சிறப்புக் கட்டுரைகள்

 ‘காலா’ திரைவிமர்சனம் - 4

கார்த்திகா வாசுதேவன்

இது ரஜினி படம் அல்ல. ரஜினி நடித்த பா.ரஞ்சித் படம். சமீபத்தில் ஜெமினி கணேசனைப் பற்றி அவரது ரசிகரின் கட்டுரை ஒன்றை வாசித்திருந்தேன். அதில் ஜெமினி பற்றி அவரது ரசிகர் புகழ்ந்திருந்தார். எப்படியென்றால், ஜெமினிக்கு நடிப்பு தொழில். அந்தத் தொழிலின் மீது அவருக்கு அளப்பறிய பக்தி இருந்தது. அதனால் இயக்குனர் எப்படியெல்லாம் சொல்கிறாரோ அப்படியெல்லாம் நடித்து விட்டுப் போய்விடுவாராம். படத்தின் பெயரைப் பற்றியோ, கதையைப் பற்றியோ கூட அவருக்குப் பல நேரங்களில் முழுமையான தெளிவு இருக்காது. என... அப்படி ஜெமினி போலவே, ரஜினி காலாவில் பா.ரஞ்சித் சொன்னபடியெல்லாம் நடித்து விட்டுப் போய்விட்டாரோ என்று பிரமை வருகிறது காலாவைப் பார்க்கையில். 

இல்லையேல்  ஸ்ரீராமனை வில்லனாகச் சித்தரிக்கத் தக்க கதை சொல்லல் பின்னணியில் ஒலிக்க, ரஜினி, ராவணனாகப் படத்தில் தன்னைச் சித்தரிக்க அனுமதித்திருக்க வாய்ப்பில்லை. திரையுலகில் ஒரு பதம் உண்டு. அடிக்கடி பல நடிகர்கள் பயன்படுத்துவார்கள், சில நடிகர்களைப் பற்றிய பாராட்டுரையாக இயக்குனர்களும் இந்தச் சொல்லைப் பயன்படுத்துவார்கள். அந்தச் சொல் இவர் ‘டைரக்டர்ஸ் ஆர்ட்டிஸ்ட்’  எனும் சொல். காலாவைப் பொறுத்தவரையில் ரஜினி இயக்குனரின் நடிகராகி இருக்கிறார். அதனால் எல்லாம் நிஜமான ரஜினி ரசிகர்களுக்குப் பாதகமொன்றுமில்லை.

ரஜினி மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். ரஜினியைத் தூக்கிச் சாப்பிடும் விதமாக ஈஸ்வரி ராவ் நடித்திருக்கிறார். ரஜினியை ‘நடிப்பு விழுங்கி’ நானா படேகர் முழுங்கித் தொலைத்து விடக்கூடாதே என்று அவரது பாத்திரம் கொஞ்சம் அடக்கி வாசிக்கப் பட்டிருக்கிறது. ரஜினி படத்தில் ஆடியன்ஸுக்கு வில்லனின் மேல் கோபம் வர வேண்டுமில்லையா? அந்தக் கோபமும் கூட ஆக்ரோஷமாக வர வேண்டுமில்லையா? இங்கே அது மிஸ்ஸிங். ஒரே ஒரு இடத்தில் மட்டுமே நானா படேகர் நடிப்பில் மிரட்டியிருக்கிறார் என்றால் அது ஜரினாவையும், ரஜினியையும் காலைத் தொட்டு வணங்கி ஆசி பெறச் சொல்லும் இடமாக மட்டுமே இருக்க முடியும். போலீஸ் ஸ்டேஷனில் ரஜினியை உதைக்கக் காலுயர்த்துவது எல்லாம் கியா ரே? நானா? செம! ஆனால் நானா படேகர் போன்ற நடிப்பு ராட்சஷர்களுக்கு இதெல்லாம் யானைப்பசிக்கு சோளப்பொறி மேட்டர். அவரது நடிப்புக்கு இன்னும் கொஞ்சம் தீனி போட்டிருக்கலாம் பாஸ்.

பாடல்கள் அத்தனை ஈர்க்கவில்லை. நிக்கல், நிக்கல் மட்டுமே மனதில் பதிந்தது. வாடி என் தங்கச்சிலை காப்பி கேட். கண்ணம்மா கூட காப்பி கேட்... மாயாநதியோடு ஒப்பிடப்பட்ட அளவுக்கு இந்தப் பாடலின் இசையில் பெரிதாக உருக்கங்கள் ஏதும் இல்லை. ஆனால் காட்சிகள் சிறப்பு. ரஜினி, ஜரினாவை ரெஸ்டாரெண்டில் சந்திக்கும் காட்சி அழகு. படத்தில் ஜரினாவாக ஹூமா குரோஷி அணிந்து வரும் லினன் புடவைகள் அத்தனையும் கொள்ளை அழகு! 

மழையில் பாலத்தின் மீது எடுக்கப்பட்ட சண்டைக்காட்சி தூள்! அதன் பேக்கிரவுண்ட் ஸ்கோர் அப்படியே நெஞ்சை அள்ளிக் கொள்கிறது. ஆனால் அரிவாளையும், வாளையும் சாதாரண குடையைக் கொண்டு மடக்கி வில்லன் கூட்டத்தாரை சமாளிக்க படத்தில் கூட ரஜினியால் மட்டுமே முடியக் கூடும். இப்போ ரஜினி ஃபேன்ஸ் கூட இதை நம்ப மாட்டாங்க தோழர். நீங்க ஏன் ரஜினி கையில் குடையைத் தரனும்? வேற ஏதாவது ஆயுதம் தந்திருக்கலாமே. அட்லீஸ்ட் ஒரு கருப்புத் துண்டு?! இதிலும் ஒரு லாஜிக் இல்லாமல் இல்லை.

படத்தைக் குறித்த பழைய செய்தித் துணுக்குகளை வாசித்துக் கொண்டிருந்த போது, அதில் மும்பையின் நிழலுலக பாதுகாவலர்களாகச் செயல்பட்டு வந்த டான்களில் ஒருவருக்கு தூய வெள்ளையுடை அணிந்து, கையில் சதா சர்வ காலமும் குடை வைத்துக் கொள்ளும் பழக்கம் இருந்ததாகக் குறிப்பிடப் பட்டிருக்கிறது. அதை சிம்பாலிக்காகக் காட்டத்தான் ரஜினிக்கு சண்டைக்காட்சியில் குடை வைத்தார்களா?! எது எப்படியோ அந்தக் காட்சியில் அழகியல் இருந்ததே தவிர துளியும் நம்பகத்தன்மை இல்லை. 

முரளி. G யின் கேமராவில் படம் பார்த்த அத்தனை பேருக்கும் படம் முடியும் வரை தாராவியில் காலா வீட்டுக்குப் பக்கத்து வீட்டில் வசித்து விட்டு வந்த எஃபெக்ட் இருந்ததென்றால் அதில் மிகையில்லை.

தாராவியை இதற்கு முன்பும் சில தமிழ்த் திரைப்படங்களில் கண்டிருந்த போதும் காலாவின் தாராவி நிஜத்துக்கு வெகு அருகில் இருந்ததை உணர முடிந்தது. ரஜினியின் வீடாகட்டும், தாராவி தெருக்களாகட்டும், வில்லன் நானா படேகரை தாராவிக்குள் சிறை வைக்கையில் ஏரியல் வியூவில் காண்பிக்கப்படும் தாராவி காட்சிகளாகட்டும் அது நிஜமோ, செட்டிங்ஸோ ஏதோ ஒருவகையில் தாராவியை தத்ரூபமாகக் கண்களுக்கு விருந்தாக்கியுள்ளார்கள்.

ஸ்ரீகர் பிரசாத்தின் எடிட்டிங்கில் படத்தின் இரண்டாம் பாகம் அதிரி புதிரி ஸ்பீடில் தடதடத்துக் கடக்கிறது. காலா முதல் பாகத்தில் இருந்த கொஞ்ச நஞ்ச தொய்வையும் இரண்டாம் பாகம் இழுத்துக் கட்டி முறுக்கேற்ற முயலும் போது சடாரெனக் கிளைமாக்ஸ் வந்து விடுகிறது.

உழைப்பின் நிறங்கள் வில்லனை திக்கு முக்காடச் செய்து இறந்து போன காலா, கருப்புக் காலனாய் வந்து முகத்துக்கு நேரே பயமுறுத்த தூய்மை வில்லன் நானா படேகர் தாராவி மக்களின் கூட்டு வன்முறையில் கொல்லப்படுவதாக செய்தி ஒளிபரப்பாகிறது. கிளைமாக்ஸில் நிறங்களை அடிப்படையாக வைத்து பா.ரஞ்சித் கையாண்டிருக்கும் கொலை உத்தி அழகாக இருந்தாலும் வில்லன் இப்படி சட்டென்று செத்து விட்டதை ஒரு சாதாரண ரஜினி ரசிகனால் நிச்சயம் ஜீரணித்திருக்க முடியாது.

படத்தில் உறுத்தலாக இருந்தது சமுத்திரக்கனி கேரக்டர். வாலியப்பன் வலிந்து திணிக்கப்பட்ட மாதிரி இருந்தார். ஒருவேளை ராமாயணச் சித்தரிப்புகள் படத்தில் இருப்பதால் இவருக்கு வாலியப்பன் என்று பெயர் வைத்தார்களோ என்னவோ? ராமனால் நிகழ்த்தப்பட்ட ராவண வதம் தாண்டி வாலி வதத்தையும் சுட்டிக்காட்டுவதாக அந்தப் பாத்திரம் சித்தரிக்கப்பட்டிருக்கலாம்.

காலாவைப் பொறுத்தவரை ராமனே அநீதி இழைப்பவனாகக் காட்டப்படுகிறான். ராவணன் உரிமைக்காகப் போராடும் மக்கள் தலைவனாகக் காட்டப்படுகிறான். ராமன் அதிகார வர்க்கத்தினரின் கடவுள். அவன் உலகுக்கு காட்டிய நீதிகள் அனைத்தும் மேல்தட்டு வர்க்கத்தினரின் வசதிகளுக்காகவும், சுயநலங்களுக்காகவுமே கட்டமைக்கப் பட்டதெனும் நம்பிக்கைக்கு வலுவூட்டுகிறது இத்திரைப்படம். 

ஜல்லிக்கட்டு போராட்டம், ஈழப்போரில் பிரபாகரன் மறைவை இன்னும் அவரது ஆதரவாளர்கள் ஏற்றுக் கொள்ளாதிருக்கும் மனநிலை, பண்டைய இந்தியா வரலாற்று ஆய்வுக்கட்டுரைகள் முன் வைக்கும் ராமாயணக் குறியீடுகள் போன்றவற்றை திரைக்கதைக்கு பக்கபலமாகப் பயன்படுத்தியிருப்பது ரசிகர்களில் எத்தனை பேருக்குப் புரியும் எனத்தெரியவில்லை.

படத்தின் ஒரு காட்சியில் வில்லன் நானா படேகர் சொல்கிறார்...

நிலம் என் அதிகாரம் என, 

ஆம், வாலிவதத்தை நியாயப் படுத்த வால்மீகி ராமாயணத்தில் ராமன் முன் வைக்கும் காரணமும் அத்தகையதே, இந்த பூமி இஷவாகு மன்னர்களின் அதிகாரத்தின் கீழ் இயங்குகிறது எனக்கூறும் ராமன் ஆகவே வானர அரசன் வாலி, தன் தம்பி சுக்ரீவனை நாட்டை விட்டு வெளியேற்றி அவனது மனைவியான ருமாவை தன்னுடையவளாக்கிக் கொள்ளும் தவறுக்காக வாலியை மறைந்திருந்து அம்பெய்து கொல்லத் தனக்கு உரிமை இருப்பதாகக் கூறுகிறான்.

மேட்டுக்குடியினரின் அதிகாரம் என்பது இப்படித்தான் யாராலும் வழங்கப்படுதல் இன்றி அவர்களாகவே எடுத்துக் கொள்வதாக இருக்கிறது. அதே மக்களின் உரிமை என்பது மாத்திரம் எப்போதுமே போராடிப் பெறப்படும் ஒன்றாகவே அமைந்து விடுகிறது.

இதைத் தான் காலா சொல்கிறது. அந்த வகையில் ரீல் காலா தான் சொல்ல வந்த விஷயத்தில் தெளிவாகவே இருக்கிறார்.  

படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியேறுகையில் ஒரு விஷயம் குழப்பமாக இருந்தது. காலா ரஜினியை, நிஜ ரஜினி உணர்ந்து தான் நடித்தாரா? அப்படி உணர்ந்து நடித்திருந்தால் தூத்துக்குடி துப்பாக்கிக் சூட்டில் பாதிக்கப் பட்டவர்களைக் காணச் சென்று திரும்பியவர் விமான நிலையத்தில் வைத்து தன்னிடம் கேள்விக் கணைகளைத் தொடுத்த நிருபர்களிடம் ‘எல்லா விஷயங்களுக்காகவும் மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டேயிருந்தால் தமிழ்நாடு சுடுகாடாகி விடும்’ எனக் கொதித்திருக்க மாட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தங்கம் விலை சற்று குறைவு: இன்றைய நிலவரம்!

எடை குறைப்பு சிகிச்சையில் இளைஞா் பலி: விசாரணைக் குழு அமைக்க உத்தரவு

டி20 உலகக் கோப்பை தூதராக உசைன் போல்ட் நியமனம்!

என்ஐடி-இல் பேராசிரியர் பணி

தெலங்கானாவில் லாரி மீது கார் மோதியதில் 6 பேர் பலி

SCROLL FOR NEXT