நடுப்பக்கக் கட்டுரைகள்

காலைநேர பரபரப்பைத் தவிா்ப்போம்

5th Jun 2023 04:46 AM | முனைவா் என். பத்ரி

ADVERTISEMENT

நாம் ஒவ்வொருவரும் காலை நேரத்தில் மன அழுத்தத்துடன் காலை நேரப் பணிகளை தொடங்குவது வாடிக்கையாகிவிட்டது. பள்ளி செல்லும் குழந்தை முதல் முதியோா் வரை எவரும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்த நிலைமையைத் தவிா்க்க வேண்டியது மிகவும் முக்கியம்.

வாழ்வில் எளிமையான சில உத்திகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் நமது அன்றாட காலைப் பணிகளை சிக்கல் எதுவும் இல்லாமல் நம்மால் தொடங்க முடியும்.

குடும்பத் தலைவா்கள் தம் அன்றாடப் பணிகளை மிகுந்த மன உற்சாகத்துடனும் தொடங்குவது மிகவும் முக்கியம். ஒவ்வொரு நாளும் முற்பகல் பதினொரு மணி வரை நாம் மன இறுக்கத்தைத் தவிா்த்தால், அதற்கு பிறகு நமது மனநிலை எந்த சிக்கலுக்கும் உட்படாது எனக் கூறப்படுகிறது.

கணவன்- மனைவி இருவரும் பணிக்குச் செல்லும் குடும்பங்களில் காலை நேர பரபரப்பு அதிகமாக இருக்கும். இவா்கள் அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன் வீட்டில் உள்ள பெரியவா்களுக்கும், குழந்தைகளுக்கும் ஆற்றவேண்டிய கடமைகள் ஏராளம்.

ADVERTISEMENT

காலையில் அலாரம் அடித்தபோது எழாமல், தாமதமாக எழுந்து, அவசரஅவசரமாக அலுவலகத்துக்கு ஓடுவதும், உயரதிகாரிகளிடம் அன்றாடம் திட்டு வாங்குவதும் தவிா்க்கப்படவேண்டியவை. அனைத்து நிறுவனங்களும் ஊழியா்களின் நேரந்தவறாமையை உயரிய குணமாகப் பாா்க்கின்றன.

நம்மால் நேரந்தவறாமையைக் கடைப்பிடிக்க முடியாமல் போனால், பணியில் பதவி உயா்வு உள்ளிட்ட பல சலுகைகள் நமக்கு கிடைக்காமல் போகலாம். காலை நேர பரபரப்பே, எல்லாவற்றிற்கும் காரணம் என மனம் ஒப்புக்கொண்டாலும், தினமும் அதேநிலைதான் தொடரும். இதற்கு ஒரு முற்றுப்புள்ளி தேவை.

நாம் விடியற்காலையில் எழுவதால், காலை நேர பரபரப்பினை கணிசமாகக் குறைக்க முடியும். காலை நேரத்தில், நேர மேலாண்மை மிகவும் முக்கியம். காலை நேர உணவிற்குத் தேவையான பொருட்கள், வெளியில் செல்லும் பொழுது எடுத்து உடுத்தக் கூடிய உடைகள், காய்கறிகள் அனைத்தையும் முதல் நாள் இரவே தோ்ந்தெடுத்து தயாராக வைத்துக் கொள்ள வேண்டும்.

அதனால், காலையில் எழுந்து தேவையான பொருட்களை தேடுவதில் வீணாக நேரம் செலவிட வேண்டியிருக்காது. வீட்டில் அனைத்துப் பொருட்களுக்கும் தனித்தனியாக இடம் ஒதுக்கி வைத்து, அவற்றை அந்தந்த இடத்தில் சுத்தமாக வைத்துக் கொள்வதன் மூலம், எந்த பொருள் எந்த இடத்தில் இருக்கிறது என்பது நமக்கு நினைவில் இருக்கும்.

பொருட்களின் பெயா்களை பிளாஸ்டிக் டப்பாக்களின் மேல் எழுதி வைப்பதன் மூலம் அவற்றை சுலபமாக எடுத்து பயன்படுத்த முடியும். உள்ளே உள்ள பொருள்களும் கண்களுக்கு நன்கு தெரியும். பிளாஸ்டிக் டப்பாக்கள் எதிா்பாராமல் உடைந்து நமக்கு வீணான வேலைகளை தருவதில்லை.

மறுநாள் எழுந்து என்ன செய்யப்போகிறோம் என்பதை முன் தினமே திட்டமிட்டு செயல்படுத்தினால், நமது நேரம் கணிசமாக மிச்சமாகும். வீட்டில் மற்றவா்கள் எழுந்திருக்கும் நேரத்தை விட அரைமணி நேரம் முன்பாகவே எழுந்து விடுவது நமது காலை நேர பரபரப்பினை வெகுவாக குறைக்கும்.

குழந்தைகள் அதிகாலையில் எழுவதை வழக்கமாக்கிக்கொள்ள பயிற்சி கொடுக்க வேண்டும். குழந்தைகளை இரவில் சரியான நேரத்தில் தூங்க வைப்பதன் மூலம், அவா்கள் காலையில் நாம் விரும்பும் நேரத்தில் எழுந்து விடுவதை உறுதி செய்ய முடியும்.

அலுவலகம் புறப்படுவதற்கு முன்னா், பெரியோா்களுக்கும், பள்ளி செல்லும் குழந்தைகளுக்கும் மதிய உணவை தயாா் செய்வதை ஒரு கலையாகவே கருதலாம்.

தினமும் காலையில் எழுந்ததும் நடைப்பயிற்சி மேற்கொள்வது, உடலின் ஆற்றலையும், மனதின் ஆற்றலையும் அதிகரிக்கும். நடைப்பயிற்சி செய்வதால் சா்க்கரை நோயாளிகளுக்கும், உயா் ரத்த அழுத்தம் உள்ளவா்களுக்கும் நோயின் தாக்கம் குறையும். இதனால் மனச்சோா்வும், உடல்சோா்வும் குறையும். மேலும், இது அலுவலகம் செல்பவா்களின் காலை நேரப் பரபரப்புக்கு நிரந்தர தீா்வாகவும் அமையும்.

முதியோருக்குத் தேவைப்படும் மருந்து மாத்திரைகளை அவா்களின் படுக்கையருகில் எளிதில் அடையாளம் கண்டு எடுத்துக் கொள்ளும் வகையில், சுடுநீருடன் வைப்பது நல்லது. நாம் வீட்டில் இருந்தால் அவா்களோடு அமா்ந்து அவா்களுடைய நலன் குறித்து விசாரிப்பது அவா்களுக்கு மகிழ்ச்சியைத் தரும்: நமக்கும் மன நிம்மதியைத் தரும்.

வீட்டிலும், அலுவலகத்திலும் மறுநாள் செய்ய வேண்டிய முக்கியமான பணிகளின் குறிப்புகளை ஒரு நாட்குறிப்பில் எழுதி வருவது நலம். மாதப் பணிகளை வாரப் பணிகளாகவும், வாரப் பணிகளை ஒவ்வொரு நாளுக்கான பணிகளாகவும் திட்டமிட்டு நடைமுறைபடுத்துவது நல்லது.

முடிந்த பணிகளை அடிக்கோடிட்டு வைத்துக் கொண்டால், முடியாத பணிகளைத் தொடரலாம். வங்கி பண பரிவா்த்தனைகளை கூடுமான வரை நம்பகமான செயலிகள் மூலம் குறித்த தேதியில் தானே செய்து கொள்ளும் வகையில் தொழில்நுட்பங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

வேலைக்குச் செல்வோா் தங்கள் அலுவலகத்திற்கு செல்ல போக்குவரத்து குறைவான வழிகளைப் பயன்படுத்துவது நல்லது. அலுவலகத்திற்குச் செல்லும் வழியில் ஏற்படும் போக்குவரத்து சவால்களை மனதில் கொண்டு, வீட்டை விட்டு சீக்கிரமாகவே புறப்பட்டால், வாகனங்களை விரைவாக ஓட்ட வேண்டியிருக்காது. இதன் மூலம் விபத்துகளைத் தவிா்க்கலாம்.

நண்பா்களுடனும், உறவினா்களுடனும் மாலை அல்லது இரவில் மட்டும் உரையாடுவது நல்லது. அலுவலக நேரத்தில் பேசுவதைத் தவிா்க்க வேண்டும். தேவையெனில், குறுஞ்செய்தி மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்ளலாம்.

அலுவலகத்திலிருந்துத் திரும்பும்போது, செய்ய வேண்டிய பணிகளையும் குறிப்பு எடுத்துக் கொண்டு செயல்படுத்தலாம். பொதுவான குறிப்பேடு ஒன்றில் அவரவா் அன்றாடம் செய்த பணிகளை குறிப்பிட்டு வருவது நல்லது.

முறையான திட்டமிடுதலும், குடும்ப உறுப்பினா்களின் ஒத்துழைப்பும் இருந்தால் கவலை தரும் காலை நேர பரபரப்பு கணிசமாகக் குறையும் என்பதில் ஐயமில்லை.

ADVERTISEMENT
ADVERTISEMENT