ஸ்ரீதேவியின் வாழ்வில் எத்தனை மாயங்களோ? போனி கபூர் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவரா?

போனி கபூர், அவர் மீது அன்பையும், காதலையும் பொழியும் கணவராக ஒருவேளை இருந்திருக்கலாம். ஆனால் அந்த அன்பில் ஸ்ரீதேவியின் நலம் சார்ந்த பேரன்பு கொட்டிக் கிடந்ததா? அல்லது ஒரு பாலிவுட் தயாரிப்பாளராகத் தொழில்
ஸ்ரீதேவியின் வாழ்வில் எத்தனை மாயங்களோ? போனி கபூர் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவரா?

சனிக்கிழமை இரவு ஸ்ரீதேவி மறைந்தார். இன்றோடு 5 நாட்களாகி விட்டன. இப்போது கூட நம்பத்தான் முடியவில்லை. என்ன ஆயிற்று ஸ்ரீதேவிக்கு?! நன்றாகத்தானே இருந்தார். ஸ்ரீதேவியைப் பொருத்தவரை அவருக்கு திரையுலகில் நுழைவதற்கு முன் ஒரு வாழ்க்கை, திரையுலகில் நுழைந்த பின் ஒரு வாழ்க்கை என்ற இரட்டை வாழ்க்கையே இல்லை. அவர் நடிகர் கமல்ஹாசனைப் போல வெகு இளம் வயதிலேயே நடிக்க வந்து விட்டார். ஆதலால் பள்ளிக் கல்வியோ, பள்ளி, கல்லூரி நண்பர்கள் மற்றும் பொதுவெளி, பொதுமக்களுடனான அனுபவங்கள் என்பதே இல்லாதவர். அவருண்டு அவரது பெற்றோர், உடன்பிறந்தார், ஒரு சில நெருங்கிய உறவினர்கள் மற்றும் அவர் நடித்த திரைப்படங்களில் பணிபுரிந்தவர்கள் உண்டு என்றே மிகக் குறுகியதொரு வட்டத்தில் வாழ்ந்தவர் அவர். இயக்குனர் ராம் கோபால் வர்மா ட்விட்டரில் குறிப்பிட்டிருந்ததைப் போல ஸ்ரீதேவி தனது சொந்த வாழ்வில் நிஜமான சந்தோஷத்துடன் தான் வாழ்ந்தாரா? அல்லது திரையில் நடித்ததைப் போலவே திரைக்குப் பின்னான இயல்பு வாழ்க்கையிலும் நடித்தே வாழ வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தாரா? என்பது புதிரான கேள்வி!

சிவகாசியை அடுத்திருக்கும் சின்னஞ்சிறு கிராமமான மீனம்பட்டியைச் சேர்ந்த வழக்கறிஞரான ஐயப்பன் ஒன்றும் சாமானிய மனிதரில்லை. அவரது குடும்பம் அந்தக் கிராமத்தின் வளமான குடும்பங்களில் ஒன்று. அந்தக் குடும்பம் மீனம்பட்டி முதலாளி குடும்பம் என்றே சுற்று வட்டாரத்தில் விளிக்கப்படுவது வழக்கம். அப்படியான குடும்பத்தின் வாரிசான ஐயப்பன் தன் மூத்த மகளான ஸ்ரீதேவியை வெகு இளம் வயதிலேயே பள்ளிக் கல்வியைக் கூட முழுதாக வழங்காமல் முற்றிலுமாக சினிமாவுக்கென தத்துக் கொடுத்ததைப் போல தன் மகளை முழு நேர நடிகையாக்கியது ஏன்? என்பது முதல் கேள்வி. ஒருவேளை அது அவரது தாயாரின் முடிவாக இருந்தால் அதை எதிர்க்கும் அளவுக்கோ அல்லது மறுத்துப் பேசும் அளவுக்கோ வலுவான குழந்தையாக ஸ்ரீதேவி இருந்திருக்கவில்லை என்பதே நிஜம்.

ஸ்ரீதேவியுடன் குழந்தை நட்சத்திரமாக இணைந்து நடித்தவரான குட்டி பத்மினி இந்தத் தகவலை உறுதி செய்கிறார்.

