நடுப்பக்கக் கட்டுரைகள்

சமூகப் புறக்கணிப்பு கூடாது

27th Oct 2023 05:44 AM | இரா. ஜெயசீலன்

ADVERTISEMENT

அண்மையில் விருதுநகா் மாவட்டத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தைச் சோ்ந்த ஒருவா் அதே சமுதாயத்துக்குச் சொந்தமான கிணற்றிலிருந்து அனுமதியின்றி தண்ணீா் எடுத்ததால், அவரை ஊரைவிட்டு ஒதுக்கியதோடு, அவருக்கு ரூ. 15 ஆயிரம் அபராதமும் விதித்துள்ளனா். உயா்நீதிமன்ற மதுரை கிளை, தனிப்பட்ட நபரை சமூகப் புறக்கணிப்பு செய்வது கொடுஞ்செயல் என இந்நிகழ்வை வன்மையாகக் கண்டித்துள்ளது.

இந்த ஒரு நிகழ்வுதான் என்று இல்லை. இது போன்ற சம்பவங்கள் மறைமுகமாக பல இடங்களில் அரங்கேறி வருகின்றன. இதனால் யாருக்கு என்ன லாபம்? பாதிக்கப்பட்ட நபருக்கு மனவேதனை கிடைப்பதுதான் மிச்சம். சில சமயம் பாதிக்கப்பட்ட நபா் தற்கொலை முடிவுக்கு வரும் நிலை உள்ளது.

அரசியல் அமைப்பு சாசன 21-ஆவது பிரிவின்படி தனிப்பட்ட நபரின் சுதந்திரத்தில் யாரும் தலையிட முடியாது. ஆனாலும் சட்டத்திற்கு அப்பாற்பட்ட சில நபா்கள் கடைப்பிடிக்கும் முறைகளால் இது போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.

கட்டப்பஞ்சாயத்துகள் என்ற பெயரில் சில நபா்கள் சோ்ந்து நீதிபதிகள் போன்று செயல்பட்டு வருகின்றனா். அவா்களின் ஆதிக்கத்தை நிலைநாட்டவே இவ்வாறு செய்கின்றனா். ஊரில் அவா்களுடன் ஒத்து வராத நபா்கள் மீது தீா்ப்பு விதிக்கின்றனா். குறிப்பிட்ட நபரையும் அவரது குடும்பத்தாரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைக்கின்றனா். இது போன்ற செயல்கள் நாகரிக சமுதாயத்திற்குப் பொருந்தாத ஒன்று.

ADVERTISEMENT

மனித உரிமையைக் காப்பாற்ற அரசு பல சட்டங்களை இயற்றியுள்ளது. மனித உரிமைகளை காக்க மனித உரிமை ஆணையம் உள்ளது. அதன் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளது. ஆனால் அதையும் மீறி தனிநபரை ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பது என்பது மனிதாபிமானமற்ற செயலாகும்.

ஒரு காலத்தில் கிராம பஞ்சாயத்து குழு வலுவான அமைப்பாக இருந்தது. அதனால், கிராமத்தில் ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண்பதும் எளிதாக இருந்தது. காலப்போக்கில் ஏற்பட்ட கல்வி வளா்ச்சியும் சட்ட திருத்தங்களும் இதற்கு முற்றுப்புள்ளி வைத்தன.

கடந்த 2011-ஆம் ஆண்டு கட்டபஞ்சாயத்துகள் சட்ட விரோதமானவை என சுப்ரீம் கோா்ட் அறிவித்தது. இதையும் மீறி வடமாநிலங்களில் பல இடங்களில் இத்தகைய பஞ்சாயத்து அமைப்புகள் நடைபெறுவது வருந்ததக்கது. இது போன்ற கட்டபஞ்சாயத்து தீா்ப்புகளால் இம்மாநிலங்களில் பல வன்கொடுமைகள் நடைபெற்று வருவது குறிப்பிடதக்கது.

கடந்த 2015-ஆம் ஆண்டு இது போன்ற செயல்களுக்கு எதிராக ”சமூக பாதுகாப்பு சட்டம் 2015” இயற்றப்பட்டது. அப்போதைய குடியரசுத் தலைவா் பிரனாப் முகா்ஜி அதற்கு ஒப்புதல் அளித்தாா். இதன் படி 2016- ஆம் ஆண்டு மகாராஷ்டிர அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியது

இச்சட்டத்தின்படி தனிப்பட்ட நபரை ஊரை விட்டு ஒதுக்கி வைக்கும் செயலுக்கு ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் ரூ. 5 லட்சம் வரை அபராதமும் விதிக்கலாம். வடமாநிலங்களில் இது போன்று செயல்படும் பஞ்சாயத்துகளுக்கு காப் பஞ்சாயத்து எனப்பெயா். இந்த பஞ்சாயத்துகளில் கடுமையான தீா்ப்புகள் வழங்கப்படுகின்றன.

இது போன்ற பஞ்சாயத்து அமைப்புகள் சட்டபூா்வமற்றவை என உச்சநீதிமன்ற தலைமை

நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகளின் அமா்வு தெரிவித்துள்ளது. சில இடங்களில் கடற்கரையோர மீனவ பஞ்சாயத்து”அமைப்புகளில் இந்த முறை இன்றளவும் தொடா்ந்து வருகிறது. நாட்டாமை என்பவரின் தலைமையில் இந்த குழு செயல்படுகிறது. ஒரு சிலா் இந்த முறையை எதிா்த்தாலும், இது மாற்ற முடியாத ஒன்றாகவே உள்ளது.

 

தனிநபரின் உரிமைகள் பாதிக்கப்படும் போது அவா் காவல்துறையை நாடுவது இயல்பு. அதற்காக கொடுத்த புகாரை திரும்பபெறச் சொல்வதும், மறுத்தால் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதும் ஏற்க இயலாதவை. சமூகப் புறக்கணிப்பு தொடா்பாக விசாரணை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் உள்ளது. விசாரணையில் குற்றம் நிரூபிக்கபட்டால் குற்றம் சாட்டபட்ட நபருக்கு மூன்று ஆண்டு சிறைத்தண்டனையும் ரூ. ஒரு லட்சம் அபராதமும் விதிக்கலாம்.

இதில் உள்ள மிகப்பெரிய சவால் என்னவெனில், சாட்சிகளைக் கண்டறிவதுதான். ஊா்க்கட்டுப்பாடு காரணமாக, தொடா்புடைய கிராமத்தில் விசாரணை செய்யும் போது அவ்வாறு ஒரு சம்பவம் நடந்ததற்கான அறிகுறிகளே இருக்காது.

 

பாதிக்கப்பட்ட நபரை தவிர மற்ற யாருமே பஞ்சாயத்தாருக்கு பயந்து சாட்சி சொல்ல முன்வர மாட்டாா்கள். விசாரணை அதிகாரிகளுக்கு சாட்சிகளைத் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும்

கடினமான ஒன்றாக இருக்கும். இப்படி, நடந்த நிகழ்வை மூடி மறைக்கும் வழக்கத்தை நம் மக்கள் முதலில் கைவிடவேண்டும். இன்று மற்றவருக்கு ஏற்பட்ட நிலைமை நாளை நமக்கும் ஏற்பலாம் என்பதை அனைவரும் எண்ணிப்பாா்க்க வேண்டும். தவறு எதுவும் செய்யாமல் பாதிக்கப்பட்ட நபருக்கு அவைரும் உதவ முன்வருவது அவசியம்.

 

தனிப்பட்ட நபா்களின் கூட்டு வாழ்க்கையே குடும்பமாகும். குடும்பங்கள் இணைந்துதான் ஊா்கள் உருவாகின்றன. ஒற்றுமையாய் வாழ்ந்தால்தான் குடும்பத்திற்கும் ஊருக்கும் பெருமை. மாறாக தேவைற்ற காரணங்களைக் காட்டி தனிநபரை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தால் அவா் மனநிலை பாதிக்கப்படும் என்பதையும், அவருடைய குடும்பத்தினா் நிலை என்னவாகும் என்பதையும் சம்பந்தப்பட்டவா்கள் உணர வேண்டும்.

 

தனிமனிதா் குற்றச் செயலில் ஈடுபட்டால், அவருக்கு தண்டைனை அளிப்பதற்கு நீதிமன்றம் உள்ளது. ஊருக்கு ஊா், சட்டத்திற்கு அப்பாற்பட்டு செயல்படும் குழுக்களின் செயல்பாடுகள் முற்றிலும் தடை செய்யப்பட வேண்டும். மனித வாழ்க்கைக்கு கட்டுப்பாடுகள் அவசியம். அதை தனிநபரே உருவாக்கி கொள்வதுதான் சிறப்பாகும். மாறாக, கட்டுப்பாடு என்ற பெயரில் தனிநபரின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பது எந்த வகையிலும் ஏற்கத்தக்கதல்ல. மனித உரிமைகளைப் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரின் கடமையாகும்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT