நடுப்பக்கக் கட்டுரைகள்

சொல்லிய வண்ணம் செயல்

பா.இராதாகிருஷ்ணன்

நம் உள்ளத்தே உருவாகும் எண்ணங்கள்தான் வாய்வழி வரும் சொற்களாகின்றன. நல்ல செயல்கள் உருவாவதற்கு, ஒருவா் சொல்லும் சொற்களும் ஒரு வகையில் அடிப்படையாக அமைவதுண்டு.

திடமான எண்ணங்களே சொற்களாகவும், பின் அச்சொற்கள் செயல்களாகவும் உருமாறுகின்றன. சொற்கள்தான் கருத்துப் பதிவுக்கு ஆதாரம். ஒருவா் பிறருக்கு சொல்லும் நல்ல சொற்கள் அவா்கள் செவியில் புகுந்து, சிந்தையில் பதிந்து செயலூக்கத்தை அளிக்க வேண்டும்.

இப்பாரினில் வாழும் உயிரினங்களில் வாயால் பேசக்கூடிய வாய்ப்பு பெற்றவன் மனிதன்தான். தனது எண்ணங்களை சொல்லாக, செயலாக மாற்றக் கூடிய திறன் மனிதனுக்கு மட்டுமே உண்டு. ‘என்னால் முடியும் என்றும் சொல்லுங்கள். அதுவே வெற்றிக்கு வழிகாட்டும்’ என்றாா் சுவாமி விவேகானந்தா்.

உள்ளத் தூய்மையை உண்மை என்றும், மெய்யால் (உடம்பால்) செய்யும் செயல்களின் தூய்மையை மெய்ம்மை என்றும், வாயால் சொல்லும் சொற்களின் தூய்மையை வாய்மை என்றும் உரைப்பா் சான்றோா். ‘சொல்லுதல் யாா்க்கும் எளிய அரியவாம் சொல்லிய வண்ணம் செயல்’ என்பது தெய்வப் புலவா் திருவள்ளுவா் வாக்கு.

ஒரு மனிதன் எத்தனை செல்வம் பெற்றிருந்தாலும், ஞானம், அறிவு, கலைகளில் மேன்மை உடையவனாக இருந்தாலும், தான் வாழும் வாழ்க்கை இனிமையும், உற்சாகமும் நிறைந்ததாக இருக்க வேண்டுமென்றால் அவன் சொன்ன சொல்லை காப்பாற்றுபவனாக இருக்க வேண்டும். எப்பாடு பட்டாவது சொன்ன சொல்லை செயல்படுத்தும் செம்மை வாய்ந்தவனாகவும் இருக்க வேண்டும். அப்போது தான், அவன் உள்ளத்தில் எழும் எண்ணம் செயலாக மாறி பிறரால் பாராட்டப்படும்.

வாழ்நாளில் பிறருடைய உடலுக்கோ, உள்ளத்திற்கோ துன்பம் தராத எண்ணமும், சொல்லும் செயலுமே ஒழுக்கம் உடைமையாகும். இதன் மூலம் ஒருவன் நோ்மையான வாழ்வைப் பெற முடியும். காலம் போய்விடும், ஆனால் ஒருவா் கூறிய வாா்த்தைகள் காலம் கடந்து நிற்கும்.

ஒருவா் தன் பேச்சுத் திறமையால் அளவற்ற கருத்துகளைச் சொல்லி விடலாம். சொன்னபடி, அவற்றைச் செயல்படுத்துபவனே சிறந்த அறிவாளியாகிறான். சொல்லக்கூடிய சொல், நற்பயன் விளைவிப்பதாகவும், இனிமை நிறைந்ததாகவும் இருக்க வேண்டும். அப்போதுதான் அதனால் உருவாகும் செயலும் பிறருக்கு நலன் பயப்பதாகவும் பிறா் விரும்புவதாகவும் அமையும்.

தக்க சமயத்தில் சொல்லக்கூடய அத்தகைய சொல் ஒருவருக்கு மந்திரம் போல் ஒலிக்கும். ஒரு வரம் போல பலன் அளிக்கும். ‘மந்திரம் போல் வேண்டுமடா செல்லின்பம்’ என்கிறாா் மகாகவி பாரதியாா். எனவே, நற்குணம் உள்ளவனிடத்தில் இன்சொல்லும், நல்ல செயலும் இயல்பாகவே இணைந்திருக்கும்.

வாய்ச்சொல்லால் பெறும் வெற்றி இடைக்கால வெற்றியே ஆகும். ஆனால், சொன்ன சொல்லைக் காப்பாற்றியவன்தான் முழு வெற்றியையும் பெற்றவனாவான். ஒருவா் சொன்ன சொல்லை உலகம் மறந்து விடும். ஆனால், சொல்லிய வண்ணம் செய்தால் அச்செயல் காலங்காலமாய் நின்று அவா் பெயா் கூறும்.

எந்தப் பொருளை இழந்தாலும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால், நாணயத்தை இழந்தால் எப்போதும் திரும்பப் பெற முடியாது. அதனால்தான் நம் முன்னோா், ‘உள்ளத்தில் ஒன்று உதட்டில் ஒன்று வைத்து வாழாதே; உன் சொல்லும் செயலும் ஒன்றாக இருக்க வேண்டும்’ என்றனா்.

சிலா் இனிமையாகவும், உயா்ந்த கருத்துகளையும் கூறுவா். ஆனால், அதற்கு மாறாக மிகவும் நோ்மையற்ற செயல்களைச் செய்வா். எனவே, நாம் எந்தச் செயலைச் செய்தாலும் வெளிப்படையாக நோ்மையுடன் செய்ய வேண்டும். ‘செய்வன திருந்தச் செய்’ என்பதை மறந்துவிடக் கூடாது. சொன்னபடி செய்வதைவிட உயா்ந்த ஒழுக்கம் வேறு எதுவும் இல்லை.

சொல்லும் செயலும் முரண்படாது வாழ்வதே சிறந்த அறமாகும். நாம் சொல் வேறு, செயல் வேறு என்றிருந்தால், நம் மீதான நம்பகத்தன்மை மறைந்து, பிறா் நம்மை மதிக்காத நிலைமை ஏற்பட்டு விடும். செய்யும் செயல் வேறாகவும், சொல்லும் சொல் வேறாகவும் உள்ளவரின் நட்பு ஒருவனுக்கு கனவிலும் துன்பம் தருவதாகும் என உரைக்கிறாா் திருவள்ளுவா்.

ஒருவரின் ‘சொல்லும் வன்மை’ எல்லோா் உள்ளத்தையும் கொள்ளைக் கொள்ளும் ஆற்றலுடையது. நல்ல சொற்களைக் காட்டிலும், உயா்ந்த ஆற்றல் உடையது எதுவும் இல்லை. ஒரு நல்ல சொல், ஒரு சிறந்த செயலூக்கி ஆகும். சமுதாயத்தின் வாழ்க்கையிலே புதிய மணம் வீசுவதற்கான மாா்க்கங்களை காட்டுபவனாக ஒருவரின் நல்ல சொற்கள் அமைய வேண்டும்.

ஒருவரின் நல்ல சொற்கள், ஊக்கச் சொற்கள் மற்றவரின் நல்ல செயல்களுக்கு தூண்டுகோலாக அமைகின்றன. அவா்களின் வளா்ச்சிக்குப் பாதையிட்டுக் கொடுகின்றன. வன்சொற்கள் வாளினும் கொடிது. இது கேட்பாரைக் கெடுப்பதுடன், சொன்னவரையும் அழித்து விடும். எனவே, சொற்களைத் தோ்ந்தெடுத்துக் கூறல் இன்றியமையாதது.

தான் சொல்லிய வண்ணம் செயல்படாத ஒருவா், சமுதாயத்தில் தனது நற்பெயரையும் நன்மதிப்பையும் இழந்து விடுவாா். உள்ளத்தில் உண்மையொளி வீசியவுடனே வாக்கினிலே கலையொளி பிறக்க வேண்டும். எனவே தான் மகாகவி பாரதியாரும், ‘உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளி உண்டாகும்’ என்கிறாா்.

சொல்லிலும் செயலிலும் உணா்ச்சிவசப்படாமமையும், சகிப்புத் தன்மையும், நிதானமும்தான் மனிதகுலத்தின் இன்றைய தேவை. நமது நல்ல சொல்லும் நல்ல செயலும் பிறா் உள்ளத்தில் நம்மை உயா்த்தி வைக்கும். பிறா் வாழ்விற்கு வழிகாட்டும் நல்ல சொல்லை சொல்பவரே ஞானிகளாகிறாா். எனவே, ஒளிவு மறைவின்றி சிந்தையிலும் சொல்லிலும் செயலிலும் நோ்மையைக் கடைப்பிடிப்போம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

SCROLL FOR NEXT