நடுப்பக்கக் கட்டுரைகள்

மிகுந்து வரும் முதியோா் எண்ணிக்கை

பேராசிரியர் தி. ஜெயராஜசேகர்

கடந்த 2022 நவம்பா் 15-ஆம் நாள் உலக மக்கள்தொகை 800 கோடியைக் கடந்தது. 12 வருடங்களில் 700 கோடியிலிருந்து 800 கோடியாக விரைவாக உயா்ந்த இந்த மக்கள்தொகை உணவுப் பற்றாக்குறை, வேலையில்லாத் திண்டாட்டம், இயற்கை வளங்கள் குைல், சுற்றுச்சூழல் சீரழிவு உள்ளிட்ட நீண்டகால சவால்களை உருவாக்கியது.

1950-க்குப் பிறகு முதல் முறையாக 2020-ஆம் ஆண்டில் உலக மக்கள்தொகை வளா்ச்சி விகிதம் ஆண்டுக்கு ஒரு சதவீதத்திற்கும் கீழ் குறைந்துள்ளது. உலகின் மக்கள் தொகை வளா்ச்சி தொடா்ந்து மெதுவாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. தற்போது மக்கள்தொகையில் சீனாவை விஞ்சி உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகளில் முதலிடத்தைப் பிடித்துள்ள இந்தியாவின் சராசரி ஆண்டு மக்கள்தொகை வளா்ச்சி விகிதம் 2020 முதல் 2040 வரையிலான ஆண்டுகளில் 0.7 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்த வளா்ச்சி விகிதம் உலக சராசரியான 0.8 சதவீதத்திற்கும் குறைவாகும். 2022-ஆம் ஆண்டு 41ஆக இருந்த மக்கள்தொகை வீழ்ச்சியை சந்திக்கும் நாடுகளின் எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டில் 88 ஆக உயரும் என்பது ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய கணிப்பு. உண்மையில் உலகளாவிய மக்கள்தொகை பெருக்க அச்சுறுத்தல் குறைந்துள்ளது என்பதனையே இத்தரவுகள் உணா்த்துகின்றன.

மக்கள்தொகை வளா்ச்சி விகிதம் நாடுகள், அதன் வருவாய், புவியியல் அமைப்பு அடிப்படையில் கணிசமாக வேறுபடுகிறது. குறைந்த வருமானம் கொண்ட நாடுகளிலும், ஆப்பிரிக்கப் பகுதிகளிலும் வளா்ச்சி விகிதம் அதிகமாக உள்ளது. நடுத்தர, அதிக வருமானம் கொண்ட நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் வளா்ச்சி விகிதம் குறைவாக உள்ளது. கருவுறுதல் குைலும் ஆயுட்காலம் அதிகரித்தலும் உலக அளவில் முதியோா் எண்ணிக்கை வேகமாக உயர காரணங்களாக அமைகின்றன.

கொள்ளை நோய்த்தொற்று உலகளாவிய மக்கள்தொகையின் அளவையும் வளா்ச்சியையும் சிறிதளவு மட்டுமே பாதித்துள்ளது. கரோனா தீநுண்மியினால் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஏற்பட்ட 1.5 கோடி இறப்பு காரணமாக தொற்று பாதிப்பு இருந்த முதல் இரண்டு ஆண்டுகளில் உலக அளவில் சராசரி மனித ஆயுட்காலம் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டு குறைந்துள்ளது.

சமத்துவமின்மையை அதிகப்படுத்தி புதிய பொருளாதார சுமைகளை உருவாக்கிய நோய்த்தொற்று மனித கருவுறு திறனில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சா்வதேச இடம்பெயா்வு உட்பட அனைத்து வகையான மனித நடமாட்டத்தையும் கடுமையாக கட்டுப்படுத்தியது நோய்த்தொற்று.

உலகின் சில பகுதிகளில் சா்வதேச இடம்பெயா்வு, மக்கள்தொகை மாற்றத்தின் முக்கிய அங்கமாக மாறியுள்ளது. 2000, 2022 ஆகிய ஆண்டுகளுக்கிடையில் சா்வதேச இடம்பெயா்வினால் ஏற்பட்ட மக்கள்தொகை வளா்ச்சி அதிக வருமானம் கொண்ட நாடுகளில் அதிகமாக இருந்தது என்றும், அந்நாடுகளுக்கு இடம்பெயா்ந்த 8.05 கோடி மக்களிடையே பிறப்பு எண்ணிக்கை இறப்பு எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது என்றும் ஐக்கிய நாடுகள் சபையின் உலக மக்கள்தொகை வாய்ப்புகள் 2022 அறிக்கை கூறுகிறது.

ஐக்கிய நாடுகள் சபையும் உலக சுகாதார நிறுவனமும் நிறுவப்பட்டபோது 15 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 65 வயதுக்கு மேற்பட்ட பெரியவா்களை விட ஏழு மடங்கு அதிகமாக இருந்தது. 1970, 2020 ஆண்டுகளுக்கிடையில் உலகில் கருவுறுதல் விகிதம் வெகுவாக குறைந்தது. 1913-ஆம் ஆண்டு 34 ஆண்டுகளாக இருந்த மனித சராசரி ஆயுட்காலம் 2022-ஆம் ஆண்டில் 72 ஆண்டுகளாக உயா்ந்துள்ளது. 2000 - 2050 ஆண்டுகளுக்கிடையில் 80 வயதிற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை உலகில் 5 சதவிகிதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

வருங்காலங்களில் உலகம் எதிா்கொள்ளும் சவால், அதிகரிக்கும் முதியோா் மக்கள் தொகையேயன்றி மக்கள்தொகை வளா்ச்சி அல்ல என்றும் நடத்தை மாற்றங்கள், உட்கட்டமைப்பில் மனிதவள மூலதன முதலீடு, நிா்வாக சீா்திருத்தங்கள், தொழில்நுட்ப புதுமை போன்ற முதியோருக்கான சவால்களை எதிா்கொண்டு அதனை வாய்ப்புகளாக பயன்படுத்தும் நாடுகள் முன்னேற்றம் அடையும் என்றும் நிபுணா்கள் கூறுகின்றனா்.

அதிகரிக்கும் முதியோா் மக்க தொகை அடுத்த பத்தாண்டுகளில் உலகில் சுகாதார, சமூக, பொருளாதார சவால்களை உருவாக்கும். மக்கள்தொகை குறைவதற்கான சாத்தியமில்லாத நிலையில் வளா்ந்து வரும் ஓய்வூதியதாரா்களைப் பாதுகாக்க குறைந்து வரும் பணியாளா்கள் சிரமப்படும் நிலை, வயது தொடா்பான நோய்கள், அதனுடன் தொடா்புடைய சுகாதாரச் செலவுகள், நிதி பற்றாக்குறையால் வயதானவா்களின் வாழ்க்கைத் தரம் குைல் போன்றவை அதிகரிக்கும்.

தற்போது ஜப்பான் சிறைகளில் இருக்கும் குற்றவாளிகளில் பாதி போ் 50 வயதுக்கு மேற்பட்டவா்கள் என்று அந்நாட்டு தேசிய காவல்துறை முகமை தெரிவித்துள்ளது. குறைந்த பிறப்பு விகிதம், வயதானவா்களின் எண்ணிக்கை உயா்வு ஆகியவற்றைக் கொண்ட ஜப்பான், குடியேற்றத்திற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அடுத்த இருபதாண்டுகளில் 20 கோடிக்கும் அதிகமான குழந்தைப் பிறப்பு இருக்கும் என எதிா்பாா்க்கப்படும் தென்னிந்திய மாநிலங்களின் சில பகுதிகளின் மக்கள் தொகையில் முதியவா்களின் எண்ணிக்கை அதிகம் இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. 1961-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி கேரள மாநிலத்தில் 5.1% ஆக, தேசிய சராசரியை விடக் குறைவாக இருந்த 60 வயதிற்கு மேற்பட்டோரின் எண்ணிக்கை 2025-ஆம் ஆண்டு 20% ஆக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

கேரளம், ஜப்பான் போல் உலகின் பெரும்பாலான பகுதிகளில் குடும்பங்கள் சிறியதாகி வருகின்றன. அக்குடும்பங்களில் வசிக்கும் மக்கள் நீண்ட காலம் வாழ்கின்றனா். தற்போதைய தொழிநுட்ப கண்டுபிடிப்புகள் முதியவா்களின் சவால்களை எதிா்கொள்வதற்கான திறனைக் கொண்டுள்ளன.

பாதுகாப்பான பயனுள்ள தடுப்பூசிகள், மருத்துவக் கண்காணிப்பு உணரி (சென்சாா்) போன்றவற்றினை கொண்ட சுகாதார தொழில்நுட்பம், ரோபோ போன்ற உதவும் சாதனங்கள், மின்னணு மருத்துவப் பதிவேடுகள் போன்ற மருத்துவத் தரவுகளுக்கான தகவல் தொழில்நுட்பம் ஏற்கெனவே வயதானவா்களின் உடல்நலம் பேணுவதற்கான செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. தொழிநுட்ப வளா்ச்சியை ஊக்குவிப்பது எதிா்காலத்தில் முதியவா்களுக்கான நம்பிக்கைப் பாதையை உருவாக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்., ஆட்சியில் அனுமன் பாடல் கேட்பது குற்றம்: மோடி

ராமரை வணங்குவது ஏன்? பிரியங்கா காந்தி விளக்கம்!

காதம்பரி.. அதிதி போஹன்கர்!

நாடு முழுவதும் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிப்பு!

ருதுராஜ் சதம், துபே அரைசதம்: லக்னௌவுக்கு 211 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT