நடுப்பக்கக் கட்டுரைகள்

நஞ்சு உண்பார் கள் உண்பவர்

8th Jun 2023 03:02 AM |  மா. இராமச்சந்திரன்

ADVERTISEMENT

 மது உடல்நலத்திற்குத் தீங்கு விளைவிக்கும் என்பது தெரிந்தும் மது குடிப்போர் எண்ணிக்கை பெருகிக்கொண்டுதான் இருக்கிறது. நாடெங்கிலும் உள்ள சாராயக்கடைகளில் அனுமதிக்கப்பட்ட மதுவகைகளின் விற்பனை அமோகமாக இருந்தும் ஆங்காங்கே கள்ளச்சாராயமும் கணிசமாக விற்பனையாகி உள்ளது. கள்ளச் சாராயம் குடித்து பல பேர் உயிரிழந்த அண்மை நிகழ்வு இதனைக் காட்டும். கள்ளச் சாராயமோ, விஷச்சாராயமோ எதுவோ ஒன்று மலிவாகி மனித உயிரைப் பலிவாங்குவது வேதனைக்குரியது.
 தமிழ்நாட்டில் 1971-ஆம் ஆண்டு வரை மதுவிலக்கு நடைமுறையில் இருந்தது. ஆனாலும் அப்போதும் சாராய நடமாட்டம் இருக்கத்தான் செய்தது. காவல்துறை எவ்வளவோ முயன்றும் சாராயம் காய்ச்சுவதையும் குடிப்பதையும் தடுக்கமுடியவில்லை. சாராயத்தை ஒழிப்பது அரசுக்குப் பெரும் சவாலாக இருந்தது. மதுவினால் மக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். உயிரிழப்புக் கூட நடைபெற்றது.
 இந்த நிலையில் ஆட்சிக்கு வந்தோர் சாராய வடிப்பைத் தடுக்கும் வகையில் கள்ளுக்கடைகளைத் திறந்தனர். அரசின் வருவாயை அதிகரிக்கும் நோக்கமும் அதில் இருந்தது. கள்ளுக்கடைகளின் மூலம் தனியார் அதிக லாபம் சம்பாதிப்பதைக் கண்டு அடுத்து வந்த அரசு அந்த லாபம் முழுவதும் அரசுக்குக் கிடைக்கும் வகையில் அரசே சொந்தமாக மதுக்கடைகளை நடத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்தது.
 அதற்காக 1983-ஆம் ஆண்டு தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் (டாஸ்மாக்) என்ற அமைப்பை உருவாக்கியது. தனியார் சாராய ஆலைகளில் தயாராகும் மதுவகைகளை வாங்கி விற்பனை செய்வதே இந்த வாணிபக் கழகத்தின் வேலை. அதற்காகத் தனியார் சாராய ஆலைகளுக்கு உரிமம் வழங்கப்பட்டது.
 கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் நோக்கில் மதுவிலக்கை நீக்கி, கள்ளுக்கடைகளும் "டாஸ்மாக்' திறந்த பின்னும் கள்ளச் சாராயம் புழக்கத்தில் உள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகத்தான் அண்மையில் விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நிகழ்ந்த உயிர்ப்பலிகள் உள்ளன.
 கள்ளச்சாராயம் உயிர்ப்பலி கொண்டதை அறிந்த அரசு அதிரடி நடவடிக்கையில் இறங்கியது. காவலர்களை முடுக்கிவிட்டது. அதன்விளைவாக 1,842 வழக்குகள் பதிவாகி, 1,558 பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டே நாளில் இத்தனை வழக்குகள் பதிவாகி, இத்தனைபேர் கைது செய்யப்பட்ட நடவடிக்கை மக்களிடையே ஆச்சரியத்தை உண்டாக்கியது.
 அதோடு இத்தனை நாளும் காவலர்களுக்குத் தெரிந்துதான் கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறதோ என்ற ஐயமும் ஏற்பட்டது. என்ன இருந்தாலும் கள்ளச்சாராயத்தைக் கண்டுபிடிக்க அரசு எடுத்த அசுர வேகம் பாராட்டற்குரியது.
 தமிழகம் முழுவதும் 19,028 லிட்டர் சாராயத்தைக் காவலர்கள் கைப்பற்றி உள்ளனர். 4,943 லிட்டர் ஊறல் அழிக்கப்பட்டுள்ளது. 16,44,93 பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுபோக, கடந்த ஆண்டில் மட்டும் 55,474 வழக்குகள் பதியப்பட்டு 55,173 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 4,534 பேர் பெண்கள்.
 பலர் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளனர். பல இருசக்கர வாகனங்களும் நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதலாகியுள்ளன. இது காவல்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு. இவையெல்;லாம் ஆண்டு முழுவதும் கள்ளச் சாராயம் ஆறாகப்பெருகி ஓடியதைத் தானே காட்டுகிறது.
 தெருவுக்குத் தெரு அரசின் மதுக்கடைகள் திறந்திருக்கும்போது மக்கள் எதற்காக கள்ளச்சாராயத்தைத் தேடிப்போகிறார்கள் என்பதை அரசு எண்ணிப்பார்க்க வேண்டும். போதை ஏற வேண்டும் என்பதற்காகத்தான் மதுவைக் குடிக்கிறார்கள்.
 இதில் பெண்களும் ஆணுக்குச் சளைத்தவர்கள் இல்லை. போதை தராத மதுவை அவர்கள் விரும்புவதில்லை. குடித்தவுடனே மூளை மழுங்கி, நிலை தடுமாறச் செய்யும் சரக்கே நல்ல சரக்கு என்பது அவர்களிடம் ஊறிப்போன நம்பிக்கை.
 கள்ளச்சாராயம் காய்ச்சுவோரும் அந்த வகையில் சாராயத்தை வடித்து எடுக்கின்றனர். குறைவாகக் குடித்தாலும் நிறைவான போதையைத் தருவதாக அத்தகைய சாராயம் உள்ளது. மேலும், மலிவாகவும் அருகிலேயும் கள்ளச்சாராயம் கிடைக்கிறது. இதனால் குடிமக்களுக்குக் கள்ளச்சாராயத்தின் மீது மோகம் அதிகரித்துள்ளது எனலாம்.
 போதைக்கு அடிமையானவர்கள் எது நல்லது, எது கெட்டது என்று பார்ப்பதில்லை. போதை எதில் உள்ளது என்றுதான் பார்க்கிறார்கள். அதனால் அவர்கள் போதை தரும் எந்த வேதிப்பொருளையும் குடிக்கத் தயாராக உள்ளனர். போதை ஏற வேண்டும் என்பதற்காகத் தண்ணீர் கலப்பதைக் கூடத் தவிர்க்கிறார்கள்.
 "எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி' என்பது போல சாராயத்தில் நல்லதுமில்லை, கெட்டதுமில்லை. கள்ளச்சாரயம் உடனே கொல்லும் கடைச்சாராயம் நாளடைவில் கொல்லும். எல்லாமே நாசம் செய்யும் நஞ்சுதான்.
 குடிக்கு அடிமையானவர்களைத் திருத்துவது கடினம். அவர்கள் எதைச் சொன்னாலும் கேட்கமாட்டார்கள். "நாளை முதல் குடிக்கமாட்டேன்' என்பார்கள். மறுநாள் காலையிலே கடைதேடிப்போவார்கள். இதுதான் உண்மை. கள் குடித்துக் களிக்கும் ஒருவனைக் காரணம் காட்டித் திருத்துதல் என்பது நீரினுள் மூழ்கிய ஒருவனை விளக்குத் தீ கொண்டு தேடுவதைப் போன்றதாகும் என்பது வள்ளுவர் வாக்கு. இதனைப் போன்றுதான் கள்ளச்சாராயம் குடித்துப் பழகியவரையும் திருத்துவது என்பது கடினமாக செயல்.
 மதுவிலக்கு அமலில் இருந்தபோது ஒழிக்க முடியாத கள்ளச்சாராயத்தையும், விஷச்சாராயத்தையும் மதுக்கடைகள் திறந்திருக்கும் இந்தக் காலத்தில் ஒழிப்பது என்பது அரசுக்குக் கடினமான ஒன்றுதான். குடிப்பவர்கள் மனம் மாறினால்தான் கள்ளச்சாராயம் மறையும். கடைச்சாராய விற்பனையும் குறையும். அதனால் நஞ்சான மது ஒழியும் நாளை எதிர்பார்த்திருப்போம்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT