உங்கள் புத்தகங்களுடன் நீங்கள் பேசியதுண்டா?

இன்று உலக புத்தக தினம் (ஏப்ரல் 23). புத்தகங்களின் மீதான பித்து என்றேனும் தணியக் கூடும் என்று நினைத்திருந்தேன்.
உங்கள் புத்தகங்களுடன் நீங்கள் பேசியதுண்டா?

இன்று உலக புத்தக தினம் (ஏப்ரல் 23). புத்தகங்களின் மீதான பித்து என்றேனும் தணியக் கூடும் என்று நினைத்திருந்தேன். ஆனால் அது நாளந்தம் வளர்கிறதே தவிர குறைவதாக இல்லை. எனக்காக காத்திருக்கும் புத்தகங்களின் வாசனையை நானறிவேன். நூலகத்தில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் புத்தகங்களைப் பார்க்கும் போதும், அவற்றைத் தொடும் போதும் ஏற்படும் உணர்வு எந்தவொரு வார்த்தையாலும் மொழி மாற்றம் முடியாது. 

அலமாரியில் உள்ள புத்தககங்களுடன் மானசீகமான ஒரு உரையாடல் எனக்குள் நிகழ்ந்து கொண்டிருக்கும். படித்து முடித்துவிட்ட புத்தகங்கள் சில மீள் வாசிப்புக்கு அல்லது நண்பர்களின் வாசிப்புக்கு தயாராகிக் கொண்டிருக்கும். இன்னும் படிக்க வாய்க்காத புத்தகங்களின் அணிவகுப்பு கண் முன் ஆவலை அதிகரித்தபடி, நேரமின்மையையும் சூழலையும் சபித்தபடி காத்திருக்கும். அப்படி காத்திருக்கும் புத்தகங்கள் சில தலையணைக்கருகிலும், கைப்பையிலும் எப்போதும் உடனிருக்கும். நேசிக்கும் புத்தகங்கள் மிகவும் பத்திரமாகவும் பிரத்யேகமாகவும் யாரும் எளிதில் அணுகிவிடமுடியாத வண்ணம் ஒளித்து வைக்கும் பழக்கம் எப்போது துவங்கியது என்பதை நானறியேன். ஓஷோவும், காந்தியும், ஜரதுர்ஷ்டாவும் அந்த வரிசையில் மறைந்தும் தோன்றியும் உருமாறிக் கொண்டிருப்பது என் கண்களுக்கு மட்டுமே புலப்படும்.

வாசிப்பு எனும் போதை எதைவிடவும் மிகப் பெரிது. ஊரே நித்திரையில் ஆழ்ந்திருக்க, படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்தின் பக்கங்களின் சப்தம் மட்டும் உங்கள் செவியை நிறைத்திருக்கும் அனுபவம் அழகானது. ஒரு புதினத்தை நீங்கள் வாசித்துக் கொண்டிருந்தால், அதிலுள்ள கதாபாத்திரங்கள் நம்முடன் ஒரு கட்டத்தில் உரையாடத் தொடங்குவார்கள், இன்னொரு கட்டத்தில் அவர்களில் ஒருவர் நாமாகியிருப்போம். இதுபோன்ற ரஸவாதம் வாசிப்பினால் மட்டுமே கிடைக்கக் கூடியவை. சிலருக்கு படிக்க அமைதி தேவை. ஆனால் எந்தச் சூழலையும் அமைதியாகக் கூடியது வாசிப்பு என்பேன். என்னால் எந்தச் சூழலிலும் புத்தகம் படிக்க முடியும். அதிக இரைச்சலான இடங்களில்தான் ஆழமாக அதனுள் இறங்க முடியும். காரணம் புறச் சுழுலிலுள்ள சப்தங்களையெல்லாம் அப்புறப்படுத்தி எனக்கான தனிமையை உருவாக்கித் தரும் திறன் புத்தகங்களுக்கு மட்டுமே சாத்தியம்.

புத்தக வாசிப்பு என்பது நம் மூச்சை சீராக்கும் என்றால் மிகையில்லை. பிரணாயாமம் தியானம் என்று தனியாக அமர்ந்து பயிற்சிகள் செய்ய வேண்டாம். வாசிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு அது இலவச இணைப்பாக கிடைக்கும் யோகம். வாசி யோகம் அல்ல இது. வாசிப்பு யோகம். ஒரு புத்தகத்தை ஆழ்ந்து படித்துக் கொண்டிருக்கும் போது, நம் மனநிலை அமைதியாக இருக்கும், ஒரே விஷயத்தில் குவியும். இது ஒரு நல்ல சுவாசப் பயிற்சி மட்டுமல்லாமல் தியான மனநிலை தரும். அது உள நலனை மட்டுமல்லாமல் உடல் நலனையும் காக்கிறது.

இந்த உலகில், இந்த வாழ்க்கையில் என்னை யார் கைவிட்டாலும், என்னை விட்டு எவர் பிரிந்தாலும், ஒருபோதும் என்னை விட்டு நீங்காதவை ஒன்றுதான். அவை நான் சேமித்திருக்கும் ஆயிரக்கணக்கான புத்தகங்கள். அது தரும் ஞானத் தேடல் அளவிலாதது. உண்மையில் நம்மை நமக்கு வெளிச்சம் போட்டுக் காண்பித்து, அகப்பயணத்தைத் தூண்டும் வல்லமை புத்தகங்களுக்கு உண்டு. ஆனால் எல்லா புத்தகங்களும் அப்படிச் செய்யுமா என்று கேட்டீர்கள் எனில் நிச்சயம் என்றுதான் சொல்வேன். மலினமான விஷயங்களை உள்ளடக்கிய புத்தகங்களை படிக்கும் போது எதிர்மறையான எண்ணங்களை உருவாக்கும் என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. ஆனால் ஏதோ ஒருவகையில் வாசிப்பினுள் ஒருவரை ஆழ்த்திய அப்புத்தகத்தை துறந்து, அடுத்து வேறொரு விஷயத்துக்குள் நுழைய அது ஒரு முதல் படியாகவும் இருக்கலாம். ஒரு கத்தி குரங்கின் கையில் அகப்படுவதும், இறைச்சி கடை பணியாளரின் கையில் இருப்பதற்கும், ஒரு போர் வீரனின் கையில் இருப்பதற்கும், வித்யாசங்கள் உள்ளது. நமக்குக் கிடைத்த கருவியை வைத்துக் கொண்டு நம்மை உயர்த்திக் கொள்வதற்கான துருப்புச் சீட்டுக்கள் தான் புத்தகங்கள்.

புத்தகங்கள் நிறைய வீடு என்பது அறிவுத் தேடல் உடைய மனிதர்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு வீட்டிலும் இவ்வகையில் ஏற்படும் வெளிச்சம் ஒரு சமூகத்தையே வெளிச்சமாக்கும். அறிவாளிகளும், ஞானிகளும் நாடு முழுவதும் நிறைந்திருந்தால் தீமை குறையும். நல்லுலகத்துக்கான கனவுகளை விதைப்பதும் சரி அறுவடை செய்வதும் சரி புத்தகங்களால் மட்டுமே சாத்தியம். அத்தகைய புத்தம் புதிய உலகத்திற்கான சாவி நம் ஒவ்வொருவரிடமும் உள்ளது. திறந்து பார்க்கலாம் அதன் முதல் பக்கத்தையேனும்....

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com