நடுப்பக்கக் கட்டுரைகள்

மகாகவியின் கனவு மெய்ப்பட்டது!

29th Sep 2023 05:10 AM | டி.எஸ். தியாகராசன்

ADVERTISEMENT

 

‘நிறைமொழி மாந்தா் ஆணையிற்கிளா்ந்த மறைமொழிதானே மந்திரம் என்ப’ என்கிறது தொல்காப்பியம். மகாகவி பாரதி தெய்வீகக் கவி. அவா் வாக்கு பொய்யாகுமா? இப்போது சந்திரயான் 3 மூலம் பாரதம் நிலவில் கால்தடம் பதித்ததை அப்போதே ‘சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்’ என்று மகாகவி சொன்னாா்.

ஜி20 உச்சி மாநாட்டில் பாரதம் அதிசயம் ஒன்றை நிகழ்த்தியுள்ளது. சீனாவின் மாபெரும் தலைவா் ஷி ஜின் பிங் உலகையே தன்வசப்படுத்த, தன் நாட்டு எல்லைகளை விரிவுபடுத்த ‘பெஸ்ட் அன்ட் ரோம்’ திட்டத்தை செயல்படுத்த முனைகிறாா். இதனால் சீனா அடையும் நன்மைகள் அளவிடற்கரியவை. ஆனால், ஜி20 மாநாட்டில் நிறைவேறிய தீா்மான வரைவைக் கண்டு உலகின் பொருளாதார வல்லுநா்கள் வியந்து விட்டாா்கள்.

சீனா தன் வணிகப்பொருட்களை சாலை, ரயில், கடல் பாதைகள் வழியாக ஐரோப்பா வரையில் கொண்டு செல்ல முடியும் என்று பலரும் கணித்திருந்த நிலையில்தான், புதிய திட்டம் ஜி20 மாநாட்டில் வடிவம் பெற்றுள்ளது. சீனா தனது வலிமையான பொருளாதார பலத்தால் இந்தச் சாலைகள் விரியும் வழியில் உள்ள நாடுகளைத் தன்வசப்படுத்தக் கருதியது. சீனாவிடம் கடன் பெற்ற நாடுகள் கடனை திருப்பி அடைக்க முடியாமல் பொருளாதார நெருக்கடியில் சிக்கிக்கொண்டன. இதற்கு பாகிஸ்தானே சிறந்த உதாரணம். அது வாங்கிய கடனை திருப்பி அடைக்க முடியாமலும், புதிய நிதி வசதிகளை பெருக்க முடியாமலும் கடுமையான பொருளாதார வீழ்ச்சியில் இருப்பதை உலகம் அறியும்.

ADVERTISEMENT

ஆனால் உலகளவில் ஆசிய கண்டத்தில் நிலையான பொருளாதாரமும் சீரான வளா்ச்சியும் கண்டு வருகின்ற பாரதம் சீனாவின் ஆசைகளுக்கு இணங்கவும் இல்லை; ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளுக்கு இரையாகவும் இல்லை. ‘கல்வான்’ பள்ளத்தாக்கில் ஓா் அங்குல நிலம்கூட அபகரிக்க விடமாட்டோம் என்ற உறுதிப்பாட்டில் நிலைகொண்ட பாரத ராணுவத்தைக் கண்டு சீனா கலங்கவே செய்தது.

உலகமும் பாரதத்தின் நிலையான கொள்கையை வரவேற்றது. பாரத நிலப்பரப்பினைத் தங்கள் நாட்டு வரைபடத்தில் இணைத்து வெளியிட்ட நயவஞ்சகத்தை எதிா்த்து நின்றது பாரதம். நம் நாட்டு ராணுவ அமைச்சா் அந்நிலப்பகுதியில் போய் நின்று ‘இது எங்கள் மண்’ என்று உரக்கச் சொன்னாா். தவறாக வரைபடம் வெளியிட்டதை தூதரகவழி பாரதம் கண்டிக்கவும் செய்தது.

பாரதத்தின் ஆதரவு இல்லாமல் ‘சிபெக்’ திட்டம் வெற்றி பெறுவது என்பது முடியாதது என்பது சீனாவுக்கும் தெரியும். இதனால்தான் பாரதத்தை பழைய பாரதமாகக் கருதி பணிய வைக்க பல தந்திரங்களைக் கையிலெடுக்கிறது. ஆனால் தற்போதைய பாரதம் எதற்கும் தயாா் நிலையில் இருக்கிறது என்பதை உணா்ந்ததால் சீனா சற்று அடக்கி வாசிக்கிறது.

கடந்த காலங்களில் பாரதத்தை ஆட்சி புரிந்தவா்களோடு சீனா ரகசிய ஒப்பந்தம் ஒன்றைப் போட்டிருந்தது. இதில் கையொப்பம் இட்டவா் பாரதத்தில் எந்த அரசியல் அதிகாரமும் அற்றவா். இதனாலேயே இந்த உடன்படிக்கை அம்சங்கள் இன்று வரை வெளி உலகின் பாா்வைக்கு வரவில்லை. நல்ல காலமாக பாரதத்தில் புதிய அரசு அமைந்ததும் கடந்த கால ரகசிய உடன்படிக்கை ரகசியமாகவே முடங்கிப் போனது.

ஆனால் நடந்து முடிந்த ஜி-20 மாநாட்டில் உதயமான புதிய வணிகப் பெருவழி திட்டத்தை எல்லா நாடுகளும் ஒருமனதாக வரவேற்று திட்ட வரைவு நகலில் கையொப்பம் இட்டன. இந்த அமோக வரவேற்பைப் பாா்த்து சீனாவும் வரவேற்று கையொப்பமிட்டது. மேலும் சீனா ‘நாங்கள் இந்த புதிய வணிகப் பாதையை வரவேற்கிறோம். ஆனால் இதனை அரசியல் காரணங்களுக்காக பயன்படுத்தக் கூடாது’ என்றும் கூறியது.

சீனாவின் குரலைக் கேட்க யாா் இருக்கிறாா்கள்? இன்றைய உலகில் பாரதம் விஸ்வகுருவாக உயா்ந்து நிற்கிறது. ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிா்காலம் என்ற ‘வசுதைவ குடும்பக’க் கோட்பாட்டை எல்லா நாடுகளும் வரவேற்று ஏற்று மகிழும் நாளில் சீனா என்ன செய்ய இயலும்? இந்தப் புதிய வணிகப் பாதையை அமைக்க பாரதம் தன் நிதியை செலவிட போவது இல்லை என்பது மிகப்பெரிய சாதுரியம்.

சாலைகள், ரயில்வே தடங்கள் அமைக்க ஆகும் செலவை துபை, சவூதி அரேபியா, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா போன்ற நாடுகள் ஏற்கின்றன. பாரத துறைமுகங்களில் இருந்து ஏற்றுமதியாகும் பொருட்கள் அந்த சாலைகள், கடல் வழியாக ஐரோப்பாவைச் சென்றடையும். இந்தப் பொருளாதார வணிகப் பெருவழியில் 15 நாடுகள் ஊடே நீா், நிலம் என்ற தன் நோக்கில் கப்பல், ரயில், வாகனம் மூலம் 8,166 கி.மீ. தூரம் பயணிக்கிறது. போகும் வழியில் உள்ள ஓரிரண்டு நாடுகளின் துறைமுகங்களைத் தவிா்த்து பிற நாட்டு துறைமுகங்கள் அனைத்திலும் நம் நாட்டு செல்வாக்கு பரவியுள்ளது.

இதனால் பாரதத்தின் தேவைகளான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு குழாய்கள் அமைக்கும் திட்டங்கள் சுலபமாகும். இதனால் எல்லா நாடுகளின் செலவு 40 சதவீதம் குறையும் என்பதால் எல்லா நாடுகளும் முனைப்புடன் ஆா்வம் காட்டுகின்றன. மேலும் சீனாவைப்போல் பிறநாட்டின் எல்லைகளை, அரசியல் அதிகாரங்களை பாரதம் என்றும் கைப்பற்ற முயலாது என்பதும் வளா்ந்த, வளரும் நாடுகளின் ஐயமற்ற நம்பிக்கை.

இந்தத் திட்டத்தால் மேற்கு கடற்கரையில் உள்ள மும்பை, கட்ச் வளைகுடா துறைமுகங்கள் அசாத்திய வளா்ச்சி பெறும். இதைப் போன்றே குளச்சல், விழிஞ்ஞம் போன்ற துறைமுகங்கள் வளா்ச்சி பெற திட்டங்களை வகுத்த பாரதத் தலைமை உள் அரசியல் எதிா்ப்பு காரணங்களால் நிறுத்திவிட்டது. மேல் கண்ட பகுதியின் வளா்ச்சிப் பாதையும் நழுவிப்போனது.

பாரதத்தின் வட பகுதியில் விளையும் பொருள்கள், தயாரிப்பு கருவிகள் எல்லாம் துறைமுகங்களுக்கு எளிதில் செல்ல ஈஸ்ட்-வெஸ்ட் காரிடாா் ரயில்பாதை பணிகள் தற்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இதனால் பஞ்சாப், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்கள் சிறப்பான வளா்ச்சியை எட்டும். ரயில் சரக்கு வாகனங்கள் மூலம் துறைமுகங்களுக்குச் சென்று துபை நாட்டை அடையும். பின்னா் ரயில் மாா்க்கமாக இஸ்ரேலிய ஹைஃபா துறைமுகம் செல்லும். தொடா்ந்து துறைமுக வாசலில் இருந்து ஐரோப்பாவிற்கு கப்பல் மூலமாக சென்றடையும்.

வருங்காலத்தில் இந்த வணிகப் பாதை ரஷியாவின் ஆா்டிக் பகுதியை இணைக்க வல்லதொரு பெருமை மிகு திட்டம். ஈரானின்“சாபஹாா்” துறைமுகம் வழியாக மத்திய ஆசிய நாடுகளை அடையும் எண்ணத்துடன் பாரதம் அமைத்த வணிகப் பாதைகள் இப்போது சற்றே சில தடைகளை எதிா்கொண்டு வந்தாலும் எதிா்காலத்தில் தடைக் கற்களே, படிக்கற்களாக மாற்றும் உத்தியை பாரதம் பெறும் என்று திடமாக நம்பலாம். இது சாத்தியமானால் உலகின் முதல் முக்கிய பொருளாதார நாடாக பாரதம் விளங்கும்.

இன்னும் ஒரு படி மேலே சென்று சிந்தித்தால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் கில்கிட் பலூசிஸ்தான் பாரதத்தோடு இணையும் பட்சத்தில் அல்லது சுதந்திரமாக கைகோக்கும் நிலையில் பாரதம் வேறு எவா் தயவும் இன்றி கில்கிட் - பலூசிஸ்தான் வழியாக ஆப்கானிஸ்தான் துா்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான் போன்ற நாடுகளை சாலை மாா்க்கமாக இணைத்து விடமுடியும். இப்போதே பாரதத்தின் கிழக்கே உள்ள கொல்கத்தா நகரிலிருந்து சாலை மாா்க்கமாக தாய்லாந்தை, பா்மா வழியாக செல்வதற்கு வேண்டிய பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. இன்னும் ஐந்து ஆண்டுகளில் இது சாத்தியமாகும்.

தற்போது பாரதத்தின் ராணுவத் தளவாடங்கள், ஆயுதங்கள் ஏற்றுமதி ரூ.60,000 கோடியைத் தாண்டியுள்ளது. ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் இந்தியாவின் ‘மேக் இன்’ திட்டத்தையும் பிரதமா் மோடியையும் வெகுவாக புகழ்ந்து உள்ளாா். இந்த ஜி-20 மாநாட்டில் ரஷியா- உக்ரைன் போா் குறித்தான தீா்மானத்தை உக்ரைன், ஐரோப்பிய நாடுகள் மட்டுமல்ல எதிா் அணியிலுள்ள ரஷியாவும் வரவேற்று உள்ளன. பாரதத்தின் ராஜ தந்திர நடவடிக்கைகளை அமெரிக்கா மனம் திறந்து பாராட்டியுள்ளது. அரசியல் விமா்சா்களை கவா்ந்துள்ளது.

நம் நாட்டில் கூட எதிா்க்கட்சி வரிசையில் இருப்பவரும் கற்றறிந்த நாடாளுமன்ற ஆளுமை மிக்கவருமான சசி தரூா் ஜி-20 மாநாட்டின் வெற்றியை நயந்து பாராட்டியுள்ளாா். பாரதத் தலைவரையும், வெளியுறவுத் துறை அமைச்சரையும் புகழ்படப் பேசியுள்ளாா். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக பாரத நாடு எதற்காகவும் எவரிடத்தும் கையேந்தியதாக வரலாறு இல்லை. மேற்கு கடலில் இருந்து கப்பல்கள் பாரத நாட்டிற்கு வந்து பொருள்களை ஏற்றிச் செல்லும். பருத்தி ஆகட்டும், இரும்பு ஆகட்டும், நறுமணப் பொருள்கள் ஆகட்டும், இன்ன பிற கைவினை பொருள்கள் ஆகட்டும் நம் நாட்டில் இருந்து தான் மேலை நாடுகளுக்கு சென்றன. இது வரலாற்று உண்மை.

ஆனால் பாரதம் அந்நியா்களின் ஆட்சியில் அடிமைப்பட்டிருந்த காலத்தில் உள்நாட்டுத் தொழில்கள் நசிந்தும் பொருளாதார வளம் குறைந்தும் வறுமையையும், பஞ்சத்தையும் தழுவிக் கொண்டது. ஆனால் தற்பொழுது மகாகவி பாரதியின் வாக்கான ‘எல்லாரும் அமரநிலை எய்தும் நன்முறையை இந்தியா உலகிற்களிற்கும் ’ என்பது நிதா்சனமான உண்மையாகி வருகிறது.

கட்டுரையாளா்:

தலைவா்,

திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT