கனவு  நனவாகியது!

நாட்டின்  பாதுகாப்பு  பணியில்  ஈடுபட விரும்பும் பெண்களுக்கு  ஒரு முன்னுதாரணமாக  திகழும்  ஐஸ்வர்யா  கிரிஷ்  அவாஸ்தி  (24)   சிறுவயது முதலே  இந்திய விமானப்படையில்  சேர்ந்து  விமானியாக  வேண்டும்  என்ற
கனவு  நனவாகியது!

நாட்டின்  பாதுகாப்பு  பணியில்  ஈடுபட விரும்பும் பெண்களுக்கு  ஒரு முன்னுதாரணமாக  திகழும்  ஐஸ்வர்யா  கிரிஷ்  அவாஸ்தி  (24)   சிறுவயது முதலே  இந்திய விமானப்படையில்  சேர்ந்து  விமானியாக  வேண்டும்  என்ற தன் கனவை  நனவாக்கியதோடு,  தற்போது  குவாலியரில்  விமானப்படை அதிகாரியாகவும்  உள்ளார்.

இவரது  தந்தையும்  இந்திய விமானப் படையில்  விமானியாக பணியாற்றியவர்தான்.  2017- ஆம்  ஆண்டு  மே 14-ஆம் தேதி  தன்னுடைய தந்தை  மாரடைப்பால்  மரணமடையவே, தானும்  இந்திய  விமானப் படையில் சேர  வேண்டுமென்று  முடிவெடுத்ததோடு அதே  ஆண்டு விமானப்படை அகாதெமியில்  சேர்ந்தார்  ஐஸ்வர்யா.

ஏற்கெனவே,  புனேயில்  மகளிருக்கான  பொறியியல்  கல்லூரியில் மெக்கானிக்கல்  என்ஜினியரிங்  துறையில்  பி.ஈ.பட்டம்  பெற்றிருந்த ஐஸ்வர்யா,  மேற்கொண்டு எம்.பி.ஏ  படித்துக் கொண்டிருந்தபோதுதான், எதிர்பாராதவிதமாக  அவரது  தந்தை இறந்து போனார்.

மகாராஷ்டிரா  மாநிலம்  புல்தானா  மாவட்டம்  மெக்கர்   கிராமத்திலிருந்து முதன்முதலாக  இந்திய விமானப்  படையில்  சேர்ந்த  தன்னுடைய தந்தையைத் தொடர்ந்து  விமானப் படையில் சேர்ந்த  இரண்டாவது  தலைமுறையை சேர்ந்தவர் ஐஸ்வர்யா.

முதல் ஆண்டில்  கடுமையான  பயிற்சிகளை பெற வேண்டியிருந்ததாம்.  உடல் ரீதியான  பயிற்சிகள்  மட்டுமின்றி  முகாம்களில்  தங்கி தொழில்  ரீதியான கல்வியையும்   கற்பது   சிரமமாக  இருந்தாலும்,  அட்டவணைப்படி  ஓராண்டில் அனைத்தையும்  கற்கத் தொடங்கினார்  ஐஸ்வர்யா.

கல்லூரியில்  படிக்கும்போது  எந்த விளையாட்டிலும்  ஈடுபாடு காட்டாததால், விமானப் படையில்  முக்கியமான  உடல் ரீதியான  பயிற்சியின்போது  முதலில் சற்று கடுமையாக தோன்றினாலும், எப்படியும்  விமானியாக வேண்டுமென்ற வைராக்கியம்  அவரை  ஆர்வத்துடன்  ஈடுபட வைத்தது. பயிற்சியின் தொடக்கத்தில்  கடுமையாக  உழைத்ததால்  நாளடைவில் ஒரு  விமானிக்கு தேவையான  கல்வி,  உடல் தகுதி  அனைத்தையும்  பெற முடிந்தது.

""நான் அனைத்து தகுதிகளையும்  பெற்று விமானப் படை  அதிகாரியாக நியமிக்கப்பட  இருந்த நேரத்தில்  எதிர்பாராதவிதமாக  என்னுடைய சகோதரன் கடலில்  மூழ்கி  இறந்து  போனது  பெரும் அதிர்ச்சியை  தந்தது.  என்னுடைய வாழ்க்கையில்  அது ஒரு  சோதனையாக  மட்டுமின்றி,  சவாலான  கட்டமாக இருந்தது.  அந்த சூழ்நிலையிலும் பயிற்சியை  முடித்து  2018-ஆம் ஆண்டு டிசம்பர்  15-ஆம் தேதி  விமானப்படையில்  அதிகாரியாக  பொறுப்பேற்றேன்.  20 மாத  இடைவெளிக்குள்  தந்தையையும்,  சகோதரனையும் இழந்தது மறக்க முடியாத  சம்பவம்  என்றாலும், என்னுடைய  கனவு  நனவானது  மகிழ்ச்சியை அளித்தது.  அதிகாரியாக  பொறுப்பேற்றபோது  முதலில்  நான் ஒரு விமானி பின்னரே  ஒரு பெண்  என்ற உணர்வுதான் தோன்றியது.

பெண்களைப் பொருத்தவரை  இன்று நிர்வாகம், மருத்துவம்,  நீதித்துறை, அரசியல், விமான போக்குவரத்து  கட்டுப்பாட்டு  தகவல்  தொழில்நுட்பம், அக்கவுண்ட்ஸ், லாஜிஸ்டிக்  என பல துறைகளில் தங்கள்  திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.  ஏற்கெனவே  ராணுவத் துறைகளில்  நிறைய பெண்கள்  சேர்ந்து  சாதனை படைத்து  வருவதைப்  போன்று,  விமானப் படைத் துறையிலும்   தங்கள்  திறமையை  மன உறுதியை  வெளிப்படுத்த  முன் வரவேண்டும்.  இதில்  எவ்வித  பாலின  வேறுபாடும்  இல்லை'' என்கிறார் ஐஸ்வர்யா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com