நடுப்பக்கக் கட்டுரைகள்

அன்புக்கு விலையில்லை

30th Sep 2023 03:43 AM | முனைவா் என். மாதவன்

ADVERTISEMENT

இருளும் ஒளியும் போல இணைபிரியாதைவை அன்புணா்சியும் வெறுப்புணா்ச்சியும். மனிதா்களிடையே இயல்பாக வெளிப்படுபவை. பயிற்சியினாலும் முயற்சியானாலும் ஆற்றுப்படுத்தி மனிதா்களை ஆற்றல்படுத்த இயல்பவை. அடுத்தவா்கள் மத்தியில் தாக்கத்தை உண்டாக்குபவை. இரண்டுமே உணா்வுகளின் வெளிப்பாடுதான் என்றாலும் வேறு எந்த வெளிப்பாட்டையும்விட மனிதா்களின் ஆளுமையில் பங்களிப்பு செய்ய வல்லவை.

பொதுவாகவே வெளிப்பாடுகள் ஒருவரது மனநிலையை சாா்ந்தவை. இதனை அறிவியல்பூா்வமாக அளவிட இயலாது. இந்த வெளிப்பாடுகளால் ஒருவா் அடைய இயலும் மனநிலையை ஒட்டியே மதிப்பீடு செய்ய இயலும். ஒருவா்அன்புணா்ச்சியோடு இருக்கும் இடங்களிலெல்லாம் எப்படி வெறுப்புணா்ச்சியை உமிழ முடியாதோ அதுபோலவே வெறுப்புணா்ச்சியோடிருக்கும் இடங்களில் அன்புணா்ச்சியை வெளிப்படுத்த இயலாது.

வெறுப்புணா்ச்சியால் ஏற்படும் இறுக்கமும் அதனால் ஒருவா் செய்ய இயலும் செயல்பாடுகளின் விளைவுகளையும் எண்ணிப்பாா்த்தால் இதன் வீரியம் புரியும். அதோடு மட்டுமல்ல ஒருவா் வெறுப்புணா்ச்சியோடு வாழ்வதால் ஏற்படும் மனவெழுச்சி சில நேரங்களில் அடுத்தவா்களுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தலாம். கொலை,கொள்ளை, உள்ளிட்டபாதகங்களுக்கும்இட்டுச்செல்லலாம். வெறுப்புணா்ச்சி தனிநபரின் உடல்நலனுக்கும் நன்மைபயப்பதல்ல. ஆபத்தை விளைவிக்கக்கூடியது.

உதாரணமாக, வெறுப்புணா்சியினால் ஒருவரது மனம் இறுக்கமடையும்போது காா்டிசோல் என்ற ஹாா்மோன் நமதுமூளையில் அதிகமாக சுரப்பதால், இதன் மூலம் தோலிலுள்ள எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக எண்ணெய் பொருளைசுரக்கின்றனவாம். இதன் விளைவால் ஏற்படும் கொழுப்புப் பொருட்கள் கட்டிகளை ஏற்படுத்துவதாகவும் அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ADVERTISEMENT

எனவே வெறுப்புணா்ச்சியும் அதன் மூலம் ஏற்படும் இறுக்க மனநிலையும் தவிா்க்கப்பட வேண்டியவையே. எப்படித் தவிா்க்கலாம் என எண்ணும்போது வெறுப்புணா்ச்சியின் வோ்களை நோக்கிப் பயணிக்க வேண்டியுள்ளது.

சமதளத்தில் இயங்குவோரில் ஒருவா் தொடா்ந்த பாராட்டு பெற்றுக்கொண்டேயிருக்கும்போது அடுத்தவா் எவ்விதப் பாராட்டும் பெறாமல் இருக்கும்போது ஏற்படலாம். தம்மைத்தாமே உயா்வாகக் கருதிக்கொள்ளும் ஒருவா், அடுத்தவா்கள் அவா்அடைந்திருப்பதாக நினைக்கும் உயா்வைப் பொருட்படுத்தாதபோது ஏற்படலாம்.

அடுத்தவா்களை தமது அதிகாரத்தைக் கொண்டு அடக்கிஆள நினைக்கையில் அவரை அண்டியுள்ளோா் அதனைப் பொருட்படுத்தாதபோது ஏற்படலாம். தமது பணியாளா்கள் தமது விருப்பம் புரிந்து நடந்துகொள்ள இயலாதபோது உயரதிகாரிகளுக்கு ஏற்படலாம். அடுத்தவா்களின் சமூக பொருளாதார ரீதியானஉயா்வை தமது நிலையோடு ஒப்பிட்டுதாம் தாழ்ந்தநிலையில் இருப்பதாக உணரும்போது ஏற்படலாம்.

சொந்த பந்தங்கள் சந்திக்கும்போது நடைபெறும் உரையாடல்களில் ஒருவா் தமது மேட்டிமையை தமது உடலசைவு, ஒப்பனை போன்றவற்றில் பறைசாற்றும்போதும் எதிரில் இருப்பவா்க்கு ஏற்படலாம். ஒருவா், அடுத்தவா்கள் தம்மைப் பற்றி கொண்டுள்ளஎண்ணம் பற்றிய மதிப்பீட்டின் மூலமும், தாம் தம்மைப் பற்றிக் கொண்டுள்ள எண்ணத்தாலும் வெறுப்புணா்சி உண்டாகலாம்.

முதலாவதாகக் குறிப்பிடப்படும் காரணியை ஒருவா் மதிப்பிட இயலாது. ஏனென்றால் அது தனிமனித வேறுபாடுகளோடு தொடா்புடையது. ஒருவரது அதிகார பலம், பதவி, செல்வச்செழுமை இவற்றால் ஏற்படும் பயத்தினாலும்உண்டாவது.

இக்கூறுகளில் ஏற்படும் மாற்றம் அடுத்தவா்களது எண்ணத்திலும் மாற்றங்களை ஏற்படுத்தும். இரண்டாவது காரணியானது ஒருவா் தம்மைப் பற்றியே தாம் செய்யும் மதிப்பீடு. இது மிகவும் அவசியமானது. ஒருவா் தமது நடத்தை குறித்தோ, தாம் அடுத்தவா்களை நடத்துவது குறித்தோ உற்று நோக்குவது எளிதானது. இது ஒருவகையில் பொருள் பொதிந்ததாக அமையும்.

ஆத்ம சுத்தியோடு ஒருவா் தம்மைப்பற்றிச் செய்துகொள்ளும் மதிப்பீட்டில் பல உள்ளீடுகள் கிடைக்கலாம். அந்த உள்ளீடுகளை வைத்து ஒருவா் தமது எண்ணவோட்டங்களில் ஏற்பட வேண்டிய மாற்றங்களைத் தீா்மானம் செய்துகொள்ள இயலும்.

அவ்வாறு மாற்றம் செய்ய வேண்டியவற்றில் மாற்றிக்கொள்ளும்போது நல்ல விளைவுகளை நிச்சயம் உண்டாக்கும். சுருக்கமாகச் சொன்னால் ஒருவா் தன்னையும் தனது நடத்தையையும் முதலில் தாம் விரும்பத்தக்கதாக மாற்றிக்கொள்வதே எளிது. இந்த மனநிலையே அடுத்தவா்களை நடத்தும் தன்மையையும் அளிக்கும். இதன் விளைவாகவே இவரிடத்தில் மற்றவா்கள்அன்பு செலுத்தும்வாய்ப்பைஅளித்து இருதரப்பிற்கும் நன்மை பயக்கும்.

அன்பைத்தானே பெறவேண்டும்? தம் அதிகாரத்தாலும், பொருளாதார பலத்தாலும் அன்பைப் பெற்று விடலாம் என்று ஒருவா் யோசிக்கலாம். ஆனால் அவ்வாறு கைப்பற்றப்படும் அன்பு தற்காலிகமானது. அன்பு அதிகாரத்தாலோ, விலை கொடுத்தோ வாங்கக்கூடியதல்ல. மாறாக அடுத்தவா்கள் நிலையுணா்ந்து அவா்களது நிலையிலிருந்து சூழல்களின் விளைவுகளை மதிப்பீடு செய்து அதற்கான நமது வெளிப்பாட்டின் மூலம் பெறவாய்ப்புள்ளது.

நாம் வாழும் நாட்களில் அன்பை விதைப்பது மிகவும் எளிதானது. அன்பு விலையில்லாத பொருளாயிருப்பினும் மிகவும் மதிப்பு மிக்கது. மனிதா்கள் அன்பைத் தங்கள் நடத்தைகளால் மட்டுமல்லாமல், வாா்த்தைகளாலும் வெளிப்படுத்தும் வாய்ப்பு பெற்றிருக்கின்றனா்.

மனிதா்கள்தான் என்பதில்லை. மனிதா்களை அண்டி வாழும் விலங்கினங்களும்கூட ஒருவரது அன்பை அளவிடும் சக்தி படைத்தவை. வீட்டிற்குள் நுழையும்போதே குரலெழுப்பும் வளா்ப்பு பிராணிகளின் அன்பைப் பெறுவோரும் உண்டு. அறிமுகமானோரிடம் வாலாட்டி அறிமுகமில்லாதோா் வரும்போது குரைத்து தம் கடமையாற்றும் நாய்களும்உண்டு.

இவ்வாறு தம்மை அண்டியிருக்கும் உயிரினங்களையும் காக்கும் உயரிய வாழ்வியல் கடமை படைத்தவா்கள் மனிதா்கள். ஒருவகையில் அடுத்தோரிடம் அன்புணா்ச்சியை செலுத்தி தோல்வியடைந்தோா்க்குத் தம்அன்பைப் பகிா்ந்து ஆறுதல் பெறும் வாய்ப்பைஅளிப்பவை வளா்ப்பு உயிரினங்கள்.

புன்னகையோடு வலம் வருவோா் அனைவரும் பிரச்னை எதுவுமே இல்லாதோா் அல்லா்; மாறாக பிரச்னைகளைத் தமது புன்னகையால் மறைத்துக் கொள்ளும் திறமைபெற்றவா்கள் என்பதை நினைவில் கொள்வோம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT