காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட உத்தரவை ஒட்டி (15/05/1954) தினமணியில் வெளிவந்த தலையங்கம்!

ராஷ்டிரபதியின் இந்த உத்தரவை காஷ்மீர் தலைவர்கள் மனப்பூர்வமாக வரவேற்றிருக்கிறார்கள். பற்பல ராஜ்யங்கள் கொண்ட இந்தியக் குடும்பத்தில் புதிதாகச் சேர்ந்துள்ள காஷ்மீரை வாழ்த்துகிறோம்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்ட உத்தரவை ஒட்டி (15/05/1954) தினமணியில் வெளிவந்த தலையங்கம்!

காஷ்மீர் உத்தரவு

இந்தியாவுக்கும், காஷ்மீருக்குமிடையே அரசியல் உறவுகள் பற்றி காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை செய்துள்ள தீர்மானங்களை உடனடியாக அமல் நடத்துவதற்கு ராஷ்டிரபதி உத்தரவு பிறப்பித்து விட்டார். சட்டபூர்வமான வார்த்தைகளை நீக்கி விட்டுப் பார்த்தால், சில விஷயங்களைத் தவிர காஷ்மீர், இந்தியாவில் உள்ள இதர ராஜ்ஜியங்களைப் போல், இந்தியாவின் ஒரு அங்கமாகிறது என்று தான் அர்த்தம். காஷ்மீரின் விஷேச நிலைமையை முன்னிட்டுச் சில விலக்குகள் அளிக்கப்பட்டிருக்கின்றன. காஷ்மீர் அடியோடு இந்தியாவோடு சேர்ந்து விட்டால், நிரந்தரமான காஷ்மீர் வாசிகளின் நலன்கள் பாதிக்கப்படலாம் என்ற ஒரு பயம் இருந்தது. இந்த பயத்திற்கு நியாயமில்லாமல் இருக்க முடியாது. ஆயினும், கொஞ்சமும் அத்தகைய பயங்களுக்கு இடமளிக்கக் கூடாதென்பதற்காகவே இந்த சலுகைகள் அளிக்கப்படுகின்றன. ஸ்தாவர  சொத்துக்களை வாங்கும் உரிமை, காஷ்மீரில் குடியேறுவது, ராஜ்ய சர்க்கார் உத்யோகங்கள் ஆகிய விஷயங்களில் காஷ்மீரிகளின் நலன்களைப் பாதுகாப்பதற்கு காஷ்மீர் சட்டசபை சட்டமியற்றலாம் என்று அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவுடன் இணைந்த மற்ற சமஸ்தானங்களுக்கு இல்லாத சலுகைகள் காஷ்மீருக்கு மட்டும் ஏன் கொடுக்கப்பட வேண்டும் என்று சிலர் கோணல் கட்சி பேசலாம். காஷ்மீரின் இணைப்பு பற்றிய சம்பவங்களை ஞாபகப்படுத்திக் கொண்டால் இந்த கேள்விகளுக்கு இடமிராது. இந்த விவகாரம் ஐ நா ஸ்தாபனம் வரையில் போய் இன்னம் முடிவடையாமல் இருக்கின்றது. இந்த நிலைமையில்  இந்தியா பலவந்தமாக காஷ்மீர் மீது ஒரு அரசியல் ஏற்பாட்டைத் திணிக்கிறது என்ற பழிச்சொல்லுக்கு இடம் கொடுக்கக் கூடாது என்பதே இந்திய சர்க்காரின் விருப்பம். அதனால் தான் காஷ்மீர் அரசியல் நிர்ணய சபை செய்துள்ள தீர்மானங்களை மட்டும் அமல் நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது.

ஜீவாதார உரிமைகள் விஷயத்தில் யுக்தமான கட்டுப்பாடுகளை விதித்து சட்டமியற்றிக் கொள்ளவும் அதிகாரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. எல்லா ராஜ்ஜியங்களுக்குமே இந்த அதிகாரம் இருக்கிறது. பேச்சுரிமை, எழுத்துரிமை என்பவை தேசத்தின் பந்தோபஸ்திற்கு உட்பட்டவை தான். அதைப் பாதுகாப்பதற்கு வேண்டிய கட்டுப்பாடுகளை விதிப்பதற்கு  ராஜ்யங்களுக்கு உரிமை  இருக்க வேண்டும் என்பதை மறுக்க முடியாது. ‘நியாயமான கட்டுப்பாடுகள்’ விதிப்பது ஜீவாதார உரிமைகளுக்கு முரணானதல்ல என்பதை சுப்ரீம் கோர்ட்டே ஒப்புக் கொண்டிருக்கிறது.

இதர ராஜ்ஜியங்களில் இருப்பது போல், காஷ்மீருக்கும் சுப்ரீம் கோர்ட்டின் அதிகாரம் விஸ்தரிக்கப்பட்டிருக்கிறது. பொதுவாக மற்ற பிரதேசங்களில் அமலிலிருக்கும் எல்லா ஏற்பாடுகளுக்கும் காஷ்மீருக்கும் இனி பொருந்தும்.

1952 - ல் செய்யப்பட்ட டில்லி ஒப்பந்தத்தை ஷேக் அப்துல் அமுல் படுத்த ஒப்புக் கொண்டிருந்தால் இந்த ஏற்பாடுகள் முன்பே வந்திருக்கும். ஆனால், வேறு நோக்கத்துடன் அவர் அந்த ஒப்பந்தத்தை அமுலுக்குக் கொண்டு வராமல் காலம் கடத்திக் கொண்டிருந்தாரென்பது பின்னர் நடந்த சம்பவங்களில் இருந்து புலனாயிற்று. காலம் தாழ்த்தாமல் காஷ்மீர் - இந்தியா உறவுகள் சட்டபூர்வமான  முறையில் ஸ்திரமாக்கப்படுவது மகிழ்ச்சிக்குரிய விஷயம். தங்கள் அபிலாஷைகள் நிறைவேற்றுவதற்கு உதவி செய்த பக்‌ஷிகுலாம் முகம்மதுக்கு காஷ்மீர் மக்கள் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

ராஷ்டிரபதியின் இந்த உத்தரவை காஷ்மீர் தலைவர்கள் மனப்பூர்வமாக வரவேற்றிருக்கிறார்கள். பற்பல ராஜ்யங்கள் கொண்ட இந்தியக் குடும்பத்தில் புதிதாகச் சேர்ந்துள்ள காஷ்மீரை வாழ்த்துகிறோம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com