நடுப்பக்கக் கட்டுரைகள்

அறிவியலின் அடுத்த பாய்ச்சல்

இரா. மகாதேவன்

இன்று கணினியின் பரிணாமம் முடிவில்லா திசையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆம், செயற்கை நுண்ணறிவை (ஆர்டிஃபிஷியல் இன்டலிஜென்ஸ்) தொடர்ந்து அடுத்தகட்டமாக உறுப்பு நுண்ணறிவுக்கு (ஆர்கனாய்டு இன்டலிஜென்ஸ்) நகர்ந்துள்ளது கணினி துறை.

ஆர்கனாய்டுகள் என்பது ஸ்டெம் செல்களில் இருந்து பெறப்பட்ட சிறிய சுய'ஒழுங்கமைக்கப்பட்ட முப்பரிமாண திசு வளர்ப்பு ஆகும். இவை ஒரு முடியின் அகலத்தைவிட குறைவான அளவிலிருந்து 5 மி.மீ. வரை இருக்கும் என கூறப்படுகிறது.

உடலில் பல்வேறு திசுக்கள், உறுப்புகள் உள்ளதைப் போலவே, பல வகையான ஆர்கனாய்டுகளும் உள்ளன. இன்றுவரை ஆராய்ச்சியாளர்களால் மூளை, சிறுநீரகம், நுரையீரல், குடல், வயிறு, கல்லீரலை ஒத்த ஆர்கனாய்டுகளை உருவாக்க முடிந்துள்ளது. திசுக்களை வளர்ப்பதற்கான இந்த வழி, உறுப்புகள் எவ்வாறு உருவாகின்றன, வளர்கின்றன என்பதைக் குறித்த விரிவான பார்வையை விஞ்ஞானிகளுக்கு அளித்து வருகிறது.

மேலும், மனித வளர்ச்சி, நோய் பற்றிய புதிய நுண்ணறிவுகளை அவர்களுக்கு வழங்குவதோடு, இந்த மினி' உறுப்புகளுடன் மருந்துகள் எவ்வாறு தொடர்புகொள்கின்றன என்பதை அறிந்துகொள்ளும் வாய்ப்பை அளிக்கின்றன.

இந்த ஆர்கனாய்டுகளில் ஆயிரக்கணக்கான செல்களும் பல மூளை செல் வகைகளும் உள்ளன. ஆரம்பகால வளர்ச்சியின்போது மூளை எவ்வாறு உருவாகிறது என்பதைப் பற்றிய நுண்ணறிவுகளை மூளை ஆர்கனாய்டுகள் கொண்டுவரும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். 

இதுகுறித்து ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக ஆய்வுசெய்யப்பட்டு வந்தாலும், அது விஞ்ஞானிகளுக்கு புரியாத புதிராகவே உள்ளது. என்றாலும், மூளை எவ்வாறு உருவாகிறது என்பதைப் பற்றி நாம் நிறைய கற்றுக்கொள்ளப் போகிறோம் என்கின்றனர் விஞ்ஞானிகள். 

ஆர்கனாய்டுகளுடனான சாத்தியங்கள் முடிவற்றவை என்கின்றனர் அறிவியல் அறிஞர்கள். உதாரணமாக, குடல் செல்களை இன்சுலின் உற்பத்தி செய்யும் பீட்டா செல்களாக மாற்றுவதில் அற்புதமான முன்னேற்றங்களை அவர்கள் கண்டுள்ளனர். இது நீரிழிவு நோய்க்கான எளிய சிகிச்சைக்கு வழிவகுக்கும் என கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னை தளமாகக் கொண்ட கார்டிகல் ஆய்வக ஆராய்ச்சியாளர்கள், ஒரு சிப்'இல் வளர்ந்த மூளை செல்கள் பாங் என்ற விடியோ கேமை விரைவில் விளையாட கற்றுக்கொள்ள முடியும் என்பதை கடந்த ஆண்டு கண்டுபிடித்துள்ளனர். 

இதையடுத்து, செயற்கை உயிரியல் நுண்ணறிவு என்பதும், அதன்மூலம், மூளை உயிரணுக்களின் நெட்வொர்க்குகள் தங்கள் செயல்களின் விளைவுகளைப் பற்றிய மட்டுப்படுத்தப்பட்ட பின்னூட்டங்களுக்கு பதிலளிக்கும் வகையில், ஒரு குறிப்பிட்ட நோக்கத்தை நோக்கி தங்கள் செயல்பாட்டை சுயமாக ஒழுங்கமைக்க முடியும் என்பதும் தெரியவந்தது.