'நாங்கள் இருவரும் இணைந்து நடித்தது ஒரே ஒரு படத்தில் தான் என்றாலும் அதன் படப்பிடிப்பு ஓராண்டாக நீடித்ததால் குழந்தைப் பருவத்தில் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது, நன் அறிந்தவரை ஸ்ரீ மிகவும் பணிவான பயந்த குழந்தை. அவருக்கு தனக்கு இது தான் வேண்டும், இது வேண்டாம் என்றெல்லாம் கேட்டுப் பெறத் தெரியாது. எல்லாவற்றுக்கும் தனது அம்மாவைத் தான் எதிர்பார்ப்பார். அம்மா சொல்லாமல் உடை மாற்றக் கூடத் தயங்குவார். அந்த அளவுக்கு அவரது வாழ்வு அவரது அம்மாவால் கட்டுப்படுத்தப் பட்டிருந்தது. இயல்பிலேயே பிறர் தன்னைப் பற்றி என்ன நினைப்பார்களோ?, என்ன சொல்வார்களோ? என்ற அச்சம் நிரம்பிய குழந்தையாகத்தான் ஸ்ரீதேவி இருந்தார்.’

- என்கிறார் குட்டி பத்மினி.

தன் தாயார் ராஜேஸ்வரியால் அப்படி வளர்க்கப் பட்ட ஸ்ரீதேவிக்கு நெருங்கிய நட்புகள் இருந்திருக்க வாய்ப்புகள் குறைவாகத்தான் இருந்திருக்கக் கூடும்.

ஆரம்ப காலங்களில் ஸ்ரீதேவி பங்கேற்ற படப்பிடிப்புகளுக்கு அவரது அம்மாவோ அல்லது தங்கையோ துணைவருவார்களாம்.

ஆரம்பம் முதலே ஸ்ரீதேவி தனித்து இயங்கக்கூடியவர் அல்ல. திருமணத்திற்கு முன், சரியாகச் சொல்வதென்றால் தனது தாயாரின் மரணத்துக்கு முன்பு வரை ஸ்ரீதேவிக்காக முடிவுகளை எடுக்கக் கூடியவராக அவரைக் கட்டுப்படுத்தக் கூடியவராக அவரது தாயார் இருந்திருக்கிறார் என்றால் தாயாரின் மரணத்தின் பின் ஸ்ரீதேவியைக் கட்டுப்படுத்தும் சக்தியாக விளங்கியவர் அவரது கணவரான போனி கபூர்.

பெற்றோர் இருவரும் உயிருடன் இருந்தவரை ஸ்ரீதேவியின் வாழ்வு சுமுகமாகத்தான் சென்றிருக்கக் கூடும். பெற்றோர் மறைந்து ஒரே தங்கையும் திருமணமாகிப் பிரிந்ததும் தனித்தவர் ஆனார். அப்போது தான் ஸ்ரீதேவியின் வாழ்வில் போனி கபூர் முன்னுரிமை பெற்றார். ஸ்ரீதேவியின் தாயார் உயிருடன் இருக்கையிலேயே போனி கபூருடனான நட்பு துவங்கி விட்டது என்றாலும் அந்த நட்பு வெறும் தயாரிப்பாளர், நடிகை என்ற அளவிலேயே இருந்து வந்தது.

போனி கபூர், ஸ்ரீதேவிக்கு அறிமுகமான ஆரம்ப நாட்களில் ஸ்ரீதேவி அவரைச் சகோதரராகப் பாவித்து ராக்கி கட்டிய அதிசயமெல்லாம் நடந்திருக்கிறது என்கின்றன இந்தி மீடியாக்கள். இந்தித் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்த நாட்களில் போனியை விட அவரது முதல் மனைவி மோனா கபூருடன் நெருக்கமான நட்பு பாராட்டியவர் ஸ்ரீதேவி. இப்படித் தொடங்கிய இந்த உறவு ஸ்ரீதேவியின் தாயாருக்கு அமெரிக்காவில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை சர்ச்சையின் போது தான் மடை மாறி இருக்கக் கூடும். ஏனெனில், அப்போது தான் ஸ்ரீதேவி முற்றிலும் தனிமைப்பட்டுப் போனார்.  

தகப்பனார் ஐயப்பன் உயிருடன் இருந்தவரையில் ஸ்ரீதேவியின் சொத்துக்களை சட்டச் சிக்கல்கள் இன்றி உரிய வகையில் பாதுகாக்கத் தேவையான ஏற்பாடுகளை அவரே கவனித்து வந்தார். அவர் இறந்த பின் ஸ்ரீதேவியின் தாயாருக்கு சொத்துக்களை வாங்குவதில் போதுமான தெளிவின்றி வில்லங்கமான சில சொத்துக்களை வாங்கி சிக்கலில் மாட்டிக் கொண்டார், அப்போது அவர்களுக்கு உதவியாக இருந்தது போனி கபூரே! போனி கபூரைப் பொருத்தவரை அவர் பிரபல தயாரிப்பாளராக இருந்த போதும் முதல்முறை ஸ்ரீதேவி நடித்த திரைப்படமொன்றைப் பார்த்ததில் இருந்தே அவருக்கு ஸ்ரீதேவியின் மீது காதல். காதலுக்குத்தான் கண்ணில்லை என்கிறார்களே, அப்படித்தான் ஆனது இவர்கள் விஷயத்திலும். முதல் மனைவி மோனா உயிருடன் இருக்கையில், அவர் மூலமாகத் தனக்கு அர்ஜூன் கபூர், அன்சுலா என இரண்டு குழந்தைகளும் இருக்கையில் ஸ்ரீதேவி மீது போனி கபூருக்கு எல்லையற்ற காதல் கரைபுரண்டு ஓடியது.

அந்தக் காதல் மோகத்தில் எப்படியாவது தனது தயாரிப்பில் ஸ்ரீதேவியை நடிக்க வைத்து விட வேண்டும் என்று அவர் முயற்சித்தார். அப்போது ஒரு திரைப்படத்துக்கு 8 லட்சம் சம்பளம் பெற்றுக் கொண்டிருந்த ஸ்ரீதேவிக்கு தனது தயாரிப்பில் அவரை ஒப்பந்தம் செய்வதற்கு 11 லட்சம் சம்பளம் நிர்ணயித்து ஒரே திரைப்படத்தில் ஸ்ரீதேவியின் சம்பளத்தை அதிகரிக்கச் செய்து அவரது அம்மாவின் அன்புக்குரியவராகவும், நம்பிக்கைக்குரியவராகவும் ஆனார் போனி கபூர்.

ஸ்ரீதேவி குடும்பத்துடன் போனி கபூர் நெருக்கமானது இப்படித்தான். சமீபத்தில் ஒரு நேர்காணலில் போனி கபூரே குறிப்பிட்டபடி அவர் ஸ்ரீதேவியை திட்டமிட்டு நம்பவைத்துத் தான் திருமணம் செய்திருக்கிறார். அமெரிக்காவில் சிகிச்சைக்குச் சென்ற ஸ்ரீதேவியின் தாயாருக்கு மூளையில் தவறான பகுதியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதில் தொடர்ந்து அவரது உடல் நலிவடைந்து மூளைப் புற்றுநோயால் அவர் மரணமடைந்தார். அப்போதைய சட்டப் போராட்டங்களில் எல்லாம் ஸ்ரீதேவியுடன் பக்கபலமாக இருந்தது போனி கபூர் மட்டுமே என்கின்றன பழைய மீடியா செய்திகள். இப்படிக் கொஞ்சம் கொஞ்சமாக ஸ்ரீதேவியை தன்வசப்படுத்தி ஒரு கட்டத்தில் புற்றுநோயாளியான தனது முதல் மனைவி மோனாவை விவாகரத்து செய்து விட்டு முற்றிலுமாக ஸ்ரீதேவியுடன் வாழத்தொடங்கி விட்டார் போனி கபூர். 

ஸ்ரீதேவி, போனி கபூர் திருமணத்தில் ரகசியம் காக்கப்பட்டது. திருமணமாகி சில மாதங்கள் கழித்துத் தான் அதிகாரப்பூர்வமாக ஊடகங்களில் திருமணம் குறித்து அறிவிப்பு வெளியானது. தமிழில் குமுதம் வார இதழ் தான் நடிகர் விஜயகுமார் வீட்டில் வைத்து ஸ்ரீதேவி, போனி கபூர் தம்பதிகளை திருமணத்திற்குப் பின் முதல்முறையாக எக்ஸ்க்ளூசிவ்வாக பேட்டி கண்டு வெளியிட்டது. ஸ்ரீதேவி, போனி கபூர் திருமணத்தில் பல்வேறு தடங்கல்கள் இருந்தாலும் எல்லாமும் ஒருவாறு சரியாகி இருவருமே காதல் மிகுந்த மனமொத்த தம்பதிகளாகத் தான் கடந்த சனிக்கிழமை வரை வாழ்ந்து வந்திருக்கின்றனர். இறப்பிற்கு முன்னான வீடியோ பதிவில் கூட ஸ்ரீதேவி தன் கணவர் போனி கபூரை அணைத்துக் கொண்டு நடனமாடும் காட்சி அவர்களுக்கிடையிலிருந்த அந்நியோன்யத்தைப் பறைசாற்றும் விதமாகத் தான் இருக்கிறது.

ஆனால், பிறகெப்படி குளியல் தொட்டிக்குள் தவறி விழுந்து மூச்சுத்திணறி இறந்தார் ஸ்ரீதேவி என்று கேள்வியெழுப்புகிறீர்களா?

அதற்கு இனி ஸ்ரீதேவியே நேரில் வந்து பதில் சொன்னால் தான் ஆயிற்று.

ஸ்ரீதேவியின் திடீர் மரணத்தின் பின் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஊடகங்கள் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் மற்றும் அவருடன் பணிபுரிந்தவர்கள், சிறுவயது முதலே அவரை அறிந்தவர்கள் எனப் பலரையும் அழைத்து ஸ்ரீதேவி குறித்த நினைவுகளைப் பகிரச் சொல்லிக் கேட்டு கடந்த நான்கு நாட்களாக அவற்றைத் தொடர்ந்து  ஒலிபரப்பிக் கொண்டே இருந்தன.

அந்த நினைவலைகளில் இருந்து கிரகித்துக் கொள்ளக் கூடிய பொதுவான ஒரு விஷயம் இது தான்;

இயக்குனர் ராம்கோபால் வர்மா கூறியதைப் போல, ஸ்ரீதேவியை அழகின் இலக்கணமாக அவரது ரசிகர்கள் கருதினார்களே தவிர அவர் அப்படிக் கருதினாரா? அப்படியோர் அழுத்தமான நம்பிக்கை அவருக்கு இருந்ததா? என்பது சந்தேகத்திற்கிடமானது;

நடிகை ராதிகா சில வருடங்களுக்கு முன் நடிகை ஸ்ரீப்ரியாவுடன் இணைந்து கலந்து கொண்ட காஃபி வித் டிடி நிகழ்ச்சியில் ஸ்ரீதேவி குறித்துப் பகிர்ந்து கொண்ட ஒரு தகவலை இந்த இடத்தில் நினைவு கூர்வது நல்லது;

ராதிகாவும், ஸ்ரீதேவியும் இணைந்து பல தமிழ் மற்றும் தெலுங்குத் திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். அப்போதெல்லாம் ராதிகா என்னவிதமான ஆடை, அணிகளைத் தேர்வு செய்கிறார் என்று பார்த்து விட்டு வந்து சொல்ல தனியாக ஒரு நபரை நியமித்து வைத்திருந்தாராம் ஸ்ரீதேவி. இதை ராதிகா அந்த நிகழ்ச்சியில் நகைச்சுவையாக எடுத்துக் கொண்டு தான் பகிர்ந்திருந்தார். ஸ்ரீதேவி எத்தனை அழகு! ஆனால், அவர் உடன் நடித்த சக நடிகையான என்னைப் பார்த்து, நான் அவரை விடத் திரையில் நன்றாகத் தோன்றி விடக்கூடுமோ?! என்ற ஐயத்துடன் நடந்து கொண்டது எனக்கு உண்மையில் சிரிப்பை வரவழைப்பதாக இருந்தது என்றார்.

ராதிகா சொல்வதால் மட்டுமல்ல, இதையொத்த வேறொரு சம்பவமும் ஸ்ரீதேவியின் வாழ்வில் உண்டு.

‘மீண்டும் கோகிலா’ திரைப்படத்தில் ஸ்ரீதேவி கதாநாயகி, இரண்டாம் நாயகியாக தீபா நடித்த வேடத்தில் முதலில் நடிக்கத் தேர்வானவர் இந்தி நடிகையும், நடிகர் ஜெமினி கணேசனின் புதல்வியுமான ரேகா. ஆனால் ஸ்ரீதேவியின் தாயார் இரண்டாம் நாயகியான ரேகாவின் உடையலங்காரம் மற்றும் ஒப்பனை உள்ளிட்ட விஷயங்கள் தன் மகள் ஸ்ரீதேவியைக் காட்டிலும் பெரிதாகப் பேசப்பட்டு விடக்கூடாது என இயக்குனரிடம் கோரிக்கை வைத்ததால் அதைக் கேள்வியுற்ற ரேகாவின் தாயார் ரேகாவை அத்திரைப்படத்தில் நடிக்க ஒப்புதல் அளிக்க விடாமல் தவிர்த்து விட்டார் என்பது பழைய சினிமா வார இதழொன்றில் வாசிக்கக் கிடைத்த செய்தி.

திரையில் உடன் நடிக்கும் சக நடிகைகள் தன்னை விட அழகாகத் தெரிந்து விடுவார்களோ எனும் சஞ்சலம் ஸ்ரீதேவிக்கு இயல்பில் இருந்ததா அல்லது அவரது தாயாரால் புகுத்தப்பட்டதா என்ற ஆராய்ச்சி இப்போது தேவையில்லை எனினும் ராம்கோபால் வர்மாவின் ட்விட்டர் கூற்றைப் புறக்கணிக்க இயலாமல் ஸ்ரீதேவிக்கு மன அழுத்தம் தரத்தக்க விஷயங்களில் ஒன்றாக இதைக் கருத வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன.

அதையடுத்து ஸ்ரீதேவியின் திருமண விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள், ஸ்ரீதேவி மறைவதற்கு முன்பு வரை விக்கிபீடியாவில் அவரது பக்கத்தில் போனி கபூருடனான திருமணத்துக்கு முன்பே ஸ்ரீதேவிக்கும், மிதுன் சக்ரவர்த்திக்கும் ரகசியத் திருமணம் நடந்திருந்ததாக ஒரு தகவல் உலவியது. இப்போது அந்தத் தகவல் நீக்கப்பட்டிருக்கிறது.

மூன்றாம் பிறை, மீண்டும் கோகிலா, வாழ்வே மாயம், சிகப்பு ரோஜாக்கள், குரு திரைப்படங்களில் கமல், ஸ்ரீதேவி ஜோடியின் அற்புதமான பொருத்தத்தைக் கண்டு இவர்கள் இருவரும் திருமண வாழ்வில் இணைந்திருந்தால் ஒருவேளை ஸ்ரீதேவி இறந்திருக்க மாட்டாரோ! என்ற ரீதியில் எல்லாம்  ரசிக சிகாமணிகள் சிலர் கருத்துக் கூறியிருந்தனர். இதற்கு கமலே அளித்த பதிலொன்று உண்டு.

சில வருடங்களுக்கு முன் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில், பிரகாஷ் ராஜ் தொகுத்து வழங்கிய ‘நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி’ நிகழ்ச்சியில் கெளதமியுடன் கலந்து கொண்ட கமல்ஹாசன், ஸ்ரீதேவி குறித்த கேள்விக்குப் பதிலளிக்கையில்; 

‘சத்தியமா... சிலபேர் மேல எல்லாம் காதலே வராதுங்க, நானும், ஸ்ரீதேவியும் பாலசந்தர் சார் டைரக்‌ஷன்ல பல படங்கள் நடிச்சிருக்கோம், ரிகர்சலின் போது அத்தை பொண்ணு மாதிரி அவங்களை நான் டீஸ் பண்ணியிருக்கேன், திரையில் எங்களோட கெமிஸ்ட்ரி ரசிக்கற மாதிரி இருக்கும்... ஆனா அதுக்காக அவங்களை நான் காதலிக்கிறேன்னு சொல்றதா? இல்லவே இல்லைங்க. எங்களுக்குள்ள அந்த மாதிரி எண்ணமே இருந்ததில்லை. அந்த நட்பைப் பத்திச் சொல்லனும்னா  கோ எஜுகேஷன்ல படிக்கிறவங்களுக்குத் தான் அது புரியும்.’ 

