சிறப்புக் கட்டுரைகள்

தேர்தல் அறிக்கையில் கலக்கியது யார்? பாஜக - காங்கிரஸ் ஓர் பார்வை!

வாணிஸ்ரீ சிவகுமார்


மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியும், இந்த வாரம் பாஜகவும் தங்களது தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டன.

பொதுவாக தேர்தல் பிரசாரங்களை விடவும், தேர்தல் வாக்குறுதிகளுக்கு சற்று பலம் அதிகம். பொதுவாக தங்களது கோரிக்கைகள் இந்த வாக்குறுதிகளில் இடம்பெற்றிருந்தால் அந்த காரணத்துக்காகவே அந்த கட்சிக்கு வாக்களிக்கும் வாக்காளர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

அதனால்தான் ஒவ்வொரு கட்சியும் தேர்தல் அறிக்கைக்கு கூடுதல் கவனம் செலுத்துகிறது. 

சரி, அந்த வகையில் மத்தியில் ஆளும் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் வெளியிட்டிருக்கும் தேர்தல் அறிக்கையில் உள்ள ஒற்றுமை - வேற்றுமை, பலம் - பலவீனம் என்ன என்பதைப் பார்க்கலாம்.

பொதுவாக இரண்டு கட்சிகளுமே நாட்டின் பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, வேலை வாய்ப்பு, கடன் சுமை போன்றவை குறித்து மறக்காமல் தங்கள் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியை அளித்திருக்கின்றன.

இரண்டு தேர்தல் அறிக்கையையும் சற்று உற்று நோக்கினால், காங்கிரஸ் கட்சி, ஆளும் பாஜகவின் பொருளாதாரக் கொள்கைகளால் சீரழிந்த இந்திய பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த அதிகக் கவனம் செலுத்தியிருப்பதையும், இதுவரை கண்டுகொள்ளாமல் இருந்த விவசாயிகளுக்கு அதிக முன்னுரிமை தருவதையும், மக்களின் உணர்வுகளை தட்டி எழுப்பும் நாட்டின் பாதுகாப்பு தொடர்பான வாக்குறுதிகளுக்கு பாஜக முக்கியத்துவம் தந்திருப்பதையும் சாதாரன வெகுஜன மக்களாலேயே புரிந்து கொள்ள முடியும்.

பெண்கள் விஷயத்தில் இரண்டு கட்சிகளுமே ஒரே விஷயத்தைத்தான் சொல்லியிருக்கின்றன. காஷ்மீரில் இரு கட்சிகளும் அந்தர் பல்டி அடித்துள்ளன.

கண்டுகொள்ளாமலேயே இருந்த விவசாயிகளுக்கு, தேர்தல் நேரம் என்பதால் இரண்டு கட்சிகளின் அறிக்கையிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் வியப்பேதும் இல்லைத்தானே?!

உதாரணத்துக்கு பாஜகவின் வாக்குறுதி இது..

60 வயதுக்கு மேற்பட்ட சிறு, குறு விவசாயிகளின் சமூகப் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். 
2022-க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 
10,000 புதிய விவசாய உற்பத்தி மையங்கள் தொடங்கப்படும். நாட்டிலுள்ள அனைத்து விவசாயிகளுக்கும் வருமான உதவித் தொகை கிடைப்பது உறுதி செய்யப்படும். 
விவசாயிகளுக்கு 1 -5 ஆண்டுகளுக்கு ரூ.1 லட்சம் வரை வட்டியில்லாக் கடன் வழங்கப்படும் என்று கூறியிருக்கிறது.

இதையே காங்கிரஸ் என்ன சொல்லியிருக்கிறது என்றால்..

வேளாண் துறைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். 
நாடு முழுவதும் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும். 
மீன்வளம் மற்றும் மீனவர்களின் நலனுக்காக தனி அமைச்சகத்தை ஏற்படுத்துவோம். 
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட நாள்களின் எண்ணிக்கை 100-லிருந்து 150-ஆக அதிகரிக்கப்படும் என்று அறிவித்திருக்கிறது.

காஷ்மீர் பற்றி சொல்லச் சொன்னால்..

  • காங்கிரஸ் - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தில் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது. ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மறுஆய்வு செய்யப்படும்.
     
  • பாஜகவும்.. ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370-ஆவது பிரிவை நீக்க தொடர்ந்து வலியுறுத்துவோம். அரசமைப்புச் சட்டத்தின் 35ஏ பிரிவு, காஷ்மீரில் நிரந்தரமாக குடியிருப்போர் அல்லாதவர்களுக்கும், பெண்களுக்கும் எதிராக இருப்பதால் அதை நீக்க உறுதி பூண்டுள்ளோம் என்று கூறியுள்ளார்கள்.

இளைஞர்களின் தேவையை கவனத்தில் கொண்டுள்ள ராகுல்.. 

1. புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், தொழில், சேவைத் துறைகளை மேம்படுத்தவும் தனி அமைச்சகம்.

2. 2020, மார்ச் மாதத்துக்குள் 4 லட்சம் மத்திய அரசு பணியிடங்கள் நிரப்பப்படுவதுடன், 20 லட்சம் மாநில அரசு பணியிடங்களை நிரப்பப்படும்.

