இழந்த என் குழந்தைப் பருவத்தை இப்போது வாழ்கிறேன்

மகிழ்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் இருந்த அர்ச்சுனனுக்கு அப்போது வயது பத்து. அவனது பெற்றோர் தங்களது சொந்த கிராமத்தை விட்டு ஒரு முதலாளியின்
இழந்த என் குழந்தைப் பருவத்தை இப்போது வாழ்கிறேன்

மகிழ்ச்சியுடனும் சுறுசுறுப்புடனும் இருந்த அர்ச்சுனனுக்கு அப்போது வயது பத்து. அவனது பெற்றோர் தங்களது சொந்த கிராமத்தை விட்டு ஒரு முதலாளியின் கீழ் மரம் வெட்டும் குழுவில் வேலை செய்து வந்தனர். தனது பெற்றோரின் அரவணைப்பால் குழந்தைப் பருவத்திற்கே உரிய இயல்பானதொரு வாழ்க்கையை அர்ச்சுனனுக்கு வழங்க முடிந்தது. ஆனால் வேலைப் பளு அதிகமாகவே, அவனது பெற்றோர் அர்ச்சுனனை அங்கேயே விட்டு விட்டுத் தப்பிச் சென்று விட்டனர். சந்தோஷத்தையும் கனவுகளையும் தொலைத்து அப்பாவித்தனமாக உள்ள அந்தக் குழந்தையை மரம் வெட்டும் குழுவின் முதலாளி நிரந்தரமான ஒரு கொத்தடிமையாக மாற்றுவதற்கு இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டார்.

மரங்களை வெட்டி, செதுக்கி துண்டுகளாக ஆக்கி வாகனங்களில் ஏற்றும் வேலையைக் கடந்த பத்து வருடமாகச் செய்துள்ளார் அர்ச்சுனன். ஓய்வில்லாத வேலையால் தன் பால்ய பருவம் தன் கண் முன்னே கரைந்து போவதை வேதனையுடன் கடந்துள்ளார். தன் பெற்றோர் முதலாளியிடம் வாங்கிய முன் பணத்திற்காக ஊர் ஊராகச் சென்று மரம் வெட்டும் வேலையைச் செய்து வந்துள்ளார்.

வாரம் முழுக்க வேலை செய்தாலும் இறுதியாக 200 அல்லது 300 ரூபாய் மட்டுமே முதலாளி வழங்கியுள்ளார். வெளியே சென்று தன் உறவினர்களை பார்க்கவோ குடும்ப காரியங்களில் பங்கெடுக்கவோ அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. வேறு வேலைக்குச்  சென்று பணத்தை சம்பாதித்து தன் அன்றாட தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூட அனுமதி இல்லை. முதலாளிக்குப் பணிந்து வேலை செய்யாமல் பதில் பேசினால் கடுமையான வசைகளோ அடிகளோ விழும்.

முதலாளியே அர்ச்சுனனுக்கு ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தார். அர்ச்சுனனும் அவரது மனைவி தேவியும் சேர்ந்து முதலாளிக்காக வேலை செய்து வந்துள்ளனர். தேவிக்கு இரு குழந்தைகள் பிறந்த போதும் மருத்துவ பரிசோதனைக்குச் செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

வேலை முடிந்த உடன் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குச் சென்று இடம் விட்டு இடம் போகும் ஒரு நாடோடி வாழ்க்கையை வாழ்ந்துள்ளனர். காய்ந்து போன முள் மரங்களை வெட்டும் போது உடம்பில் அங்கங்கு சிராய்த்து, முட்கள் குத்தி ரத்தம் வடிவது இயல்பாகிப் போனது. ஒரு முறை மரத்தின் மீது ஏறி ஒரு கிளையை வெட்டும் போது பாரம் தாங்காமல் கிளை ஒடிந்து கீழே விழுந்ததால் அர்ச்சுனனுக்கு கை முறிந்து போனது. முதலாளி மருத்துவ செலவிற்குப் பணம் தர மறுக்கவே, தான் வைத்திருந்த நகையை அடமானம் வைத்து மருத்துவம் பார்த்துள்ளார்.

மரம் வெட்டச் செல்லும் இடங்களில் முதலாளி அவர்களைத் தற்காலிகமாகப் புடவைகளை வைத்து குடில் போட்டுத் தங்க வைத்துள்ளார். மனித நேயமில்லாமல் மழையோ வெயிலோ பாதுகாப்பில்லாத வெட்ட வெளியில் குழந்தைகளுடன் தங்க பணிக்கப்பட்டுள்ளனர். சேறும் புழுதியுமாய் கிடந்த அவ்விடங்கள் மனிதன் வாழத் தகுதியற்ற இடங்களாகும். இரு நாட்களுக்கு முன் பிறந்த தன் இரண்டாவது குழந்தையை அரசு மருத்துவமனையில் பிரசவத்தின் போது வழங்கிய கொசு வலையில் தேவி படுக்க வைத்துள்ளார். அரசு பேருந்து நிழற்குடையில் அப்போது தங்கியிருந்தாலும் அவ்விடத்தில் ஈக்களும் கொசுக்களும் மோய்த்தன.

மாவட்ட நிர்வாகம் மீட்பு நடவடிக்கை மேற்கொண்டு அவர்களைக் காப்பாற்றியது. அப்போது குழந்தைக்குச் சரிவர நீக்காத தொப்புள் கொடி பாதிப்படைந்திருப்பதைப் பார்த்து மனவேதனை அடைந்த துணை ஆட்சியர் உடனடியாக ஒரு மருத்துவரை அழைத்துப் பரிசோதிக்கச் சொன்னார். உடனடி மருத்துவ வசதியால் மோசமான பாதிப்பிலிருந்து அக்குழந்தை காப்பாற்றப்பட்டது. துணை ஆட்சியர் அந்த பெண் குழந்தைக்குத் தமிழ்நாட்டின் அடையாளமாக அவளுக்கு ‘தமிழா’ என்று பெயர் வைத்தார். மீட்கப்பட்ட அன்றே அவர்களுக்கு விடுதலை சான்றிதழ்கள் வழங்கப்பட்டு தங்களது சொந்த கிராமத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இரு ஆண்டுகள் மறுவாழ்வு பயிற்சியை முடித்து தற்போது அர்ச்சுனன், தேவி, மகன் மாசி மற்றும் மகள் தமிழா ஆகியோர் மகிழ்ச்சியான குடும்பமாகவும் பெரும் கனவுகளுடனும் வாழ்ந்து வருகின்றனர்.

இன்று தமிழா ஒரு ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான குழந்தையாக தன் தந்தை இழந்த குழந்தைப் பருவத்தை வாழ்ந்து வருகிறாள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com