விவசாயிகள் பிரச்னைக்கான தீர்வு 100 மணி நேரத்தில்: நாங்கள் தயார்; நீங்கள்?

விவசாயிகள் பிரச்னைக்கான தீர்வை 100 மணி நேரத்தில் ஏற்படுத்த முடியும். விவசாய சங்க தலைவர்கள், விவசாயிகள் நல ஆர்வலர்களுக்கு தமிழக தகவல்  தொழில் நுட்ப வல்லுநர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
விவசாயிகள் பிரச்னைக்கான தீர்வு 100 மணி நேரத்தில்: நாங்கள் தயார்; நீங்கள்?

விவசாயி சேற்றில்  கால் வைத்தால் தான் நாம் சோற்றில் கை வைக்க முடியும் என்கிற அடிப்படை உண்மை தெரிந்திருந்தாலும் விவசாயிகளின் பிரச்சனையை தீர்ப்பதற்கு நாம் என்ன செய்ய முடியும் என்று இதுவரை நினைத்திருந்த சாமானியனும், இன்று பிரச்னையின் தீவிரத்தை உணர ஆரம்பித்திருக்கின்றார்கள். அவர்களுக்காக குரல் கொடுக்க முற்படுகிறார்கள். ஊடகங்கள், சமுதாய வலைதளங்கள், விவசாய சங்கத்தலைவர்கள், திரைப்பட  துறையினர், சமூக ஆர்வலர்கள் போன்றோரது தொடர் முயற்சியால் இந்த மாற்றம் நிகழ ஆரம்பித்திருக்கிறது.

அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாய சங்க தலைவர்கள் தலைநகர் டெல்லியில் 100 நாட்கள் போராட்டத்தை ஆரம்பித்திருக்கும் நிலையில், விவசாய சங்க தலைவர்கள், விவசாயிகள் நல ஆர்வலர்கள் மனது வைத்தால் விவசாயிகள் பிரச்சனைக்கான தீர்வை 100 மணி நேரத்தில் ஏற்படுத்த முடியும் என்று தமிழக தொழில்நுட்ப வல்லுநர்கள் அழைப்பு விடுத்திருப்பது சிறப்பு கவனத்தை பெற்றிருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் சமீபத்திய விவசாய போராட்டங்கள் ஒன்றை தெளிவாக உணர்த்துகின்றது. தண்ணீர் மற்றும் உற்பத்தி கிடைத்துவிட்டால் மட்டும் விவசாயிகளின் பிரச்னை தீர்ந்து விடாது. விவசாயிகளின் விளைபொருள்களுக்கான  உரிய விலை கிடைப்பதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தப்படாத வரை பிரச்னை தீரப்போவதில்லை.

விவசாய விளைபொருள்களுக்கு குறைந்த பட்ச விலை என்பதும் நிரந்தர தீர்வு ஆகாது. உதாரணத்திற்கு, வெங்காயத்திற்கான குறைந்தபட்ச விலை கிலோவிற்கு பத்து ரூபாய் என்று நிர்ணயிக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். மிகப் பெரிய அளவு எண்ணிக்கையிலான விவசாயிகள் வெங்காயம் பயிரிட ஆரம்பித்துவிட்டால் தேவையைவிட மிக அதிக அளவில் உற்பத்தி செய்துவிட்ட வெங்காயத்தை அரசு என்ன செய்யும்? எவ்வளவு கொள்முதல் செய்ய முடியும்? அரசுக்கு மிகப்பெரிய அளவில் நட்டம் ஏற்படும். அதுவும் மக்கள் பணம்தானே? தேவைக்கு ஏற்ப உற்பத்தி செய்யக்கூடிய கட்டமைப்பு, தீர்வு, அரசாங்கம் விவசாயிகளுடன் நேரடித்தொடர்பில் இருக்கக்கூடிய வாய்ப்பு இருந்தால் மட்டும் தான் குறைந்த பட்ச விலை என்பது நடைமுறைக்கு சாத்தியமாகும். தேவைக்கு ஏற்ற உற்பத்தி செய்யக்கூடிய தீர்வு இருந்துவிட்டால் குறைந்தபட்ச விலை என்பதேகூட தேவை இல்லாமல் போகும் சூழ்நிலையை உருவாக்க முடியும்.

கடன்களை தள்ளுபடி செய்வது நிரந்தர தீர்வை ஏற்படுத்துமா? நிச்சயம் இல்லை. அடுத்த விவசாய பருவத்தில் விலை வீழ்ச்சியோ, வறட்சியோ, அதிக மழையோ ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? தற்போதைய அணுகுமுறையில் என்ன மேம்பாடு செய்திருக்கின்றோம் அத்தகைய விளைவுகளை தவிர்ப்பதற்கு? இந்த நிலை நீடித்தால் விவசாயம் என்றாலே போராட்டங்கள், பிரச்சனைகள் என்கிற கருத்து வலுத்து விவசாயத்தின் மீது இருக்கின்ற கொஞ்ச நஞ்ச நம்பிக்கையும் போய்விடும்.

இன்றைய உடனடித்தேவை தண்ணீர் இருந்து விவசாயம் செய்பவர்களது நிகர லாபத்தை அதிகரிப்பது (நல்ல தரம், அதிக விளைச்சல், உரிய விலை) மற்றும் விவசாயம் செய்வதில் உள்ள கடித்தன்மையை இலகுவாக்குவது என்பதுதான். இதுதான் விரக்தியில், வாழ்க்கையைப் பற்றிய பயத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் விவசாயிகளுக்கு நம்பிக்கையை, ஆர்வத்தை கொடுக்கும். நதிநீர் இணைப்பு, விளைபொருள்கள் கிட்டங்கி, எளிமைப்படுத்தப்பட்ட வங்கிக்கடன் மற்றும் சிறந்த பயிர்காப்பீடு போன்ற முக்கிய திட்டங்கள் செயல்படுத்தப்படுவதற்கு வழி வகுக்கும்.

நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளின் தேவை நல்ல தரம், அதிக உற்பத்தி, உரிய விலை, விவசாயம் செய்வதில் உள்ள கடினத்தன்மையை இலகுவாக்குதல் மற்றும் வறட்சி, புயல் போன்ற இயற்கை சோதனைகளின் போது முழு இழப்பையும் ஈடுகட்டும் விதமான சிறப்பு பயிர்காப்பீடு என்பதே ஆகும். இவைகள் விவசாயிகளுக்கு எளிதில் கிராம அளவில் கிடைக்கும் விதமான ஒரு முழு தீர்வை அரசு ஏற்படுத்திக்கொடுத்துவிட்டால் விவசாயிகள் தற்கொலைகள், போராட்டங்கள், உணவு விலை ஏற்றங்கள், உணவுத்தரமின்மை போன்ற துரதிஷ்டமான நிகழ்வுகள் நாட்டில் நிகழாது. அதற்கான முயற்சியில் அரசு ஈடுபட்டு வந்தாலும் தற்போது இருக்கும் கட்டமைப்பை கொண்டு இலக்கை அடைவது சாத்தியமில்லை. தேவை மாற்று அணுகுமுறை. அவற்றில் முக்கியமானது தகவல் தொழில்நுட்பத்தை சிறந்த முறையில் பயன்படுத்திக்கொள்வது.

தமிழகத்தை சேர்ந்த கணிப்பொறி வல்லுனர்கள் குழு 15+ வருட முயற்சியின் மூலம்  தகவல் தொழில்நுட்பத்தின்  அபார வளர்ச்சியினை, பயன்பாட்டினை விவசாயிகள் முழு அளவில் பயன்படுத்தித் தரம், உற்பத்தி, நிகர லாபம் அதிகமாக்குதல்  மற்றும் விவசாயம் செய்வதில்  உள்ள  கடின  தன்மையை இலகுவாக்கும்,   ஒரு புது  இணையத் தளம் சார்ந்த கிராம அளவில் செயல்படும் திட்டத்தை உருவாக்கி, மாதிரி அளவில் வெற்றிகரமாக செயல்படுத்தி, சிறப்பான மதிப்பீடுகளை பெற்றிக்கின்றோம்.  திட்டமிடுதலில் தொடங்கி  விதை முதல் விற்பனை வரையிலான சேவைகளை, கிராம அளவில் செயல்படும் விவசாய  மேலாண்மை மையத்தில் குறு, சிறு விவசாயிகளும் பெற்று பலன் பெற முடியும். இந்தத் தீர்வை பெரிய அளவில் அரசாங்கத்துடன் சேர்ந்து விரிவாக்கம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறோம்.

இது தொடர்பாக விவசாயிகள் சங்க தலைவர்களுடன் தொடர்ந்து பேசி வருகின்றோம்.  விவசாய சங்க தலைவர்கள், விவசாயிகள் நல ஆர்வலர்கள் மனது வைத்தால் விவசாயிகள் பிரச்னைக்கான தீர்வை 100 மணி நேரத்தில் ஏற்படுத்த முடியும். பிரச்னைகளை மட்டும் முன்னிறுத்துவதை விட்டு, நடைமுறைக்கு சாத்தியமான, உடனடியாக செயல்படுத்தக்கூடிய தீர்வை மையப்படுத்தி அரசாங்கத்தை அணுக வேண்டிய தருணம் இது. டிஜிட்டல் இந்தியா, விவசாயிகள் வருமானத்தை இரட்டிப்பாக்குதல் போன்ற இலட்சியங்களோடு செயல்பட முனைந்துகொண்டிருக்கும் அரசு விவசாய போராட்டங்ககளை கண்டுகொள்ளாமல் விடுவது போன்று, தீர்வு குறித்த கோரிக்கையை தவிர்க்கமுடியாது.

அய்யாக்கண்ணு அவர்களுடன் கலந்துரையாடல்  
அய்யாக்கண்ணு அவர்களுடன் கலந்துரையாடல்  
அய்யாக்கண்ணு மற்றும் ஆறுபாதி கல்யாணம் அவர்களுடன் கலந்துரையாடல்
அய்யாக்கண்ணு மற்றும் ஆறுபாதி கல்யாணம் அவர்களுடன் கலந்துரையாடல்

விவசாய பிரச்னைக்கான நிரந்தர தீர்வு கிராம அளவில் விவசாயத்தொழிலை வெற்றிகரகரமாக செய்து முடிக்கத்தேவைப்படும் கட்டமைப்பை, வசதிகளை, சூழ்நிலையை உருவாக்கிக்கொடுப்பதில்தான் உள்ளது. நாங்கள் முன்வைக்கும் இந்தத் திட்டப்படி ஒவ்வொரு கிராமத்திலும் அரசுடன் இணைந்து தகவல் மற்றும் செயல் மேலாண்மை  மையம் செயல்படும். இதில், இன்டர்நெட் வசதியோடு ஒரு கம்ப்யூட்டர், அதை ஆபரேட் செய்ய ஒரு பட்டதாரி, மற்றும் பள்ளிக் கல்வி முடித்த உள்ளூர் இளைஞர் என இரண்டு பேர் கொண்ட டீம் இருக்கும்.

விவசாயிகள் இவர்களின் துணையோடு:

  • வேளாண்மை சார்ந்த துல்லியமான சமீபத்திய தகவல்கள், அரசின் சிறப்புத் திட்டங்கள், மானிய விவரங்கள்
  • தான் பயிரிட விரும்பும் பயிர் எவ்வளவு ஏக்கர்களில் ஏற்கனவே பயிரிடபட்டிருக்கிறது என்கிற விபரம்
  • தனது குறிப்பிட்ட நிலத்தில் அதிகபட்ச உற்பத்தி கிடைப்பதற்கான பரிந்துரைகள், சிறப்பான நீர் மேலாண்மை, சிறப்பாக செயல்படக்கூடிய நோய் மற்றும் பூச்சி தடுப்பு பரிந்துரைகள் போன்ற முக்கிய  தவல்களைப்  பெறலாம்.

மேலும், விதை, உரம் போன்ற  இடுபொருள்களை ஒப்பீடு செய்வது மற்றும் தான் தேர்வு செய்த பொருளை அதற்கான பணத்தை மையத்தில் செலுத்தி குறிப்பிட நாளில் சொந்த இடத்திலேயே பெற்றுக்கொள்ளும் வசதி

  • தனது ஊரில், வேலை ஆட்கள் மட்டும் எந்திரங்கள் கிடைக்காத பட்சத்தில்  அருகில் இருக்கும் இடங்களில் இருந்து ஒப்பந்தம் செய்துகொள்ளும் வசதி
  • முக்கியமாக, அறுவடைக்கு முன்பாகவே சந்தை விலை விபரங்களை அறிதல், நேரடியாக கொள்முதல் செய்ய விரும்பும் நிறுவனங்களுடன் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்தல் போன்ற முக்கிய செயல் மேலாண்மை தேவைகளை   செய்துகொள்ள  முடியும்.
  • விவசாயிகளின் தகவல்களை சரியாக ஒருங்கிணைப்பது மூலம் சிறு குறு விவசாயிகளது குறைந்த அளவிலான தேவைகளையும் (தரமான இடுபொருள்களை கிராம அளவில் பெற்றுக்கொள்ளும் வசதி மற்றும் விளைபொருள்களை நல்ல விலைக்கு விற்கும் வாய்ப்பு) வெற்றிகரமாக பூர்த்தி செய்துகொள்ள வைக்க முடியும். குறு சிறு விவசாயிகளுக்கான மிகச்சிறந்த தீர்வாக இது அமையும்.

இதனால் விவசாயிகளுக்கு அலைச்சல், மன உளைச்சல் குறையும், நிகர லாபம் அதிகரிக்கும், சமூக, பொருளாதார வாழ்க்கை தரம் முன்னேறும். தேவையில்லாமல் நகர்புறத்துக்கு இடம் பெயர வேண்டியதில்லை.

அன்றைய தினத்தில் பயிரிடப்பட்ட பயிர்களின் நிலப்பரப்பு, தட்ப வெட்பம் போன்ற புள்ளி விபரங்கள் உடனுக்குடன் இணையத் தகவல்களாக பதிவு செய்யப்படுவதால் அரசாங்கத்தை பொறுத்தவரை நாட்டின் உணவு தரம், பாதுகாப்பு, விலை கட்டுப்பாடு போன்ற மிக முக்கிய விசயங்களை சிறப்பாக நிர்வகிக்கலாம், பயிர்க்கடன் மற்றும் காப்பீட்டில் ஏற்படும் நஷ்டங்களைக் குறைக்கலாம். பயிர்கடன்களை, காப்பீடுகளை விரிவாக்கம் செய்து  சிறு குறு விவசாயிகளின் வாழ்க்கைய பாதுகாக்கலாம். கிராம பொருளாதார மேம்பாடு மூலமாக நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியை அதிகரிக்கலாம். தரமான இடுபொருள்களை தயாரிக்கும் நிறுவனங்கள் எளிதில் தங்கள் பொருள்களை விவசாயிகளிடம் கொண்டு சேர்க்கலாம்.

களைஇழந்த பாரதம் முன் போலே களை சிறக்கச்செய்திட வா வா வா என்று அறைகூவல் விடுத்தானே மகா கவி. அந்த தீர்க்கதரிசியின் அழைப்பிற்கான பங்களிப்பாக விவசாயிகளின் வாழ்வை பாதுகாப்போம். விவசாயத்தை, நாட்டை வளம் பெறச்செய்வோம்.

பிரச்சனையை மட்டும் மையப்படுத்தாமல் தீர்வை முன்னிறுத்தி அரசாங்கத்திடம் கோரிக்கையை முன்வைக்க விவசாய சங்கத்தலைவர்கள், விவசாயிகள் நல ஆர்வலர்கள், திரையுலக பிரபலங்கள் முன்வருவார்களேயானால் விவசாயத்திற்கான, விவசாயிகள் பிரச்சனையை தீர்ப்பதற்கான முயற்சியில் மாறுதல் வரும் என நம்பலாம்.

Rm  திருச்செல்வம்
Originator  & Project  Director
Mission IT-rural
Email: thiru@it-rural.com; thirurm@gmail.com
Mobile: 98403 74266

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com