3. அரசுத் தேர்வுகள், பதவிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கட்டணத்தை முற்றாக ஒழிப்போம். 

4. மாநில அரசுகளுடன் ஆலோசித்து கிராம ஊராட்சிகள் மற்றும் நகர்ப்புர நிர்வாக அமைப்புகள் மூலம் 10 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். 

5. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில், தொழில்துறையின் பங்களிப்பை 16 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக அதிகரிக்கவும்

6. புதிய தொழில் நகரங்களை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல முக்கிய விஷயங்களை எடுத்துரைத்துள்ளது.

அதே சமயம், பாஜகவோ உயர் கல்வியை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். முன்னணி மேலாண்மை, பொறியியல், சட்ட கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கைக்கான இடங்கள் அதிகரிக்கப்படும். புதிய தொழில் முனைவோர்களுக்கு ரூ.50 லட்சம் வரை அடமானம் இல்லாத கடன் வழங்கப்படும். வடகிழக்கு மாநில சிறு, குறு, நடுத்தர தொழில் முனைவோருக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று மேலோட்டமான திட்டங்களை அறிவித்துள்ளது.

பெண்கள் நலன் விஷயத்தில் பாஜகவும் காங்கிரஸும் அப்படி ஒரு ஒற்றுமையை நிலைநாட்டியுள்ளன. அது எப்படி என்று பார்த்தால், நாடாளுமன்றம், மாநில சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் அரசமைப்புச் சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்படும் என்ற வாக்குறுதியை இரு கட்சிகளுமே கொண்டிருக்கின்றன.

ஆனால், பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியிருப்பது குறித்து இரு கட்சிகளுமே வாய் திறக்காமல் மௌனம் காத்திருப்பது மேலும் ஆச்சரியத்தை அளிக்கிறது.

இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே இலக்கு என்று மோடியும், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள், நாட்டிலிலிருந்து வறுமையை முற்றிலும் ஒழிக்கும் வகையில் குறைந்தபட்ச வருவாய் உறுதி திட்டம் செயல்படுத்தப்பட்டு, 5 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.72,000 நிதியுதவி வழங்கப்படும் என்று ராகுலும் கூறியுள்ளார்கள்.

ஜிஎஸ்டியை மறந்துவிட்டோமே.. 

ஜிஎஸ்டியை அறிமுகப்படுத்திய பாஜகவோ, மாநிலங்களிடம் கலந்தாலோசித்து ஜிஎஸ்டி எளிமைப்படுத்தப்படும். 2030-க்குள் உலகத்தில் மூன்றாவது பெரிய வணிக நாடாக இந்தியாவை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறியுள்ளது. இதுவரை கலாந்தாலோசித்து எளிமைப்படுத்தாதது ஏன் என்றும், தற்போது ஜிஎஸ்டி கடினமாக இருக்கிறதா? என்றும் நாம் கேள்வி எழுப்ப முடியாது. ஏன் என்றால் இது தேர்தல் வாக்குறுதி.

ஜிஎஸ்டி வரி விதிப்பு முறைக்கு வித்திட்ட காங்கிரஸ் கட்சி சொல்லியிருப்பதுதான் சபாஷ் போட வைக்கிறது.. தற்போதுள்ள சரக்கு-சேவை வரி (ஜிஎஸ்டி) முறை மாற்றப்பட்டு, ஒரே விகித ஜிஎஸ்டி அமல்படுத்தப்படும். பெட்ரோலியப் பொருள்களையும் ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவருவோம் என்பதே அது. இதைச் சொல்ல தெகிரியம் வேண்டும்தானே?!

இப்படியாக சில பல கருத்துகளில் முரண்பட்டு, ஒரு சில கருத்துகளில் உடன்பட்டு இரண்டு கட்சிகளும் வெளியிட்ட தேர்தல் அறிக்கையை அலசி ஆராய்ந்ததில் நமக்குத் தெரிய வந்திருக்கும் தகவல் என்னவென்றால், ஒவ்வொரு மாநிலத்துக்கும் என ஒரு சில பிரச்னைகள் இருக்கின்றன. அதனை இரு கட்சிகளுமே கவனத்தில் கொள்ளவில்லை. அவற்றை கண்டுகொள்ளாமல் விடுவது நோக்கம் என்றால், இதுபோன்ற நேரத்தில் மக்களும் உங்களைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிட வாய்ப்பு உள்ளது என்பதே தேர்தல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடைத்தாள் காண்பிக்க மறுப்பு: மாணவர் மீது தாக்குதல்!

கேஜரிவாலுக்கு ஏப்ரல் 1 வரை காவல் நீட்டிப்பு!

IPL 2024 - முதல் வெற்றியை ருசிக்குமா தில்லி?

வில்லேஜ் குக்கிங் சேனல் பெரியவர் மருத்துமனையில் அனுமதி!

உனது அர்ப்பணிப்புக்கு ஈடு இணையே இல்லை: கணவரைப் புகழ்ந்த மனைவி!

SCROLL FOR NEXT