நடுப்பக்கக் கட்டுரைகள்

மகாத்மா காந்தியும் முகமது அலி ஜின்னாவும்!

7th Jun 2023 03:40 AM |  முனைவர் அ. பிச்சை

ADVERTISEMENT

 அண்ணல் காந்தியடிகளையும் முகமது அலி ஜின்னாவையும் நீக்கிவிட்டு இந்திய வரலாற்றை எழுத முடியாது. இருவருக்கும் இடையே சில ஒற்றுமைகள் உண்டு; பல வேற்றுமைகளும் உண்டு.
 காந்தி ஓர் அறப்போர் வீரர். சத்தியம், அகிம்சை, சத்தியாக்கிரகம் - இவையே என் ஆயுதங்கள் என்றார். இவை எதிலும் நம்பிக்கை இல்லாதவர் ஜின்னா. தன்னை முன் நிறுத்தவேண்டும்; தன் செல்வாக்கை வளர்க்க வேண்டும்; தான் அதிகார பீடத்தில் அமர வேண்டும் என்ற எண்ணம் என்றும் எழுந்ததில்லை காந்திஜியின் உள்மனத்தில். ஆனால் எங்கும் எதிலும் தானே முன்னிலை வசிக்க வேண்டும்; முதன்மை இடம் பெற வேண்டும் என்பதில் முனைப்பாக இருந்தவர் ஜின்னா.
 வன்முறை ஆயுதத்தை கடைசி வரை கையில் எடுக்காதவர் காந்தி; நேரடி நடவடிக்கை தினம் (16.08.1946) மூலம் வன்முறையை வளர்த்தவர் ஜின்னா.இந்திய அரசியல் காந்திஜியை மட்டுமே மையப்படுத்தி சுற்றிவந்து கொண்டிருந்தது. காங்கிரஸில் ஆரம்பத்தில் ஆர்வத்துடன் செயல்பட்ட ஜின்னா.
 காங்கிரஸில் தொடர்ந்தால் தனக்கு இரண்டாவது, அல்லது மூன்றாவது இடம் தான் கிடைக்கும் என்பதை உணர்ந்தார். ஆகவே தான் முஸ்லீம் லீகில் சேர்ந்தார். ஹிந்து - முஸ்லிம் ஒற்றுமை பற்றி ஆரம்பத்தில் பேசிய அவர், எதிர்நிலை எடுத்தார். இருமதத்தினரும் இறுவேறு மாறுபட்ட பண்பாடு. கலாசாரம் உடையவர்கள். அவர்கள் இணைந்து செயல்பட முடியாது; ஆகவே இஸ்லாமியர்களுக்கு தனிநாடுதான் தீர்வு என்ற முழக்கத்தைக் கையில் எடுத்தார்.
 அண்ணல் காந்தி ஜின்னாவுக்கு எழுதும் கடிதத்தில் "அன்புமிகு காயித்-இ-ஆசம் (மக்கள் தலைவர்) அவர்களே அல்லது எனது அன்பு சகோதரரே (மை டியர் பிரதர்) என்று தான் எழுதினார். ஆனால் ஜின்னா, காந்திஜிக்கு அன்புக்குரிய காந்தி (டியர் மிஸ்டர் காந்தி) என்றே எழுதினார்.
 காந்தி பொதுக்கூட்டங்களில் தன் தாய்மொழியான "குஜராத்தி'யில் பேசினார்; அல்லது ஹிந்தியில் பேசினார்; "உருது'விலும் பேசினார். ஆங்கிலம் பேசுவதைத் தவிர்த்தார். ஆனால் ஜின்னா-வால் ஹிந்தி அல்லது உருதுவில் எளிதில் பேச இயலவில்லை; ஆங்கிலத்தில் அழகாகப் பேசினார். பிராந்திய மொழிகளில் பேசாததால், அடித்தட்டு மக்கள் அவர் பேச்சை விரும்பிக் கேட்பதில்லை.
 இங்கிலாந்தில் படிக்கும் போது, காந்தி கோட், சூட் அணிந்தாலும் அவை எளிமையானதாகவே இருந்தன. தென்னாப்பிரிக்காவிலிருந்து இந்தியா திரும்பி வந்தபோது, குஜராத்தி உடைக்கு மாறினார்.
 1921-இல் தமிழ்நாட்டுக்கு வருகை தந்தபோது, ஏழை விவசாயிகளைப் பார்த்து, தானும் எளிய உடைக்கு மாறினார். எளிமையின் திருவுருவாக இறுதி வரை வாழ்ந்தவர் காந்தி.
 ஜின்னா மேல்நாட்டு உடைகளை விரும்பி அணிந்தார். அவர் அணிந்த அழகிய ஆடைகள் அவரது தோற்றப்பொலிவைக் கூட்டியது. இவ்வாறு ஆடம்பரத்தின் அடையாளமாகத் திகழ்ந்தார் ஜின்னா.
 உணவு, உடை, வாழ்க்கை நெறிமுறையில் எங்கிருந்தாலும், ஒரு இந்தியனாகவே வாழ்ந்தார் காந்தி. ஆனால் அனைத்திலும் மேல்நாட்டுப் பாணியையே விரும்பினார் ஜின்னா. மாமிசம், மது, புகைபிடித்தல் ஆகியவற்றை முழுமையாகத் தவிர்த்து ஒதுக்கினார் காந்தி, அவற்றை விரும்பி, வழக்கமாக்கிக் கொண்டார் ஜின்னா.
 காந்திஜி இந்தியா திரும்பும் வரை, அவர்களுக்குள் எந்த சந்திப்பும் நடைபெறவில்லை. ஆனால் ஒருவரை ஒருவர் அறிந்தும் புரிந்தும் வைத்திருந்தார்கள். தென்னாப்பிரிக்காவில் காந்திஜி, அரசின் நிறவெறி எதிர்ப்புப் போராட்டத்தில் ஹிந்துக்களையும் முஸ்லிம்களையும் இணைத்துப் போராடியது ஜின்னாவின் மனதைத் தொட்டது. அதனை மனம் திறந்து பாராட்டவும் செய்தார்.
 நிறவெறி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்க ஜின்னாவை இங்கிலாந்திலிருந்து அழைக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை தனது இந்தியன் ஒப்பினியன் என்ற பத்திரிகையில் (1908) அண்ணல் காந்தி வெளியிட்டிருந்தார். அது சமயம் காந்திஜி ஜெனரல் ஸ்மட்ஸுடன் சமரசம் செய்து கொண்டுவிட்டார்.
 அதன் மூலம் தென்னாப்பிரிக்க வாழ் இஸ்லாமிய வணிகர்களுக்கு துரோகம் இழைத்து விட்டார் காந்தி என்ற குற்றச்சாட்டை ஒரு தந்தி மூலம் "ரிட்ச்' என்பருக்கு தெரிவித்திருந்தார் ஒரு தென்னாப்பிரிக்கா வாழ் இஸ்லாமிய இளைஞர். அத்தகவல் ஜின்னாவின் கவனத்துக்கு வந்தபோது "இது மிகவும் அபத்தம்; ஆதாரமற்றது' எனச்சாடினார்.
 இந்தியாவின் அவலங்களுக்கு சாதிப் பிரிவினைகளே காரணம் என்பதை இரு தலைவர்களும் உணர்ந்தே இருந்தார்கள். இருவரும் மதித்துப் போற்றிய தலைவர் கோபால கிருஷ்ண கோகலே. கோகலேயும் இருவர் மீதும் அன்பும், மரியாதையும் வைத்திருந்தார். 1915 ஜனவரியில் காந்திஜி இந்தியா திரும்பியபோது, மும்பையில் இயங்கி வந்த "குஜராஜ் சபை' ஒரு பாராட்டுக் கூட்டம் நடத்தியது.
 அதற்குத் தலைமை தாங்கிய ஜின்னா "காந்திஜியும் கஸ்தூர்பா-வும் இந்தியாவின் ஒப்பற்ற செல்வங்கள்; ஹிந்துக்களையும், இஸ்லாமியர்களையும் இணைத்து காந்திஜி போராட்டம் நடத்தியது, நம் வருங்கால அரசியலுக்கு நல் வழிகாட்டியாக அமையும்' எனப் புகழ்ந்துரைத்தார். காந்திஜி தனது ஏற்புரையில் "இக்கூட்டத்திற்கு ஒரு முஸ்லிம் சகோதரர் தலைமை தாங்கியது எனக்கு மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது' எனக் குறிப்பிட்டார்.
 அந்நியர் ஆட்சி அகற்றப்படவேண்டும் என்ற லட்சியத்தில் இருவரும் ஒன்றுபட்டிருந்தனர். காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்து, இருவரும் செயல்பட்டார்கள். இவ்வாறு ஆரம்பத்தில் இணைந்து செயல்பட்டவர்கள். காலப்போக்கில் அரசியல் எதிரிகளாக மாறியது புதிரானது.
 அன்பு, அகிம்சை, சத்தியாகிரகம் - இவற்றால் எதிரியின் மனதில் மாற்றம் கொண்டு வரமுடியும் என்று மனதார நம்பியவர் காந்திஜி. இவை எதிலும் நம்பிக்கை இல்லாதவர் ஜின்னா.
 "ஒன்றுபட்ட இந்தியாவே என் லட்சியம்; பிரிவினை என்பது என் பிணத்தின் மீதுதான் நிகழும்' என்றார் காந்திஜி. இறுதியில் சுதந்திரம் வந்தபோது, தன் நம்பிக்கைக்குரிய தளபதிகளான நேரு, படேல், ராஜேந்திர பிரசாத், கிருபளானி ஆகியோரும், காங்கிரசின் பெரும்பான்மையினரும். ஏன், ஒட்டுமொத்த இந்திய மக்களும் "பிரிவினையை' ஏற்க முன் வந்தபோது, தன் கருத்தைத் திணிக்கும் சர்வாதிகாரியாக மாற விரும்பவில்லை; பெரும்பான்மையினர் கருத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்காமல் ஒதுங்கி நின்றார் காந்தி.
 சுதந்திர தினக்கொண்டாட்டங்களிலும் பங்கேற்பதைத் தவிர்த்தார் காந்தி. சுதந்திர தின வாழ்த்துச் செய்தி தருவதற்கும் மறுத்தார். "சுதந்திர சேனை வெற்றி பெற்றுவிட்டது என்பது உண்மைதான். அச்சேனை தன் தளபதியை கீழே தள்ளிவிட்டதே' எனச் சொல்லி வருந்தினார். சுதந்திர தினத்தன்று உண்ணா நோன்பு மேற்கொண்டார்; ராட்டையில் நூல் நூற்றார்; பிரார்த்தனையில் ஈடுப்பட்டார்; என் மக்களுக்கு நல்வழிகாட்டு என்று இறைவனை வேண்டினார்.
 பிரிவினையின் காரணமாக ஏற்பட்ட கலவரப் பகுதிகளுக்கு காலில் செருப்பில்லாமல் கால்கடுக்க நடந்தார். அமைதியை நிலைநாட்ட முயன்றார். "எனக்குப் பாதுகாப்பு வேண்டாம்; இஸ்லாமிய சகோதரர்களுக்கு உரிய பாதுகாப்பு தாருங்கள்' என மக்களை வேண்டினார். "இறைவா! என் மக்கள் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு மாள்வதையும், ரத்த ஆறு ஓடுவதையும் பார்ப்பதற்கா என்னை இன்னும் விட்டு வைத்திருக்கிறாய்'என்று இறைவனிடம் முறையிட்டார்.
 காந்திஜியின் எவரும், எப்போதும் தன்னிடம் வரவும், பேசவும் அனுமதித்தார். எந்நாளும் ஒரு போதகராகவே இருந்தார். தொடர்ந்து ஆக்கபூர்வப் பணிகளிலும் ஈடுபட்டு வந்தார்.
 ஜின்னா தனிமையை விரும்பினார்; தன்னையே நம்பினார்; அடுத்தவர் எவரையும் எளிதில் நம்பமாட்டார். மனம் திறந்து மற்றவர்களிடம் கருத்துப்பரிமாற்றம் செய்வதைத் தவிர்த்தார். அவர் தனது திட்டங்களை ரகசியமாகவே வைத்திருந்தார். பாகிஸ்தான் பிரிவினை கோரிக்கையை முஸ்லிம்களுக்கு அதிகபட்ச அதிகாரம் பெறுவதற்கான ஓர் ஆயுதமாகவே அவர் பயன்படுத்தினார் என்பது அவரது வரலாற்று ஆசிரியரின் கணிப்பு.
 மக்கள் நலனை முன்னிறுத்தியே தனது போராட்டங்களை நடத்தினார் காந்திஜி. தனது வாழ்நாளில் தென்னாப்பிரிக்காவில் 249 நாட்கள், இந்தியாவில் 2,089 நாட்கள் என மொத்தம் 2,338 நாட்கள் சிறையில் துன்பங்களை ஏற்றார்.
 ஜின்னா தனது வாழ்நாளில் ஒருமுறை கூட சிறை சென்றதில்லை; சிறை நிரப்பும் போராட்டங்களில் அவருக்கு நம்பிக்கை இல்லை. கொடி பிடிப்பதும், கோஷம் போடுவதும் அவர் அறியாதவை. மேடையில் முழங்குவது, பத்திரிகைகளில் எழுதுவது, நேருக்கு நேர் எதிரிகளைத் திணற அடிப்பது -இவையே அவர் கடைப்பிடித்த
 அரசியல்.
 தன் உயிரைக் கொடுத்தாவது, ஒன்றுபட்ட இந்தியாவைக் காணவேண்டும் என்ற காந்தியின் உயர்ந்த லட்சியம் நிறைவேறாத கனவாகிப் போனது. மதத்தின் அடிப்படையில் பாகிஸ்தான் உருவான போதிலும், அது சமயச் சார்பில்லாத நாடாக, இந்தியாவின் சகோதர நாடாக விளங்க வேண்டும் என்று விரும்பிய ஜின்னாவின் ஆசையும் நிறைவேறாமல் போனது.
 இந்தியாவின் இருபெரும் தலைவர்களும், தங்கள் வாழ்வின் இறுதிக் கட்டத்தில் மகிழ்ச்சியாக இல்லை என்பதைவிட, துயரக் கடலில் மூழ்கிக் கிடந்தார்கள் என்று கூறுவதே சரி. ஒருதாய் வயிற்றுப் பிள்ளைகளான ஹிந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒருவரை ஒருவர் தாக்கியும், அடித்தும், இரத்த ஆறு ஓடுவதைக் கண்டு காந்தி வருந்தினார்; அதனைத் தடுத்த நிறுத்த முயன்றார்.
 இந்தியாவை விட்டுப் புறப்படும்போது, தான் பிறந்து வளர்ந்த மண்ணை விட்டு வெளியேறுகிறோமே என்ற ஏக்கப் பெரு மூச்சுவிட்டார் ஜின்னா. பம்பாய் விமான நிலையத்தில் கூடியிருந்த முஸ்லீம்கள் "எங்களை இப்படி ஆதரவற்ற நிலையில் விட்டுச் செல்லுகிறீர்களே! எங்களுக்கு நீங்கள் சொல்லும் ஆலோசனை என்ன' எனக் கேட்டபோது "பி லாயல் சிட்டிசன்ஸ் ஆஃப் இண்டியா' (இந்தியாவின் விசுவாசமுள்ள குடிமக்களாக இருங்கள்) என்றே சொன்னார் ஜின்னா.
 இந்தியாவில் ஹிந்து மத வெறியர்கள் அண்ணல் காந்தியை "முகமது காந்தி' எனக் குறைசொல்லித் தூற்றத் துணிந்தார்கள். பாகிஸ்தானில் ஜின்னாவை இஸ்லாமியர்கள் "மதத்துரோகி' எனத் தூற்றினார்கள்.
 அண்ணல் காந்தியை கொலை செய்வதற்கு ஒன்பது முறை முயற்சி செய்யப்பட்டது. ஒன்பதாவது முறைதான் கொடியவன் கோட்சேயின் குண்டுக்கு 30.1.1948 அன்று பலியானார் அண்ணல்.
 காந்திஜி ஹிந்து மதவெறியனால் சுட்டுக்கொல்லப்பட்ட செய்தி கேட்டு, ஜின்னா கண்ணீர் வடித்தார். "இஸ்லாமியர்களின் உண்மையான பாதுகாவலரான காந்தி மறைந்துவிட்டாரே' எனக்கூறி வருந்தினார் ஜின்னா. பாகிஸ்தானில் முல்லாக்களும், பிற்போக்குவாதிகளும் அவர் விருப்பம்போல் செயல்பட முடியாதபடி தடுத்தார்கள்.
 சில ஆண்டுகளில் ஜின்னா, காசநோயாலும் நுரையீரல் புற்றநோயாலும் பாதிக்கப்பட்டு, படுத்த படுக்கை ஆனார். ஆனால் அந்நாட்டு பிரதமரோ (லியாகத் அலி கான்) பிற அமைச்சர்களோ அவரைப் பார்த்து நலம் விசாரிக்கக்கூட வரவில்லை. காந்திஜியின் மரணமும், தேசப் பிரிவினையும், வழி நடத்த நல்ல தலைவர் எவரும் இல்லையே என்ற கவலையும் ஜின்னாவின் முடிவை விரைபடுத்தியது.
 "பாகிஸ்தான் பெற்றதன் மூலம் நான் பெரும் தவறு செய்துவிட்டேன்' என்பதே ஜின்னா பேசிய கடைசி வார்த்தைகள். இறுதியாக 1948-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11-ஆம் தேதி இரவு 10.20 மணிக்கு இந்த உலகிலிருந்து விடைபெற்றார் ஜின்னா.
 இருவரும் மறுபிறவி எடுத்து வந்து தங்களது நாடு எப்படி உள்ளது என்று பார்க்க நேரிட்டால் தாங்கள் கனவு கண்ட தேசம் இதுவல்லவே! இருநாடுகளும் சகோதர நாடுகளாக இல்லை என்பது மட்டுமல்ல; எதிரி நாடுகளாக உள்ளனவே.
 அன்பு, அரவணைப்பு இல்லாவிட்டாலும் பரவாயில்லை; பகையும் அவநம்பிக்கையும் அல்லவா இருபக்கமும் நிலவுகின்றன; மத நல்லிணக்கம் இல்லை என்றாலும், மத மோதல்கள் அல்லவா தலைதூக்கி நிற்கின்றன என்று துயரத்தில் மூழ்கிப் போவார்கள் என்பது உறுதி.
 
 கட்டுரையாளர்:
 காந்தியவாதி.
 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT