நடுப்பக்கக் கட்டுரைகள்

 அறிவை மக்களாட்சிப்படுத்துவோம்!

க. பழனித்துரை

 சமூகத்தை மாற்றுவதற்கும், மேம்படுத்துவதற்குமான மிகப்பெரிய ஆயுதம் அறிவே. அந்த ஆயுதத்தை முறையாகப் பயன்படுத்தத் தெரிந்து கொண்டால் அனைத்துத் தரப்பு மக்களும் மேம்படுவது சாத்தியமே. உலகில் இன்று பார்க்கும் மாற்றங்கள், முன்னேற்றங்கள் அனைத்தும் அறிவால் வந்தவையே. அதே நேரத்தில் நம் சமூகம் சந்திக்கும் பல பிரச்னைகளுக்கும் அறிவேதான் காரணம். எனவே அறிவு நன்மைகளையும் செய்யும் தீமைகளையும் விளைவிக்கும்.
 மானுட வரலாற்றில் ஒரு சில சமூகங்களை அறிவியலில், தொழில்நுட்பத்தில் தோய்ந்த சமூகம் என்று கூறுகின்றோம். அந்த சமூகங்கள் அறிவை தங்களின் வாழ்க்கைக்குப் பயன்படுத்துகின்றன. அறிவின் மூலம் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பங்களை முறையாகப் பயன்படுத்துகின்றன. அதன் விளைவாக அந்த சமூகங்கள் மேம்படுகின்றன. மற்ற சமூகங்களால் அறிவியலையும், தொழில்நுட்பத்தையும் வாழ்வின் மேம்பாட்டிற்கு பயன்படுத்த முயலவில்லை அல்லது இயலவில்லை. காரணம், அந்தச் சமூகங்கள் மாற்றத்தை ஏற்க மறுக்கின்றன.
 அறிவியலை, தொழில்நுட்பங்களைத் தங்கள் வாழ்க்கைக்கு பயன்படுத்தி மேம்படுத்திக் கொள்வதில் பிழை இல்லை. ஆனால் அதே தொழில்நுட்பத்தை அறிவியலை மற்ற மனிதர்களின் வாழ்வைப் பாழ்படுத்துவதற்கும், சுரண்டுவதற்கும் பயன்படுத்தினால் அது குற்றம் ஆகும். இதைத்தான் தனிமனிதர்களும், சமூகக் குழுக்களும், நாடுகளும் செய்து கொண்டுள்ளனர்.
 தங்கள் நாடு முன்னேற உலகைச் சுரண்டுவது என்ன நியாயம்? தன் சமூகம் மேம்பட மற்ற சமூகங்களைச் சுரண்டுவது எந்த வழியில் நியாயம்?
 தன் கட்சிக்காரர்கள் பிழைக்க பொதுமக்களைச் சுரண்டுவது எந்த விதத்தில் நியாயம்? மனிதர்கள் சுகமாக வாழ இயற்கையை அழிப்பதை எந்த வகையில் நியாயப்படுத்த முடியும்? இயற்கை அழிவதால் இயற்கையை அண்டி வாழும் உயிரினங்கள் அழிவது எந்த வகையில் நியாயமாகும்?
 மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசாங்கம், மக்களை அறியாமையில் வாழவைத்து அவர்களைச் சுரண்ட வழிவகை செய்வதை எப்படி நியாயப்படுத்த முடியும்? சமூகப் பார்வையற்று தனிமனித முன்னேற்றம் காண, சமூக நலன் காற்றில் பறக்கவிடப்படுவதை உலகம் முழுவதும் பார்த்து வருகின்றோம். இதற்கு முக்கியக் காரணமாக இருப்பது அறிவை தனி மனிதர்கள் மூலதனமாக்கிச் செயல்படுவதுதான்.
 அறிவு என்பது தொடர்ந்து ஆக்கம் பெறுவது, உயர்ந்து வருவது. அறிவு உயர உயர, அதைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை கூடினால்தான் ஒட்டுமொத்த சமூகமும் மேம்பாடு அடைய முடியும். ஆனால் இதற்கு எதிர்மறையாக அறிவியலும், தொழில்நுட்பமும் ஒரு குறிப்பிட்டவர்களின் கைக்குள் அடங்கி விடுகின்றன. இன்று அவை அதிகமாக உபயோகப்படுத்தப்படுவது, பொருள் உற்பத்திக்கும் அதனை சந்தைப்படுத்தி பணம் ஈட்டுவதற்குத்தான்.
 மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதுடன் அவை நின்றுவிட்டால் சுரண்டலுக்கு வழியில்லாமல் இருக்கும். மாறாக மக்களின் புலன்களைத் தூண்டி நுகர்வுக்கு ஆட்படுத்தி பொருள் விற்பனை செய்வது எந்த அறத்தைச் சார்ந்தது என்பதுதான் கேள்வி.
 அறிவை மக்களாட்சிப்படுத்தினாலன்றி அது எல்லாத் தரப்பு மக்களுக்கும் உதவப்போவது இல்லை. கல்வி என்பதுதான் அறிவை மக்களாட்சிப்படுத்தும் மிகப்பெரிய ஆயுதம். கல்வியால் உருவாக்கப்படும் அறிவு எளிதில் மக்களுக்குக் கிடைக்க வேண்டும். அப்படிக் கிடைக்க வேண்டும் என்றால் அது தாய்மொழியில் இருக்க வேண்டும்.
 அடுத்து எந்த அறிவும் எளிமைப்படுத்தப்படல் வேண்டும். எளிமைப்படுத்தாத எந்த அறிவும் மக்களிடம் சென்று சேராது. மக்களிடம் அறிவு சென்று சேர வேண்டும் என்றால் மக்களை அறிவுத் தேடலுக்குத் தயார் செய்ய வேண்டும். அதற்கு கல்வி என்பது கல்விச்சாலை கடந்து மக்கள் கல்வியாக செயல்பட வேண்டும். எந்த ஒரு சமூகம் அறிவைத் தேட ஆரம்பித்துவிட்டதோ அது தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும். ஆதலால்தான் "அறிவு அற்றம் காக்கும் கருவி' என்கிறார் வள்ளுவர்.
 உலகில் அறிவுருவாக்கமும் அதன் விளைவாக சமூகமாற்றமும் நிகழ்ந்த வண்ணம்தான் உள்ளது. ஆனால் இந்த மாற்றத்தின் வேகமும், அறிவுருவாக்கத்தின் வேகமும் அதிகமாக இருப்பதால், இவற்றை சமூகத்திற்கானதாக மாற்றுவதில் சிரமும் சிக்கலும் ஏற்படுகின்றன. உலகில் நடைபெறும் மாற்றத்தின் வேகத்திற்குத் தங்களைத் தயார் செய்து கொள்ளும் சமூகங்களே எல்லா வளங்களையும் பெற்றுக் கொண்டு சிறப்பாக வாழ்கின்றன.
 அதே நேரத்தில் இந்த வேகத்திற்கு ஈடு கொடுக்க இயலாத சமூகங்கள் பின்தங்குகின்றன. பின்தங்குவது மட்டுமல்ல, பல சமூகங்கள் தொடர்ந்து சுரண்டலுக்கும் உள்ளாகின்றன. ஆகையால்தான், சமூகத்தைக் கற்கும் சமூகமாக மாற்ற வேண்டும் என்று கூறுகின்றனர். கல்வி, கற்றல் இவையிரண்டும் எப்படி ஒரு சமூகத்தில் வடிவமைக்கப்பட்டு செயல்படுத்தப்படுகின்றனவோ அதற்கு ஏற்றவாறு அங்கு சமூக மாற்றங்கள் நிகழும்.
 கல்வி சமூகத்திற்கானதாக வடிவமைக்கப்பட்டால் அது சமூகப் பார்வையுடன் கூடிய மக்களை உருவாக்கித் தரும். அதற்கு கல்வியை பொதுமையாக்கிவிட வேண்டும். அதே போல் கல்விக்கு அரசு பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டும். கல்வி தனிமனித மேம்பாட்டுக்கானதாக வடிவமைக்கப்பட்டால் அது சமூக சிந்தனையற்ற சுயநலம் பேணும் சமூகத்தை உருவாக்கிக் கொடுத்துவிடும்.
 இந்தக் கல்வி அரசிடம் இருக்காது. தனிமனிதர் லாபம் ஈட்ட, தாங்களே மூலதனம் இட்டு லாபம் சம்பாதிக்கும் தொழில்போல் செயல்பட ஆரம்பித்துவிடும். உலகில் இந்த இரண்டையும் நாம் பார்த்து வருகிறோம். இன்றைய உலகில் கல்வி தனியார்மயப்படுத்தப்பட்டதன் விளைவு எல்லை இல்லா ஏற்றத் தாழ்வுகளை மனித சமூகத்தில் ஏற்படுத்திவிட்டது.
 அறிவை கல்வியாளர்கள் கல்விக்கூடத்தில்தான் உருவாக்குகின்றார்களா என்பது ஒரு மையக் கேள்வி. அறிவை சமூகம் உருவாக்காதா? அறிவை விவசாயிகள் உருவாக்க மாட்டார்களா? ஒரு நெசவாளி அறிவை உருவாக்க மாட்டாரா? இவர்கள் உருவாக்குவதெல்லாம் அறிவாகாதா?
 ஒரு நெசவாளி தன் நெசவில் நடத்திய ஆய்வின் மூலம் கண்டுபிடிப்பதை அவர் பட்டா போட்டு ஆவணப்படுத்தி அதில் பணம் சம்பாதிப்பதில்லை. நூலில், வண்ணத்தில் என பல்வேறு புது வடிவங்களை உருவாக்குகின்றார் ஒரு நெசவாளி. அவர் அவற்றைத் தன்னுடையது, என்றோ, அவற்றை உபயோகப்படுத்துவோர் தனக்குப் பணம் தரவேண்டும் என்றோ கூறுவதில்லை.
 ஆனால் ஆய்வகங்களில் உருவாக்கப்படும் அறிவுக்கு சொந்தம் கொண்டாடி நிலங்களை எப்படிப் பட்டாப் போட்டுக் கொள்கிறோமோ அதேபோல் போட்டுச் சம்பாதிக்கின்றனர். அறிவு என்றைக்கு வியாபாரப் பொருளாக்கப்பட்டதோ அன்றிலிருந்து சுரண்டி வாழும் சுகபோக வாழ்க்கையை எந்த அறமும் அற்று வாழப் பழகிக் கொண்டது ஒரு சமூகம். இந்தச் சமூகம்தான் அரசியலையும் வடிவமைக்கிறது. அந்தச் சமூகம்தான் சந்தையின் பிடியில் இருந்து அரசியலில் கோலோச்சுகின்றது.
 மக்களாட்சி இன்று தேர்தலாகவும், தேர்தலை சந்தைப்படுத்தி வெற்றி பெறுவதாகவும்தான் உள்ளது. வாக்கும், மக்கள் பிரதிநிதிகளும் சந்தைப்படுத்தப்பட்டபின் நம் மக்களாட்சியும் சந்தைக்குள் அடங்கிவிட்டது. பணமிருப்போர் ஆட்சிக்கு வரலாம். ஆட்சியையே பணம் இருந்தால் வாங்கலாம் என்ற நிலைக்கு வந்துவிட்டது.
 மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகளான, சமத்துவம், நேர்மை, நியாயம், ஒழுக்கம், மற்றவரை சமமாகப் பார்க்கும் பார்வை, மற்றவரை மதித்தல் என்ற அத்தனைக் கூறுகளையும் இந்தக் கல்விதான் மக்கள் சிந்தனைக்குள் செலுத்துவது. இந்த அறங்களைப் போதிக்கும் கல்வி இன்று அறமிழந்ததாக, பணம் ஈட்டும் உத்திகளைக் கற்றுக்கொடுக்கும் கருவியாக மாற்றப்பட்டுள்ளது என்பது மிகப்பெரிய சோகம். எனவே இதிலிருந்து மீள ஒரேவழி மக்களாட்சியை மக்களிடம் எடுத்துச் சென்று விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
 இன்று இருக்கும் சூழலை மாற்ற மக்களாட்சிக்கான ஒரு சமூகக் கல்வியை உருவாக்கி மக்களிடம் எடுத்துச் சென்று மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி தயார் செய்யவில்லை என்றால் மக்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாய் வாழவேண்டிய சூழல் வந்துவிடும். மக்களாட்சி சமத்துவத்தை எப்படிக் கொண்டு வருகிறது என்றால் கேள்வி கேட்பதன் மூலம்தான்.
 அரசு தவறு செய்யும்போது தட்டிக் கேட்டு மக்கள் போராடுவதைத்தான் மகாத்மா காந்தி சுயராஜ்யம் என்று விளக்குகின்றார். மக்களாட்சி மக்களுக்கு எளிதில் சேவை செய்யாது. மக்களாட்சி மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்றால் அதற்காக மக்கள் போராட வேண்டும். மக்களாட்சியின் பயன்களை அனுபவிக்கும் சமூகங்கள் அந்தப் பயன்களைப் போராட்டத்திற்குப் பிறகுதான் பெற்றுள்ளது.
 இன்று மக்களாட்சிக்கான அறிவையே நம்மால் மக்களாட்சிப்படுத்த இயலவில்லை. இதன் விளைவுதான் மக்களாட்சியில் இவ்வளவு வாய்ப்புக்களை சாசனங்கள் மூலமும், சட்டங்கள் மூலமும், திட்டங்கள் மூலமும் தந்திட்டபோதும், அவற்றை சாதாரண மக்களால் பயன்படுத்த இயலவில்லை.
 எனவே உண்மையான மக்களாட்சி என்ன என்பதை முதலில் நாம் பொதுமக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். அதற்கு இன்று எளிய வழி ஒன்று இருக்கிறது. கிராமங்களில் கிராமசபையில், நகரங்களில் பகுதி சபைகளில் மக்களாட்சி பற்றி பொதுக் கருத்தாளர்கள் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதே போல் கல்விக் கூடங்களில், கல்லூரிகளில் பல்கலைக்கழகங்களில் மக்களாட்சி பற்றிய விவாதங்களை மாணவர்கள் மத்தியில் நடத்திட வேண்டும்.
 ஊடகங்கள் தேர்தலை மட்டுமே மையப்படுத்தி விவாதிப்பதை விட்டு மக்களாட்சியின் அடிப்படைக் கூறுகள் பற்றி விவாதிக்க வேண்டும். மக்களாட்சிக்கான அடிப்படைக் கூறுகளை மக்களிடம் கொண்டு சென்று, மக்களாட்சியில் மக்களின் மேம்பாட்டிற்கும், சுதந்திரத்திற்கும், மரியாதைக்கும் எவ்வளவு பாதுகாப்பு இருக்கிறது என்பதை விளக்கிட வேண்டும்.
 உண்மையான மக்களாட்சியை நோக்கி நடைபோட ஒரு மக்கள் கல்வி இயக்கம் கட்ட வேண்டிய கட்டாயம் நமக்கு வந்து விட்டது. இதைச் செய்ய தவறினால் நாம் சந்தை ஜனநாயகத்தில் அரசு தரும் இனாம்களிலும், சந்தை தரும் நுகர்வுப் பொருள்களிலும் லயித்து வாழ்க்கையை பயனாளிப் பட்டாளமாகவும், சிந்தனையற்ற நுகர்வோராகவும் வாழ வேண்டியிருக்கும் என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
 
 கட்டுரையாளர்:
 பேராசிரியர் (ஓய்வு).
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளேடால் கழுத்தை அறுத்து கைதி தற்கொலை மிரட்டல்

சிறந்த குறும்படங்களுக்கான பாராட்டு விழா

முன்னாள் அமைச்சா் ராஜ் குமாா் செளகான் மீதான புகாா் குறித்து காங்கிரஸ் தலைமை முடிவெடுக்கும்

போா்க்கால அடிப்படையில் பணிகளை முடித்து குடிநீா் வழங்க உத்தரவு

சிலு.. சிலு..

SCROLL FOR NEXT