- என்கிறார் கமல்.

அதற்கான வீடியோ பதிவு...

ஸ்ரீதேவி, கமலை மணக்க விரும்பியிருந்தால், அல்லது கமல் ஸ்ரீதேவியை மணக்க விரும்பியிருந்தால் அவர்களது திருமணம் அப்போது நிச்சயம் செல்லுபடியாகியிருக்க பெரிதாக தடைகள் இருந்ததாகத் தெரியவில்லை. ஆனால் இருவரின் எதிர்பார்ப்புகளும், நோக்கங்களும் வேறு, வேறாக இருந்திருக்கையில் இன்று வரையிலும், ஏன் ஸ்ரீதேவியின் இறப்பின் பின்னும் கூட கமல், ஸ்ரீதேவி திருமணம் நடந்திருந்தால் என்று சிலர் பேசத் தொடங்குவது வேடிக்கையாகத்தான் இருக்கிறது.

ஸ்ரீதேவி ஆரம்ப காலங்களில், தமிழில் நடித்துக் கொண்டிருக்கையில் படப்பிடிப்புத் தளங்களில் தனது தாயாரின் மடியில் அமர்ந்து கொண்டு அவர் ஊட்டி விட்டால் தான் உண்பார் என்பதாக ராதிகா ஒரு தகவலைப் பகிர்ந்து கொண்டிருந்தார். அப்படி ஊட்டும் போது வழக்கத்துக்கு மாறாக ஒரு வாய் அதிகமாக உண்டாலும் கூட, ஸ்ரீதேவியின் தாயார் அவரிடம்,
‘பப்பி, அதிகமா சாப்பிட்டா நீ வெயிட் போட்டுடுவ’ 
- என்று கூறுவது வழக்கமாம்.
இப்படி தொடக்கம் முதலே தாயாரால் கட்டுப்படுத்தப் பட்ட வாழ்க்கைக்குப் பழக்கப் பட்டுப் போன ஸ்ரீதேவி. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி எனத் தனது எல்லைகள் விரிவடைய, விரிவடைய பாடுபட்டுத் தான் தேடிக் கொண்ட அகில இந்திய நட்சத்திரம் எனும் புகழைத் தக்க வைத்துக் கொள்ள தனது ஒட்டுமொத்த வாழ்நாளையுமே ஒப்புக் கொடுத்திருக்கிறார் என்று தான் கருத வேண்டியதாகிறது.
அதுமட்டுமல்ல, திரைப்பட விழாக்களோ அன்றி பொது நிகழ்வுகளோ, ஃபேஷன் ஷோக்களோ, புரமோஷன் விழாக்களோ எதுவானாலும் சரி ஸ்ரீதேவி ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் எனத் தெரிந்தால் போதும் அவரைச் சுற்றி வட்டமிடும் வல்லூறுகளாக அவரைப் புகைப்படமெடுக்கச் சுற்றி வளைக்கும் ஊடகத்தினர் ஒருபுறம் வயது ஏற, ஏற ஸ்ரீதேவிக்கு பெரும் மன உளைச்சலைத் தந்திருக்கலாம். 
அவர்கள் பரபரப்புச் செய்திகளுக்கு தீனி போடுவதாக நினைத்துக் கொண்டு எந்த நேரத்திலும் தனிப்பட்ட குடும்ப விழாக்களாகவே இருந்த போதிலும்,அல்லது பொது இடங்களில் மேக் அப் இல்லாமல் ரிலாக்ஸாக இருக்க விரும்பும் நேரங்களில் கூட ஸ்ரீதேவியைத் தங்களது கேமராக்களில் அடைக்க விரும்பினார்கள். இந்த வீடியோ அதற்கொரு சாட்சி;

நடிகை என்றால் சதா 24 மணி நேரமும் கேமரா கண்காணிப்பிலேயே இருந்தாக வேண்டிய நிலை எல்லோருக்கும் நேர்வதில்லை. பல நடிகைகள் வெகு சுதந்திரமாக பொது வெளியில் இயங்குவதைக் கண்டிருப்பீர்கள். ஆனால், ஸ்ரீதேவிக்கு அப்படிப் பட்ட சுதந்திரம் கிடைத்ததில்லை. அவர் தனது பிறந்தநாளைக் கொண்டாட குடும்பத்துடன் 5 நட்சத்திர விடுதிக்குச் சென்றாலும் சரி, அல்லது திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துக்குக் கணவருடன் சென்றாலும் சரி... அவருடைய பிரைவஸி அவருடையதாக இருக்க ஊடகத்தினர் அனுமதித்ததில்லை. சதா அவர் ஊடகங்களால் துரத்தப் பட்டுக் கொண்டே தானிருந்தார். சற்றேறக்குறைய மறைந்த இங்கிலாந்து இளவரசி டயானா போல! அப்படி ஊடகத்தினர் தன்னை விடாது தொடரும் போது ஒரு ஆதர்ஷ நாயகியால் மேக் அப் துணையின்றி எப்படி வெளியில் வர இயலும்? அப்படி ஒரு மன அழுத்தத்திற்கு அவரை ஆளாக்கிய பெருமை இந்திய ஊடகங்களுக்கு உண்டு.

அது மட்டுமல்ல, சில வருடங்களுக்கு முன்பு ஸ்ரீதேவியின் சித்தி மகள் என நடிகை மகேஸ்வரியை ‘கருத்தம்மா’ திரைப்படம் மூலமாக இயக்குனர் பாரதிராஜா அறிமுகம் செய்திருந்தார். படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்பதோடு மகேஸ்வரிக்கும் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிப்படங்கள் அமையவில்லை. அவர் நடித்த பெரிய பேனர் படங்கள் எல்லாம் கூட பப்படங்கள் ஆயின. என்ன தான் ஸ்ரீதேவியின் தங்கை என்றாலும் அவருக்கு ஸ்ரீதேவிக்கு கிடைத்த அங்கீகாரத்தை ரசிகர்கள் தந்தார்களில்லை. அதே நிலை தற்போது முதல் படத்தில் நடித்து வரும் தனது மகள் ஜானவிக்கும் நேர்ந்து விடக் கூடாதே என்கிற பதட்டம் ஸ்ரீதேவிக்கு இருந்ததாக தகவல்.

ஸ்ரீதேவி கடன் தொல்லையில் இருந்தாரா? இல்லையா? என்பதைத் தாண்டி ஸ்ரீதேவியை ஆரம்பம் முதலே வெகு அழகாகத் திட்டமிட்டு, அவரது தனிமையைப் பயன்படுத்தி தன் பக்கம் நகர்த்தி  திருமணம் செய்து கொண்ட போனி கபூர், அவர் மீது அன்பையும், காதலையும் பொழியும் கணவராக ஒருவேளை இருந்திருக்கலாம். ஆனால் அந்த அன்பில் ஸ்ரீதேவியின் நலம் சார்ந்த பேரன்பு கொட்டிக் கிடந்ததா? அல்லது ஒரு பாலிவுட் தயாரிப்பாளராகத் தொழில் சார்ந்து தனது நலம் மட்டுமே ஒரு கல் தூக்கலாக இருந்ததா? என்பதே இப்போதைய சந்தேகத்துக்குரிய கேள்வி.

அனைத்தும் அறிந்தவர் எவரோ?!

4 வயதில் நடிக்க வந்தது முதலே சுயவிருப்பங்களின்றி பிறரது விருப்பங்களுக்காக தன்னை மாற்றிக் கொண்டு ஆயிரம் பேர் சூழ இருந்த போதும் மனதளவில் தனித்து நின்று, தனது வாழ்வில் பலவிதமான தனிமைப் போராட்டங்களைத் தாங்கித் தாங்கி துவண்டு போனவராகவே ஸ்ரீதேவியைக் கருத வேண்டிய நிலை. 

உண்மையில் இறப்பு ஒருவிதத்தில் அவருக்கு நிம்மதி அளித்திருக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com