சிறப்புக் கட்டுரைகள்

மிக முக்கிய பிரச்னை உங்கள் மூலம் தீர்வு காண காத்திருக்கிறது: எச். ராஜாவுக்கு சிறப்புக் கடிதம்

8th Mar 2018 11:11 AM | திருச்செல்வம் ராமு

ADVERTISEMENT

 

தாங்கள் திறமை மதத்தை வளர்ப்பதற்கும் அப்பாற்பட்டது. விவசாயத்திற்கான தீர்வு தாங்கள் மனது வைத்தால் சாத்தியம் என்று தமிழக தகவல் தொழில்நுட்ப வல்லுனர் குழு எச். ராஜாவுக்கு எழுதிய சிறப்புக்கடிதம் இது.

எச். ராஜா அவர்களுக்கு வணக்கம்,

சமீபகாலமாக தாங்கள் பெயர் ஜாதி, மதம் தொடர்பான சர்ச்சைகளால் தவறான காரணங்களுக்காக ஊடகங்களில் பரவிக்கொண்டிருக்கிறது. தாங்கள் படித்தவர். இந்துமதம் மற்றும் ஆன்மிகக் கருத்துக்களை நன்கு உணர்ந்தவர். பொருளாதாரம் நாட்டு முன்னேற்றம் குறித்த திறமை பெற்றவர். அப்படிப்பட்டவர் இந்த மாதிரி தங்கள் திறமைக்கு ஒவ்வாத விஷயங்களில் கவனம் செலுத்துவது மற்றும் அதனால் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளாவது எங்களுக்கு மிகுந்த வருத்தத்தை உண்டாக்குகிறது.

ADVERTISEMENT

தங்களுக்கு பணிவான எங்கள் வேண்டுகோள் என்னவென்றால் 'அன்னமய கோஷம்' என்பதுதான் மனித வாழ்வின் அடிப்படை. அதற்கு மூலாதாரம் விவசாயம். திட்டமிடப்பட்ட சதிச்செயலால் இந்தியாவின் விவசாயம், அதன் கட்டமைப்பு பலவீனப் படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. விவசாயிகள், நுகர்வோர்கள், அரசாங்கம் உட்பட அனைத்துப் பிரிவினரும் விவசாயப் பிரச்னைகளால் தடுமாறிக் கொண்டிருக்கின்றனர். இந்தியா பலவீனப்பட்டுக்கொண்டிருக்கின்றது. இது தாங்கள் அறியாதது அல்ல.

பிரச்னையின் தீவிரம் அறிந்தே பிரதமர் மோடியும் விவசாய பிரச்னைக்கான தீர்வை தொடர்ந்து வலியுறுத்திக்கொண்டிருக்கின்றார். அதில் முக்கியமானது அவர் கடந்த 2015, ஏப்ரல் 23-ல் நாடாளுமன்றத்தில் நடந்த மிக முக்கிய விவாதம் ஒன்றில், இந்திய விவசாயப்பிரச்னை பல காலங்கள் கடந்தது, பரந்து விரிந்தது, ஆழமானது. அதை தீர்ப்பதற்கான தீர்வை மனதார வரவேற்கின்றேன் என்றார்.

தமிழகத்தை சேந்த தகவல் தொழில்நுட்ப வல்லுனர் குழு நாட்டு நலன் கருதி 16 ஆண்டு கால தொடர் முயற்சியில் விவசாயத்திற்கான முழு தீர்வை உருவாக்கி கிராமங்களில் அதை மாதிரி அளவில் வெற்றிகரமாக செயல்படுத்தி காட்டினோம். அதன் திறனை மதிப்பீடு செய்த நாட்டின் உயர்மட்டக்குழு இத்தீர்வு இந்திய விவசாப்பிரச்னைக்கான தீர்வாக அமையும். புதிய விவசாய அணுகுமுறைக்கு வழிவகுக்கும் என்ற மதிப்பீடு வழங்கியிருந்தது. ஆனால் ஆந்திர மாநிலத்தில் நடந்த சில துரதிர்ஷ்டமான நிகழ்வுகளால் இத்திட்டம் விரிவான அளவில் செய்யப்பட வேண்டிய நிலையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் முடக்கப்பட்டது.

நேர்மையான திறன் மிக்க பிரதமர் அவர்களின் அழைப்பிற்கு எங்கள் தொழில்நுட்ப வல்லுநர் குழுவின் விவசாயப் பிரச்னைகான தீர்வை சமர்ப்பிப்பதற்கு தங்களின் உதவியை நாடினோம். 'தாய் நாட்டுப்பணியில்' என்று கையெழுத்திடும் தாங்கள் எங்கள் தீர்வை பிரதமர் அவர்களிடம் கொண்டு சேர்த்து நாடு முழுவதும் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு ஆவண செய்வீர்கள் என்று நம்பினோம். தாங்களும் உரியநேரத்தில் பிரதமர் அலுவலகம் கொண்டு சேர்த்தீர்கள். பிரதமர் அலுவலக அதிகாரிகள் மிகவும் பாராட்டியதாகவும் விரைவில் அரசு திட்டத்தை அங்கீகரிக்கும் என்று உறுதியளித்ததாகவும் கூறினீர்கள்.

ஆனால் இன்றுவரை அத்திட்டம் செயல்படுத்தப்படுவதற்கான அறிவிப்பு இல்லை. காரணம் என்ன என்று கேட்டு தங்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை. இப்போது உள்ள நிலையில் தாங்கள் நாட்டின் நலன் கருதி விவசாய தீர்வு நோக்கி கவனம் செலுத்துங்கள். உணவு, விவசாயம்  என்பதும் ஆன்மிகம் தான். தமிழக தகவல் தொழில்நுட்ப வல்லுனர்களின் 16 ஆண்டு கால உழைப்பு நாட்டிற்கும் விவசாயிகளுக்கும் பயன்பட வழிசெய்யுங்கள்.

தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தற்போதிருக்கும் பல அடிப்படை பிரச்னைகளுக்கு இந்த விவசாயத் தீர்வு நிச்சயம் நல்ல பலனை அளிக்கும். டிஜிட்டல் மயமாக்கும் பிரதமர் மோடியின் கனவுக்கு இந்த திட்டம் வலுசேர்க்கும் என்பதால், உங்களது கவனத்துக்கு கொண்டு வந்திருக்கிறோம். இது உங்கள் மூலமாக தீர்வு காண காலம் காலமாக காத்திருக்கும் பிரச்னை என்பதை உணர்ந்து உடனடியாக கவனம் செலுத்துங்கள். 

தாங்கள் பிரதமர் அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் நகலை இந்த லிங்கில் இணைத்துள்ளோம்: www.it-rural.com/content/BJP_NS_Lr2PMJi.jpg

தங்கள் அழைப்பிற்கு காத்திருக்கும்
திருச்செல்வம் ராமு
Mission IT-Rural
9840374266
www.it-rural.com

ADVERTISEMENT
ADVERTISEMENT