நடுப்பக்கக் கட்டுரைகள்

கடல் வளம் காப்போம்!

8th Jun 2023 02:58 AM |  நெல்லை சு. முத்து

ADVERTISEMENT

 உயிரிக்கோளத்தில் நமக்கான உணவு, மருந்து போன்ற அடிப்படைப்பொருள்களின் அமுதசுரபி, கடல் என்றால் அது மிகையில்லை. உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு புரதத்தின் முக்கிய ஆதாரம் கடல்.
 கடலடித் தாவரப் படிவங்களும், உயிரிப் படிவங்களும் சிறந்த மருத்துவ குணம் கொண்டவை. 1990-ஆம் ஆண்டுவாக்கில் "கடல் தரும் மருந்துகள்' குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. நாட்டின் பல்வேறு வேதியியல், மருந்தியல் தொழில்கூடங்கள் இதில் பங்கெடுத்தன.
 இவ்விதம் இந்தியக் கடல்களில் கண்டறியட்ட ஏறத்தாழ 650 கடல் மூலிகைகளில் இருந்து புற்றுநோய் உட்பட, நீரிழிவு நோய், வைரஸ் காய்ச்சல், ரத்தக் கொதிப்பு, அதிகக் கொலஸ்ட்ரால் போன்ற பல்வேறு உபாதைகளுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கபட்டு உள்ளன.
 நம் நாட்டில் 1981 ஜூலை மாதம் "கடல்வள மேம்பாட்டுத் துறை' உருவாக்கப்பட்டது. கடலாய்வு, கண்காணிப்பு, கடல்வள மேலாண்மை போன்ற பல்வேறு பணிகளில் நம்நாடு கூடுதல் கவனம் செலுத்திவருகிறது. இந்தியப் பெருங்கடலின் வடக்கு, மத்திய எல்லைகள் குறித்து தீவிரமாகச் சிந்தித்து வரையறுப்பதும் இதன் நோக்கம்.
 இத்தகைய முயற்சிகளுக்காக 1982-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் நடத்திய "கடல் மாநாட்டுச் சட்ட' அமைப்பின் கூட்டத்தில் "முன்னோடி ஆய்வு நாடு' என்ற சிறப்புத் தகுதி இந்தியாவிற்கு வழங்கப்பட்டது.
 தொடர்ந்து, 1982-ஆம் ஆண்டு அரசின் 15 அம்ச "கடல் கொள்கை அறிவிப்பு' வெளியானது. இந்திய கடல்பரப்பில் நமக்கே உரித்தான பொருளாதார மண்டலம் ஏறத்தாழ 22 லட்சம் சதுர கிலோ மீட்டர் ஆகும். இதனையே "உரிமைமிகு பொருளாதார மண்டலம்' என்கிறோம்.
 அதன்வழி கடல் உயிரி வளங்களைக் கண்டறிந்து அவற்றின் இருப்பிடங்களைப் படமாக வரைதல், வர்த்தக ரீதியில் அகழ்ந்து எடுக்கத் தகும் தாவரங்களின் பட்டியல் தயாரித்தல், ஆழ்கடல் கனிமங்கள் அளவைக் கணித்தல் போன்ற பல்வேறு பணிகள் அந்தக் கொள்கையின் உள்ளடக்களாகும்.
 பொதுவாக, குளிர்ந்த கடலடி நீரோட்டம் உயிரின உற்பத்திக்கு உகந்ததாகும். இந்த உயிரினங்களுக்குத் தேவையான ஆக்ஸிஜனில் 50%-ஐ கடல்தான் உற்பத்தி செய்கிறது. கடல்பரப்பில் மிதக்கும் "ஃபைட்டோ-பிளாங்டன்' முதலான நுண்தாவரங்கள், பாசி வகைகள் காற்றிலுள்ள கரியமில வாயுவினை உறிஞ்சி சூரிய வெளிச்சத்தில் ஒளிச்சேர்க்கை நடத்தி ஆக்சிஜனை வழங்குகின்றன. அதனால், கடலை நமது பூமிக்கோளின் நுரையீரல் எனலாம்.
 அது மட்டுமல்ல, 14-18 பாகை செல்ஷியஸ் வரையிலான கதகதப்பான கடலடி நீரோட்டத்தில் சில வகை மீன்கள் இனப்பெருக்கமும் செய்யும். இது பூமியின் பல்லுயிர் பெருக்கத்தின் தாயகமாகும்.
 பொதுவாக பிற உயிரினங்களைப் போலவே, மீனினங்கள் தங்கள் வாழ்க்கைச் சூழலுக்கு உகந்த தட்பவெப்பம், உணவுத்தேடல் போன்ற உள்ளுணர்வுகள் சார்ந்தும், குஞ்சு பொரிக்கத் தேவைப்படும் உப்புச் சூழல் தேடியும் இடம்பெயரும். இவ்விதம் வலசை போகும் மீன்கூட்டங்களைக்கூட செயற்கைக்கோள்களால் கவனிக்க முடியும்.
 சில மீன்களின் உடலில் இருந்து ஒருவகை எண்ணெய் சத்து கடல்பரப்பில் மெல்லிய படலமாகப் படர வாய்ப்பு உண்டு. எண்ணெய்ப் படலங்களை இனங்காண செயற்கைக்கோள்உணரிகள் உதவும். "டார்ப்பினிடே' என்னும் ஒரு வகை மீன்கள், தற்காப்புக்காகத் தம் தலைப்பகுதியில் உள்ள மின் திருக்கைகள் எனப்படும் தசைகளையே மின்தகடுகள் ஆக்கி, மின் அழுத்தக் கதிர்வீச்சினை எதிரிகள் மீது பாய்ச்சுமாம்.
 அத்துடன் நைல் ஆப்பிரிக்க வெப்ப மண்டல நன்னீர் நிலைகளில் பரவலாகக் காணப்படும் மின்கதிர்வீச்சு கொண்ட மின்கெளுத்தி மீன்கள் நம் நாட்டில் அரிதானவை.
 ஏதாயினும், இத்தகைய மீன்கள் வெளிப்படுத்தும் மின்கதிர்வீச்சினை செயற்கைக்கோள் உணரிகளால் கண்டறிந்து மீன்களின் வலசைப் பாதையைப் பின்பற்ற இயலும். அத்தகைய தகவல்கள் வர்த்தக ரீதியில் மீனவர்களுக்குப் பெரிதும் பயன்படும்.
 எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், பெட்ரோலியப் பொருட்கள் உற்பத்திக் கூடங்கள், கனரகத் தொழிற்சாலைகள், பல்வேறு வேதிமத் தொழிற்கூடங்கள் இவற்றிலிருந்து வெளியேற்றப்படும் வெப்பக் கழிவு போன்றவை கடலில் கலந்து கடலை மாசுபடுத்தும். வெப்பக் கழிவுநீர்ப் பெருக்கத்தினை செயற்கைக் கோள்களின் அகச்சிவப்பு வெப்ப உணரிகள் உதவியினால் அளந்தறியலாம்.
 கலங்கலான கரையோர கடல்நீர், நுண்மணல் கசடுகள் மிகுந்த வளைகுடா கடல்நீர் ஆகியவற்றைத் தேர்ந்தெடுத்த அலைநீளமுள்ள "ஒளியியல் கடலாய்வு' நுட்பத்தினால் கடலோரத் தூய்மையினை வேறுபடுத்திக் காண இயலும்.
 ஏராளமான நன்மைகள் இருந்தாலும், கடலுக்கு இப்போது மனித ஆதரவும் தேவை. பெரிய வகை மீன்கள் பெருமளவு குறைந்துவிட்டன. மேலும் 50% பவளப்பாறைகள் அழிக்கப்பட்டுவிட்டன. இயல்பாக புதுப்பிக்க இயலாத வகையில் நாம் கடலில் இருந்து அதிகமாக எடுத்துக்கொள்கிறோம். கடலுடன் ஒரு புதிய சமநிலையை உருவாக்க நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.
 அன்றாட வாழ்வில் பெருங்கடல்களின் முக்கியப் பங்கை நினைவூட்ட வேண்டும் அல்லவா? அந்த முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபை, பழங்குடியினத் தலைவர்கள், விஞ்ஞானிகள், தனியார் துறை நிர்வாகிகள், சமூக பிரபலங்கள், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்துறையினருடன் இணைந்து கடலுக்கு முதலிடம் அளித்திட வலியுறுத்தி வருகிறது.
 கடலடிப் படிவுகள், கடற்படுகை அரிப்பு, கடற்பவளத் திட்டுகள் முதலான நிலஅமைப்பினை மட்டுமன்றி, கடலுக்கு அடியில் மூழ்கிய நகரங்களைக் கண்டறியும் தொல்லாய்விலும் "பல்கதிர் அலைமாலை வரியோட்டி' (மல்டி-ஸ்பெக்ட்ரல் ஸ்கேனர்') உதவும்.
 இந்த ஆண்டு உலக பெருக்கடல் நாளின் கருப்பொருளாக "பூமி கடல்: மாறும் அலைகள்' என்பதையே ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. 2030-ஆம் ஆண்டுவாக்கில் கடல் சார்ந்த தொழில்களில் நான்கு கோடி மக்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று மதிப்பிடப்பட்டு உள்ளது. இது நமது பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமானது.
 கடலியல், வளிமண்டல ஆய்வுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட "ஓசன்சாட்' என்னும் புவி கண்காணிப்பு செயற்கைக்கோள்களின் வரிசையில் இந்தியா இதுவரை நான்கு செயற்கைக்கோள்கள் செலுத்தியுள்ளது.
 முதலாவது ஓசன்சாட் (26-05-1999), ஸ்காட்சாட்-1 (26-09-2016) ஆகிய இரண்டு செயற்கைக்கோள்களின் பணி நிறைவுற்றாலும், தொடர்ந்து ஓசன்சாட்-2 (23-09-2009), ஓசன்சாட்-3 (26-11-2022) ஆகிய இந்தியக் கடலாய்வுச் செயற்கைக்கோள்கள் இன்றும் இயங்கி வருகின்றன.
 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் 2023 மே 29 அன்று ஸ்ரீஹரிகோட்டாவில் சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து ஜிஎஸ்எல்வி-எஃப்12 என்கிற ஏவுகலன் மூலம் ஏறத்தாழ இரண்டே கால் டன் எடை கொண்ட என்விஎஸ்-01 என்கிற விண்கலனை விண்ணில் செலுத்தியது.
 "நாவிக்' எனப்படும் இந்தியப்பயண அமைப்புக் கூட்டமைப்புச் செயற்கைக்கோள் திட்டத்தில் ஒரு அம்சம் ஆகும்.
 எஸ்.பி.எஸ். (ஸ்டாண்டர்ட் பொசிஷன் சர்வீஸ்) எனப்படும் வகையில், இந்தியப் பரப்பில் நிலம், கடல், ஆகாயம் எங்கும் இயங்கும் ஊர்திகளைக் கண்காணிக்கும் சேவையும், ராணுவப் பாதுகாப்பு சார்ந்த வியூக சேவையும் முக்கிய இடப்பெறுகின்றன.
 வாகனங்களின் துல்லியமான இடத்தைப் பதிவிடும் அதி நவீன மின்காந்த அலைவரிசை பயன்படுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக, இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட "இரிடியம்' கதிரியக்க தனிமத்தினால் ஆன "நானோ' கடிகாரமும் இடம்பெறுகிறது. அதாவது ஒரு நொடிப்பொழுதில் 100 கோடியில் ஓர் கால அளவினையும் மிகத் துல்லியமாக பதிவிடும் காலக்கருவி.
 2023 மே 27 அன்று "எல்.வி.எம்-3' என்னும் அதி கனரக இந்திய ஏவுகலனால் ஐக்கிய அரசு நாட்டின் "ஒன்வெப்' என்னும் ஒரே இணைய வலைக் குழுமத்திற்கான 36 செயற்கைக்கோள்களை வடக்கு-தெற்காக 450 கிமீ உயர துருவச் சுற்றுவட்டப் பாதையில் கொண்டு சென்றது.
 செயற்கைக்கோள்களின் மோதலைத் தவிர்க்க, வரையறுக்கப்பட்ட நேர இடைவெளிகளுடன் அவற்றிற்கு உரிய தனித்தனிச் சுற்றுப்பாதைகளில் துல்லியமாக நிலைநிறுத்தியது.
 இது ஐக்கிய அரசினைத் தளமாகக் கொண்ட நிறுவனத்தின் தற்போதைய 582 செயற்கைக்கோள்களின் தொகுப்பை விரிவுபடுத்தியது. புவிநடுக்கோட்டில் இருந்து ஏறத்தாழ 87 பாகை சாய்மானத்தில் 12 சுற்றுவட்டப் பாதைகளில் ஒவ்வொரு பாதையிலும் 49 செயற்கைக்கோள்கள் வீதம் பறக்கவிடும் தொகுப்புத்திட்டம் அது.
 இந்திய விண்வெளித்துறையின் வணிகப் பிரிவான 'என்எஸ்ஐஎல்' ('நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிட்டட்), "ஒன்வெப்' நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி, மொத்தம் 72 செயற்கைக்கோள்கள் இரண்டு கட்டங்களாக ஏவப்பட்டுள்ளன. ஏற்கெனவே 36 செயற்கைக்கோள்களை உள்ளடக்கிய முதல் பயணம் 2022 அக்டோபர் 23, 2022 அன்று வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
 அதற்கும் முன்னதாக, 'என்எஸ்ஐஎல்', சிங்கப்பூருடன் செய்து கொண்ட ஓப்பதத்தின்பேரில் 2023 ஏப்ரல் 22 அன்று பி.எஸ்.எல்.வி.-சி-55 ஏவுகலனில் "டெலியோஸ்-2' முதன்மை செயற்கைக்கோளாகவும், "லுமிலைட்-4 'துணைப் பயணிச் செயற்கைக்கோளாகவும் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்டன.
 அவற்றுள் லூமிலைட், சிங்கப்பூரின் கடல்சார் பாதுகாப்பை அதிகரிப்பதையும், உலகளாவிய கப்பல் சமூகத்திற்கு பயனளிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
 
 இன்று (ஜூன் 8)
 உலக பெருங்கடல் நாள்.
 கட்டுரையாளர்:
 இஸ்ரோ விஞ்ஞானி (ஓய்வு).
 

ADVERTISEMENT
ADVERTISEMENT