விடுமுறை நாட்கள் அழகானவை; தொடர் விடுமுறை நாட்கள் பேரழகானவை. விடுமுறை நாள் என்பது, வழக்கமான பணிகளிலிருந்து நாம் சற்று ஓய்வெடுத்துக் கொள்வது. இந்த ஓய்வு அனைவருக்கும் தேவை. பரபரப்பான ஒரு ஆண்டுக்குப் பிறகு வரும் கோடை விடுமுறை ஒவ்வொருவருக்கும் முக்கியமானது! ஒரு வீட்டில் பிள்ளைகளுக்கு விடுமுறை என்றால், அது அனைவருக்கும் ஆசுவாசமாக இருக்கிறது.
இயந்திர வாகனங்களுக்கே அவ்வப்போது பழுது நீக்கும் சேவை தேவைப்படும்போது உயிருடன் வாழும் நாம் உயிர்ப்பாய் நடைபோட விடுமுறை காலங்கள் அவசியம் தேவை. வார விடுமுறை நாட்களில் வீட்டை சுத்தம் செய்வது போல, தொடர் விடுமுறை நாட்களில் நம் மனத்தை சுத்தம் செய்ய நேரம் ஒதுக்கலாம்.
விடுமுறை நாட்களை வெறுமனே தூங்கிக் கழித்து, சோம்பேறித்தனமாய் இருந்து விடாமல் அவற்றைப் பயனுள்ளதாக அமைத்துக் கொள்ள திட்டமிடல் அவசியம். விடுமுறை நாட்களில், நமக்கு திருப்தியும் அமைதியும் தரக்கூடிய செயல்களைச் செய்யும்போது நம் மகிழ்ச்சி இரட்டிப்பாகும்.
'நியூயார்க் ஸ்டேட் பல்கலைக்கழகம்' கடந்த ஒன்பது ஆண்டுகளாக இதய நோய் உள்ள 12 ஆயிரம் ஆண்களிடம் ஆய்வு மேற்கொண்டதில், ஆண்டு விடுமுறைக்கு எங்கும் செல்லாதவர்களுக்கு மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பு 32 சதவீதம் அதிகமாக உள்ளது என்று தெரிய வந்தது. பெண்களைப் பொறுத்தவரை, ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறை விடுமுறைக்குச் செல்லும் பெண்களை காட்டிலும் ஆறு வருடத்தில் ஒரே ஒரு முறை விடுமுறைக்காக சென்ற பெண்களுக்கு இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக அந்த ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
விடுமுறை நாட்களில் மேற்கொள்ளப்படும் பயணங்கள் மன அழுத்தத்தில் இருந்து விடுபட நமக்கு உதவும். பயணம் நமது மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் ஒரு காரணியாக இருக்கிறது. புதிய புதிய உணவுகள், வித்தியாசமான சூழல், பல்வேறு மொழிகள் என அனைத்தும் நமது மூளை சிறப்பாகச் செயல்பட உதவுகின்றன.
சங்க கால மக்கள், பொருள் சேர்க்க, போர் புரிய, கல்வி பயில, தூது செல்ல, ஒற்றறிய போன்ற பல காரணங்களுக்காக பயணம் சென்றார்கள். ஆனால் இன்று வாழ்க்கையின் பரபரப்பிலிருந்து விடுபட்டு மன அழுத்தங்களைக் குறைப்பதற்குப் பயணம் தேவைப்படுகிறது. அறிவியலும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியும் பெருகியதால் இன்று உலகம் நம் கைக்குள் சுருங்கி விட்டது. இது பல வேலைகளை எளிதாக்குகிறது என்றாலும், இதனால் நேரடி அனுபவம் கிடைப்பதில்லை.
பள்ளியில் பயிலும் காலத்தில், மற்ற மாணவிகளுடன் ஆசிரியர்கள் துணை வர செல்லும் சுற்றுலாக்கள் நம்மைப் பெரிதும் மகிழ்விப்பவை. எனது 12}ஆம் வகுப்பு விடுமுறையில் பள்ளியில் சுற்றுலா அழைத்துச் சென்றார்கள். செஞ்சிக் கோட்டை, திருவண்ணாமலை ஆலயம், சாத்தனூர் அணை என்று ஒரு நாள் பொழுதுபோக்கு மற்றும் வரலாற்றுச் சுற்றுலா அது.
தேசிங்கு ராஜனையும் அருணகிரிநாதரையும் பற்றி நான் அறிந்த நாள் அன்றுதான். அந்த சுற்றுலா நினைவுகள் என் மனத்தை விட்டு என்றும் நீங்காது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் பள்ளி மாணவர்களை அழைத்துக்கொண்டு சுற்றுலா செல்வது ஆசிரியர்களுக்குப் பெரும் சவாலாக மாறிவிட்டது. அப்படியே அழைத்துச் சென்றாலும் அவர்களைப் பாதுகாப்பாக அழைத்துச் சென்று வந்து, அவர்களின் பெற்றோரிடம் ஒப்படைக்கும் வரை ஆசிரியர்கள் உயிரை கையில் பிடித்தபடி இருக்க வேண்டியுள்ளது.
இன்றைய மாணவர்கள் அசட்டுத் துணிச்சலுடன் விபரீதச் செயல்களில் ஈடுபட்டு விடுகிறார்கள். சில நேரத்தில் அவை மிகப்பெரும் ஆபத்தை ஏற்படுத்திவிடுகின்றன. அதனாலேயே பெரும்பாலான ஆசிரியர்கள் சுற்றுலாவில் ஆர்வம் காட்டுவதில்லை. அதன் விளைவு, கல்வி சுற்றுலா பொலிவிழந்து போயிற்று. அதனால் பெற்றோர்களே தத்தம் பிள்ளைகளுக்கு பயண அனுபவங்களை ஏற்படுத்தித் தரவேண்டியதாயிற்று.
எனது மகள் பள்ளி மாணவியாக இருந்தபோது என்னிடம், "அம்மா, அரிசி எந்த மரத்தில் காய்க்கிறது' என்று கேட்டாள். அதிர்ச்சியடைந்த நான், அவளை வயல்வெளிக்கு அழைத்துச் சென்று நாத்து நடவு முதல் நெற்கதிர் அறுவடை வரை நேரில் காண்பித்தேன். அத்துடன் அரிசி ஆலைகளில் நெல்மணிகளை அரிசியாக்குவதையும் காண்பித்தேன்.
வயல்வெளிகளில் திரிந்து நேரடியாக அனைத்தையும் பார்த்ததனால் அரிசி பற்றிய அனைத்து விஷயங்களும் அவள் மனத்தில் ஆழப் பதிந்தது. அதுமட்டுமல்ல, ஒரு விதையை எப்படி மண்ணில் விதைப்பது, எப்படி செடி வளர்ப்பது, எப்படிப் பதியமிடுவது போன்றவற்றையெல்லாம் செய்முறை வழியே நன்கு புரிந்து கொண்டாள். ஒரு காணொலியால் கற்றுத்தர முடியாததை அனுபவம் அவளுக்குக் கற்றுத்தந்தது.
கோயில்களுக்குச் செல்லும்போதும் அங்கிருக்கும் ஆழ்வார்கள், நாயன்மார்கள் சந்நிதிகளில், அவர்கள் பாடிய பதிகங்களைப் பாடி அவர்களை நம் பிள்ளைகளுக்கு அடையாளம் காண்பிக்கும் பொழுது சுலபமாக அவர்கள் அவ்வடியவர்களை மனத்தில் பதிய வைத்துக் கொள்ள முடிகிறது. கைப்பேசியே கதியாகக் கிடக்கும் இன்றைய மாணவச் செல்வங்களை மடைமாற்ற பெற்றோர்களுடைய முயற்சி அவசியம்.
அமெரிக்காவில் விளம்பரத்துறையில் பணியாற்றும் ஜேம்ஸ் வெப் யங் என்பவர் தனது " ஏ டெக்னிக் பார் ப்ரொடியூஸ் ஐடியாஸ்' என்ற தனது புத்தகத்தில் "பயணங்களே படைப்பாற்றல் திறனை அதிகரிக்கிறது' என்கிறார். அவர், "நான் வகுப்பு எடுப்பதற்கான யோசனைகள் எங்கோ வானத்திலிருந்து விழுவதில்லை. பயணங்களில் நான் இருக்கும்போது தான் அவை தோன்றுகின்றன' என்கிறார்.
ஆங்கிலக் கவிஞர் வில்லியம் வேர்ட்ஸ்வொர்த் தனது விடுமுறை நாட்களை நடைப்பயணங்களிலேயே பெரும்பாலும் கழித்து இருக்கிறார். நிலப்பரப்பின் அழகுக்காக பிரபலமான இடங்களுக்கு அவர் நடந்து சென்றிருக்கிறார். அவற்றையெல்லாம் அழகாக உள்வாங்கி தம் கவிதைகளில் வெளிப்படுத்தி உலகப் புகழ் பெற்றார். புதிய சூழல் நமது மூளையை புத்துணர்வாக உணரச் செய்வதோடு புதிய சிந்தனைகள் முளைக்க தூண்டவும் செய்கிறது.
இவையெல்லாம் பெரிய பிரயத்தனம் எதுவும் இல்லாமல் வெகு இயல்பாக நடைபெறுவதால் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது. வெளிநாடுகளுக்கோ, வெளி மாநிலத்திற்கோ செல்வதுதான் பயணம் என்று இல்லை. கோடையில் திருவிழா நடைபெறும் நம் உறவினர் வீடுகளுக்குச் செல்வது கூட இன்பமான பயணமாக அமையும். தமிழகத்தின் பல பகுதிகளில் கோடையில் தேர்த் திருவிழா நடைபெறுகிறது. மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளும் நாகரிகத்தின் வெளிப்பாடு கோயில் திருவிழாக்கள்.
ஓர் ஊரின் பெருமைக்குரிய அடையாளங்களுள் ஒன்று கோயில். ஒரு தேர்த் திருவிழாவுக்குச் சென்றால் கூட, பல புதிய செய்திகளை பிள்ளைகள் அறிந்து கொள்கின்றனர். எந்த இணையதள விளையாட்டும் கொடுக்காத புது உற்சாகத்தை திருவிழா கொடுக்கும்.
அது மட்டுமல்ல, திருவிழா உறவையும் வளர்க்கிறது. இன்றைய உலகில் பாட்டி, தாத்தா இவர்களின் பெயரை கேட்டால் கூட பிள்ளைகள் திருதிருவென விழிக்கிறார்கள். பெயரை மறந்து விட்டேனே என்று சர்வ சாதாரணமாக சொல்கிறார்கள். மறக்கக் கூடியவர்களா அவர்கள்? உறவுகளைத் தெரிந்துகொள்ளாததே இதற்கு காரணம்.
இன்றைய பெற்றோர் பலர் கோடை விடுமுறை காலத்தில், பிள்ளைகளின் கல்வி ஆர்வத்தைத் தூண்டும் வகையில் எழுத்துப் பயிற்சி, கையெழுத்துப் பயிற்சி, அபாகஸ் பயிற்சி, புதிய மொழியைக் கற்றுக்கொள்ளவும் பேசவும் பயிற்சி போன்ற பல்வேறு கல்வி இணை செயல்பாடுகளுக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்கின்றனர். விடுமுறை காலங்களிலும் புத்தகத்தையும் பேனாவையும் தூக்கினால் நாளடைவில் அது பிள்ளைகளுக்கு படிப்பின் மீது வெறுப்பு உணர்ச்சியை உருவாக்கிவிடும்.
பள்ளி விடுமுறையில் உறவினர் வீடுகளுக்கு அழைத்துச் செல்வது அவர்களுக்கு புத்துணர்வை ஊட்டுவதாக அமையும். திருமணம், காதுகுத்து போன்ற எந்த சுப நிகழ்வுக்கும் இன்றைய கல்வி சூழ்நிலையால் பிள்ளைகளை அழைத்துச் செல்ல பெற்றோரால் இயலுவதில்லை. அதனால் இந்த விடுமுறை காலத்திலாவது ரத்த உறவுகள் மற்றும் உற்றார் உறவினர் இல்லங்களுக்குப் பிள்ளைகனை அழைத்துச் செல்லலாம். அல்லது அவர்களை சென்றுவர பணிக்கலாம்.
ஏராளமாக பணம் வைத்திருப்பவர்களை விட அதிக சொந்த பந்தங்களுடன் இனிமையான உறவு வைத்திருப்பவர்களே செல்வந்தர்கள். நமக்கு பக்கபலமாக நிறைய பேர் இருக்கிறார்கள் என்ற நினைப்பு நம்முடைய மனபலத்தை ஆயிரம் யானைகளின் வலிமைக்கு சமமாக உயர்த்திவிடும்.
சிலருக்கு குடும்ப சூழ்நிலையால் உறவினர் வீடுகளுக்குப் பிள்ளைகளை அழைத்துச் செல்ல முடியாத நிலை இருக்கலாம். அவர்கள் தம் பிள்ளைகளை குதிரை ஏற்றம், சிலம்பம், இசை, வாள் பயிற்சி, தையல், தட்டச்சு, ஓவியம் போன்ற வித்தியாசமான பயிற்சி மையங்களுக்கு அனுப்பி வைக்கலாம். ஏன், வீட்டிலிருந்து சமையல் செயவதற்குக்கூட பழக்கலாம்.
நாம் புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்ளும்போது நம் மனம் மகிழ்வடையும்; அறிவும் வளர்ச்சி அடையும்; மன அழுத்தத்தில் இருந்தும் நாம் விடுபட முடியும். விடுமுறை நாட்கள் நமக்குக் கிடைக்கும் வரங்கள். அதைத் திட்டமிட்டு சரியாகப் பயன்படுத்துவோம்.
கட்டுரையாளர்:
எழுத்தாளர்.