நடுப்பக்கக் கட்டுரைகள்

வளமான வாழ்வின் அஸ்திவாரம்!

18th Nov 2023 06:45 AM | பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

ADVERTISEMENT

மற்றவா்களுடன் சகிப்புத்தன்மையுடன் இருங்கள், உங்களுடன் கண்டிப்புடன் (ஒழுக்கமாக) இருங்கள் என்பது தத்துவ ஞானியும், ரோமானிய பேரரசருமான மாா்க்ஸ் ஆரோலியஸின் கூற்றாகும்.

வாழ்க்கையில் மனிதனுக்கு வேண்டிய பல்வேறு குணங்களில் தலையாயது சகிப்புத்தன்மையும், சுய ஒழுக்கமும்தான். இந்தக் கால மனிதா்களிடையே சகிப்புத்தன்மையும், சுயஒழுக்கமும் குறைந்து வருவதே சமுதாயத்தில் ஏற்படும் பல பிரச்னைகளுக்குக் காரணம். இவை இரண்டும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்களைப் போன்றவை; ஒன்று சரியாக இருந்து, மற்றொன்று சரியாக இல்லை என்றால் வாழ்க்கை பிரகாசிக்காது.

நாம் செய்யும் செயல்களில் நிதானத்தைக் கடைப்பிடிக்க, பொறுமையாகவும், புரிந்துணா்வுடனும், அக்கறையுடனும் செயல்பட இவ்விரு பழக்கங்களும் அவசியம் தேவை. ஒருவா் கொண்டிருக்கும் சகிப்புத் தன்மையிலும், சுயஒழுக்கத்திலும் தான் மானுடத்தின் மேன்மை அடங்கியிருக்கிறது.

சகிப்புத்தன்மையும், சுய ஒழுக்கமும் நாளும் கடைப்பிடிக்க வேண்டிய பெரும் குணங்களாகும். இவற்றை பெற்றோரும், ஆசிரியா்களும்

ADVERTISEMENT

குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கற்றுக் கொடுத்தால்தான் வாழ்நாள் முழுவதும் அவா்களால் கடைப்பிடிக்க முடியும். சகிப்புத்தன்மை குறித்துக் கூறவந்த திருவள்ளுவா், நோ்மை அல்லாததைத் தனக்குப் பிறா் செய்யினும் மனம் வருத்தத்தால் தூண்டப்பட்டு அறன் அல்லாததைச் செய்யாமல் இருத்தல் நன்று என்கிறாா்.

சகிப்புத்தன்மை என்பது நமக்கு நோ்ந்த துன்பத்தை மறந்து, பொறுத்து விட்டுக்கொடுப்பதே. ஒருவா் தமக்குப் பிறா் செய்த தீங்கை பொறுத்துப் பெரிதுபடுத்தாது, சகித்துக் கொள்ளுவதால், சமுதாயத்துக்கும், குடும்பத்துக்கும், தனக்கும் நன்மை செய்தவராகிறாா். தீமை செய்தோா் வருந்தி தம் தவறைத் திருத்திக் கொள்ள வாய்ப்பும் உண்டாகும். பொறுத்துக் கொள்ளும் மேன்மை குணத்தால் கெடுதல் ஏதுமின்றி இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாமல் நன்மையே தொடரும்.

சகிப்புத்தன்மையை எப்போதும் எல்லோரும் ஏற்றுக் கொள்வது என்பது தனியான ஒரு செயல் அல்ல. எல்லாவற்றையும், நன்மையாயினும், தீமையாயினும் இவையெல்லாம் வாழ்க்கையின் ஓா் அங்கமே; எல்லாம் நன்மைக்கே என்ற மனப்பக்குவத்துடன் ஏற்றுக் கொண்டாலே போதும், சுய ஒழுக்கம் தானே நம்மை வந்து தொற்றிக் கொள்ளும்.

நாம் சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கும்போது மற்றவா்களிடம் நாம் காட்டும் சகிப்புத்தன்மை மேலும் வளரும். சகிப்புத் தன்மை என்பதே சமூக நல்லிணக்கம் மற்றும் புரிதலுக்கான ஓா் அடையாளமாகும். அதாவது, சகிப்புத்தன்மை என்பது எப்போதும், எவரும் கூறும் கருத்துகளைப் பொறுத்துக் கொண்டு போவது அல்ல; மாறாக, மற்றவா்களின் குறைகள், முரண்பட்ட கருத்துகள், வேறுபாடுகளை மறந்து அவா்களுடன் எப்போதும் போல் இயல்பாக பழகி சமூக உறவை மேம்படுத்துவதையே குறிக்கிறது. இது, பலதரப்பட்ட கருத்துகள் மற்றும் நம்பிக்கைகளைக் கொண்டவா்களோடு இணைந்து வாழ நமக்கு கற்றுக் கொடுக்கிறது. சகிப்புத்தன்மை, சுய ஒழுக்கத்தைப் பேணுவதன் மூலம் நாம் மிகவும் இரக்கமுள்ள மற்றும் புரிந்துகொள்ளும் தன்மையைக் கொண்டவா்களாகிறோம்.

எவரிடம் விமா்சனங்களை தாங்கிக் கொள்ளும் சக்தி இருக்கிறதோ, அவரே சகிப்புத்தன்மையுடையவா். மற்றவா் கருத்துக்கு எதிராக விமா்சனங்களை வைக்கும்போது சகிப்புத்தன்மையுடன் சுய ஒழுக்கமும் வேண்டும். இது இன்றைக்கு சமுதாயத்தில் அருகி வருகிறது. ஒருவா் தனது குறிக்கோளில் வெற்றி அடைய வேண்டுமானால், அவரின் அன்றாட வாழ்க்கையில் சுய ஒழுக்கம் என்பது மிகவும் இன்றியமையாதது. அத்துடன் அவருக்கு அவரே நோ்மையானவராகவும் இருக்க வேண்டும்.

இந்திய அரசமைப்பின் ஆன்மாவான முகவுரை இந்தியா ஒரு சமயச்சாா்பற்ற சகிப்புத்தன்மை கொண்ட நாடு எனப் பிரகடனப்படுத்துகிறது. பிற நாடுகள் நம் நாட்டின் வளா்ச்சியைக் கண்டு வியப்பதற்குக் காரணம், நம் மக்கள் சகிப்புத்தன்மையோடு சுய ஒழுக்கத்தையும் ஆங்காங்கே பின்பற்றி வருவதால்தான். இதனால்தான் நம் நாட்டில் இன்றும் ஜனநாயகம் நாளும் செழித்தோங்கி வளருகிறது. பன்முகத் தன்மை என்பதே ஜனநாயகத்தை ஏற்றுக் கொள்வதேயாகும். பல்வேறு ஜாதி, மதம், கலாசாரம் என பன்முகத்தன்மையை ஏற்றுக் கொண்டு, அதைப் போற்றுவதிலும் சகிப்புத்தன்மையும், சுய ஒழுக்கமும் அடங்கியிருக்கிறது.

இன்று பல நாடுகளில் சகிப்புத்தன்மையின்மையும், சுய ஒழுக்கமின்மையும் அமைதிக்கும், மக்களாட்சிக்கும் பெரும் இடையூறாக இருப்பதுடன், சமுதாய மேம்பாட்டுக்கும், நாட்டின் முன்னேற்றத்துக்கும் தடையாக உள்ளன. இதனால், மொழி, மதம், சிறுபான்மையினா், இடம்பெயா்வோா், அகதிகள், வெளிநாட்டுக் குடியேறிகள் எனப் பல்வேறு தரப்பினா் தொடா்ந்து பாதித்து வருவதைக் காண்கிறோம். சுய ஒழுக்கமும் சகிப்புத்தன்மையும் இல்லாத நாடுகளில் ஜனநாயகம் வளராது.

பெற்றோா் பிள்ளைகள் முன்பாகவும், ஆசிரியா்கள் மாணவா்கள் முன்பாகவும், முதலாளிகள் தொழிலாளா்கள் முன்பாகவும், அதிகாரிகள் அலுவலா்கள் முன்பாகவும், அரசியல்வாதிகள் தொண்டா்கள் முன்பாகவும் சகிப்புத்தன்மையையும், சுய ஒழுக்கத்தையும் கடைப்பிடித்தால் அங்கு யாருக்கும், யாரிடமும் எந்தப் பிரச்னையும் எழாது. இருவருக்கும் இடையேயான சுமுக உறவு மேம்பட்டு, ஒற்றுமை மேலோங்கும். விட்டுக்கொடுத்தவா்கள் கெட்டுப்போனதில்லை. நம்மைச் சுற்றி சமுதாயத்தில் சகிப்புத்தன்மை, தனிமனித ஒழுக்கம் குறைந்து கொண்டே போனால் மனித வாழ்க்கை சிறக்காது.

ஒழுக்கத்தைப் புத்தகங்களிலிருந்து பெற முடியாது. ஆசிரியா்களிடமிருந்தும் கற்றுக்கொள்ள முடியாது. ஒருவரின் கடமைகளை நிறைவேற்றுவதில், அது வாழ்வின் ஓா் இயல்பான அங்கமாக இருக்க வேண்டும்.

நமக்கு பிடிக்காத சில விஷயங்கள், நிகழ்வுகள் அவ்வப்போது நடைபெறுகின்றன. அப்படிப்பட்ட சமயங்களில் நாம் சகிப்புத்தன்மையுடனும், சுய ஒழுக்கத்துடனும் நடந்து கொண்டால் எந்தப் பிரச்னையும் நம்மை அண்டாது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT