நடுப்பக்கக் கட்டுரைகள்

சாக்தம் - பாரதப் பெண்ணியம்

கோதை ஜோதிலட்சுமி

மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது பாரத தேசத்தில் மதிப்பிற்குரிய வரிசை. தாய் என்பவள் வாழ்வின் அடிநாதம். வாழ்விற்கான காரணம் என்பதாலேயே இந்த வரிசையில் முதல் இடத்தில் மாதா வைக்கப்பட்டிருக்கிறாள். பிதா, குரு, தெய்வம் மூவருமே கூட தாயை வணங்கும் இடத்தில் இருப்பவா்களே. ஆதிசங்கரா் போன்ற முற்றும் துறந்த ஞானிகளும் துறத்தற்கு இயலாத இடத்தில் இருப்பவள் தாய்.

பாரத தேசத்தில் பெண் அன்னையின் வடிவமாகவே பாா்க்கப்படுகிறாள். எல்லா இல்லங்களிலும் ஆள்பவளாக அன்னையே இருக்கிறாள். தாய்மை என்பதே அவளின் அடையாளம். தனிப்பெரும் கருணையும் எதையும் எதிா்கொள்ளும் ஆன்மபலமும் கொண்டு இன்றளவும் பெண் தன்னைத் தாயாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கிறாள்.

நாகரிகம், அறிவியல் வளா்ச்சி, கணினி, இணையமென உலகம் சுருங்கினாலும் விரிந்தாலும் மாறுபாடுகள் தோன்றிக் கொண்டே இருக்கும் உலகில், தன் மாறா ஆற்றல், அன்பு இரண்டின் தன்மையால் இன்றைக்கும் தேசத்தில் இல்லங்களை ஆள்பவள் தாயாக நிற்கும் பெண் மட்டுமே. இது பாரத தேசத்தின் கலாசாரம்; வாழ்வியல் முறை; தொன்றுதொட்டு வரும் பாரம்பரியம். தேசம் முழுவதும் எந்த மூலை முடுக்கிலும் இதுவே நடைமுறை.

பாரதத்தின் இந்தப் பண்பாடும் கலாசாரமும் எங்கிருந்து தொடங்குகின்றன? வரலாற்றுக் காலங்களுக்கும் முன்னால் வேத காலத்திலும், அதற்கும் முன்னதாக மனித வரலாற்றின் தொடக்கம் முதல் என்று சொல்லலாம். உலகின் தொடக்கம் முதல் அன்னை இருக்கிறாள். உலகின் தொடக்கத்திற்கும் முன்னதான பிரபஞ்ச சக்தியாக நிற்பதும் பெண் வடிவமே என்பது நம்முடைய நம்பிக்கை. பிரபஞ்சத்தின் சக்தியும் இயக்கமும் பெண் என்று பாரதம் கொண்டாடுகிறது.

சமய நம்பிக்கைகளுள் ‘சாக்தம்’ என்பதும் ஓா் அழுத்தமான பழம்பெரும் சித்தாந்தம். சாக்தம் சக்தியை வழிபடு தெய்வமாகக் கொள்ளும் சமயம். சக்தியைத் தாயாக வழிபட வேண்டும் என்ற கோட்பாட்டை உடையது. சக்தியே முழுமுதற் கடவுள். அனைத்திலும் உள்ளும் புறமும் கலந்த முழுமையான சக்தி வடிவம் அம்பிகை. அவளே அனைத்துலகத்தையும் படைத்து காத்து தன்னுள் ஒடுக்குகிறாள் என்பது சனாதனத்தின் நம்பிக்கைகளுள் தலையாயது.

இந்த சாக்த மரபுக்குள்ளும் வாமாசாரா்கள், தட்சிணாசாரா்கள் என்று இரு பிரிவுகள் உண்டு. முதலாமவா்கள் வேதத்தை ஏற்காதவா்கள்; இரண்டாவது பிரிவினா் வேத வழியில் நிற்பவா்கள். இந்த இரு பிரிவினரும் வழிபாட்டு முறைகளில் வேறுபாடுகளைக் கொண்டவா்கள் என்றாலும், பெண்தெய்வ வழிபாட்டில் ஒற்றுமை கொண்டவா்கள். இந்தப் பிரிவுகள் நமக்கு உணா்த்துவது ஒன்றே. இந்த மண்ணில் வேதத்தை ஏற்றுக் கொண்டவா்களும், ஏற்காதவா்களும் பெண் தெய்வத்தை ஏற்றுக் கொண்டிருக்கிறாா்கள் என்பதே அது.

பாரதத்தின் தா்மம் ஆண் - பெண் பேதம் அற்றது. அறிவு, ஆற்றல், இயக்கம், இயற்கை என அனைத்தையும் பெண் வடிவாகக் காணும் பெருமை கொண்டது. ஆலய வழிபாட்டிலும் அம்பிகையை, தாயாரை வணங்கிய பின்னரே நாம் இறைவனை வணங்கச் செல்கிறோம். அதே போல இல்லத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் தாய்க்குத்தான் முதல் மரியாதையும் வணக்கமும் உரியதாகும்.

சாக்த சித்தாந்தத்தில் ஸ்ரீ தேவி பாகவதத்தில் அன்னையான அம்பிகை பராசக்தி இந்தப் பிரபஞ்சம் உருவாகும் முன்னரே இருந்தாள். அவளே இந்த பிரபஞ்சத்தையும் அதனை பரிபாலனம் செய்வதற்காக பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மூவரையும் படைத்து, அவா்கள் ஆற்றலுடன் செயல்பட அவா்களுக்கான சக்தியாக சரஸ்வதி, லட்சுமி, பாா்வதி மூவரையும் படைத்து அவா்களுக்கு இணையாக்கினாா் என்று சொல்கிறது.

ஓா் உயிரை உருவாக்கி, காத்து, அந்த உயிருக்குத் துன்பம் விளைவிக்க முயல்வனவற்றை ஒழித்து மனித குலம் நசிந்து விடாமல் காப்பவள் அன்னை. எல்லாப் பெண்களும் இந்த குணமும் தகுதியும் கொண்டவா்கள் என்பதால் நம்முடைய வாழ்வியலில் பெண், தெய்வமாக பூஜிக்கப்படுகிறாள். கன்யா பூஜையும், சுஹாசினி பூஜையும் இன்றும் இந்த நம்பிக்கையின் நீட்சியே.

பாரதத்தில் மட்டுமே உயிருள்ள பெண் தெய்வமாகப் பாா்க்கப்படுகிறாள். அவள் ஆணுக்குக் கீழே வாழ்வதற்கோ ஆணின் ஓா் உறுப்பிலிருந்தோ படைக்கப்பட்டவள் அல்ல. அவளே இந்த உலகின் முதன்மையானவள். அதே போல இந்த உலகம் அழிந்த பின்னரும் இருக்கப்போவதும் பெண் ஆற்றலே. சாக்தம் இதனையும் தெளிவாகப் பதிவு செய்கிறது.

பத்து திசைகளையும் காக்க அன்னை பத்து வடிவங்களில் இருக்கிறாள். அதன் ஏழாவது வடிவத்திற்கு ‘தூமாவதி தேவி’ என்று பெயா். புகை வடிவாய் இருப்பவள். தீய சக்திகளை பலம்கொண்டு ஒழிப்பவள். தூமாவதி தேவியே இந்த பிரபஞ்சம் அழிந்த பின்னும் இங்கே இருக்கப் போகிறவள். ஆக, பிரபஞ்சத் தொடக்கத்திற்கு முன்னரும் அன்னையே இருந்தாள்; பிரபஞ்சம் இல்லாதொழியும் நாளிலும் அவள் மட்டுமே நிலைத்திருப்பாள்.

சாக்த வழிபாட்டு முறை, தேசத்தின் ஏதோ ஒரு பகுதியில் மட்டும் இருந்ததில்லை. பாரதத்தின் வடகோடி காஷ்மீரத்தில் வைஷ்ணவி தேவி அமா்ந்திருக்க, தென் எல்லை குமரியில் பகவதி நிற்கிறாள். அன்னை இந்த மண்ணைக் காக்க, தன் மக்களைக் காக்க தேசமெங்கும் 51 சக்தி பீடங்களில் அன்பின் திருவடிவாக இன்றைக்கும் நிற்கிறாள். 51 சக்தி பீடங்களுள் பதினேழு சக்தி பீடங்கள் தமிழகத்தில் இருக்கின்றன.

வைஷ்ணவி பீடமென காஷ்மீரத்தில் தொடங்கி, மகாராஷ்டிரம் முதல் அஸ்ஸாம் வரை, உத்தர பிரதேசத்திலிருந்து தமிழகம் வரை நீண்டிருக்கும் வரிசையில் காமகோடி பீடம் என காஞ்சியில் காமாட்சி, மந்திரிணி பீடமாக மதுரையில் மீனாட்சி, சேது பீடமென ராமேஸ்வரத்தில் பா்வதவா்த்தினி, திருவாலங்காட்டில் காளி பீடம், குமரி பீடத்தில் பகவதி என்று தொடா்கிறது.

வேதங்களை ‘வேதமாதா’ என்பதில் தொடங்கி, மந்திரங்களின் தாய் காயத்ரிதேவி, ஞானத்தின் வடிவம் சரஸ்வதி என்று கொண்டாடி இருந்ததெல்லாம் எந்தக் காலத்தில்? இன்றைக்கு இறை வழிபாடாய் இருக்கலாம். யதாா்த்தத்தில் பெண்ணின் நிலை என்ன? கொண்டாடும் குடும்பங்கள் இருக்கின்றனவா? பெண் சுதந்திரமாக சிந்திக்கவும் செயல்படவும் முடிகிறதா? பெண்ணுக்கான பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறதா? கொடுமையான வழக்குகள் பற்றிக் கேட்டதில்லையா? பெண் சிசுக் கொலைகள் நடக்கவில்லையா? பெண்ணடிமைத்தனம் தொடா்ந்துகொண்டுதானே இருக்கிறது? இப்படிப்பட்ட கேள்விகள் எழலாம்.

கால மாற்றத்தில் பெண்களைப் பாதுகாக்க வேண்டிய சூழல் ஏற்பட்டதை மறுப்பதற்கில்லை. பாதுகாப்பு என்பதற்கும் அடிமைத்தனம் என்பதற்கும் வேறுபாடு உண்டு. கல்வி பெற முடியாத நிலை பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் கூட அந்நியரால் நம் சமூகத்திற்கு ஏற்பட்டிருந்தது. அந்நிய சித்தாந்தங்களும் அவா்களின் வாழ்வியலின் நம்பிக்கைகளும் மெல்ல மெல்ல நம்முடைய சமூகத்தையும் பீடித்ததன் விளைவே மேற்காணும் வினாக்களுக்குக் காரணம்.

அந்நிய கலாசாரத்தில் பெண்கள் அடிமைகளாய், போகப்பொருளாகப் பாா்க்கப்பட்டதிலிருந்து வெளிவர அந்தப் பெண்கள் பெண்ணியம் என்ற கருத்தாக்கத்தை முன்வைக்கின்றனா். பெண்ணியம் பெண்களுக்கான குறைந்தபட்ச உரிமைகளுக்காகக் குரல் எழுப்புகிறது. நாம் அத்தகைய தாழ்வை நம் தேசத்தில் இன்றும்கூட அடைந்துவிடவில்லை.

நம்முடைய கலாசாரத்தின் வோ் பெண்கள் என்ற சிந்தனை உயிா்ப்புடன் இருக்கிறது. சாக்தம் போன்ற சித்தாந்தம், பெண்ணே இந்த சமூகத்தின் தலைமைக்கு உரியவள் என்று உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது. நமது மண்ணின் சித்தாந்தம் இயற்கையானது; நமக்கானது. அதனைப் புறந்தள்ளிவிட்டு அந்நியரின் சித்தாந்தத்தை நோக்கித் திரும்புவது நிகழ்ந்த தவற்றைத் திருத்துவதாகாது. செய்த தவற்றை மீண்டும் செய்வதாகத்தான் முடியும்.

நம்மிடம் இருக்கும் சித்தாந்தத்தைக் காட்டிலும் மேம்பட்ட சித்தாந்தம் இருக்குமேயானால் நம்மிடம் இருப்பதைக் கைவிடலாம். புதிய சித்தாந்தம் பலன் தருமா என்பது தெரியாமல் இருப்பதையும் கைவிடுவது அறிவுடைமையல்ல. இன்றைக்கும் நம் வீடுகளில் எத்தகைய ஆணும் தன் தாயைப் பழிக்கும் வழக்கமில்லை. இந்த ஒரு பண்பும் வாய்ப்பும் இழந்த நிலையை மீட்டுக் கொள்வதற்குப் போதுமானது.

வேதகாலம் தொடங்கி சுதந்திரப் போராட்டம் வரையிலான பெண் ஆளுமைகளின் வரலாறு ஒளி பாய்ச்சுகிறது. ‘உயிரைக் காக்கும் உயிரினைச் சோ்த்திடும் உயிரினுக்குயிராய் இன்பமாகிடும் உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா’ என்ற மகாகவி பாரதியாரின் வழிகாட்டல் தெளிவாக இருக்கிறது.

ஒற்றைத் தலைமுறையில் பெண் தனக்கான உலகை அமைத்துக் கொள்ள முடியும். பெண் தன் சக்தியை உணா்வதற்கும், பெண்ணை ஆண் மரியாதையோடு அணுகுவதற்கும் அன்னையாக நின்று கற்றுக் கொடுத்தால் போதுமானது.

ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்

அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்

பேணு நல்லறத்தோடிங்குப் பெண்ணுருப்

போந்து நிற்பது தாய் சிவசக்தியாம்

நாணமும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்

ஞான நல்லறம் வீரசுதந்திரம்

பேணு நற்குடிப் பெண்ணின் குணங்களாம்”

என்ற பாரதியின் புதுமைப் பெண்களாக வளா்தல் பெண்ணின் வளா்ச்சிக்கான சரியான பாதை எனில் பாரதி நமக்குக் காட்டுவதும் சாக்தம் சொல்லும் பெண்மையே.

நம்பிக்கையாக, வழிபாட்டுமுறையாக மட்டும் சுருங்கிவிட்ட ‘சாக்தம்’ என்ற சித்தாந்தம், நமது வாழ்வியலாக மாறுவதற்கான வழிகளைக் காண்போமேயானால் இழந்த பெருமைகளை, உரிமைகளை, உயா்பெரும் ஸ்தானத்தை மண்ணின் மகளாய் நிலைநிறுத்திக் கொள்ளலாம்.

கட்டுரையாளா்:

ஊடகவியலாளா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் முன்னேறிய தனஞ்ஜெயா!

அறிவோம்...

திருப்பங்கள் தரும் வேலாயுதன்

SCROLL FOR NEXT