சர்வதேச விஞ்ஞானியான பிரட் ககன், "இப்போது மூளை ஆர்கனாய்டுகளால் இயக்கப்படும் அடுத்த தலைமுறை உயிரி கணினிகளை (பயோ கம்ப்யூட்டர்) உருவாக்க முடியும்' என்பதை முன்மொழிந்துள்ளார். இது சிலிக்கான் கணினிகளை விட சிறப்பாக செயல்படுவதோடு, அதிக ஆற்றல் கொண்டது என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

மினி மூளை என்று பிரபலமாக அறியப்படும் மூளை ஆர்கனாய்டுகள் ஸ்டெம் செல்களில் இருந்து பெட்ரி டிஷ்ஷில் உருவாக்கப்படும் நியூரான்களின் செயற்கையான சுய ஒருங்கிணைப்பு திரட்டுகள் ஆகும். 

ஆர்கனாய்டுகள் ஒன்றோடொன்று இணைக்கப்படலாம் என்றும், அவை வெளிப்புற உலகத்தைப் பற்றிய தகவல்களை வழங்கும் செயற்கை உணர்வு உறுப்புகளுடன்கூட இணைக்கப்படலாம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர். அதாவது, ஒருவகையான பார்வையை செயல்படுத்தக்கூடிய விழித்திரை ஆர்கனாய்டுகள் போன்றவை என்கின்றனர் அவர்கள்.

கடந்த ஜூன் 22 முதல் உலகின் மிக சக்தி வாய்ந்த சூப்பர் கம்ப்யூட்டராக இருக்கும் ஃபிரான்டியருடன் அவர்கள் தற்போது உருவாக வாய்ப்புள்ளதாகக் கருதப்படும் கற்பனையான பயோ கம்ப்யூட்டரை ஒப்பிடுகின்றனர். 

ஃபிரான்டியர் ஒரு வினாடிக்கு 1.102 குவாண்டில்லியன் செயலாக்கத் திறனை கொண்டது. (ஒரு குவாண்டில்லியன் ' 100 கோடி 100 கோடி, அதாவது 1'க்குப் பிறகு 18 பூஜ்ஜியங்கள். செக்ஸ்டில்லியன்' 1'க்குப் பிறகு 21 பூஜ்ஜியங்கள், சென்டில்லியன்' 1'க்குப் பிறகு 303 பூஜ்ஜியங்கள், சில்லியன்' எண்ணமுடியாத அளவிலான பெரிய எண்).

அறிவியல் ஆராய்ச்சி ' மேம்பாட்டுக்காகப் பயன்படுத்தப்படும் ஃபிரான்டியர் சூப்பர் கம்ப்யூட்டர் 600 மில்லியன் டாலர் மதிப்புடையது என்றும், தற்போதுள்ள மற்ற சூப்பர் கம்ப்யூட்டர்களைக் காட்டிலும் 10 மடங்கு செயல்வேகம் கொண்டது என்றும் கூறப்படுகிறது. 

இந்த கம்ப்யூட்டர் மனித மூளையுடன் ஒப்பிடத்தக்கது என்று கூறப்படும் நிலையில், இது செயல்பட 21 மெகாவாட் ஆற்றல் தேவைப்படுகிறது. ஆனால், மூளையின் நுகர்வு வெறும் 21 வாட் மட்டும்தான்.

செயற்கை உயிரியல் நுண்ணறிவு கணினிகளை உருவாக்குவதில் தொழில்நுட்பங்கள் கைகூடி வந்தாலும், நெறிமுறை கவலைகள் ஒருபுறம் எழுந்துள்ளது. குறிப்பாக, ஆர்கனாய்டுகள் நனவில் சில அம்சங்களை பெறலாம் என்றும், மேலும், வலி, துன்பத்தை அனுபவிக்கலாம் என்றும் கருதப்படுகிறது. 

ஆர்கனாய்டுகள் நனவின் சில அம்சங்களைப் பெறலாம் என்ற கவலை ஒருபுறம் உள்ள நிலையில், நனவு என்பது மூளையால் மட்டும் உருவாக்கப்படுவதில்லை என்றும், மாறாக மூளைக்கும் உடலுக்கும் இடையிலான ஒரு சிக்கலான தொடர்புகள் மூலம் உருவாக்கப்படுவதாகவும், இதனால், ஒரு ஆர்கனாய்டு, செயற்கை உணர்வு உறுப்புகளுடன் இணைக்கப்பட்டிருந்தாலும்கூட அது நனவான அனுபவங்கள் அல்லது உடல்வலியை உணரமுடியாது என்ற கருத்தும் நிலவுகிறது. 

எப்படியோ, ஆர்கனாய்டு சிப்'களால் உருவான கணினி பாங் கேமை கற்றுக்கொண்டு விளையாடி இருப்பதாக கூறப்படும் நிலையில், ஆர்கனாய்டு நுண்ணறிவால் இயங்கும் கணினிகளின் வரவு வெகுதொலைவில் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செந்தமிழ்க் கல்லூரியில் கவிதை நூல் அறிமுகம்

விருதுநகா்: 26 வேட்பாளா்களின் மனுக்கள் ஏற்பு

அரிசி ஆலை உரிமையாளா் வெட்டிக் கொலை

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: ஆங்கிலப் பாடத்தை 754 போ் எழுதவில்லை

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT