடன் என்று நினைப்பதால் தான், துணிச்சலாக கடன் வாங்குகிறார்கள். இனி மக்களிடம் ஒப்புதலுக்கு அனுப்பி, ஒப்புதல் பெற்றால்தான் அரசு கடன் வாங்க முடியும் என்பதைக் கொண்டு வர  உரிய வழி முறை வேண்டும். அரசு கடன் வாங்குவதை விட்டுவிட்டு, அசலை அடைக்க ஆவண செய்ய வேண்டும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com