நடுப்பக்கக் கட்டுரைகள்

பாரதத்தின் பெருமை; பாருக்கே அணிகலன்!

3rd May 2023 04:59 AM |  சுவாமி விமூர்த்தானந்தர்

ADVERTISEMENT

 ஆங்கிலத்தில் "டைம் டெஸ்டட்' என்பார்கள். அதாவது காலத்தின் ஓட்டத்தில் காலாவதியாகி விடாமல் இருப்பது; காலத்தையும் கடந்து நிற்பது என்பது இதன் பொருள். காலத்தைக் கடந்து நிற்பது இயக்கங்களுக்கும் அமைப்புகளுக்கும் பொருந்தும். அந்த விதத்தில் ஆன்மிக, சமய, கல்வி, ஆரோக்கிய, சமுதாய, பண்பாட்டு, தேசியப் பணியில் தம்மை ஈடுபடுத்திக் கொண்டு ராமகிருஷ்ண மிஷன் செம்மையாக 125 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பது ஒரு வரலாற்றுச் சாதனை.
 சுவாமி விவேகானந்தரின் குருவான பகவான் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆன்மிக அனுபவங்களையும் அவரது பரந்துபட்ட சிந்தனைகளையும் நன்கு உணர்ந்தவர் சுவாமி விவேகானந்தர். அந்த அனுபவச் சிந்தனைகளோடு மக்களின் நலனுக்காக, தொண்டையும் துறவையும் இணைத்து சுவாமி விவேகானந்தர் 1897, மே ஒன்றாம் தேதி ராமகிருஷ்ண மிஷனைத் தொடங்கினார். ஒரு துறவி நிறுவி, மக்களுக்கு அருவியாக இறையருளைப் பொழிவது ராமகிருஷ்ண மிஷன் ஆகும்.
 பிறரது நன்மைக்காகப் பாடுபடும் உழைப்பாளர்கள் எங்கும் இருக்கிறார்கள். அவர்களின் முன்னேற்றத்திற்காக ராமகிருஷ்ண மிஷன் செயல்பட வேண்டும் என்பதற்காகவே தொழிலாளர் தினத்தன்று ராமகிருஷ்ண மிஷனை சுவாமிஜி தோற்றுவித்தார் போலும்!
 சிகாகோவில் நடைபெற்ற சர்வ சமயப் பேரவை பற்றி 1892 -ஆம் ஆண்டு ஆங்கில நாளிதழ் ஒன்றில் ஒரு விளம்பரம் வெளிவந்தது. அதனுடன் "ஹிந்து மதத்தைப் புனரமைப்பது சாத்தியமே இல்லை. அது உயிர் இல்லாமல் கிடக்கிறது. அதன் காலம் முடிந்துவிட்டது' என்றெல்லாம் வாத பிரதிவாதங்களும் வந்து கொண்டிருந்தன.
 சுவாமிஜி ராமகிருஷ்ண மிஷனை ஆரம்பிப்பதற்கு முன்பு உலக அரங்கில் 1893- இல் சனாதன ஹிந்து தர்மத்தின் மேன்மையைப் பறைசாற்றினார். "அமெரிக்க சகோதரிகளே, சகோதரர்களே' என விளித்து, உலக மக்களை ஆன்மிகத்தால் ஒருங்கிணைத்தார். அதன் பின் வேற்று நாட்டினர் மட்டுமல்ல, வேற்று மதத்தினர்கூட இந்தியாவை கெளரவமாகப் பார்க்க ஆரம்பித்தனர். நம் நாட்டு மக்கள் அப்போதுதான் சுய மதிப்பு பெற்றனர்.
 பின்னர் 1897 -இல் விவேகானந்தர் தாய்நாட்டிற்குத் திரும்பினார். நாடு இழந்து விட்டிருந்த மகோன்னதத்தை மீட்க பாடுபட்டார். இந்தியாவின் பிரச்னைகளைத் தமது பிரச்னையாகவே புரிந்து கொண்டார். அதோடு பாரதத்தின் மகிமையையும் தமதாகவே சுவாமிஜி உணர்ந்தார்.
 சுவாமிஜி அன்றைய இந்திய மக்கள் சிந்தனைகளில் இருந்த அவலத்தைக் கண்டார். புதையலுக்கு மேல் நின்ற ஏழைகளின் நிலையில் நம் மக்கள் இருந்ததைக் கண்டு வாடினார்; சாடினார்; வெகுண்டெழுந்தார்; முடிவில் நாட்டை நிமிர்த்தினார்.
 அதனால்தான் டாக்டர் அம்பேத்கர், "நம் நூற்றாண்டின் மாபெரும் இந்தியர் விவேகானந்தரே. அவரிலிருந்து நவ இந்தியா ஆரம்பிக்கிறது' என்று கூறினார்.
 சுவாமி விவேகானந்தர் புதிய இந்தியா குறைகள் இல்லாமல் நிறைகளோடு எவ்வாறு இருக்க வேண்டும் என்கிற தமது சிந்தனைகளை தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் ஆங்காங்கே தூவினார். சுவாமிஜி தரை மார்க்கமாகப் பயணித்த ஊர்களிலிருந்து அவர் உரைத்த சில உண்மைகளைக் காண்போம்.
 ராமேஸ்வரத்தில்: "விக்கிரகத்தில் மட்டுமே சிவபெருமானைக் காண்பவனின் வழிபாடு ஆரம்ப நிலையில் உள்ளது. ஒரே ஓர் ஏழைக்காயினும் அவனது ஜாதி இனம் மதம் போன்ற எதையும் பாராமல் அவனிடம் சிவபெருமானைக் கண்டு அவனுக்கு உதவி செய்து தொண்டாற்றுபவனிடம் சிவபெருமான் மிகவும் திருப்தி கொள்கிறார்'.
 இராமநாதபுரத்தில்: "இந்தியாவின் முதுகெலும்பு சமயமே. இந்தியாவின் உயிர்த்துடிப்பு சமயம், சமயம் மட்டுமே. அந்த உணர்வு இல்லாது போனால் எத்தனை சமூகச் சீர்திருத்தங்கள் இருந்தாலும் இந்த நாட்டு மக்கள் ஒவ்வொருவரின் தலை மீதும் குபேரனின் செல்வத்தைக் கொட்டிக் குவித்தாலும் இந்தியா அழிந்துவிடும்.'
 இன்று நம் இளைஞர்கள் மேலைநாட்டின் கொச்சை மொழிகளையும் அவர்கள் பழக்கங்களையும் காப்பி அடிக்கிறார்கள். ஆனால் மேலைநாட்டிலிருந்து நாம் கற்க வேண்டியவை பற்றி சுவாமிஜி தெளிவாகக் கூறியுள்ளார்:
 "உலகப் பொருட்களைப் பற்றிய அறிவு, நிறுவனங்களின் சக்தி, அதிகாரங்களைக் கையாளும் திறமை, நிறுவனங்களை உருவாக்குகிற திறமை, குறைந்த சக்தியைச் செலவழித்து அதிக பலன்களை அடையும் திறமை- இவற்றையெல்லாம் நாம் கற்க வேண்டும்.'
 125 வருடங்களுக்கு முன்பே சுவாமி விவேகானந்தர் ஒரு நிர்வாக மேலாண்மை நிபுணராகச் சிந்தித்தார். அவர் எதிர்பார்த்த இந்தப் பண்புகளை எல்லாம் ராமகிருஷ்ண மிஷன் தமது பள்ளிகள், கல்லூரிகள் மூலம் இளைஞர்களுக்குப் பயிற்சி அளித்து வருகிறது.
 கொள்ளை நோய்த்தொற்று காலத்தில் மட்டும் ராமகிருஷ்ண மிஷன் எட்டு லட்சம் குடும்பங்களுக்கு ரூபாய் 47 கோடி செலவில் உணவுப் பொருட்களை விநியோகம் செய்தது.
 பரமக்குடியில்: "அச்சமின்மை என்பதுதான் இப்போது உலகிற்கு இந்தியா போதிக்க வேண்டிய ஒரே மதம்' என்று முழங்கினார்.
 மதத்தின் அந்தச் சாராம்சத்தை இன்று நாம் உணர்ந்துள்ளதால்தான் சீனா போன்ற நாடுகள் நம்மைச் சீண்ட பயப்படுகின்றன.
 மானாமதுரையில்: "நாம் எல்லோரும் வீரர்களாக, உறுதி வாய்ந்த உள்ளம் படைத்தவர்களாக, முழுக்க முழுக்க உண்மையானவர்களாக இருந்து சக்கரம் சுழல தோள் கொடுத்தால், 25 ஆண்டுகளில் நமது எல்லா பிரச்னைகளும் தீர்ந்துவிடும்' என்றார். இவ்வாறு ஒரு நாட்டிற்கே தன்னம்பிக்கையை வாரி வழங்கினார் விவேகானந்தர். அதனால்தான் இன்று நாடு தன்னம்பிக்கை இந்தியாவாக (ஆத்மநிர்பர் பாரத்) மிளிர்கிறது.
 மதுரையில்: "உலகில் உள்ள வேறு எந்த நாட்டினரை விடவும் நாம் முற்போக்குடன் இருப்போம். அதே வேளையில் நாம் நமது பரம்பரைப் பண்பில் நம்பிக்கையுடனும் பற்றுடனும் மாறாமல் நிலைத்திருப்போம்.'
 கும்பகோணத்தில்: "எழுந்திருங்கள், விழித்திருங்கள், லட்சியத்தை அடையும் வரை நில்லாமல் செல்லுங்கள். அதிகமான சோம்பல், அளவை மீறிய பலவீனம், ஆழ்ந்த மனவசியம் இவை நம் இனத்தின் மீது படிந்துள்ளன. மன வசியத்திலிருந்து உங்களை விடுவித்துக் கொள்ளுங்கள்.
 ஒவ்வொருவருக்கும் அவர்களின் உண்மை இயல்பைப் போதியுங்கள். உறங்கும் ஆன்மாவை எழுப்புங்கள். அது எவ்வாறு விழித்தெழுகிறது என்பதைப் பாருங்கள். உறங்குகின்ற ஆன்மா மட்டும் விழித்தெழுந்து தன் உணர்வுடன் செயலில் ஈடுபடுமானால் சக்தி வரும், பெருமை வரும், நன்மை வரும், தூய்மை வரும். எவையெல்லாம் மேலானவையோ அவை அனைத்தும் வரும்.'
 இன்று சீர்திருத்தவாதிகள் என்ற போர்வையில் பல அமைப்புகள் செய்து வரும் குற்றத்தினை சுவாமிஜி சாடுகிறார். "பெரும்பாலான நமது நவீன சீர்திருத்த இயக்கங்கள் சிறிதும் சிந்திக்காமல் மேலை நாடுகளின் வேலை முறைகளை காப்பி அடிக்கின்றன. இது இந்தியாவிற்கு ஏற்றதல்ல.'
 "நமது நாடாகிய கப்பல் காலங்காலமாக நமக்கு எவ்வளவோ நன்மைகள் செய்தபடி பயணம் செய்து கொண்டிருக்கிறது. இன்று அதில் ஓர் ஓட்டை விழுந்து இருக்கலாம். இந்த நிலையில் ஓட்டையை அடைத்து தண்ணீர் உள்ளே செல்வதைத் தடுப்பதுதான் நம் ஒவ்வொருவரின் பணி" என்றார்.
 சென்னையில்: "முதலில் நமது இளைஞர்கள் வலிமை பெறட்டும். மத உணர்ச்சி அதற்குப் பின்னரே வரும். நீங்கள் கீதையைப் படிப்பதைவிட கால் பந்தாட்டம் ஆடுவதன் மூலம் சொர்க்கத்திற்கு மிக அருகில் செல்ல முடியும். நமது ஜீவரத்தம் ஆன்மிகம். அந்த ரத்தம் தூய்மையாக இருக்குமானால் அரசியல், சமுதாயம், பொருளாதாரக் குறைபாடுகள் எல்லாம் சீர் செய்யப்பட்டு விடும். ஏன் நாட்டின் வறுமைகூட தீர்க்கப்பட்டு விடும்.'
 நாட்டிற்கு எப்போது சுதந்திரம் கிடைக்கும் என்பதைக்கூட ஒரு திட்டமாக சுவாமிஜி 1897-ஆம் ஆண்டில் அறிவித்தார். "இனி வரும் ஐம்பது ஆண்டுகளுக்கு நமது ஆதார சுருதி இதுவே. ஈடு இணையற்ற நமது இந்திய தாயைத் தவிர மற்ற எல்லா தெய்வங்களும் நம் மனதிலிருந்து சிறிது காலம் மறைந்து விடட்டும்.'
 1897 உடன் 50 வருடங்களைச் சேர்த்து பாருங்கள். வருவது இந்தியச் சுதந்திர ஆண்டு மட்டுமல்ல, சுவாமிஜியின் தீர்க்கதரிசனத்தின் மீதான நமது நம்பிக்கையும்தான்.
 இவ்வாறு விவேகானந்தர் நாட்டை நிர்மாணிக்கும், தனிமனிதனை உருவாக்கும் கருத்துகளை நாடெங்கும் விதைத்துக் கொண்டே வந்தார். அதன் முத்தாய்ப்பாக, கொல்கத்தாவில் உள்ள பேலூர் மடத்தில் ராமகிருஷ்ண மிஷன் என்ற விருட்சத்திற்கான விதையை விதைத்தார்.
 இன்று அந்த ஆன்மிக மரம் தானும் வளர்ந்து கொண்டே நூற்றுக்கணக்கான கன்றுகளையும் ஆயிரக்கணக்கான விதைகளையும் உலகெங்கும் வளர்த்துக் கொண்டு வருகிறது.
 சுவாமிஜி நமது மக்களின் பலம், பலவீனங்களை எடுத்துரைத்தார். பலவீனங்களை நீக்கி நமது ஆன்மிகத்தின், பாரம்பரியத்தின், பண்பாட்டின், தேசத்தின் பலங்களை, வளங்களைத் தொடர்ச்சியாக மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் ஓர் ஆன்மிக ஸ்தாபனமாக ராமகிருஷ்ண மிஷனை உருவாக்கினார். அந்த மிஷனின் லட்சியமாக 'ஆத்மனோ மோக்ஷôர்த்தம் ஜகத் ஹிதாய ச' (நாமும் வீடுபேறு பெற்று, பிறரையும் முன்னேற்றுவது) என்பதை முன்வைத்தார்.
 125 ஆண்டுகளாக ராமகிருஷ்ண மிஷன் தேச சேவையில், கல்வி, ஆரோக்கியம், சமயம், பண்பாடு, ஆன்மிகம், மக்கள் சேவை போன்றவற்றில் தொடர்ந்து தொண்டாற்றி வருகிறது. 2021-22 -ஆம் ஆண்டில் மட்டும் மக்களின் தொண்டிற்காக 943 கோடி ரூபாயை ராமகிருஷ்ண மிஷன் செலவிட்டுள்ளது. இதனால் பல லட்ச மக்கள் பயனடைந்தனர்.
 பணமும், சமுதாயத்தின் கவனமும் இல்லாத ஒரு சில துறவிகளால் ராமகிருஷ்ண மடமும் மிஷனும் ஆரம்பிக்கப்பட்டன. அது இன்று பாரதத்தின் பெருமையாக, பாருக்கே ஒரு அணிகலனாக விளங்கி வருகிறது.
 ராமகிருஷ்ண மிஷன், ராமகிருஷ்ண மடத்துடன் இணைந்து 23 வெளிநாடுகளில் விரிவு படுத்தப்பட்டுள்ளன. தற்போது 310 கிளை மையங்கள் இயங்கி வருகின்றன. அவற்றுள் 213 மையங்கள் இந்தியாவிலும் 97 மையங்கள் பிற நாடுகளிலும் உள்ளன.
 சுமார் 1,782 துறவிகளும் பிரம்மச்சாரிகளும் தங்களது வாழ்க்கையை ராமகிருஷ்ண மடம் மற்றும் ராமகிருஷ்ண மிஷனுக்காக அர்ப்பணித்துச் சேவையாற்றி வருகிறார்கள். அவர்களோடு இணைந்து இந்த இயக்கத்தில் லட்சக்கணக்கான மாணவ - மாணவிகளும் பக்தர்களும் பங்கேற்று நாட்டு நலனில் தங்களது பங்கை வழங்கி வருகிறார்கள்.
 அதனால்தான் நமது பிரதமர் 'ஒரு குறையும் இல்லாத ஒரு ஸ்தாபனம். நான் மிகவும் போற்றும் ஒரு நிறுவனம்" என்று ராமகிருஷ்ண மிஷனைப் பற்றிக் கூறியுள்ளார்.
 
 கட்டுரையாளர்:
 தலைவர்,
 ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்.
 
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT